விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அந்த நாள் ஞாபகம்: ரசிகர்களோட சாய்ஸ்தான் எப்பவுமே பெஸ்ட்'

"ரசிகர்களோட சாய்ஸ்தான் எப்பவுமே பெஸ்ட்' எனக்கு ஒருமுறை "ஸ்ட்ரோக்' அட்டாக். இதுவரைக்கும் நான்தான் "ஸ்ட்ரோக்' போட்டுட்டிருந்தேன். "இப்ப எனக்கே கடவுள் ஸ்ட்ரோக் போட்டுட்டான்'னு அதையும் நகைச்சுவையாத்தான் எ

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 1:02 pm

ரவிக்குமார்

"ரசிகர்களோட சாய்ஸ்தான் எப்பவுமே பெஸ்ட்'





எனக்கு ஒருமுறை "ஸ்ட்ரோக்' அட்டாக். இதுவரைக்கும் நான்தான் "ஸ்ட்ரோக்' போட்டுட்டிருந்தேன். "இப்ப எனக்கே கடவுள் ஸ்ட்ரோக் போட்டுட்டான்'னு அதையும் நகைச்சுவையாத்தான் எல்லாரிடமும் சொல்லிட்டிருந்தேன்.

கோபுலு - ஓவிய சாம்ராட். ஜெயராஜ் - ஓவிய இளவல்.

முன்னவர் கோடுகளுக்கு பெருமை சேர்த்தவர். அடுத்தவரோ மனித அவயங்களை வரைவதில்

தனித் திறமை பெற்றவர்.

1941-ல் தனது தூரிகைப் பயணத்தைத் தொடங்கியவர்

ஓவியர் கோபுலு.

அவருக்குப் பின்னால் ஏறக்குறைய பதினேழு வருடங்கள் கழித்து, 1958-ல் கோபுலு கடந்து வந்த பாதையில் நடக்கத்

தொடங்கியவர் ஓவியர் ஜெயராஜ்.

இருவருக்குமான கால இடைவெளி ஆண்டுகள்

பல இருந்தாலும், தலைமுறை இடைவெளிக்கு சவால் விடும்வகையில் அமைந்தது, மூத்த ஓவியரான கோபுலு

ஓவியர் ஜெயராஜ் சந்திப்பு!

"நல்ல ஓவியத்துக்கான அளவுகோல் எது?'





அந்த அப்புசாமி கேரக்டரைப் பார்த்தாலே சிரிப்பு வரணும்பா... அப்படி ஒரு ஃபிகரை வரை'ன்னாங்க "குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி.யும், எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனும். அறைக்கு வெளியே போய் கொஞ்ச நேரத்துல அப்புசாமி தாத்தாவை வரைஞ்சேன்.

கோபுலு: வாங்க... வாங்க... ஜெயராஜ்! ஓய்வில்லாமல் வரைந்து கொண்டிருக்கிறவராயிற்றே நீங்க, எப்படி உங்களுக்கு நேரம் கெடச்சது?! நல்லா இருக்கீங்களா?

ஜெயராஜ்: நல்லா இருக்கேன் சார். உங்களைச் சந்திக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருந்தேன். நீங்க எப்படி இருக்கீங்க?

கோபுலு: ரொம்ப செüக்கியமா இருக்கேன்.

(வரவேற்பு அறையில் உட்கார்ந்ததும் தேனீரும், பிஸ்கெட்டும் எடுத்து வருகிறார்கள் வீட்டிலிருக்கும் பணியாளர்கள். இருவருக்குமான பேச்சைத் தொடங்குவதற்கு மேரி பிஸ்கெட்டும், தேனீருமே போதுமாயிருந்தது!)

கோபுலு: ஆச்சு... பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு... பால்,சர்க்கரை சேர்த்து டீ குடிச்சு. பிளாக் டீதான். பழகிடுச்சு. எடுத்துக்குங்க... இந்த மேரி பிஸ்கெட் ஒண்ணும் பண்ணாது. எனக்கு காலை உணவே இந்த மேரி பிஸ்கெட்தான்!

ஜெயராஜ்: ஆமாமாம்... சரியாச் சொன்னீங்க... நார்ச்சத்து அதிகம் இருக்கு. எளிதில் ஜீரணமாகும். நாம ஒண்ணும் நாளுக்கு 50, 60 கி.மீட்டர் வண்டியில சுற்றி, அலைந்து அலைந்து பார்க்கிற வேலை செய்யல. இருந்த இடத்தில மூளையைச் செலவிட்டு கைகளால் வரையும் வேலை.

அதுக்கு தேவையான "எனர்ஜி'யைக் கொடுக்கிற உணவைக் கொஞ்சம் சாப்பிட்டாலே போதும். ஆனால், வீட்டிலிருப்பவர்களுக்கு இதெல்லாம் தெரிவதே இல்லை. எப்பப்பாரு எதையாவது சாப்பிடுறதுக்கு கொடுத்திட்டே இருப்பாங்க. அவங்க செய்யிறத சாப்பிடுறதுக்கு ஒரு ஆளு வேணும்!

கோபுலு: படிப்புக்கேத்த வேலை. வேலைக்கேத்த ஊதியம்கிறது மாதிரி... வயசுக்கேத்த உணவு முறையையும் நாம "ஃபாலோ' பண்ணவேண்டியிருக்கு... என்ன பண்றது?

ஜெயராஜ்: படிப்புக்கேத்த வேலை தேடினது ஒரு காலம்..

இப்ப வேலைக்கேத்த மாதிரி படிப்பை மாத்திக்கிறாங்க.

கோபுலு: எந்த ஓவியக் கல்லூரியிலேயும் படிக்காம நீங்களாகவே முயன்று இந்தத் துறையிலே ஜெயிச்சிருக்கிறதுதான் உங்களோட ஸ்பெஷாலிட்டி...

நீங்க பத்திரிகைக்கு முதல்ல வரைஞ்சது எப்ப?

ஜெயராஜ்: 10-10-1958. இந்த நாளை என் வாழ்க்கையிலேயே என்னால மறக்கமுடியாது. ஏன்னா, அன்றைய தேதியிட்ட "குமுதம்' வார இதழ்லதான் என்னோட முதல் ஓவியம் வெளிவந்துச்சு. ரா.கி. ரங்கராஜன் "சூர்யகுமார்'ங்கிற புனைப் பெயர்ல ஒரு சிறுகதை எழுதியிருந்தார்.

ஒரு கல்லூரி முதல்வர், விரிவுரையாளர் ஒருவரை திட்டிக்கிட்டு இருப்பார். அவரை முதல்வரிடம் மாட்டிக் கொடுத்த கல்லூரி மாணவர்கள் அறைக்கு வெளியே நின்றபடி விரிவுரையாளர் திட்டு வாங்குவதை ரசித்தபடி இருப்பாங்க. இதுதான் நான் முதல்ல வரைஞ்ச படம். நீங்க வரைஞ்ச பல ஓவியங்களைப் பார்த்துத்தான் இண்டியன் இங்கைத் தொட்டு தொட்டு வரையும் "க்ரோக்வில்' நிப் பேனாவைத் தவிர்த்துவிட்டு பிரஷ்ஷைப் பயன்படுத்தத் தொடங்கினேன்.

ஒருவகையில நான் பிரஷ்ஷைப் பிடிக்கக் காரணமே நீங்கதான்! எனக்கு ரொம்ப சீனியரான உங்களோட எண்ட்ரி பத்திரிகை உலகத்தில எப்படி நடந்தது? நீங்க முதல்ல வரைஞ்ச படம் என்னென்ன சொல்வீங்களா?

கோபுலு: தியாகராஜ சுவாமிகள்  பூஜை செய்த ராமர் பட்டாபிஷேகம் படத்தைத்தான் நான் முதல்ல வரைஞ்சேன். இந்தப் படம் 1941-ல் வெளிவந்த "ஆனந்தவிகடன்' தீபாவளி மலர் புத்தகத்தில் இருக்கு. இந்த ஓவியத்துல என்ன சிறப்புன்னா, திருவையாறுல தியாக பிரம்மத்தோட வீட்டிலேயே நாலு நாட்கள் இருந்து புழங்கி, இந்த ஓவியத்தை வரைஞ்சு கொண்டுவந்தோம்.

அந்த இசை மேதை சுவாசித்த அந்த இடத்தில இருந்து ஓவியத்தை வரைஞ்சது எவ்வளவு பெரிய கொடுப்பினை! இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தவர், அன்றைக்கு "ஆனந்தவிகடன்' ஆசிரியரா இருந்த ஓவிய மேதை மாலி. அப்போ எனக்கு வயசு, சொன்னா நம்பமாட்டீங்க... 16தான்! அந்தக்காலத்துல கையெழுத்துப் பத்திரிகை நடத்தின அனுபவம்தான் வெகுஜன பத்திரிகைல படம் வரையறதுக்கு உதவுச்சு.

ஜெயராஜ்: நீங்களும் கையெழுத்துப் பத்திரிகை நடத்திருக்கீங்களா? அந்தப் பாதிப்பு இல்லாம இருக்கமுடியாது போலிருக்கு... எனக்கும் அந்த அனுபவம் இருக்கு! நீங்க முதல்ல உங்க கையெழுத்துப் பத்திரிகை அனுபவத்தைச் சொல்லுங்க...

கோபுலு: (அதையா கேக்கறீங்க... என்று சிரிக்கிறார்) நாங்க நடத்தின கையெழுத்துப் பத்திரிகைக்கு "தென்றல்' என்று பெயர் வச்சிருந்தோம். என்னோட தம்பிக்கு ரா.கி.ரங்கராஜன் நண்பர். எல்லோருமா சேர்ந்து சில இதழ்களை கொண்டுவந்திருப்போம். அதுக்குப் பிறகு கூட இருந்தவங்களுக்கு வெவ்வேறு வேலைகள், சூழ்நிலைகள் சரியில்லாமப் போயிடுச்சி. குறிப்பா சொல்லணும்னா "போர்' அடிச்சிடுச்சு... மனப் புழுக்கம்... அதான் "தென்றலை' நிறுத்திட்டோம். ஆனா அதில் வரைந்தது பிற்காலத்துல பத்திரிகைகளில் வரையறதுக்கு ரொம்ப "யூஸ்ஃபுல்லா' இருந்துச்சு! 

ஜெயராஜ்: நாங்க ரொம்ப யோசிச்சு "சிற்பி'ன்னு எங்களோட கையெழுத்துப் பத்திரிகைக்குப் பெயர் வெச்சிருந்தோம். பக்கத்துக்குப் பக்கம் ஓவியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தது. மதுரையில எங்களோட கையெழுத்துப் பத்திரிகைக்கு நல்ல பெயர் இருந்துச்சு. 120 பக்கத்துக்கு பிரம்மாண்டமா கொண்டுவந்தோம். எங்களுக்குப் போட்டியா இன்னொரு குழுவும் கையெழுத்துப் பத்திரிகையை நடத்திச்சு. ஆனா, நான், என்னோட அண்ணன் என இரண்டு பேரோட ஓவியங்களும் எங்களோட கையெழுத்துப் பிரதிக்கு பெரிய மதிப்பைக் கொடுத்துச்சு. எங்க பத்திரிகைக்கு முன்னால அவங்க பத்திரிகையால நிக்கமுடியல. அவங்களோட பத்திரிகைக்கு ஓவியங்கள்தான் பெரிய மைனஸô இருந்துச்சு. இந்தக் குறையை அவர்களிடம் நானே சொல்லப்போக, "நீயே எங்க பத்திரிகைக்கும் ஓவியங்களை வரைஞ்சு கொடுத்தா நல்லா இருக்குமே'ன்னு அவங்க சொன்னாங்க. கொழுப்பெடுத்துப் போய் அவங்களோட பத்திரிகைக்கும் ஓவியம் போட்டுக் கொடுத்தேன்.

எல்லாம் கொஞ்ச காலம்தான். ஏறக்குறைய எட்டு, ஒன்பது இதழ்களை எடுத்துவந்திருப்போம். அதுக்குப்பிறகு, கையெழுத்துப் பத்திரிகை மேல இருந்த "கிரேஸ்' போயிடுச்சி. அச்சுப் பத்திரிகைகளில் நம்மோட ஓவியங்கள் வரணும்னு தீவிரமா முயற்சிகள் எடுக்கிறதுக்கு காரணமா கையெழுத்துப் பத்திரிகைகள் அமைஞ்சது! அப்படிப் போராடி வந்த பத்திரிகைத் துறையோட இன்றைய நிலை, குறிப்பா வாரப் பத்திரிகைங்களோட தற்கால நிலை எப்படியிருக்கு?

கோபுலு: 1980-களில் கணிப்பொறியின் பயன்பாடு வந்தததிலிருந்து படிப்படியாக ஓவியர்களின் பங்களிப்பு குறைஞ்சுட்டுது. அதிலும் லே-அவுட், டிசைனிங் எடிட்டர், ஆர்ட்டிஸ்ட் போன்ற பல நிலைகளில் இருப்பவர்களின் வேலைகள் பறிபோயின. அன்றாடங்காய்ச்சிகளாக சைன் போர்ட் ஆர்ட்டிஸ்ட், கட்-அவுட் ஆர்ட்டிஸ்ட் போன்றவர்களின் பணிகளையும் கணிப்பொறியின் வரவால், வினைல் போர்டுகள் கொள்ளை அடிச்சிடுச்சி. வாரப் பத்திரிகைகளில் அப்போதெல்லாம் தொடர்கதைகள் நிறைய வரும். அதற்கென்று பெரிய வாசகர்கள் கூட்டமே இருக்கும். அந்தக் காலத்தில் வெளிவந்த பல தொடர்கள் வாரப் பத்திரிகைகளின் சர்குலேஷனை அதிகமாக்குவதில் பெரும் பங்கெடுத்தன. இப்போதெல்லாம் பல வாரப் பத்திரிகைகளில் தொடர் கதைகளே இல்லை. சிறுகதைகளும் தரமாக வருவதில்லை. பக்கத்துக்குப் பக்கம் சினிமா செய்திகள்தான் போட்டு ரொப்புறாங்க. போதாததுக்கு டி.வி.யில வர்ற சீரியலுங்க வேற மனுஷாளைப் பைத்தியமா ஆக்கியிருக்கு. வேலை வெட்டிக்குப் போகாதீங்க, உக்காந்து டி.வி.யே பாத்திட்டு இருங்கன்னு சொல்றமாதிரி அரசாங்கமே இலவச டி.வி.யை வேற கொடுத்திருக்கு!  92- பக்கங்கள் இருக்குற ஒரு வாரப் பத்திரிகையைப் புரட்டினால் அதில் 29 தொப்புள்கள் தெரிஞ்சது!  

ஜெயராஜ்: அடடா... அப்படின்னா அது தெரியாத படங்கள் எவ்வளவு இருக்கும்?! வாசகர்களிடமிருந்து நீங்கள் வரைந்த ஓவியங்களுக்கு அன்றைக்கு எந்தமாதிரியான வரவேற்பு கிடைச்சது?

கோபுலு: அமோகமான வரவேற்பு இருந்தது... தேவன் எழுதிய "துப்பறியும் சாம்பு' கதைக்கும் கொத்தமங்கலம் சுப்பு எழுதின "தில்லானா மோகனாம்பாள்' கதைக்கும் நான் வரைஞ்ச ஓவியங்கள் அந்தக் காலத்துல சாதாரண மக்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றது. அப்போதெல்லாம் வாரப் பத்திரிகைகளிலும் கதை இலாகான்னு தனியா ஒண்ணு இருக்கும். அங்கேதான் கதை "ஷேப்' ஆகும். அப்படியிருக்கும் போது, ஒவ்வொரு வாரத்துக்கும் கதையில் வர்ற எந்தக் காட்சிய ஓவியமா வரையறதுன்னு பெரிய "டிஸ்கஷனே' நடக்கும்.

ஜெயராஜ்: அப்படிப்பட்ட டிஸ்கஷன்லதான் துப்பறியும் கதைங்கன்னாலே அழகான துடிப்பான

இளைஞர்கள்தான் துப்பறியணுமா? ஒரு வயசான தாத்தா அவரோட புத்திசாலித்தனத்தோட கூடிய கோமாளித்தனத்தால எப்படி கண்டுபிடிக்கிறார்னு கதை எழுதினா என்ன? அப்படின்னு முடிவு பண்ணாங்க. அந்த டிஸ்கஷன்லேயே எனக்கு "அந்த அப்புசாமி கேரக்டரைப் பார்த்தாலே சிரிப்பு வரணும்பா... அப்படி ஒரு ஃபிகரை வரை'ன்னாங்க "குமுதம்' ஆசிரியர் எஸ்.ஏ.பி.யும், எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசனும். அறைக்கு வெளியே போய் கொஞ்ச நேரத்துல அப்புசாமி தாத்தாவை வரைஞ்சேன். அதைப் பார்த்ததும் ஜ.ரா.சு. ஆசிரியரிடம் காட்டுவதற்குப் போனாரு. ஆசிரியருக்கும் அப்புசாமி தாத்தா படம் பிடிச்சுடுச்சுன்னு வெளியே வந்து சொன்னாரு ஜ.ரா.சு. அதுக்குள்ள நான் சும்மா இருக்காம, அதே அப்புசாமி தாத்தா படத்துக்கே தலைமுடி எல்லாம் போட்டு, பெண் உருவமாக்கி வரைஞ்சி அவருக்கு ஜோடியா இந்தம்மா கேரக்டரைப் போடலாமான்னு கேட்டுட்டு வாங்கன்னு சொன்னேன். அதையும் ஆசிரியர் ஒ.கே. பண்ணிட்டார். இப்படித்தான் அப்புசாமி, சீதாப் பாட்டி காரெக்டர்கள் உருவாச்சி! இந்தக் காரெக்டர்கள்தான் எனக்கு அதிகமான புகழைக் கொடுத்துச்சி.

கோபுலு: அப்படி கூடிப் பேசி முடிவு எடுத்ததாலதான் அந்தக் காலத்துல வரைஞ்ச ஓவியங்களுக்கு இன்னைக்கும் பெயர் இருக்கு. ஆனா ஜோக் மட்டும் என்னோட சொந்த "கிரியேட்டிவிடி' அதுக்கு யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க. ஆயிரக்கணக்கான ஜோக்குகளையும் அதற்கான படங்களையும் போட்டிருக்கேன். எப்பவும் நகைச்சுவை உணர்வோட இருக்கணும். அப்படியிருந்தாதான் நாம வரையறதுல அது வெளிப்படும்.  இப்ப பத்திரிகை ஆசிரியர்களோட ரசிப்புத் திறனும் சரி, படிக்கிறவங்க ரசிப்புத் திறனும் சரி ரெண்டுமே மாறித்தான் இருக்கு!

ஜெயராஜ்: நாம சிறப்புன்னு நினைச்சுட்டு இருக்கிற ஓவியங்களை விட நாம வரைந்த சாதாரண ஓவியத்துக்கு பெரிய பாராட்டெல்லாம் கிடைக்கும். நல்ல ஓவியத்துக்கான அளவுகோல் - வெகுஜன மக்களோட ரசனையா? ஓவியனோட கணிப்பா?

கோபுலு: அப்பல்லாம் வெளிநாட்டு ஓவியர்களோட படங்களைக் கூட பத்திரிகைகளில் போடுவாங்க. உலகம் முழுவதும் இருக்கிற மக்களையும் தன்னோட "மோனலிசா' புன்னகையில சிறை பிடிச்சிட்டாரு லியானர்டோ டாவின்ஸின்னு சொல்வாங்க! ஆனா அவர் இதைவிட மிகச் சிறந்த ஓவியங்களையெல்லாம் வரைஞ்சிருக்காரு. அவையெல்லாம் பெரிசா பேசப் படல. ரசிகர்களோட சாய்ஸ்தான் எப்பவுமே பெஸ்ட்! அதேபோல நம் ஊருல நிறையப் பேர் "ஓவியர்கள் ஓர் எல்லைக்குள்ளேதான் வரையணும்'னு சொல்றாங்க. அப்படியெல்லாம் எல்லை கோடு போட்டுட்டு வேலை செய்யக்கூடாது. வெளிநாட்டில இருக்கிறவங்களுக்கு "நியூட்'டுக்கும் "நேக்கட்'டுக்கும் வித்தியாசம் தெரியுது. நம்ம நாட்டிலதான் இரண்டையும் போட்டுக் குழப்பிக்கிறாங்க!

ஜெயராஜ்: ஆனா, அந்தக்காலத்துல பத்திரிகை ஆசிரியர் என்ன சொன்னாலும் அதன்படி நடந்துக்கிட்ட கலைஞர்கள் இருந்தாங்கதானே...

கோபுலு: ரொம்ப சரி... ரொம்ப சரி... என்னோட ஒரிஜினல் பேர் கோபாலன்தானே... "கோபுலுன்னு வெச்சுக்கோடா'ன்னார் மாலி சார். நானும் சரின்னுட்டேன். நான் மட்டுமா? பி.எம். ஸ்ரீனிவாசனோட பேரை "சில்பி'ன்னு மாத்தினதும் அவர்தானே! இதெல்லாம் நாங்க செஞ்ச பாக்கியம்தான்... வேற என்ன சொல்றது...?

(லேசாக கண்கலங்கி நெகிழ்வதைப் பார்த்த ஜெயராஜ் உடனே பேச்சை மாற்றுகிறார்!)

ஜெயராஜ்: என்னோட ஃபேமிலில அண்ணன், தம்பி, மகன் எல்லாம் ஓவியம், டிசைனிங் போன்ற துறைகளிலும் இருக்காங்க. என்னோட மகன் டிஸ்னி, ஆஸ்திரேலியாவிலுள்ள அரசு மருத்துவமனையில பிரிண்டிங் செக்ஷன்ல இருக்கான். அங்க நோயாளிங்களுக்கு என்ன மருத்துவம் பார்க்கப்படுது, என்ன மாதிரியான சிகிச்சை அவங்களுக்கு செய்யப்படுது, எப்பப்ப என்ன மாத்திரைகளை அவங்க சாப்பிடணும்கிறதையெல்லாம் தெளிவா அச்சடித்துக் கொடுத்துடறாங்களாம் எப்படியிருக்கு பார்த்தீங்களா? உங்க குடும்பத்துல யாராவது நீங்கள் கோலோச்சுன ஓவியத் துறையில இருக்காங்களா சார்?

கோபுலு: (லேசாக சிரித்தபடி) என்னோட ஃபேமிலில நிறையப் பேர் ரயில்வே எம்ப்ளாயிங்கதான். அவங்கள்ல தடம்புரண்டது நான்தான்! மகன் ராஜேஸ்வரன்னு "கோடாக்' கம்பெனில சீனியர் சயின்டிஸ்ட்டா இருக்கான். எப்ப எந்த நாட்டில இருக்கான்னு எனக்கே தெரியாது. "அப்பா அமெரிக்கால இருக்கேன். அடுத்த வாரம் ஜப்பான் போவேன்னு சொல்வான்' நானும் சரிப்பான்னு கேட்டுப்பேன்... (என்கிறார் வாக்கிங்-ஸ்டிக்கை தரையில் தட்டியபடி) "நாம ஓவியரா இருந்ததால என்ன பெரிய நன்மை அடைஞ்சிட்டோம்'னு சில சமயங்கள்ல நெனச்சிப்பேன். இந்த வீட்டை கட்டி கிரஹப்பிரவேசத்துக்கு வந்த ஆசிரியர் சாவி, "ஜோக் எழுதி கட்டின வீடு இல்ல... அதனாலதாய்யா ஒவ்வொரு செங்கல்லும் பளிச்சுன்னு சிரிக்குது'ன்னு சொன்னார். இதெல்லாம் இந்தத் துறையில இருந்ததால கிடைச்ச கொடுப்பினைதானே! ஏதாவது ஒரு வேலைல, சர்வீஸ்ல இருந்து அதுவும் முடிஞ்சி பல வருஷங்களா ஓய்வா இருக்கிறவர மறுபடியும் யாராவது தேடி வருவாங்களா? இதோ நீங்க வந்திருக்கீங்களே! இதுதான் நான் எடுத்திருக்கிற இந்தத் துறையோட சிறப்புன்னு நெனக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க ஜெயராஜ்?

ஜெயராஜ்: பிரான்ஸýக்குப் போவதற்காக விசாவுக்கு விண்ணப்பிச்சிருந்தோம். விசா வந்தபாடில்லை. என்னை ஆசிரியர் சாவி அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. இரண்டு பேரும் சேர்ந்தே பிரெஞ்ச் தூதரகத்திற்குப் போயிருந்தோம். சாவி விசா வழங்கும் அதிகாரியிடம் என்ன காரணத்துக்காகப் போகப் போகிறோம் என்பதை விளக்கிக் கொண்டிருந்தார். அந்த அதிகாரியோ திருப்தி அடையாமல் எதையெதையோ கேட்டுக் கொண்டிருந்தார். சாவி பேசிக் கொண்டிருக்கும்போதே நான் அந்த அதிகாரியை கையில் எடுத்துச் சென்றிருந்த பேப்பரில் பென்சிலைக் கொண்டு "ஸ்கெட்ச்' செய்து முடிச்சிட்டேன். திடீரென்று அந்த அதிகாரி, "மிஸ்டர் நீங்க என்ன எழுதிட்டிருக்கீங்க?'ன்னார். "ஸôரி, உங்களோட அனுமதி இல்லாம உங்களை நான் வரைஞ்சிட்டிருந்தேன்னு...' சொல்லி வரைஞ்சதைக் காண்பிச்சேன். அதைப் பார்த்த அந்த அதிகாரிக்கு ரொம்ப சந்தோஷமா ஆயிடிச்சு. எனக்கு பிரான்ஸýக்குப் போய், திரும்பி வருவதற்கு இலவசமாகவே டிக்கெட் ஏற்பாடு செய்திட்டார் அந்த அதிகாரி. ஆசிரியர் சாவிதான் எனக்கு பணம் கொடுத்து கூட்டிப் போவதாக ஏற்பாடு. பணம் மிச்சமானதில் அவருக்கும் ரொம்ப சந்தோஷம்!



கோபுலு:
வரையறதுதானே நம்பளோட வேலையே! அதை எந்தக் காரணத்துக்காகவும் நிறுத்தக் கூடாது. எனக்கு ஒருமுறை "ஸ்ட்ரோக்' அட்டாக் ஆகி உடம்போட வலது பக்கம் முழுவதும் செயல்படாம போயிடுச்சி. அப்பவும் நான், "இதுவரைக்கும் நான்தான் "ஸ்ட்ரோக்' போட்டுட்டிருந்தேன். "இப்ப எனக்கே கடவுள் ஸ்ட்ரோக் போட்டுட்டான்'னு அதையும் நகைச்சுவையாத்தான் எல்லாரிடமும் சொல்லிட்டிருந்தேன்.

என்ன வருத்தம்னா, வரைய முடியலேன்னுதான்! டாக்டர், "உங்க மூளையோட வலது பக்கம் பாதிச்சதால, உடம்போட இடது பக்கம் செயல்படாது'ன்னு சொன்னார். கொஞ்சநாள்ல நான் என்னோட இடது கைகளால ஓவியம் வரைய ஆரம்பிச்சிட்டேன். நான் இடது கைகளால ஓவியம் வரையறத கேள்விப்பட்ட டாக்டர், "சீக்கிரமே உங்க வலது பக்க மூளையும் பழையபடி செயல்பட ஆரம்பிச்சுடும்'ன்னார். ஸ்ட்ரோக்ல விழுந்து எழுந்தாலும் வரையறத மட்டும் நான் நிறுத்தல...



ஜெயராஜ்:
என்னவொரு பொருத்தம் சார் நம்ம இரண்டு பேருக்கும்! எனக்கும் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டுச்சு சார். ஒருசமயம் எனக்கு கால்ல அடிபட்டு இருந்தது. அதனால நான் பைக்கை வலது கையால ஸ்டார்ட் செஞ்சுதான் ஓட்டிட்டு இருந்தேன். ஒருமுறை அப்படி கையால ஸ்டார்ட் செய்யும்போது, கிக்கர் அடிச்சு கை எலும்புல முறிவு ஏற்பட்டுடுச்சு. வலது கையில பெரிய கட்டு போட்டுட்டாங்க. படம் வரையறதெல்லாம் அப்படியே இருக்கு, என்ன பண்றதுன்னு தெரியல. மெல்லமா இடது கையால முயற்சி பண்ணேன். பரவால போல வந்தது. முயற்சிய தீவிரமாக்கி இடது கையாலேயே கொஞ்ச நாள் படம் போட்டேன்!

கோபுலு: எந்த கையில படம் போட்டு என்ன? ஆர்ட்டிஸ்டுங்களுக்கு கொடுக்கறதுக்கு கையே வராதே சில பேருக்கு...

ஜெயராஜ்: என்னமோ நாலு கோடு போட்டுட்டு இவன் பணத்தை வாங்கிட்டு போயிடறானேங்கிற நினைப்பு இப்பவும் இருக்கத்தான் இருக்கு. இன்னொரு விஷயம் சார், வெளிநாட்டுல எல்லாம் ஒரு ஓவியத்தை பயன்படுத்திட்டு அதைத் திருப்பி ஓவியர்ட்ட கொடுத்திடுவாங்க. இங்க அந்த ஓவியங்கள குப்பையில போடுவாங்களே தவிர, ஓவியர்ட்ட கொடுக்கமாட்டாங்க. அப்படியொரு நல்ல பழக்கம். இதனால என்னோட ஓவியத்தை தொகுப்பா போடுற முயற்சி தள்ளிப் போயிட்டே இருக்கு.

கோபுலு: நீங்க சொல்றது உண்மைதான். இனி வரும் காலங்கள்லவாவது இந்த நிலைமை மாறணும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.