மேடை: கண்ணதாசன் வாங்கிய கடன்!

மலேசியாவின் பிரதான நகரங்களில் குறிப்பிடத்தக்கது ஈப்போ. அதில் ஒவ்வோராண்டும் தமிழ்ப் புத்தாண்டைத் தொடர்ந்து தமிழர் திருநாள் என்ற விழா நடைபெறும். இலக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த விழாவில் த
மேடை: கண்ணதாசன் வாங்கிய கடன்!
Published on
Updated on
2 min read

மலேசியாவின் பிரதான நகரங்களில் குறிப்பிடத்தக்கது ஈப்போ. அதில் ஒவ்வோராண்டும் தமிழ்ப் புத்தாண்டைத் தொடர்ந்து தமிழர் திருநாள் என்ற விழா நடைபெறும். இலக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த விழாவில் தமிழகத்திலிருந்து பல்வேறு தலைப்புகளில் இலக்கிய சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு வந்திருக்கிறார் கலைமாமணி கே.பி. அறிவானந்தம்.

கதை, வசனகர்த்தா, எழுத்தாளர், ஆன்மிகச் சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர் எனப் பல துறைகளில் முத்திரை பதித்திருக்கும் அறிவானந்தம், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முனைவர் விருதையும் பெற்றிருக்கிறார். குன்றத்தூரிலிருக்கும் அவரது இல்லத்தில் சந்தித்து, மலேசியாவில் அவரின் இலக்கியச் சொற்பொழிவு அனுபவங்களைக் கேட்டோம்.

""முப்பெரும் தேவியர், வெற்றி விநாயகர் ஆகிய திரைப்படங்களுக்கு நான் கதை, வசனம் எழுதியுள்ளேன். அந்தப் படங்களின் தயாரிப்பாளர் எம்.ஆர். மாணிக்கத்தின் உறவினர் அருண் ஆறுமுகத்தின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் நான் மலேசியா சென்றுவந்தேன்.

ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிவரை ஒன்பது சொற்பொழிவுகள் நடைபெற்றன. பிரதான சொற்பொழிவு பேராக் மாநில தமிழர் திருநாள் இயக்கம் நடத்திய "ஈப்போ தமிழர் திருநாள் 2011' என்ற நிகழ்ச்சியாகும். இந்த விழாவையொட்டி தமிழர் ஒற்றுமைப் பேரணி ஊர்வலம் நடைபெற்றது. அதில் திருவள்ளுவர், ஒüவையார், ஐம்பெரும் இலக்கியக் காட்சிகளை விவரிக்கும் உருவப் படங்களை வரைந்து ஊர்வலத்தில் கொண்டு சென்றனர்.

டத்தோ சு.வீரசிங்கம், ஈப்போ நாடளுமன்ற உறுப்பினர் குலசேகரன் ஆகியோர் ஊர்வலத்தைத் தொடங்கிவைத்தனர்.

மாலை நகர மண்டபத்தில் விழா சிறப்பாக நடைபெற்றது. நான் அதில் "வளர் தமிழ் இலக்கியம்' என்ற தலைப்பில் சங்க இலக்கியம் முதல் தற்கால இலக்கியம் வரை சொற்பொழிவாற்றினேன். அதைத் தொடர்ந்து பாரதிதாசனின் சமுதாய நோக்கு, கண்ணதாசன் வாங்கிய கடன், சிறுகதை, இலக்கியம் என நான்கு தலைப்புகளில் உரையாற்றினேன். மாரியம்மன் கோயில், முருகன் கோயில்கள், ஈப்போ முருகன் நிலையம் என ஐந்து ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றேன்.

பாரதிதாசன் இலக்கிய விழாவில் நான் உரையாற்றிய பின், நிகழ்ச்சியைத் தொகுத்தளித்த அருண் ஆறுமுகம், ""இன்றைக்குதான் அறிவானந்தத்தின் 70-வது பிறந்த நாள்..'' என்று அறிவிக்க, வந்திருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று கைத்தட்டினர். உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிப் போனேன்!

எந்தெந்த இலக்கியங்களிலிருந்து கண்ணதாசன் தமது பாடல்களுக்கான கருத்துகளை எடுத்தாண்டார் என்பதைப் பற்றிய எனது உரை அனைவரையும் கவர்ந்தது. மலேசியாவில் வாழும் தமிழ் மக்கள் பலரும் ஆழ்ந்த ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களாக விளங்குகிறார்கள். குறிப்பாக முருக பக்தி மேலோங்கி இருக்கிறது.

மலேசியத் தமிழ் மாணவ, மாணவியர் சிறப்பாகக் கல்வி பயில வேண்டும். ஆன்மிக உணர்வு கொண்டவர்களாக உருவாக வேண்டும் என்பதற்காகவே "ஸ்ரீ முருகன் நிலையம்' என்ற அமைப்பு செயல்படுகிறது. அதில் "ஆறுபடை வீடு' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினேன். நிறைவு நாள் நிகழ்ச்சியில், மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் 20 பேர் பங்கு கொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கெடுத்தேன். அதில் குறிப்பாக என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி, "எப்படி குறிப்பில்லாமல் பேசுகிறீர்கள்?' "தற்போது நீங்கள் ஈடுபட்டிருக்கும் பணிகள் எவை?' என்பதுதான்.

முதல் கேள்விக்குப் பதிலாக, ""இளம் வயதிலேயே நிறையக் கவிதைகளை மனப்பாடம் செய்திருக்கிறேன்'' என்றேன்.

இரண்டாம் கேள்விக்குப் பதிலாக, ""தமிழ் இலக்கியத்தில் வீரத்துக்கென்றே அமைந்தது ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி, ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி ஆகியவை. முருகனுக்கென்று பரணி இல்லை. நான் என் வாழ்வின் லட்சியமாகக் கருதி "வீர மகேந்திரப் பரணி' என்ற பெயரில் அதை எழுதிவருகிறேன். வரும் ஆகஸ்ட் 20 அன்று "தமிழரசன் தியேட்டர்ஸ்' சார்பாக நான் எழுதியிருக்கும் ராகு } கேது என்ற புராண நாடகத்தை அரங்கேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்'' என்றார் அறிவானந்தம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.