பு துதில்லியின் ரோகிணி பகுதி.. வாகன நெருக்கடி மிகுந்த அப்பகுதியிலிருந்து விலகிச் செல்லும் சந்தில் சிறுவர்களின் விளையாட்டுச் சப்தம், பெரியவர்களின் விவாதம் என ஒருபக்கம் நீண்டுகொண்டிருக்கிறது.
தகதிமி... தகஜுனு... என்று மிருதங்கத்தின் ஒலி காற்றினூடே கலந்து அப்பகுதியில் வருவோர், போவோரின் செவிகளுக்கு இசை மணத்தை பரப்பிக் கொண்டிருந்தது. ஒழுங்கான இடைவெளிகளில் கசிந்து கொண்டிருந்த அந்த ஓசையை நோக்கி நாம் சென்றோம். அடுக்குமாடிக் குடியிருப்பின் இரண்டாவது தளத்திலிருந்த ஒரு வீட்டில் பல்வேறு ஸ்ருதிகளில் அமைந்த மிருதங்கங்களைக் கொண்டு குழந்தைகளுக்கு மிருதங்கப் பயிற்சியை அளித்துக் கொண்டிருந்தார். அவர், கும்பகோணம் என்.பத்மநாபன்.
ஏழு வயதில் மிருதங்கத்தில் கை படிய ஆரம்பித்து, முப்பது ஆண்டுகளாக மிருதங்க வாத்தியத்துடன் இசைந்து வாழ்ந்துவரும் இவர், தில்லிப் பல்கலைக்கழக இசைத் துறையில் பக்கவாத்தியக் கலைஞராக 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறார்.
புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பலருக்கும் பக்கவாத்தியமாக மிருதங்கம் வாசித்து தலைநகர் வாசிகளிடம் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்து வருகிறார் இந்த இசைக் கலைஞர். இதமான மாலைவேளை ஒன்றில் அவரிடம் கலந்துரையாடினோம்.
""கும்பகோணம்தான் எனது பூர்வீகம். எங்களது குடும்பம் இசைப் பாரம்பரியம் கொண்டது. எனது தந்தை டி.வி.நாகராஜன் ஓவியராக இருந்தாலும் கர்நாடக இசையை தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு எனக்குப் பயிற்றுவித்தார்.
சிறுவயது முதலே பாடப் புத்தகங்களை விட இசை மீதுதான் எனக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. ஏழு வயது இருக்கும்போது மிருதங்க வித்வான் சிங்காரம் பிள்ளையிடம் மிருதங்கம் வாசிக்கப் பயின்றேன். பதினொரு வயதில் கச்சேரிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன்.
எஸ்.எஸ்.எல்.சி. முடித்த பிறகு முழு நாட்டமும் மிருதங்கம் மீதே சென்றது. தொடர்ந்து மிருதங்கம் வாசிப்பில் ஈடுபட்டேன். திருவாரூர் பக்தவத்சலம் எனது குரு. 1984-ம் ஆண்டு கும்பகோணத்திற்கு அவர் கச்சேரிக்கு வந்தபோது அவருடன் சென்னைக்கு சென்றுவிட்டு குருகுலவாசம் போல் இருந்து அவரிடம் 5 ஆண்டுகள் மிருதங்கம் பயின்றேன். அப்போது, பல இடங்களுக்கும் அவருடன் கச்சேரிக்குச் சென்றேன்.
சென்னையில் உள்ள அரசு இசைக் கல்லூரியில் கலைமாமணி தஞ்சாவூர் டி.ஆர்.சீனுவாசனிடமும் மிருதங்கம் கற்றேன். அப்போது, தமிழ்நாடு அரசுக் கலைக் கல்லூரி எனக்கு "வாத்திய விஷாரத்' பட்டம் வழங்கியது.
1990-ம் ஆண்டில் தில்லி பல்கலையின் இசைத் துறை டீனும், வயலின் இசைக் கலைஞருமான டி.என். கிருஷ்ணன் மூலம் தில்லிப் பல்கலைக்கழகத்தில் மிருதங்க வித்வானாகச் சேர்ந்தேன். கடந்த 20 ஆண்டுகளாக இங்குதான் பணியாற்றி வருகிறேன். காயத்ரி ஃபைன்-ஆர்ட்ஸ் அமைப்பில் செயலாளராகவும் உள்ளேன்.
எனது மாணவர்கள் சிசிஆர்டி, சாகித்திய கலா பர்ஷத் ஆகிய மத்திய அரசு நிறுவனங்களின் உதவித் தொகையையும் பெற்றுள்ளனர். 11-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மிருதங்க இசை அரங்கேற்ற நிகழ்ச்சியையும் நடத்தியுள்ளேன்.
கர்நாடக இசை உலகில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாகத் திகழும் டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா, டி.என்.கிருஷ்ணன், மறைந்த இசைக் கலைஞர்களான எம்.எல். வசந்தகுமாரி, மகாராஜபுரம் சந்தானம் ஆகியோரின் கச்சேரிகளுக்குப் பக்கவாத்தியம் வாசித்ததை எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்.
ஜுகல் பந்தி இசை நிகழ்ச்சிகளில், உஸ்தாத் அம்ஜத் அலிகான், பண்டிட் ராம் நாராயண், பண்டிட் ஹரி பிரசாத் செüராஸ்யா, என்.ராஜம், உஸ்தாத் ஜாகீர் ஹுசேன் ஆகிய உலகப் புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைந்து மிருதங்கம் வாசித்துள்ளேன். தவிர, அகில இந்திய வானொலி நிலைய மிருதங்கக் கலைஞராகவும் உள்ளேன்.
இந்தியாவின் பல மாநிலங்களுக்கும், இங்கிலாந்து, ஜெர்மனி, மெக்ஸிகோ, இலங்கை, இத்தாலி போன்ற நாடுகளுக்கும் சென்று கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்துள்ளேன். மிருதங்க வாத்தியத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்ட கச்சேரிகளையும் நடத்தி வருகிறேன். எனது இசைக்கு மனைவி லதா ஊக்கம் அளித்து வருகிறார். மகனும் மிருதங்கத்தில் ஆர்வமாக உள்ளார்.
தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் விருது, மிருதங்க வாத்திய கேசரி, மிருதங்க வித்வான் கோயம்புத்தூர் ராமசாமி பிள்ளை விருது, சிறந்த இளம் மிருதங்க வித்வான், மத்தள கலை அரசு, சென்னை முத்தமிழ் பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் இருந்து மிருதங்க செல்வம் பட்டம், தில்லி ஆஸ்திக சமாஜம் மூலம் அபிநவ நந்தி பட்டம், "லய பிரவீணா' என ஏராளமான பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளேன். இசை விமர்சகர் சுப்புடு என்னைப் பாராட்டி ஊக்குவித்தார். தில்லியில் ஏராளமான சபாக்களில் மிருதங்க இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளேன்.
அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற சீர்காழி சிவ.சிதம்பரத்தின் இசை நிகழ்ச்சியில் மிருதங்கம் வாசித்தேன். அந்த இசை நிகழ்ச்சியை ஒருமணி நேரம் கலாம் ரசித்துக் கேட்டார். கலாம் எழுதிய கவிதையை சிவ.சிதம்பரம் பாடலாகவும் பாடினார்.
1985-ம் ஆண்டில் சென்னை இசைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது நான் உள்பட 5 பேர் கொண்ட மிருதங்க வித்வான்கள் இணைந்து, தொடர்ந்து 35 மணிநேரம் மிருதங்கம் வாசித்தோம். அந்நிகழ்ச்சி வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாகும்.
1977 முதல் 32 ஆண்டுகளாக மிருதங்க வாசிப்பில் எனக்கு உள்ள அனுபவம் இளம் தலைமுறையினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக எனது இசைக் குருநாதர் திருவாரூர் பக்தவத்சலத்தின் பெயரை எழுத்துக்களாகக் கொண்ட "தாளபக்தி' என்ற அமைப்பை 1993-ம் ஆண்டில் தொடங்கினேன்.
"தாளபக்தி' அமைப்பின் மூலம் இதுவரை 50 இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கியுள்ளேன். தொடர்ந்து பலரை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன். மேலும், இளம் இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் மிருதங்க இசைக் கலையில் சிறந்து விளங்குவோருக்கு சிங்காரம்பிள்ளை நினைவு விருது, தாளபக்தி சாதனை விருது வழங்கி வருகிறேன். மிருதங்கம் மட்டுமின்றி கடம், கஞ்சிரா வாத்தியக் கருவிகளையும் கற்றுத் தருகிறேன். தில்லியில் உள்ள பல்வேறு சபாக்கள், கோயில்கள், அமைப்புகள் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்து உதவி வருகின்றன. தாளபக்தியின் செயலர் என்.வி.ராமனும் பெற்றோர் ஸ்தானத்தில் இருந்து உதவி வருகிறார்.
அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்களை உருவாக்க ஓர் இசைப் பள்ளியை நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பொருளாதாரம் ஒரு தடைக்கல்லாக இருக்கிறது.
மிருதங்கம் இசைக் கருவிகளுக்கு அரசன் என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், மிருதங்கம் கற்றுக்கொண்டால் பிற இசைக் கருவிகளை கற்பது எளிது. அதனால்தான் மிருதங்கத்திற்கு ராஜ வாத்தியம் என்ற பெருமை!
படங்கள்: கே.டி.ராமகிருஷ்ணன்