எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சேவை: அன்பால் ஒரு சிகிச்சை!

மூன்று மாதத்தில் குழந்தை புரண்டு படுக்க வேண்டும், ஆறு மாதத்தில் தவழ வேண்டும். ஒருவருடத்தில் தளிர் நடை நடக்கவேண்டும். இந்த இயல்பான விஷயங்கள் ஒரு குழந்தையிடம் நடக்காதபோது, அந்தக் குழந்தை, "செரிபரல் பால்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:35 am

ரவிக்குமார்

மூன்று மாதத்தில் குழந்தை புரண்டு படுக்க வேண்டும், ஆறு மாதத்தில் தவழ வேண்டும். ஒருவருடத்தில் தளிர் நடை நடக்கவேண்டும். இந்த இயல்பான விஷயங்கள் ஒரு குழந்தையிடம் நடக்காதபோது, அந்தக் குழந்தை, "செரிபரல் பால்சி' என்னும் குறைபாடால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று அர்த்தம். குழந்தையின் உடல் வளர்ச்சிக்கேற்ற செயல்பாடுகள் இந்தக் குழந்தைகளிடம் இருக்காது.

இப்படி செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட தங்களின் குழந்தையைப் பராமரிப்பதற்காக அது தொடர்பான விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்த சுதா, ஆத்மராஜ் தம்பதி, கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் தொடங்கியதுதான் அர்விந்த் அறக்கட்டளை. அர்விந்த் நிகேதன் என்னும் பெயரில் செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் திறனை மேம்படுத்தும் பயிற்சிகளைப் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய குழந்தைகளுக்கு இலவசமாக அளித்துவருகின்றனர்.

சென்னை, கே.கே.நகரில் செயல்படும் அர்விந்த் நிகேதன் சிறப்புப் பள்ளியில், அறக்கட்டளையின் இணை இயக்குநரும் பயிற்சியாளருமான சுதா ஆத்மராஜிடம் பேசினோம்.

""எங்களின் பத்தாண்டு தவமான அர்விந்த் செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்ற உண்மையை ஜீரணிப்பதற்கே எங்களுக்கு சில வருடங்கள் ஆயிற்று. அதன்பிறகு எங்களின் மனதைத் தேற்றிக் கொண்டு, அவனைப் போன்றவர்களுக்கு சிகிச்சையளிக்கும் சிறப்புப் பள்ளிகளில் சேர்த்தோம். பல பள்ளிகளிலும் பெயருக்கு "சிறப்பு' என்ற வார்த்தை இருந்ததே ஒழிய, அவர்களின் அணுகுமுறையில் சிறப்பு வெளிப்படவில்லை. எங்களின் குழந்தையைப் பராமரிப்பதற்காக செரிபரல் பால்சியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பயிற்சி முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தோம்.

சிறப்புக் குழந்தைகளின் அன்றாட நடவடிக்கைகளை மேம்படுத்த "வால்ட்ராஃப்' என்னும் பயிற்சி முறையைத் தெரிந்து கொண்டோம். இது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்கான பயிற்சி முறை. இது சிறப்புக் குழந்தைகளுக்குப் படிப்பு, சிகிச்சை, வளர்ச்சியைக் கொடுக்கும் ஓர் அணுகு முறை.

இந்தப் பயிற்சி முறையைத் தெரிந்துகொண்டுதான் முதன்முதலாக சென்னை, போரூருக்கு அருகிலிருக்கும் பரணிபுத்தூர் என்னும் கிராமத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கான டே-கேர் சென்டரை ஐந்து வருடங்களுக்கு முன்பு தொடங்கி இன்றளவும் நடத்திவருகிறோம். அங்கு தற்போது 18 குழந்தைகள் இருக்கின்றனர்.

இரண்டு வருடங்களுக்கு முன் கொடைக்கானலிலிருந்து 38 கி.மீ. தொலைவிலிருக்கும் மன்னவனூர் கிராமத்திலும் எங்களின் பயிற்சி மையம் முழுக்க முழுக்க இலவசமாக இயங்குகிறது. அந்தப் பகுதியைச் சுற்றியிருக்கும் ஐந்து கிராமங்களிலிருக்கும் குழந்தைகளையும் தினமும் அந்த மையத்திற்கு இலவசமாக வாகனத்தில் அழைத்துவந்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம்.

சிறப்புக் குழந்தைகளின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதில் அவர்களின் உணவுப் பழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உண்ணக்கூடாதவை, உண்ணக்கூடியவை என இரண்டு உண்டு.

உண்ணக்கூடாதவை, பால் மற்றும் பால் சார்ந்த பொருள்கள். அரிசி, கோதுமை, கேழ்வரகு, சர்க்கரைக்குப் பதிலாக சிறிதளவு வெல்லம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கொடைக்கானலில் சிறப்புக் குழந்தைகளுப் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களை உருவாக்கும் சமூகக் கல்லூரியைக் கடந்தாண்டு தொடங்கியிருக்கிறோம். எங்களின் இந்த அர்விந்த் கம்யூனிடி கல்லூரியை, இந்திரா காந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அங்கீகரித்திருக்கிறது. இந்தக் கல்லூரியில் பழங்குடி மற்றும் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 11 பேர்களுக்குச் சிறப்புக் குழந்தைகளைப் பராமரிக்கும் பயிற்சியை கடந்த ஓராண்டு அளித்து, அவர்களுக்கு சான்றிதழும் அளித்திருக்கிறோம்.

சிறப்புக் குழந்தைகளைப் பலர் எந்த உணர்ச்சியும் இல்லாதவர்களாக நினைக்கிறார்கள். இதுதவறு. அவர்களுக்கு உணர்ச்சிகளும் உணர்வுகளும் உண்டு. அவை, அவர்களிடம் நாம் காட்டும் அன்பின் மூலமே வெளிப்படும். அவர்களை முழுமையாக குணமாக்கமுடியாவிட்டாலும், முறையான பயிற்சிகளின் மூலமும் அன்பான ஆதரவின் மூலமும் அவர்களின் காரியங்களை அவர்களாகவே செய்து கொள்ளும் அளவுக்கு அவர்களைக் கொண்டுவரமுடியும்.

வளர் இளம் பருவத்தில் இருக்கும் செரிபரல் பால்சி பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொழிற்பயிற்சி மையம் ஒன்றையும் எதிர்காலத்தில் தொடங்கும் எண்ணம் இருக்கிறது. நல்ல மனிதர்களின் உதவியாலும் எங்களின் சொந்தச் சேமிப்பிலிருந்தும்தான் இந்தச் சேவையை அளித்து வருகின்றோம். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பால் சிகிச்சையளிக்கிறோம். அதற்கு ஈடான மருந்து இந்த உலகத்திலேயே இல்லை'' என்றார் சுதா ஆத்மராஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.