கொண்டாட்டம்: புன்னகையில் ஒளிர்ந்த முகங்கள்!
உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் தன்னுடைய 27-ஆவது ஆண்டு விழாவை கடந்த வாரம் சென்னையில் நடத்தியது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களின் மூலம் மக்களுக்குத் தேவையான நல்ல


உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் தன்னுடைய 27-ஆவது ஆண்டு விழாவை கடந்த வாரம் சென்னையில் நடத்தியது. பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற மக்கள் தொடர்பு சாதனங்களின் மூலம் மக்களுக்குத் தேவையான நல்ல கருத்துக்களைச் சொல்வதுடன், "நல்லோர் வங்கி' என்னும் சமூக விழிப்புணர்வுள்ளோர் சங்கத்தின் மூலம் சமூகப் பணிகளையும் செய்துவருகின்றது.
ஒüவை நடராசன், தீயணைப்புத் துறைத் தலைவர் நடராஜ், திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், திரிசக்தி சுந்தரராமன் ஆகியோர் பங்கேற்றனர். மேடையில் அமர்ந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் முதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் வரை எல்லாரின் முகங்களிலும் "இது எங்க குடும்ப விழா' என்ற பெருமிதம் வெளிப்பட்டது. புன்னகையில் ஒளிர்ந்தது. மகிழ்ச்சியை விதைத்து மகிழ்ச்சியை அறுவடை செய்த அந்த விழாவிலிருந்து சில துளிகள்...
புதிய வரவு!
நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களைப் பற்றியும் விருது பெறுபவர்கள் குறித்தும் சிறிய அறிமுகத்தை அகன்ற திரையில் ஓளிபரப்பிய பின், அவர்களை மேடைக்கு அழைத்தது, இலக்கிய விழாக்களுக்கு கொஞ்சம் புதுசுதான்!
விருது மழை!
உரத்தசிந்தனையின் சிறந்த கிளைக்கான விருது, சேவை ஒளி விருது, செயல் வீரர் விருது, நட்சத்திர வாசகர் விருது, சிறந்த வாசகர் வட்ட விருது, சிறந்த இலக்கிய அமைப்பிற்கான "சுடர்' விருதுகள் வழங்கினர். கோவை மேற்கு இன்னர் வீல் அமைப்பு சார்பாக டாக்டர் இந்திரலேகா முத்துசாமி, திருநங்கைகளுக்கான நலம் நாடும் அமைப்பான கல்கியின் "சகோதரி' அமைப்பைச் சேர்ந்த செüந்தர்யாவுக்கும் சந்தியாவிற்கும் கணினி சார்ந்த கல்விக்கான உதவித் தொகையை அளித்தார். சந்தியாவின் திருநங்கைகளின் பிரச்னைகளைச் சொல்லும் "புன்னகை' குறும்படம் ஒன்றையும் திரையிட்டனர்.
கல்விக்கு முதல் மரியாதை !
உரத்தசிந்தனையின் சேவை ஒளி விருது பெற்றிருக்கும் இராமர், காமராஜரின் வழியில் கல்விக்காக தன் வாழ்நாளைச் செலவிடுபவர். சீர்காழியில் கடந்த 11 ஆண்டுகளாக வட்டம், மாவட்டம் அளவில் 10, 12 ஆம் வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களில் மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்குப் பரிசுகளையும் பாராட்டுகளையும் அளித்துவருபவர். கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இந்த சேவை மூலம் சீர்காழி தவிர தமிழ்நாடு முழுவதுமிருக்கும் மாணவர்களையும் கெüரவிக்கத் தொடங்கினார். அதுவும் எப்படி? சீர்காழியில் வடக்கு ரத வீதி முழுக்க தோரணங்கள், வண்ண விளக்குகள் அமைத்து, மாணவர்களை ஊர்வலமாக அழைத்து வந்து, மேடையில் சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு பார்ப்பாராம் இராமர்!
இறந்த போதும்...
உயிரோடு இருக்கும் போது எட்டிப் பார்க்காத உறவுகள் கூட ஒருவர் இறந்துவிட்டால் எட்டிப் பார்க்கும். இறந்துவிட்ட பிறகும் உறவுகளால் புறக்கணிக்கப்பட்டவர்களின் சடலங்களை உரிய முறையில் எரித்து, அவருக்கு நீத்தார் சடங்கைத் தன்னுடைய ஸ்ரீ காயத்ரி அறக்கட்டளையின் மூலம் செய்துவருகிறார் ராகவன். இவரது சேவையைப் பாராட்டி பாரத ஸ்டேட் வங்கி அமரர் ஊர்தி வண்டியை வழங்கியுள்ளது. இறந்தவர்களின் நீத்தார் காரியங்களைச் செய்வதற்காகவே "ஞானவாபி' என்னும் கூடத்தைக் குரோம்பேட்டையில் அமைத்துள்ளார் ராகவன். இவருக்கும் உரத்தசிந்தனையின் சேவை ஒளி விருதை வழங்கினர். சேவை ஒளி விருதுக்கான உரத்தசிந்தனையின் புரவலர் ஆ.சந்திரசேகரை இதற்காக எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நெகிழ்ச்சியான பாராட்டு!
""தனி மனித ஒழுக்கம், சிறுவர்களுக்கான பொறுப்புகள், வாக்காளர்களுக்கான கடமைகள் போன்றவற்றைக் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தமிழகம் முழுவதும் நடத்திவருகிறோம். இலக்கிய நிகழ்ச்சிகளைப் பல்வேறு தலைப்புகளில் நடத்திவருகிறோம். எங்களின் சேவைகளிலேயே தியாகி லட்சுமண அய்யரின் குடும்பத்தை இந்த மேடையில் பாராட்டி மகிழ்ந்ததை மிகவும் பெருமையாக நினைக்கிறோம்.
மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின்படி தலித் சமூகத்தினருக்காக உழைப்பதை தன்னுடைய லட்சியமாகக் கொண்டவர் தியாகி லட்சுமண அய்யர். சமீபத்தில் அவரின் மறைவையொட்டி முதல் பக்கத்திலேயே செய்தி வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது "தினமணி' நாளிதழ். அந்தச் செய்தியைப் படித்தவுடன் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்திற்கு உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் தெரிவித்தது.
அந்தத் தியாகக் குடும்பத்தைப் பாராட்டியது. லட்சுமண அய்யர் தன்னுடைய இறுதிக் காலம் வரை நடத்திவந்த, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான "டி.எஸ். இராமன் ஆண்கள் மற்றும் சரோஜினி தேவி பெண்கள் விடுதி'க்கு உரத்தசிந்தனையின் புரவலர் ஏ.கே. லிங்கவேல் ரூபாய் 15 ஆயிரம் நன்கொடை வழங்கியிருக்கிறார்.
விழா மேடையில் லட்சுமண அய்யரின் இளைய மகன் சுந்தரவடிவேலுவை பொன்னாடை போர்த்திப் பாராட்டினோம். இது எங்கள் 27 வருட சங்கச் சேவையின் மிக முக்கியமான தருணம்'' என்றனர் உரத்தசிந்தனையின் நிறுவனர், தலைவரான எஸ்.வி.ராஜசேகரும், பொதுச் செயலாளர் உதயம் ராமும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...