ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுக்கு நெய் வேண்டும்!

எனக்கு வயது 60. வயிறு காலியாக இருக்கும் வேளையில் ஏப்பமாக வருகிறது. வயிறு உப்பிய மாதிரியும் தெரிகிறது. சாப்பிட்டவுடன் ஏப்பம் வருவது நின்றுவிடுகிறது. சரியான நேரத்திற்குச் சாப்பிட முடியாத சூழ்நிலை. இதற்க
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிற்றுக்கு நெய் வேண்டும்!
Updated on
2 min read

எனக்கு வயது 60. வயிறு காலியாக இருக்கும் வேளையில் ஏப்பமாக வருகிறது. வயிறு உப்பிய மாதிரியும் தெரிகிறது. சாப்பிட்டவுடன் ஏப்பம் வருவது நின்றுவிடுகிறது. சரியான நேரத்திற்குச் சாப்பிட முடியாத சூழ்நிலை. இதற்கு என்ன தீர்வு?

கே.எஸ்.சபாபதி, முசிறி.

இரைப்பை காலியாக இருக்கும்போது, அங்கு வாயு சூழ்ந்து கொள்கிறது. அதனால் வயிறு உப்பிய மாதிரி தெரிகிறது. உணவு இரைப்பைக்கு வந்து சேர்ந்தவுடன், அங்கு சூழ்ந்திருந்த காற்று இடம் விட்டு இடம் மாறுகிறது. சரியான நேரத்திற்கு, அதாவது நன்றாகப் பசி உள்ள நிலையில் நீங்கள் உணவை உண்ண நேர்ந்தால், இந்த வாயுத் தொல்லை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் உணவை எளிதில் செரிக்கச் செய்ய, ஆறு விஷயங்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றில் ஒன்று குறைந்தாலும் செரிமானம் தாமதமாகும்.

1. ஊஷ்மா:உணவைச் செரிக்கச் செய்ய, இயற்கையாகவே சூடு, இரைப்பையில் இருக்கிறது. அதற்குக் காரணம் இரைப்பையின் அசைவுகள், இடைவிடாது இருப்பதால் உண்டாகும் இந்தச் சூடானது நன்றாகப் பாதுகாக்கப்படுகிறது. நாம் உணவில் அன்றாடம் சேர்க்கும் புளி, மிளகு, கடுகு, மிளகாய்,மல்லி போன்ற சூடான வீர்யம் கொண்ட பொருட்கள், இந்தச் சூடு குறையாமல் பார்த்துக் கொள்கின்றன.

எளிதில் செரிக்காத தாமதமாகச் சாப்பிடும் நேரங்களில், பசித்தீ மந்தமாகிவிடும். வென்னீர் பருக இந்தச் சூடானது பலம் பெற்று உண்ட உணவைச் செரிக்கச் செய்கிறது. அநேகமாக,  உங்களுடைய விஷயத்தில் இந்த இயற்கையான சூடு குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது. குளிர்ந்துள்ள இரைப்பையில் வாயு எளிதில் சேர்ந்துவிடும்.

2.வாயு: போதுமான இடைவெளியில் உணவை வயிற்றில் நிரப்புவது அவசியம் . நேரத்திற்குச் சாப்பிட முடியாத உங்களுக்கு முன் உண்ட உணவு நெகிழ்ந்த நிலையில், கீழே இறங்காத நிலையில், காற்று எளிதில் இடம் விட்டு மாறாமல், இரைப்பையிலேயே தங்குவதால், இரைப்பையிலுள்ள மிச்ச உணவு தேங்கிப் புளித்து நோய்க்குக் காரணமாகலாம். அதனால் நீங்கள் குறித்த நேரத்தில் உணவு உட்கொள்வது  நல்லது.

3.க்லேத: நாம் பல வகையான உணவு வகைகளைச் சாப்பிடுகிறோம். மாவுப் பண்டம், முறுக்கு, சீடை, எண்ணெய்யில் பொரித்த பட்சணங்கள், கடித்துச் சாப்பிடக் கூடிய தேங்காய் போன்றவை எளிதில் செரிக்காதவை. உமிழ்நீரின் மூலம் வறண்ட உணவுகளை வாயில் போட்டு நெகிழச் செய்து விழுங்குகிறோம். காபி, டீ, பால், போன்ற திரவ உணவுகளையும் குடிக்கிறோம். இரைப்பையில் இவை அனைத்தையும் நெகிழச் செய்து கூழ் போன்ற நிலை பெற்றவுடன் ஜீரணத் திரவங்கள் அவற்றின் மேல் சீராகப் பரவி அவற்றைப் பக்குவப்படுத்த முடியும்.

இதிலும் உங்களுக்குக் குறைபாடு உள்ளதாகவே தெரிகிறது. அதனால் நீங்கள் உணவை உண்ணும்போது நடுநடுவே சிறிது சிறிதாகத் தண்ணீரை அல்லது வென்னீரைப் பருகி, உணவைக் கூழாக்கி, அது செரித்திட உதவ வேண்டும். திரவக் குறைவினால் ஜீரணத் தடை, இரைப்பையில் வாயுவின் தேக்கம், விக்கல், கமறல் போன்றவை ஏற்படலாம்.

4.ஸ்நேஹ: இரைப்பையின் உள்ளே வழுவழுப்பான சவ்வுப் பகுதியில் மென்மை ஏற்பட நெய்ப்புத் தேவை. நெய்யை உருக்கிச் சூடான சாதத்துடன் சாப்பிடுவதால், வயிற்றில் எண்ணெய்ப் பசை உருவாகிறது. வயிற்றில் வாயு ஓரிடத்தில் தடைபடாமல், அதன் சஞ்சாரம் குடலெங்கும் சுகமாக நடைபெறுவதால், நீங்கள் நெய்யை உணவில் பயன்படுத்தவும்., நெய் சாப்பிட உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் தயிர், தேங்காய், எள் போன்றவற்றை உணவில் சேர்த்து, நெய்ப்பை வயிற்றினுள்ளே சேரும்படி பார்த்துக் கொள்ளவும்.

5.கால: உண்ட உணவு நன்றாகச் செரிமானம் ஆவதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும். முழு உணவும் செரிக்க சுமார் ஆறுமணி நேரம் வரை ஆகலாம். அதற்குள் மேன்மேலும் உணவைச் சாப்பிட நேர்ந்தால், நோய் தாக்குகிறது. செரிமானம் செய்யும் ஜீரணத் திரவம் எத்தனை வலுவாக இருந்தாலும் நேர ஒதுக்கீடு மிகவும்  அவசியம்.

6. ஸமயோகம்: உணவுப் பொருளின் தன்மை, அதன் பக்குவ முறை, எதை எதனுடன் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்ற தெளிந்த அறிவு, உண்ணும் உணவின் அளவு, உணவு விளையும் தேசம், வயதிற்கு ஏற்ற உணவு, சாப்பிடும்போதுள்ள உடல் நிலை, தேகவாகிற்கு ஒத்துக் கொள்ளும் உணவு ஆகியவற்றை நீங்கள் கவனித்து நிதானத்துடன் ஏற்பது நல்லது.

ஆயுர்வேத மருந்துகளில் வாயு குளிகை ஒன்றிரண்டு உணவிற்கு முன் காலை இரவு வென்னீருடன் சாப்பிட, உங்களுடைய உபாதை குறைய வாய்ப்பிருக்கிறது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com