
சம்பத் நாம போட்டுக்கறதாலே ஒண்ணும் பிரச்சினை இல்லை. நாம ஐயாவோட ஒபிடியண்ட் ஸ்டூடன்ட்ஸ் ஆனா, கிராமத்திலே நம்ம ஆதரவாளர், மிட்டா மிராசுகள், சனாதனிகள் எதிர்ப்புக்கிடையே மறைமுகமாக ஆதரவாளராகச் செயல்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கறுப்புச்சட்டை போட்டால்தான் கழகத்தவர் என்றால், அவர்களை எதிரிகளுக்கு நாமே அடையாளம் காட்டுவதாக ஆகாதா? அவர்கள் நிலையையும் எண்ணிப் பார்க்க வேண்டுமல்லவா?''
இப்படி அண்ணா அவர்கள் கறுப்புச்சட்டையைக் கட்டாயம் ஆக்கக்கூடாது என்பதற்கான விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
""இதனால்தான் மதுரை மாநாட்டிற்கு வரவில்லையா?''
என்று சம்பத் கேட்டார். அதற்கு அண்ணா, ""மதுரையில் இவ்வளவு பயங்கரம் ஏற்படுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. மேலும், அங்கே ஒரு காண்ட்ராவெர்சியை ஏற்படுத்த விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக என் உடல்நிலை இடந்தரவில்லை. இல்லையென்றால் இங்கே வாங்கிய திட்டை அங்கேயே வாங்கிக் கொண்டிருப்பேன்'' என்று அண்ணா மனம் திறந்து சொன்னார்.
இந்தப் பிரச்னையை மனத் தராசில் சீர்தூக்கிப் பார்த்தார் சம்பத். அண்ணா சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.
சம்பத் சுலோச்சனா திருமணம்:
வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிரபல வழக்கறிஞர் நீதிக்கட்சிப் பிரமுகர் சாமி நாயுடு. பெரியார், அண்ணா, சம்பத் முதலானோர் வடஆற்காடு மாவட்டத்தில் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும், திருப்பத்தூர் சாமி நாயுடு இல்லத்தில் தங்கி, உணவருந்தி, ஓய்வெடுத்துச் செல்வது வழக்கம்.
சாமிநாயுடுவின் புதல்வி சுலோச்சனா சிறு வயதிலிருந்தே அவரது இல்லத்திற்கு வந்துபோகும் பெரியாரை நன்கறிவார். பெரியார் சிறுவர், சிறுமியரிடமும் வெகுவாக மரியாதைக் காட்டுவார். "வாங்க... ஆமாங்கோ' என்றெல்லாம் அளவுக்கு அதிகமாக அன்பு செலுத்துவார். தவறு கண்டால் கோபமும் அதிகமாகவே வரும்.
அவரது உரையாடல்களையெல்லாம் சிறுமியாக இருந்தபோதே அருகிலிருந்து கேட்டு, ரசிக்கின்ற வாய்ப்பு மாணவி சுலோச்சனாவுக்குக் கிடைத்தது. பெரியாரது உணவுப் பழக்கங்கள், எதை விரும்புவார், விரும்பமாட்டார் என்பதெல்லாம் அவருக்கு அப்போதே அத்துப்படி.
பெரியார் பெண் பார்த்து சுலோச்சனா அவருக்கு மருமகளாகவில்லை. அவரோடு வந்த அவருடைய மகன் சம்பத், சுலோச்சனாவுக்கு அறிமுகமானார். அவர்களிருவரும் ஒருவரையொருவர் நேசித்தனர். திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினர்.
இந்த விருப்பத்தை பெரியாரிடம் எப்படித் தெரிவிப்பது என்று இருவருக்குமே அச்சமாக இருந்தது. இதனால் இருவரும் தங்கள் திருமண விருப்பத்தை முதலில் அண்ணாவிடம் தெரிவித்தனர். மகிழ்ச்சியோடு வரவேற்ற அண்ணா, ""நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சமயம் பார்த்துப் பெரியாரிடம் பேசி ஒப்புதல் பெற்றுவிடுகிறேன்'' என்று ஆறுதல் சொன்னார்.
பெரியார் செல்லம் கொடுக்கக்கூடிய அளவிற்குக் கண்டிப்பும் உடையவர். எந்தச் சந்தர்ப்பத்திலும், யாரிடத்தும் தயவு தாட்சண்யமின்றித் தாம் நினைக்கிற விஷயத்தை முனை மழுங்காது அப்பட்டமாகப் பேசிவிடக்கூடியவர். ""மன்னிக்கணுங்க நீங்க செய்தது ரொம்ப பெரிய தப்பு, அயோக்கியத்தனமுங்க..'' என்று மரியாதை கலந்து கண்டிப்பில் கடுமை காட்டுவார்.
பெரியார் வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தார் அதில் அவர் உறுதியாகவும் இருந்தார். பெரியாரின் தங்கையின் மகள் (மாப்பிள்ளை நாயக்கரின் திருமகளார்) எஸ்.ஆர். காந்தி. அவரைத்தான் சம்பத்துக்கு மணம் முடிப்பது என்று பெரியார் திட்டமிட்டிருந்தார். இத்துடன் தமக்கும், கட்சிக்கும் சம்பத்தை வாரிசாக்கிவிடுவது என்றும் பெரியார் எண்ணி இருந்தார். இதற்காக அவர் சட்டப்படி பதிவு செய்துவிட, ஈ.வெ.கி. சம்பத் பெயரில் பத்திரங்கள்கூட வாங்கி வைத்துவிட்டார்.
சம்பத்தை தம் வாரிசாகத் தத்து எடுத்துக் கொள்வது. தமக்குப் பின் கட்சித் தலைமையை நிரந்தரமாக அவரிடம் அளித்துவிடுவது, தம் தங்கை மகள் எஸ்.ஆர். காந்தியை சம்பத்துக்கு மணம் முடித்து வைப்பது இந்த மூன்று திட்டங்களிலும் பெரியார் அழுத்தமாக இருந்தார்.
முதலில் ஏற்பட்டது சம்பத்தின் திருமணப் பிரச்னை. தாம் காதலிக்கும் சுலோச்சனாவையே கரம் பிடிக்க சம்பத் உறுதியாக இருந்தார். இது கேட்டு பெரியார் சீறினார். கோபம் கொப்பளித்தது. ""நான் சொல்லுகிறபடி காந்தியைத் (அத்தை மகளை) திருமணம் செய்து கொள்ளாவிட்டால் உனக்கு என் சொத்தில் கால் காசுகூட இல்லை. என்னை மறந்துவிடு'' என்று ஆவேசமாகப் பேசினார்.
சம்பத்தைப் பொறுத்தவரை பெரியாரின் சொத்துகளுக்கு ஆசைப்பட்டவராகவோ, கட்சிக்கு வாரிசுரிமை கொண்டாட வேண்டும் என்ற எண்ணமோ இல்லாதவர். ஆகவே பெரியாரின் மிரட்டல் பற்றி அவர் அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை. ""சுலோச்சனாவைத்தான் திருமணம் செய்து கொள்வேன்'' என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.
பெரியார் ஆத்திரவயப்பட்டவராக உறுமிக்கொண்டும் தடியால் தட்டிக்கொண்டும் இங்குமங்கும் நடந்தார். பெரியார் மாளிகையே பதற்றத்தில் இருந்தது. சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமி இயல்பாகவே பொறுமைசாலி. அவரும் சம்பத்திடம் கோபமாகப் பேசினார். குடும்பத்தார் சமாதானப்படுத்தினர். இந்தப் பிரச்னை முடிவற்று நீடித்துக் கொண்டிருந்தது.
ஈ.வெ. கிருஷ்ணசாமியின் கடிதத்தைப் பார்த்துவிட்டு காஞ்சியில் இருந்து அண்ணா ஈரோடு வந்தார். என்ன நடந்திருக்குமென்பது அண்ணாவுக்குத் தெரியும். அவரால் மட்டுமே பெரியாரைச் சமாதானப்படுத்தவும் முடியும். இதில் அவருக்கு தர்மசங்கடம். சம்பத்தைக் கெடுத்ததே அண்ணாத்துரைதான் என்பது பெரியாரின் பொருமல்.
இதில் ஒரு நல்ல முடிவு காண்பது கடினம்தான். ஆனாலும் அண்ணாவுக்கு நம்பிக்கையிருக்கிறது. அவர் ஏற்கனவே குறிப்பிட்டவாறு பெரியாரிடம் இதைப்பற்றி பேசுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கறுப்புச்சட்டை போடாததால் அண்ணாவின் மீது பெரியாருக்கு கோபம். "குடந்தையில் குள்ளநரி' என்று பெரியார் கடுமையாகப் பேசியும் இருந்தார். இத்தனைக்கும் பிறகு அண்ணா தமது தம்பிக்காகப் பெரியாரைச் சமாதானப்படுத்த வேண்டிய சங்கடமான நிலை.
அண்ணா மெத்த சிரமப்பட்டு பேசி சம்பத் } சுலோச்சனா திருமணத்திற்குப் பெரியாரின் சம்மதத்தையும், சம்பத்தின் தந்தையார் ஈ.வெ. கிருஷ்ணசாமியின் ஒப்புதலையும் பெற்றுவிட்டார். சம்பத்தும் அவரது தோழர்களும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
திருமண நிச்சய நிகழ்ச்சி:
சம்பத் சுலோச்சனா திருமண நிச்சய நிகழ்ச்சி மணமகள் சுலோச்சனாவின் இல்லத்தில் நடந்தது; விருந்து பரிமாறப்பட்டது. அண்ணா, சம்பத், பொன்னம்பலனார், எஸ்.வி. லிங்கம், ஆனைமலை நரசிம்மன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி மற்றும் பலர் வரிசையாகப் பந்தியில் அமர்ந்தனர். அண்ணா மணமகளையே பரிமாறச் சொன்னார். மணமகள் பரிமாற முற்பட்டபோது அவரது தலையில் இருந்த ரோஜா மலர் சம்பத் இலையில் விழுந்தது. உடனே, அண்ணா மகிழ்ச்சி பொங்க, ""இது நல்ல அறிகுறி இதைப்போலவே என்றும் மணத்தோடு வாழ்க்கை அமைய வேண்டும்'' என்று சொல்லி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
திருமண விழா:
ஈ.வெ.கி. சம்பத் சுலோச்சனா வாழ்க்கை ஒப்பந்த விழா வடஆற்காடு திருப்பத்தூரில் ஏற்பாடாகியது. அண்ணா தம் மகன் திருமணம் போல், எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தார். திருமணப் பத்திரிகை அச்சிடப்பட்டு அனைவருக்கும் அனுப்பப்பட்டது. குடியரசு, விடுதலை, என்.வி. நடராசனின் திராவிடன், ஜலகண்டபுரம் கண்ணனின் பகுத்தறிவு ஆகிய ஏடுகளில் எல்லாம் சம்பத் சுலோச்சனா திருமண விளம்பரம் இடம் பெற்றிருந்தது.
பதிவுத் திருமணம்
அன்புடையீர்,
15.9.46 (ஆவணி 30ஆம் நாள்) ஞாயிறு காலை 8.00 மணிக்கு
எனது மகன் ஈ.வெ.கி. சம்பத், அவர்களுக்கும்
திருப்பத்தூர் வழக்கறிஞர் திரு. ஜி.சாமி நாயுடு, பி.ஏ.பி.எல். அவர்கள் மகள் தோழியர் எஸ். சுலோச்சனா அவர்களுக்கும்,
முன்னாள் அமைச்சர், வழக்கறிஞர் திரு. எஸ். முத்தையா முதலியார் அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் (வடஆற்காடு) மணமகள் இல்லத்தில் பதிவுத் திருமணம் நடைபெறும். அதிகாலை தாங்கள் வந்திருந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறேன்.
தங்களன்புள்ள,
ஈ.வெ. கிருஷ்ணசாமி
தங்கள் வரவை எதிர்பார்க்கும்:
எஸ். ராமசாமி, ஈ.வெ. ராமசாமி,
சி.என். அண்ணாதுரை, எஸ்.ஆர். சந்தானம்
மணவிழா:
பெரியார் இல்லத் திருமணத்தில் பங்கேற்க அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கழகப் பிரமுகர்களும், நண்பர்களும் திருப்பத்தூரில் திரண்டிருந்தனர். திருமண விழா நடைபெறுகிற மீனாட்சி தியேட்டர் களைகட்டியது. மேடையில் பெரியாரும், முக்கிய பிரமுகர்களும் அமர்ந்திருந்தனர். அலங்கரிக்கப்பட்ட இருக்கையில் மணமக்கள் அமர்ந்தனர். அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து கரவொலி யெழுப்பினர். அனைவருக்கும் மணமக்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர்.
மணவிழாவுக்கு, முன்னாள் அமைச்சர் வழக்கறிஞர் முத்தையா முதலியார் தலைமை வகித்தார். சேலம் கல்லூரிப் பேராசிரியர் ஏ. ராமசாமி முன்மொழிய, திருப்பத்தூர் வழக்கறிஞர் புலவர் பெரியசாமி வழிமொழிந்தார். தலைவர் முன்னுரையில், சம்பத்தின் குணநலன்களையும், அறிவாற்றலையும் புகழ்ந்து பேசியதோடு மணமகளின் தந்தையார் நீதிக்கட்சிப் பிரமுகர் சாமிநாயுடுவைப் பற்றியும் சிறப்பாக எடுத்துரைத்தார். பின்னர், மாவட்டப்பதிவாளர் திருமணத்தைப் பதிவு செய்தார். மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டனர். வாழ்த்தொலி முழங்கியது.
அஞ்சல் வழி வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பியிருந்தோரின் பெயர்களை மாணவத் தோழர் இரெ. இளம்வழுதி படித்தார். அடுத்து, ஜில்லா போர்டு தலைவர் டி. சண்முகம், க. அன்பழகன், ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசியபின் பெரியார் நீண்டதொரு வாழ்த்துரை வழங்கினார். அவர் ஆற்றிய உரையில் ஒரு பகுதி:
""அரசியல் பற்றி இங்கு நான் பேசப் போவதில்லை. இது சமுதாய சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய கூட்டம். இம்மாதிரிக் கூட்டங்களில் பெரும்பாலான மக்கள் பாட்டுக் கச்சேரி, புராணக் கதை, காலட்சேபம், நாட்டியம், நகைச்சுவை முதலியவற்றை வைத்து நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவார்கள் அல்லது கேளிக்கை ஆக்குவார்கள். அவற்றின் பயனாய் நேரம், பணம் வீணாவதல்லாமல் மக்களுக்கு யாதொரு பயனும் விளையாது. ஆனாலும், அப்படிப்பட்ட வீண் ஆடம்பரங்கள் மண வீட்டார் பெருமையில் சேர்ந்துவிட்டதால் அப்பயனற்ற காரியங்கள் பெரும்பாலான இடங்களில் செல்வாக்குப் பெற்றுவிட்டன. இங்கு நான் ஏதாவது பயனுள்ள பேச்சுப் பேச வேண்டும். பயனில்லா விடினும் சிந்தனைக்குரிய பேச்சாவது பேச வேண்டும் என்று இருக்கிறேன்.
இத்திருமண முறை புதியதாயிருப்பதால் அதைப்பற்றி பேசுவது பொருத்தமானதாக இருக்கலாம் என்றாலும் நம்மவர் இடையில் அது இப்போது பழைய பேச்சாகிவிட்டது. இத்தகு திருமணமுறை தொடங்கி 20 ஆண்டுகள் ஆகிறதென்றாலும் இதுபற்றி பேச வேறு அநேகர் இருக்கிறபடியாலும், இனியும் அதுவும் அப்பேர்ப்பட்ட அறிஞர் குழுவுக்கு நான் இதையே பேச வேண்டியது அவ்வளவு தேவை என்று கருதவில்லை''.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.