/

சிலந்திப் பூச்சிகளின் சிநேகிதி!

மனிதர்களின் வேலையே தன்னையும், தன்னைச் சுற்றியுள்ளவற்றையும் ஆராய்ந்து கொண்டிருப்பதுதான். வானத்துக் கீழ் உள்ளவற்றை மட்டுமல்ல, வானத்துக்கு மேலுள்ளவற்றையும் மனிதன் எப்போதும் ஆராய்ந்து கொண்டே இருக்கிறான்.

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:37 pm

மனிதர்களின் வேலையே தன்னையும், தன்னைச் சுற்றியுள்ளவற்றையும் ஆராய்ந்து கொண்டிருப்பதுதான். வானத்துக் கீழ் உள்ளவற்றை மட்டுமல்ல, வானத்துக்கு மேலுள்ளவற்றையும் மனிதன் எப்போதும் ஆராய்ந்து கொண்டே இருக்கிறான்.

பல விலங்குகள் குறித்தும் ஆந்தை, வெளவால் போன்றவை குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட ஆய்வுகளில் ஒவ்வோர் உயிரினத்தின் பிறப்பு, உணவு வகைகள், உடல் கூறின் தன்மைகள், இந்த உயிரினங்களால் ஏற்படும் நன்மைகள், தீமைகள், எந்தெந்தப் பகுதியில் எந்த வகையான உயிரினங்கள் வசிக்கின்றன என்பனவற்றைப் பற்றியெல்லாம் தெரிய வந்துள்ளன.

ஆனால் இப்படிப்பட்ட ஆய்வுகளில் ஈடுபடுபவர்கள் மிகச் சிலரே. அதிலும் பெண் ஆய்வாளர்கள் மிகவும் குறைவு.

நம் வீட்டில் மட்டுமல்ல, விவசாயத் தோட்டங்களிலும் கூட காணப்படும் சிலந்தி பூச்சியையும் கூட (எட்டுக்கால் பூச்சி) ஒரு பெண் ஆய்வு செய்து வருகிறார். அவர், எஸ். ஜெயபார்வதி. முதுகலை விலங்கியல் துறை உதவிப் பேராசிரியராக சிவகாசியில் உள்ள அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் பணியாற்றுகிறார். அந்த இளம் ஆய்வாளரை சந்தித்து அவரது அனுபவங்களைக் கேட்டோம்:

உங்களுக்கு எப்படி இந்த ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது?

நான் எம்ஃபில் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தலைப்பும் சிலந்திப் பூச்சிகள் குறித்துதான். பலர் வேறு பல பூச்சிகள் குறித்து ஆய்வு செய்துள்ளார்கள். எனவே வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தால் சிலந்திப் பூச்சிகள் குறித்து ஆய்வு செய்தேன். அதன் வாழ்கை முறை, உயிர் வேதியியல் பண்பு குறித்து ஆய்வு செய்தேன். எனவே சிலந்திப் பூச்சிகள் குறித்து எனக்கு ஆர்வம் முதலிலேயே இருந்தது.

சிலந்திப் பூச்சிகளைப் பற்றிய ஆய்வு, பிரான்சு நாட்டில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவில் இதுவரை யாரும் இந்த ஆய்வைச் செய்யவில்லை. ஏனெனில் இந்த ஆய்வு மிகவும் கஷ்டமானதாகும். மிகவும் பொறுமை தேவை. இதுபோன்ற சவாலான விஷயங்களை சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். சவாலில் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

இந்த ஆய்வுக்கு நிதியுதவி செய்வது யார்?

புதுதில்லியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆய்வுக்கு 2009-ல் விண்ணப்பித்தேன். 2010-ல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மெகாலியில் நேர்காணல் நடந்தது. இந்தியா முழுவதுமிலிருந்து பல்வேறு ஆய்வுக்காக 75 பெண்கள் வந்திருந்தார்கள். அதில் தமிழகத்தைச் சேர்ந்த நானும் இன்னொரு பெண்ணும் தேர்வு செய்யப்பட்டோம். இதையடுத்து எனது ஆய்வுக்கு ரூ.22.56 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓர் ஆண்டாக ஆய்வு செய்து வருகிறேன்.

நீங்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் ஆய்வு குறித்து..

உலக அளவில் சிலந்திப் பூச்சியில் சுமார் 50 ஆயிரம் வகைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக சிலந்திப் பூச்சிகளுக்கு 6 முதல் 8 கண்கள் இருக்கும். எங்கள் கல்லூரி வளாகத்தில் நான் 27 வகை சிலந்திப் பூச்சிகளைக் கண்டறிந்துள்ளேன். அவற்றில் நான் சில்வர் கார்டன் ஸ்பைடர் என்ற வகை சிலந்திப் பூச்சியை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.

சிலந்திப் பூச்சிகள் வலை பின்னுவதற்குத் தனது உடலில் இருந்து ஒருவகை நூலை வெளியேற்றி, வலை பின்னுகிறது. அந்த நூல் அறுவை சிகிச்சைக்குத் தையல் போடுவதற்கு மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் காயத்தால் ஏற்பட்ட புண்களுக்கு, பருத்தி நூலுடன் சிலந்தியின் நூலையும் இணைத்து தயாரிக்கப்படும், துணியை வைத்துத் துடைத்தால் புண் விரைவில் குணமாகிவிடும். வெறும் சிலந்தியை வைத்து பெருமளவு நூலை தயாரிக்க இயலாது. ஏனெனில் ஒரு பாட்டிலில் இரு சிலந்திப் பூச்சிகளை அடைத்து வைத்தால், ஒன்று மற்றொன்றை தின்றுவிடும் குணம் உள்ளது.

சிலந்திப் பூச்சியில் நூல் தயாரிக்கப்படும் ஜீனையும், பட்டுநூல் தயாரிக்கப் பயன்படும் பட்டுப் புழுவில் நூல் தயாரிக்கும் ஜீனையும் இணைத்தால் புதிய வகை நூல் கிடைக்கும் என்பதே எனது ஆய்வின் கரு.

உங்கள் ஆய்வில் இப்போதைய நிலை என்ன?

இப்போது சிலந்திப் பூச்சியில் நூல் தயாரிக்கும் ஜீனைக் கண்டறிந்து தனியே பிரித்து எடுத்துள்ளேன். இனி பட்டுப் புழுவின் நூல் தயாரிக்கும் ஜீனைக் கண்டறிந்து தனியே பிரித்து எடுத்து இரண்டையும் இணைக்க வேண்டும். நான் ஆய்வு தொடங்கி ஓர் ஆண்டு ஆகிறது. மேலும் இரு ஆண்டில் ஆய்வு நிறைவடையும்.

எனது ஆய்வுக்கு எங்கள் கல்லூரி முதல்வர் எஸ்.பாஸ்கரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் குணசேகரன் ஆகியோர் ஊக்கம் அளித்து வருகிறார்கள்.

இந்தியாவில் இந்தவகை ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று ஆய்வைத் தொடங்கும்போது எனக்குத் தெரியாது. இணையதளம் மூலம் தான் இதைத் தெரிந்துகொண்டேன். இந்தியாவில் இது குறித்து முதல் ஆய்வு என்பதால், மிகவும் கவனமாக ஈடுபட்டு வெற்றி பெற்று, காப்புரிமைபெற வேண்டும் என இரவு, பகல் பாராது ஆய்வை மட்டுமே மனதில் இருத்தி செயல்பட்டு வருகிறேன்.

சிலந்திப் பூச்சிகளுக்காக காடுகளுக்கு சென்ற அனுபவம் உண்டா?

சிவகாசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களுக்குச் சென்று சிலந்திப் பூச்சிகளைக் கண்டறிந்துள்ளேன். இந்த ஆய்வினை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.