ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: எப்போதோ வந்த கட்டியால் இப்போது பிரச்சனை... என்ன செய்யலாம்?

என் வயது 64. என்னுடைய 25 வது வயதில் வலது கை முழங்கைக்குக் கீழ் கட்டி வந்தது. மிகுந்த வலி, வேதனை. டாக்டர் ஊசி மூலம் கட்டியைக் கரைத்துவிட்டார். ஆனால் தற்போது கோடைக்காலம் வரும்போதெல்லாம் அதே இடத்திலிருந்
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: எப்போதோ வந்த கட்டியால் இப்போது பிரச்சனை... என்ன செய்யலாம்?
Updated on
2 min read

என் வயது 64. என்னுடைய 25 வது வயதில் வலது கை முழங்கைக்குக் கீழ் கட்டி வந்தது. மிகுந்த வலி, வேதனை. டாக்டர் ஊசி மூலம் கட்டியைக் கரைத்துவிட்டார். ஆனால் தற்போது கோடைக்காலம் வரும்போதெல்லாம் அதே இடத்திலிருந்து கைவிரல் பாகம் வரை வீக்கமும் வலியும் ஏற்படுகிறது. இது குறைய வழி என்ன? இரவில் தூக்கமும் குறைவு. அதற்கு என்ன செய்யலாம்?

கே.கோதண்டராம், துவாக்குடி, திருச்சி.

கட்டியை உருவாக்கிய தோஷங்களின் நிலைப்பாட்டினை அமுக்கிய காரணத்தினால் அவற்றின் சீற்றம் வெளிப்புறம் அடங்கியிருந்தாலும் காலநிலைகளின் அனுகூலத்தால், தன்னுடைய கோபத்தை மறுபடியும் கோடையில் காட்டுகிறது. வியர்வைக் கோளங்களில் அழற்சியும் தோலின் பாதுகாப்பிற்காகத் தோலின் அடிப்பகுதியில் அமைந்துள்ள கொழுப்பு கோளங்களும் கோடையின் வெளித்தாபமிகுதியால் இயற்கையாகவே வறண்டுவிடுகின்றன. இப்பகுதியில்தான் தோஷத்தின் தாக்கம் உங்களுக்கு ஏற்படுவதாகத் தோன்றுகிறது. ஒரு சில உபாயங்கள் பயனளிக்க வாய்ப்பிருக்கிறது.

குளிக்கும் தண்ணீரில் வேப்பிலை, கடுக்காய், அருகம்புல் ஆகியவற்றை ஒரு பிடியளவு சேர்த்து, வெந்நீராக்கி இளம் சூடாக ஆறியதும், துணியில் நனைத்து வீக்கமும் வலியும் உள்ள இடத்தில் தேய்த்துக் குளிக்கவும். அதுபோலவே வேப்பிலை, சிற்றாமணக்கிலை, புங்க இலை இவற்றைத் தண்ணீரில் கொதிக்கவிட்டுக் கஷாயமாக்கி, அதில் நனைத்த துணியால் ஒத்தம் கொடுக்கலாம்.

மேற்குறிப்பிட்ட இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கித் துணியில் முடிந்து கட்டி ஒத்தடம் கொடுக்கலாம்.

நன்னாரி வேர்த்தோல், மாகாளிக் கிழங்குத் தோல், அதிமதுரம், கோரைக்கிழங்கு, சந்தன சிராய், ரோஜா மொட்டு, கருங்காலிக் கட்டையின் வைரப் பகுதி, சோம்பு, பரங்கிப்பட்டை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்துப் பெருந்தூளாக இடித்து, 15 பொட்டலங்கள் சமமாகப் பிரித்துக் கட்டவும். தினமும் 1 பொட்டலத்தை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு 250 மில்லியாகக் குறுக்கி வடிகட்டி, 125 மி.லி. காலையிலும், பாக்கியை மாலையிலும் தினமும் பனங்கற்கண்டோ, சர்க்கரையோ சேர்த்துச் சாப்பிடவும். வெப்பத்தால் ரத்தம் கெட்டு ஏற்படும் சிரங்கு, அரிப்பு, சொறி, வியர்க்குரு, வீக்கம், வலி போன்றவை விரைவில் நீங்கிவிடும். புனர்நவாதி, சோணிதாமிர்தம், கோகிலாக்ஷம், பிருகத்யாதி, தசமூலம், அர்த்த பில்வம் போன்ற தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மருந்துகளும் வீக்கம் வலியைக் குறைக்கக் கூடியவைதான். அதில் பொருத்தமானவற்றை ஓர் ஆயுர்வேத மருத்துவரால் மட்டுமே நிர்ணயம் செய்ய முடியும்.

உணவில் தயிர், வெல்லம், புளித்த ஊறுகாய், மாம்பழம், மாங்காய், மாவடு, புலால் உணவு வகைகளைத் தவிர்க்கலாம். சாதாரண தண்ணீர் குடிப்பதைவிட, நன்னாரி வேர், விலாமிச்சை வேர், அதிமதுரம் இவற்றில் ஒன்றையோ எல்லாவற்றையும் சேர்த்தோ, இடித்து வெந்நீரில் டீ போடுவதுபோல ஊரல் கஷாயமாக்கிச் சாப்பிட்டு, அதன் மேல் சிறிது தண்ணீர் பருகுவதால் தாகமும் அடங்கும். வலி வீக்கமும் குறையும்.

பிண்ட தைலம் எனும் மூலிகைத் தைலத்தை லேசாகச் சூடாக்கி, கையில் ஏற்பட்டுள்ள வலி மற்றும் வீக்கப் பகுதியில் பூசி, 1/2 - 3/4 மணி நேரம் ஊறிய பிறகு முன் குறிப்பிட்ட இலை ஒத்தடம் கொடுப்பதும் நல்லதே.

சந்தனக் கட்டையைக் கல்லில் அரைத்து எடுத்த விழுதுடன், நெல்லி முள்ளி அரைத்த விழுதையும் சேர்த்துக் கலந்து நெற்றியில் பற்றுப் போடுவதன் மூலம் நல்ல தூக்கத்தைக் கோடையில் நீங்கள் பெறலாம். கோடையில் ஏற்படும் ஒற்றைத் தலைவலி, பொட்டில் ஏற்படும் வலியையும் தவிர்க்கலாம். சுக்கு, கொத்துமல்லி விதை போட்டுக் காய்ச்சிய வெந்நீரைச் சாப்பிடுவதன் மூலமாக, கையில் ஏற்பட்டுள்ள வீக்கம் மற்றும் வலிகளுக்கு ஓர் எளிதான தீர்வாகவும் அமையலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com