9 வயது கல்லூரி மாணவன்
ஒன்பதே வயதான ஒரு சிறுவன் கல்லூரியில் சேர்ந்து படித்து எல்லா செமஸ்டர் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை


அதியம் ஆனால் உண்மை என்பார்களே, அந்த ரகத்தில் இதைச் சேர்க்கலாம்! ஒன்பதே வயதான ஒரு சிறுவன் கல்லூரியில் சேர்ந்து படித்து எல்லா செமஸ்டர் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறான். பெயர் தனிஷ்க் ஆப்ரஹாம்.
அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் சாக்ரமென்ட்டோ நகரில் உள்ள "அமெரிக்கன் ரிவர் காலேஜ்' -
இல்தான் படிக்கிறான் அந்த மாணவன்.
தனிஷ்க்கின் அப்பா பிஜோ ஆப்ரகாம் மென்பொருள்துறையில் வல்லுநர். அம்மா டாஜி ஆப்ரஹாம் விலங்குகள் நல மருத்துவர். இருவரும் நமது கேரள மண்ணைச் சேர்ந்தவர்கள்.
தனிஷ்க் மலையாளம் நன்றாகப் பேசுவான். அவன் தங்கை தியாராவுக்கும் மலையாளம் தெரியும். இருவருக்கும் இந்தியும் தெரியும். இந்திப் படங்களை ஆர்வமாகப் பார்ப்பார்கள்.
இரண்டு வயதிருக்கும்போதே 1-லிருந்து 100 வரை எண்ண தனிஷ்க்குத் தெரிந்திருக்கிறது. கதைப் புத்தகங்களில் உள்ள படங்களைப் பார்த்து, ஞாபகமாக அந்தக் கதைகளைச் சொல்லத் தெரிந்திருக்கிறது.
அவனுக்குப் பிற குழந்தைகளைவிட அதிக அறிவுத்திறன் இருக்கும் என்று நினைத்த அவனுடைய பெற்றோர், "மென்சா இன்டர்நேஷனல்' என்ற அமைப்பு நடத்தும் அறிவுத்திறன் தேர்வில் அவனைப் பங்கேற்க வைத்தனர். அப்போது அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
உச்சபட்ச அறிவுத்திறனுக்கு மென்சா இன்டர்நேஷனல் வைத்திருந்த வரையறையில் தனிஷ்க் பெற்றது 99.9 சதவீதம். அதாவது அவனுடைய ஐக்யூ 148 இருந்திருக்கிறது.
எல்லாக் குழந்தைகளையும் போலவே தனிஷ்க்கை பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். முதல் கிரேடு படிக்கும்போதே 4 ஆவது 5 ஆவது கிரேடு பாடத்தில் உள்ள கணக்குகளை மிக எளிதாகப் போட்டிருக்கிறான் தனிஷ்க். அவனுடைய வேகத்துக்குப் பள்ளி ஈடு கொடுக்க முடியவில்லை.
அதுமட்டுமல்ல, பள்ளியில் இவனுடைய வயதுக் குழந்தைகள் தனிஷ்க்கிடம் அன்பாகப் பழகவில்லை. பேசவில்லை. இவ்வளவு அறிவுத்திறன் மிக்க குழந்தையை ஆசிரியர்களுக்கும் பிடிக்காததுதான் ஆச்சரியம். இதனால் பள்ளிக்குப் போவதற்கு அவனுக்கு விருப்பம் இல்லாமற் போய்விட்டது.
அதன் பிறகு, அவனுக்கு வீட்டிலேயே பாடம் சொல்லித் தர ஆரம்பித்தார்கள். அவனுடன் வீட்டில் படிக்கும் இன்னொரு மாணவி, அவனுடைய தங்கை தியாரா. தனிஷ்க்கைப் போலவே தியாராவும் அறிவுத்திறன் மிக்க குழந்தை. அவளையும் "மென்சா இன்டர்நேஷனல்' அமைப்பு அறிவுத்திறன் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அவளுக்கும் அதிக அறிவுத்திறன் இருப்பது தெரிய வந்தது. அவளுக்கு ஓவியத் திறமை அதிகம். பாடகியும் கூட.
வீட்டிலேயே படித்தாலும் பள்ளி அதிகாரிகள் வந்து மாதத்துக்கு ஒருமுறை இவர்களிருவரையும் சோதனை செய்கிறார்கள்.
தனிஷ்க்கின் எட்டாவது வயதில் அவனை அமெரிக்கன் ரிவர் கல்லூரியில் பகுதிநேர படிப்பில் மாணவனாகச் சேர்த்தார்கள். அவனுக்கு கல்லூரியில் முழுநேரமும் படிக்க வேண்டும் என்ற வெறி. கல்லூரி நிர்வாகம் அதற்கு அனுமதிக்கவில்லை. தனிஷ்க் இப்போது படித்து முடித்திருப்பது, வானவியல், நில இயல், உயிரித் தொழில்நுட்பவியல்.
கல்லூரிக்கு தனிஷ்க் செல்லும்போது, அவனுடைய அம்மா டாஜியும் அவன் கூட செல்வார். தனிஷ்க் அமர்ந்திருக்கும் சீட்டுக்குப் பின்னே அமர்ந்து கொள்வார். பிற மாணவர்கள் தனிஷ்க்கின் அம்மாதான் படிக்க வந்திருக்கிறார் என்று ஆரம்பத்தில் நினைத்திருக்கிறார்கள். தன்னைவிட பாதி மடங்கு வயது குறைவான தனிஷ்க்தான் படிக்க வந்திருக்கிறான் என்று தெரிந்தவுடன் அவர்கள் முகத்தில் தெரிந்த வியப்பும் கூச்சமும்... அதை தனிஷ்க்கின் அம்மாவால் இன்னும் மறக்க முடியவில்லையாம்.
தனிஷ்க் படிப்பில் மட்டும்தான் புலி என்று நினைத்துவிடாதீர்கள்.
3 வயதிலேயே அவனுக்குப் பியானோ வாசிக்கத் தெரியும். "சான்ஃபிரான்சிஸ்கோ பாய்ஸ் கோரஸ்' குழுவில் அப்போதே சேர்ந்துவிட்டான். செஸ் தெரியும். நீந்தத் தெரியும். நன்றாக நடனமாடுவான்.
ஏழு வயது இருக்கும்போது நாசாவின் இணையதளமான லூனார் சயின்ஸ் இணையதளத்தில் வானவியல் பற்றிக் கட்டுரை எழுதிப் புகழ்பெற்றான். அவனுக்குள்ள ஒரே பிரச்னை, கட்டுரையைக் கையில் எழுதுவதே. கம்ப்யூட்டரில் டைப் அடிப்பது ஈஸி என்கிறான்.
உலக அளவில் புகழ்பெற்ற வர்ன் ற்ன்க்ஷங்
இன் டிவி சேனலான பஏசஓத இல் தனிஷ்க் பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்குப் பின் இசச, அஆஇ, ஙநசஆஇ, ஊஞல போன்ற டிவிகளில் தனிஷ்க்கின் பேட்டிகள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி புகழ்பெற்றன.
தனிஷ்க் கல்லூரியில் சேர்ந்து படிப்பது எல்லாருடைய விழிகளையும் வியப்பால் விரியச் செய்தாலும், சிலர் கடுமையாக விமர்சனமும் செய்திருக்கின்றனர்.
நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், தனிஷ்க்கின் மீது அவன் அம்மா டாஜி, "நிறையப் பாடச்சுமையை ஏற்றுவதாகவும், ஒரு குழந்தையின் தாங்கு திறனை அவர் புரிந்து கொள்ளவில்லை' என்றும் குறை சொல்லி எழுதியது.
தனிஷ்க்கின் அம்மா இதைப் பொருட்படுத்தவில்லை. ""எங்களுடைய குழந்தைகளுக்கு எது தேவையென்று பெற்றோராகிய எங்களுக்குத் தெரியாதா? எங்களுடைய பிள்ளைகள் மீது எங்களுக்கு அக்கறை உண்டு. இவர்கள் நினைப்பதைப் போல எங்களுடைய குழந்தைகளை நாங்கள் துன்புறுத்தவில்லை. கல்லூரிக்குப் போவதற்கு தனிஷ்க் ரொம்ப ரொம்ப விரும்புகிறான். மகிழ்ச்சியாக இருக்கிறான். இதெல்லாம் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது'' என்கிறார் அந்த ஆபரணத்தைப் பெற்ற அம்மா டாஜி சூடாக.
"தனிஷ்க்' என்றால் ஆபரணம் என்று பொருளாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...