திரைக்கதிர்

கெளதம் மேனன் இயக்கும் "நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நாயகன் ஜீவாவும் நாயகி சமந்தாவும் "லிப் டூ லிப்' முத்தக் காட்சியில் நடித்துள்ளனர்.
திரைக்கதிர்

18 வயசு' படத்தில் அறிமுகமான காயத்ரி தன்னுடைய சிறப்பான நடிப்பால் பல இயக்குநர்களின் "வான்டட்' லிஸ்டில் இருக்கிறார். தற்போது நான்கு தமிழ்ப் படங்களில் நடித்து வரும் காயத்ரிக்கு - அண்மையில் வெளியான "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துக்குப் பிறகு பல வாய்ப்புகள் வந்துள்ளன. ஆனால் மேற்படிப்பைத் தொடர விரும்புவதால் புதிய பட வாய்ப்புகளைத் தவிர்த்து வருகிறார்.

மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவை கதாநாயகனாக வைத்து பாலா இயக்கியுள்ள "பரதேசி' படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தில் அதர்வாவை நடிக்க வைத்த பின்னணி குறித்து கேட்டபோது... ""நான் பள்ளியில் படித்தபோது எங்கள் ஊரில் நடைபெற்ற "அதர்மம்' படத்தின் படப்பிடிப்பின்போதுதான் முரளியை முதலில் பார்த்தேன். பின்னாளில் சென்னை வந்து உதவி இயக்குநராக பணியாற்றியபோது முரளியைச் சந்தித்தேன். "சேது' படத்தில் முதலில் முரளிதான் நடிப்பதாக இருந்தது. பின்னர் சில சூழ்நிலைகளால் அது முடியவில்லை. இருந்தாலும் அந்தக் காலகட்டத்திலேயே என்னை 15 தயாரிப்பாளர்களிடம் அழைத்துப் போய் படம் இயக்குவதற்குச் சிபாரிசு செய்தார். அந்த நன்றிக் கடனுக்காகத்தான் அவருடைய மகன் அதர்வாவை "பரதேசி' படத்தில் நாயகன் ஆக்கினேன்'' என்றார் பாலா.

நீண்ட இடைவெளிக்கு பின்பு ஸ்ரீதேவி நடித்த "இங்கிலீஷ் விங்கிலீஷ்' தமிழிலும் ஹிந்தியிலும் நல்ல வெற்றியைப் பெற்றது. ஸ்ரீதேவியின் நடிப்பு திறமையை பலரும் பாராட்டினர். இந்த படத்துக்கு பின்பு ஸ்ரீதேவிக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிகின்றன. இயக்குனர்கள் ஸ்ரீதேவியை முற்றுகையிட்டு அவர் வயதுக்கு ஏற்ற கதை இருப்பதாக சொல்லி நடிக்க அழைத்து வருகின்றனர். அதே சமயம் "இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ள கெüரி ஷிண்டேயும் அழைப்பு விடுக்க, அவருக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார் ஸ்ரீதேவி.

தனுஷ் முதல் முறையாகத் தயாரிக்கும் படம் "எதிர் நீச்சல்'. இதில் சிவகார்த்திகேயன், ப்ரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வெற்றிமாறனின் உதவியாளர் செந்தில் படத்தை இயக்குகிறார். "ஒய் திஸ் கொலைவெறி...' புகழ் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக தனுஷ், ஓர் அயிட்டம் பாடலுக்கு நடனமாடவுள்ளார். அவருடன் இணைந்து ஆடுவதற்காக நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது.

கெளதம் மேனன் இயக்கும் "நீதானே என் பொன்வசந்தம்' படத்தில் நாயகன் ஜீவாவும் நாயகி சமந்தாவும் "லிப் டூ லிப்' முத்தக் காட்சியில் நடித்துள்ளனர். சமந்தா முதல் முறையாக முத்தக் காட்சியில் நடித்துள்ள இந்தக் காட்சி, படத்தில் இடம்பெறுவது சந்தேகம் என்கிறது படக்குழு. காரணம் "யு' சான்றிதழுக்காக சென்சார் இந்தக் காட்சிக்கு கத்திரி போட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

"சிறுத்தை' படத்தை இயக்கிய சிவாவின் புதிய படத்தில் நடிக்கிறார் அஜித். இந்தப் படத்துக்கு அனுஷ்காவைத்தான் கதாநாயகியாக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் பிஸியாக இருக்கும் அனுஷ்காவால் இயக்குநர் கேட்ட நாள்களில் கால்ஷீட் ஒதுக்க முடியவில்லையாம். அதனால் தமன்னாவை அஜித் ஜோடியாக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

வசந்தின் "மூன்று பேர் மூன்று காதல்' படம் தனக்கு பெரிய "பிரேக்' தரும் என்ற நம்பிக்கையில் உள்ளார் பானு. அதனால் அந்தப் படம் வெளியாகும் வரை வேறு படங்களை ஒப்புக்கொள்ளாமல் புதிதாக ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார். விதவிதமான ஆடையலங்காரத்துடன் எடுக்கப்பட்டுள்ள தன்னுடைய புகைப்படங்களை பிரபல இயக்குநர்களின் அலுவலகங்களுக்கு அனுப்புவதோடு தொலைபேசி மூலமும் வாய்ப்பு கேட்டு வருகிறார்.

திருமணத்துக்குப் பிறகுதான் சிநேகாவுக்கு நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றனவாம். திரைப்படங்களில் அல்ல; விளம்பரங்களில்... அதுவும் கணவர் பிரசன்னாவுடன் இணைந்து நடிப்பது போன்ற விளம்பரங்கள்தாம். அதனால் ஒரு பெரும் தொகையைக் கேட்டு இந்த ஜோடி அதிர்ச்சியை அளித்தாலும் பல முன்னணி நிறுவனங்கள் அதற்கு சம்மதித்து ஒப்பந்தம் செய்து வருகின்றன. சினிமாக்களை விட விளம்பரங்களில்தான் அதிகம் சம்பாதித்திருக்கிறார் சிநேகா என்பது அவருடைய நெருங்கிய தரப்பில் இருந்து கசியும் தகவல்.

காதல் மன்னன் ஜெமினிகணேசன் - நடிகையர் திலகம் சாவித்ரி ஆகியோரின் மகள் வழிப் பேரன் அபிநய், "விளம்பரம்' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தை புதியவர் சூர்யநிதி இயக்குகிறார். ஏற்கெனவே "யங் இந்தியா' என்ற தெலுங்குப் படத்தில் நடித்துள்ள அபிநய், பிரபல டேபிள் டென்னிஸ் வீரரும் கூட. தேசிய அளவில் நடைபெற்ற அனைத்து டேபிள் டென்னிஸ் போட்டிகளிலும் பங்கேற்று கணிசமான வெற்றிகளைக் குவித்தவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com