ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் சூட்டினால் வரும் தும்மல் நீங்க...

என் வயது 22. நீண்ட நாட்களாக அடுக்குத் தும்மல் இருந்து வருகிறது. கோடையிலும் தும்மல் உள்ளது. குளிர்காலத்தில் சற்று அதிகமாக உள்ளது.
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் சூட்டினால் வரும் தும்மல் நீங்க...
Updated on
1 min read

என் வயது 22. நீண்ட நாட்களாக அடுக்குத் தும்மல் இருந்து வருகிறது. கோடையிலும் தும்மல் உள்ளது. குளிர்காலத்தில் சற்று அதிகமாக உள்ளது. இதனால் தலைமுடி கொட்டிவிட்டது. உடல் மெலிந்து, உஷ்ணமாக இருக்கிறது. சில சமயங்களில் பசி மந்தமாக இருக்கிறது. இவை மாற வழி என்ன?

ஆவுடைநாயகி, புதுக்கோட்டை.

உடல் சூட்டினால், தலைப்பகுதியிலுள்ள கபத்தினுடைய குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழவழப்பு, பிசுபிசுப்பு, நிலைப்பு போன்ற தன்மை உருகுவதால், அதை வெளியேற்ற உடல் தும்மலை ஏற்படுத்தக்கூடும். வெயிலின் சூட்டினால் இமாலயத்திலுள்ள ஐஸ் கட்டிகள் உருகி, கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். உருகிய இந்த குணங்கள், மூக்கின் வழியே வெளியே வர எத்தனிக்கும்போது, தும்மலாகவும், உணவுக்குழாயின் வழியாக வயிற்றுப் பகுதியில் சேரும்போது, அங்குள்ள பசித்தீ மந்தமாகவும் ஆகிவிடும். ஆக, உடல் உஷ்ணத்தைக் குறைத்து, கபத்தின் தன்மைகள் உருகிவிடாமல் பாதுகாக்க வேண்டிய நிர்பந்தம் உங்கள் விஷயத்தில் இருக்கிறது.

கசப்பும், துவர்ப்புமுள்ள உணவும், மருந்தும் மட்டுமே உடல் சூட்டை அதிகரிக்கக் கூடிய பித்தத்தையும், தும்மலுக்குக் காரணமாகிய நீர்த்த கபத்தையும் கட்டும் திறமை கொண்டவை. அதனால் நீங்கள் உணவில் கசப்பு - துவர்ப்புச் சுவை கொண்ட பாகற்காய், சுண்டைக்காய், மணத்தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, வாழைப்பூ போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். இந்த வகை

உணவுகளை வெதுவெதுப்பான சாதத்துடன் சாப்பிட்டால், பசியைத் தூண்டி பித்த, கபங்களை மட்டுப்படுத்தும்.

தும்மல் குறையும்வரைதான் இந்தச் சுவைகளை நீங்கள் பயன்படுத்தலாம். இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தினால் உடல் புஷ்டி குறைந்து, மெலிந்துவிடும். அதனால் தோஷங்களின் சமநிலை எட்டியதும், இனிப்பு - புளிப்பு - உப்புச் சுவைகளைச் சமமான அளவில் உணவாக ஏற்பதின் மூலம் உடலின் வனப்பு கூடும்.

குடூச்யாதி கஷாயம் என்ற ஓர் ஆயுர்வேத மருந்து இருக்கிறது. சுமார் 15 மி.லி. கஷாயத்தில் 60 மி.லி.வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 21 நாட்கள் முதல் 48 நாட்கள் வரை சாப்பிட்டால், அது பித்த - கபங்களைக் கட்டுப்படுத்தி, தும்மலைக் குறைத்து, பசியைத் தூண்டி, உடல் உஷ்ணத்தை நன்றாகக் குறைத்துவிடும். அஸன வில்வாதி தைலம் எனும் மூலிகைத் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தவும். தோலுக்குச் சீதோஷ்ண சகிப்புத்தன்மையைக் குன்றாமல் அது பாதுகாக்கும்.

ஏலக்காய் விதையையும், கிராம்பையும் வெற்றிலைச் சாறு விட்டரைத்து லேசாகச் சூடாக்கி நெற்றியில் பற்று இட்டு வருவதும் நல்லதே.

உடலுக்கு வலுவூட்டக் கூடிய அகஸ்திய ரசாயனம் எனும் லேகிய மருந்தை, இரவு படுக்கும் முன் 5 கிராம் நக்கிச் சாப்பிடவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com