மலேசியாவில் தயாரான தமிழ்த் திரைப்படங்கள் "மலேசிய-இந்திய திரைப்பட விழா' எனும் தலைப்பில் சென்னையில் திரையிடப்பட்டன. திரைப்பட செய்நேர்த்தி தவிர, பிரமிக்க வைக்கும் கட்டடக் கலை, கலாசாரம், மலேசியாவின் அழகான பிரதேசங்கள் இவற்றையெல்லாம் திரைப்படங்களில் கண்டு ரசிக்க முடிந்தது.
இந்த விழாவில் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்றது "அப்பளம்' என்கிற படம். தன் மகளை உயிராக நேசிக்கும் அப்பா, சிறியதாக டிபன் கடை தொடங்கி, பின்பு ஒரு பெரிய ஓட்டலுக்கு முதலாளி ஆகிறார். சிறிய பெண் குழந்தையை விட்டுவிட்டு ஒரு சாலை விபத்தில் மனைவி இறந்து போகிறாள். கண்ணுக்குக் கண்ணாக மகளை வளர்க்கிறார் அப்பா.
மகள் பருவ வயதை அடைந்த பிறகும் தன் கண்காணிப்பைக் கைவிடவில்லை அப்பா. கவின் கலைக்கல்லூரி ஒன்றில் மகள் சேர்ந்த பிறகும்கூட அங்கு தோட்டக்காரனாகப் பணி புரிய அனுமதி பெற்று, மாறுவேடத்தில் மகளின் எதிர்கால வாழ்வுக்கு வழி வகுக்கிறார். எந்த இளைஞனும் தன் மகளிடம் தவறாகப் பழக முடியாதபடி காவல் காக்கிறார். ஒரு தந்தையின் தவிப்பை நகைச்சுவை இழையோடச் சொன்ன படம்.
சிறந்த கதைக்கான விருது பெற்ற படம் "ஆண்டாள்'. ஆண்டாள் என்ற பெண் தன் உறவுக்காரப் பையன் சுரேஷைத் திருமணம் செய்துகொண்டு நகரத்துக்கு வருகிறார். சுரேஷ் அவளை விலைமகள் ஆக்கிவிடுகிறான்; போதைப் பொருள்களுக்கும் அடிமையாக்குகிறான். கோலாலம்பூரில் இருக்கும் சில நல்ல நண்பர்கள் அவளது மீட்புக்கு வழிவகுக்கிறார்கள். ஒரு டாக்டரை மறுமணம் செய்துகொண்டு புதுவாழ்வைத் தொடங்குகிறாள் ஆண்டாள்.
"உத்ராட்ச காளி', "பஞ்சமுனி' ஆகிய இருபடங்களும் ஆன்மிகத் தேடல்கள் உள்ள படங்கள்.
"பஞ்சமுனி' முனீஸ்வரரின்
திருவிளையாடல்களைச் சொல்லும் படம். ஆனால் கதையோட்டத்தில் தொய்வு இருந்தது. விறுவிறுப்பாக கதை சொல்லியிருந்தால் படம் நிமிர்ந்திருக்கும்.
"உத்ராட்ச காளி'- காளியின் திருவிளையாடல்களைச் சொல்லும் படம். ஒரு கிராமத்துப் பெண் காளியைத் தன் சொந்தத் தாயாகவே எண்ணிப் பூஜிப்பவள்.
அவள் கணவன் அயலூரில் இறந்துவிட்டதாகத் தகவல் வரும்போது தன் தெய்வ நம்பிக்கையை இழக்கிறாள். காளியைத் தூற்றுகிறாள். காளி ஒரு வயதான பாட்டியின் உருவில் வந்து அவள் கணவன் இறக்கவில்லை, உயிரோடுதான் இருக்கிறான் என்று சொல்லிச் செல்கிறாள். சாலை விபத்து ஒன்றில் உருத்தெரியாமல் சிதைந்த ஓர் உடலில் கிராமத்துப் பெண்ணின் கணவனின் அடையாள அட்டை இருந்ததால் இந்தக் குழப்பம் ஏற்பட்டது. கணவன் உயிரோடு வீடு திரும்ப பரவசம் அடைகிறாள் அந்தப் பெண். புத்தி பேதலித்து காளியைத் தூற்றியதற்காகத் துயரப்படுகிறாள்.
நீண்ட காலம் தவம் செய்து அஷ்டமா சித்திகளை அடைய நினைக்கிறான் ஒரு கயவன். கிராமத்துப் பெண்ணின் கணவனைப் பிணைக் கைதியாகச் சிறை வைக்கிறான் அவன். கோவிலில் காளியின் கழுத்தில் இருக்கும் ருத்ராட்ச மாலையைக் கழற்றிக்கொண்டு வந்தால்தான் அவள் கணவனை விடுவிப்பதாகக் கூறுகிறான். அந்தப் பெண் நடுக்கத்துடன் கோவிலுக்குச் சென்று காளியின் ருத்ராட்ச மாலையைக் கழற்றுகிறாள். இதற்குள் அந்தக் கயவனே கோவிலுக்கு வந்துவிடுகிறான். கயவனின் தலையில் இடியாக இறங்கி அவனை அழிக்கிறாள் காளி. இயக்குநர் வெகு நேர்த்தியாக கதை சொல்லிச் செல்கிறார்.
"ஆத்மா' ஒரு த்ரில்லர். இதுதான் பட விழாவின் ஆரம்பப் படம். திகிலூட்டும் கதை. ஆதித்யா என்ற போதை சாம்ராஜ்ய தாதாவை சஞ்சய், வெங்கட் என்ற இரண்டு போலீஸ் இன்பெக்டர்கள் சிறைப்பிடிக்கும் கதை.
"அண்டர் கிரவுண்ட் ராஸ்கல்ஸ்' விறுவிறுப்பாகச் செல்லும் போலீஸ்- வில்லன் அடிதடிக் கதை.
"மஞ்சரி'யும் குற்றவாளியைப் போலீஸ் கண்டுபிடிக்கும் வழக்கமான கதைதான்.
புராதனக் கோயில் ஒன்றின் வளாகத்திலும் இதன் சுரங்க அறைகளிலும் மறைந்திருப்பதாகச் சொல்லப்படும் புதையலைத் தேடி அலையும் கயவர் கூட்டத்தைச் சித்திரிக்கும் படம் "யந்த்ரா'. ஆனால் படத்தில் நேர்த்தி இல்லை. "உருவம்' திரைப்படமும் பேய்க் கதைதான்.
கதை ஓட்டத்திலும், கருத்தோட்டத்திலும் செய் நேர்த்தியிலும் சிறந்து விளங்கிய ஒரே படம் என்ற புகழுக்கு உரியது "எதிர்காலம்'. "எதிர்காலத்தின்' கதை என்ன?
மத்திய சிறைச்சாலைக்கு ஒரு பெண் நிருபர் வருகிறார். பத்து சிறைக் கைதிகளைப் பேட்டி எடுக்க அனுமதி கிடைக்கிறது. கதிர் என்ற மாஜி கல்லூரி இளைஞனும் கைதிகளில் ஒருவன். கதை ப்ளாஷ்பேக்கில் சொல்லப்படுகிறது.
துடிப்புள்ள இளைஞன் கதிர் தன் கல்லூரி மாணவி ஒருத்தியைக் காதலிக்கிறான். அவள் மலேசிய போலீஸ் கமிஷனரின் மகள் என்ற உண்மை தெரியாமலேயே. அந்தப் பகுதி தாதாக்களில் ஒருவன் கல்லூரி மாணவர்களைத் தாக்க வரும்போது, இருட்டு உலக மனிதனான விஷ்ணுவின் உதவியை நாடுகிறான். அவன் மாணவர்களுக்கு உதவி செய்கிறான். ஆனால் அவர்களைச் சட்ட விரோதமான செயல்களிலும் ஈடுபட வைக்கிறான்.
ஒரு சந்தர்ப்பத்தில் நடக்கும் பலப் பரீட்சையில் விஷ்ணுவுக்கு எதிரான மற்றொரு தாதா கதிரின் கல்லூரித் தோழன் சீனுவை சுட்டுத் தள்ளிவிடுகிறான். கோஷ்டி மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
மாணவர்கள் என்று கருணை காட்டி சீக்கிரமே விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆனால் கல்லூரி நிர்வாகம் அவர்களை கல்லூரியைவிட்டு வெளியேற்றுகிறது.
கார் புரோக்கர் ஒருவரிடம் வேலைக்குச் சேர்கிறான் கதிர். பல மாதங்கள் தவணைப் பணம் கட்டாமல் இருக்கும் கார் ஒன்றை மீட்டெடுக்குமாறு கதிரை அனுப்புகிறார் முதலாளி. காரை அபகரித்துக்கொண்டு வருகிறான் கதிர். பின்புதான் அது தாதா விஷ்ணுவின் கார் என்று தெரிகிறது. கார் புரோக்கரை தொலைபேசியில் மிரட்டுகிறான் விஷ்ணு. காரை விஷ்ணுவின் ரகசியக் கிடங்கில் விட்டுவர மீண்டும் செல்கிறான் கதிர். அங்கே அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கதிரின் தம்பி விஷ்ணுவின் அடியாளாக சேர்ந்திருக்கிறான்.
தனது தம்பி அப்பாவி எனவும், அவனை விட்டுவிடும்படி கதிர் கெஞ்சுகிறான். வாக்குவாதம் வலுத்து துப்பாக்கிச் சண்டையில் முடிகிறது. இறுதியில் விஷ்ணுவையும் அவன் அடியாட்களை சிலரையும் கொல்கிறான் கதிர். கதிர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு வருகிறது. கதிருக்கு மரண தண்டனை என தீர்ப்பாகிறது. தன் கடைசி ஆசையாக பெற்றோரைப் பார்க்க விரும்புகிறான்.
மரணை தண்டனை நிறைவேற்றப்படுகிறது. மகன் இறந்து பல மாதங்கள் ஆன பிறகும் அதிர்ச்சியில் இருந்து மீளாத அவன் தாய் உணவு சமைத்து எடுத்துக்கொண்டு வந்து, உணவருந்தும் மேஜையில் அமர்ந்து,""மகனே! கதிர்! எவ்வளவு நேரம் கூப்பிடுவது? சீக்கிரம் சாப்பிட வா!'' என்று நெகிழ்கிறாள்.
உலுக்கிவிடும் ஆரம்பம். உருக வைக்கும் கதை ஓட்டம், மனதை கனக்க வைக்கும் முடிவு என்று செய் நேர்த்தியில் சிறந்த படம் "எதிர்காலம்'.
குண்டடிபட்டு விழுந்த தன் நண்பனைக் கட்டிக்கொண்டு ""சீனு! செத்துப்போய்டாதேடா!''
என்று கதறும் இடத்திலும், மரண தண்டனை நாளுக்கு முன்னால் தாய்க்கு நெற்றியில் முத்தமிட்டு நெகிழும் இடத்திலும் கதாநாயகன் ஸ்ரீகுமார் நடிப்பில் சிகரங்களைத் தொடுகிறார். தந்தையாக நடிக்கும் குணச்சித்திர நடிகர் சிவாஜி ராஜாவின் நடிப்பும் சிறப்பு. "எதிர்காலம்' திரைப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் இந்தப் பட விழாவின் கதாநாயகனாகப் புகழ் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார் என்பது மிகையல்ல!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

உண்மையில் பிரசாரங்கள் மக்களிடையே எடுபடுகிறதா? தவிப்பில் தவெக வேட்பாளர்கள்!

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
15 ஆண்டுகள் திருடர்கள் ஆட்சி! ராமருக்கு ஒருமுறை வாய்ப்பு கொடுங்கள்! பாஜக தலைவர்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


