தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ரோமன் பொலான்ஸ்கி: எழுச்சியும் வீழ்ச்சியும்

ரோமன் பொலான்ஸ்கி - 1974-ஆம் ஆண்டு ஜாக்நிக்கல்சன் நடித்த "சைனா டவுன்' படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். பின்னர் 13 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்த

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:14 pm

அ. குமார்

ரோமன் பொலான்ஸ்கி - 1974-ஆம் ஆண்டு ஜாக்நிக்கல்சன் நடித்த "சைனா டவுன்' படத்தை இயக்கியதன் மூலம் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர். பின்னர் 13 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக தண்டனைக்குப் பயந்து, 20 ஆண்டுகள் ஐரோப்பாவில் தஞ்சமடைந்தார். திரைப்படத் துறையில் சாதனையாளராகக் கருதப்பட்ட இவர், மீண்டும் திரையுலகில் நுழைந்த போது ஆரம்பத்தில் பெற்ற புகழைத் திரும்பவும் பெறமுடியாதது மாபெரும் சோகமாகும்.

இவரது வாழ்க்கையே ஒரு திரைப்படக் கதையைப் போன்றதாகும். 1933-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி பாரிஸ் நகரில் போலந்து- யூத தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பொலான்ஸ்கி, மூன்று வயதில் பெற்றோர்களுடன் போலந்தில் குடியேறினார்.

ஜெர்மனியர்கள் போலந்தைக் கைப்பற்றிய

போது இவரது குடும்பத்தினர் சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டனர். இவரது தாய் அங்கு இறந்து போனார். அங்கிருந்து தப்பித்த பொலான்ஸ்கி, போலந்து கிராமங்களில் சுற்றி அலைந்தபோது, கத்தோலிக்க குடும்பமொன்றில் அடைக்கலமாகி யுத்தக் கொடுமைகளை நேரில் அனுபவித்தார்.

ஜெர்மனிய வீரர்கள் தங்கள் துப்பாக்கிப் பயிற்சியின்போது சிறுவனாக இருந்த பொலான்ஸ்கியை இலக்காக வைத்துச் சுடும்போது அந்த குண்டுகளுக்குத் தப்பி இவர் ஓடுவது கண்டு சிரிப்பார்களாம்.

யுத்தம் முடிவுக்கு வந்ததும் மீண்டும் தந்தையுடன் இணைந்த பொலான்ஸ்கி, சினிமா மீது நாட்டம் கொண்டு போலந்து ஃபிலிம் ஸ்கூலில் சேர்ந்து பட்டம் பெற்று, தயாரித்த பல குறும்படங்கள் மூலம் பாராட்டுகளைப் பெற்றார். 1962-ஆம் ஆண்டு இவரது முதல் படமான "நைப் இன் தி வாட்டர்' வெனிஸ் திரைப்பட விழாவில் விமர்சகர் பரிசினைப் பெற்றது.

1960-ஆம் ஆண்டிலேயே ஆலிவுட்தான் தன்னுடைய சினிமா வேட்கைக்கு சரியான இடமென்று கலிபோர்னியாவில் குடியேறிய இவர், "நைப் இன் தி வாட்டர்' படத்தைத் தொடர்ந்து "ரிபல்ஷன்', "ரோஸ்மேரிஸ் பேபி' போன்ற படங்களை இயக்கி சர்வதேச அளவில் பாராட்டுகளைக் குவித்தார்.

1969-ஆம் ஆண்டில் அமெரிக்க நடிகையான ஷாரன்டாட்டைத் திருமணம் செய்துகொண்டார். முதல் குழந்தையின் பிரசவத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், போலன்ஸ்கி லண்டனில் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது சார்லஸ் மான்சன் என்ற தீவிர மதவாதியின் ஆதரவாளர்கள் ஷாரன்டாட்டை கொலைசெய்துவிட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொலான்ஸ்கி, அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் நாட்டிற்குக் குடியேறினார். இரண்டாண்டுகள் திரைப்படத் துறையில் ஆர்வமில்லாமல் இருந்த பொலான்ஸ்கி 1971-ஆம் ஆண்டு மனைவியின் கொலையை பிரதிபலிப்பது போல் கொடூரமும் வன்முறையும் நிறைந்த "மெக்பத்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

மீண்டும் அமெரிக்கா திரும்பிய பொலான்ஸ்கி தொடர்ந்து திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். 1974-ஆண்டு ஜாக் நிக்கல்சனை வைத்து இயக்கிய அரசியல் மர்மத் திரைப்படமான "சைனா டவுன்' இவரை சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைத்தது.

மூன்றாண்டுகள் கழித்து இவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. நடிகையாக வேண்டுமென விரும்பிய 13 வயது சமந்தா கெயிலியை "வோக் ஹோம்' என்ற பிரெஞ்ச் பத்திரிகைக்காக புகைப்படமெடுக்க அவரது சம்மதத்துடன் எடுத்தார்.

மீண்டும் இரண்டாவது முறை புகைப்படங்கள் எடுக்க சமந்தாவை ஜான் நிக்கல்சன் வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது, நிக்கல்சன் வீட்டில் இல்லை. சமந்தாவை மது அருந்தக் கூறி பொலான்ஸ்கி வற்புறுத்தினார். பின்னர் குளியல் தொட்டியில் படுத்தவாறு போஸ் கொடுக்கும்படி கேட்டதற்கு மறுத்த சமந்தா நீச்சல் உடையில் போஸ் கொடுக்க ஒப்புக்கொண்டார். அவர் உடை மாற்றிக் கொண்டு வருவதற்குள் குளிர்பானத்தில் போதை மாத்திரைகளை பொலான்ஸ்கி கலந்து கொடுத்ததால், அதை அருந்திய சமந்தா தள்ளாடத் தொடங்கினார்.

புகைப்படமெடுப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போதே போதை தலைக்கேறிய பொலான்ஸ்கி சமந்தாவின் நீச்சல் உடையைக் களைத்து அவரிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்தார். அந்த நேரத்தில் யாரோ வருவதை உணர்ந்த பொலான்ஸ்கி, சமந்தாவை அப்படியே விட்டுவிட்டு கீழிறங்கிப் பார்த்தபோது, நிக்கல்சனின் காதலி ஏஞ்சலிகா அங்கிருப்பதைக் கண்டார்.

"உடனடியாக அவரை அங்கிருந்து வெளியே போகும்படி' ஏஞ்சலிகா கூறினார். மீண்டும் மாடிக்குச் சென்ற போலன்ஸ்கி, சமந்தாவை அரைகுறையாக மயங்கிய நிலையிலேயே விட்டுவிட்டுச் சென்றார். பின்னர் நடந்தவற்றைத் தன்னுடைய தாயாரிடம் சமந்தா சொல்ல, மைனர் பெண்ணை கெடுத்ததாக பொலான்ஸ்கி மீது பாலியல் வழக்கு தொடரப்பட்டது.

1977-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பேவர்லி ஹில்ஸ் போலீசாரால் போலன்ஸ்கி கைது செய்யப்பட்டு 90 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆலிவுட் திரையுலகமே இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தது. அவரது திரைப்படங்களைப் பார்த்து விமர்சித்தபோது ""ரோமன் பொலான்ஸ்கி ஒரு சகாப்தம்'' என எழுதிய பத்திரிகைகளும், திரையுலக நண்பர்களும் அவருக்கு ஆதரவாக திரண்டனர்.

செப்டம்பர் 19-ஆம் தேதி, நீதிமன்றத்தில் அவர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றங்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இருந்தாலும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட அதிர்ச்சியில் அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக பொலான்ஸ்கியின் வக்கீலும் நண்பர்களும் கூறவே, அவரை மனோதத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. ஆனால் உண்மையிலேயே மனநிலை பாதிக்கப்பட்டிருக்குமாயின் தண்டனையை மாற்றுவதாகவும், ஒருவேளை மனநிலை சீராக இருப்பதாக நிரூபிக்கப்பட்டால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படுமென்றும் நீதிமன்றம் எச்சரித்தது.

பரிசோதனை அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாகவே 1978-ஆம் ஆண்டு பிப்ரவரி 9-ஆம் தேதியன்று பொலான்ஸ்கி கலிபோர்னியாவிலிருந்து கிளம்பி ஐரோப்பாவிற்குச் சென்றுவிட்டார். பின்னர் நடாஷா கின்ஸ்கியின் "டெல்', ஹாரிசன் போர்டு நடித்த "பிராண்டிக்' போன்ற படங்களை இயக்கினார். இருப்பினும் பாலியல் வழக்கின் தாக்கத்தினால், துவக்கக் காலத்தில் இயக்கி புகழ் பெற்றது போல் மீண்டும் அவரால் சிறப்பாக செயலாற்ற முடியவில்லை.

ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து 65-வது வயதில் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பியபோது பொலான்ஸ்கியால் பாதிக்கப்பட்ட சமந்தா கெய்லி, திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயாக ஹவாயில் வசித்துவந்தார். பொலான்ஸ்கி மீண்டும் அமெரிக்கா திரும்பியது குறித்து தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என அறிவித்தார்.

அதேசமயம் அவர் 20 ஆண்டுகள் ஐரோப்பாவிலேயே இருந்தது, நாடு கடத்தியதைப் போன்ற தண்டனையாகக் கருதினார்கள். அவரது திரையுலக வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. மீண்டும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவேண்டாமென ஆலிவுட் திரையுலகமே கேட்டுக் கொண்டது. அவருடன் இணைந்து மீண்டும் படங்களைத் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்தாலும் பொலான்ஸ்கியைப் பொறுத்தவரை இழந்த பெருமையை மீண்டும் பெறமுடியாமல் திரையுலகை விட்டுவிலகியது அவரைப் பொறுத்தவரை ஒரு இழப்புதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.