தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

குடியரசுத் தலைவர் தேர்தலும் அரசியல் மாற்றங்களும்

குடியரசுத் தலைவர் தேர்தலும் அரசியல் மாற்றங்களும் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் ஒவ்வொரு முறையும் பொதுத் தேர்தல் போல் பரபரப்பையும் அரசியல் கட்சிகளிடையே பிளவையும் ஏற்படுத்துவது சகஜமாகிவிட்டது. மாநிலங்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 5:32 pm

அ. குமார்

குடியரசுத் தலைவர் தேர்தலும் அரசியல் மாற்றங்களும்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் ஒவ்வொரு முறையும் பொதுத் தேர்தல் போல் பரபரப்பையும் அரசியல் கட்சிகளிடையே பிளவையும் ஏற்படுத்துவது சகஜமாகிவிட்டது. மாநிலங்களில் உள்ள இரு அவைகளின், நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகள் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும்}இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் 1969-ம் ஆண்டுக்குப் பின் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்துவிட்டது.

1969-ம் ஆண்டு மே 3-ம் தேதி பதவியில் இருந்தபோதே அப்போதைய குடியரசுத்தலைவர் ஜாகிர் உசைன் மரணமடைந்ததைத் தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் வி.வி.கிரி தாற்காலிக குடியரசுத் தலைவராக பதவியேற்றார். தொடர்ந்து நடக்கவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி வி.வி. கிரியையே குடியரசுத் தலைவராகப் பரிந்துரைத்தார். ஆனால் காங்கிரஸ் செயற்குழு அதை ஏற்க மறுத்து நீலம் சஞ்சீவரெட்டியை வேட்பாளராக அறிவித்தது. இந்த அறிவிப்பு இந்திய அரசியலில் முதல் குடும்பமாக கருதப்பட்ட நேரு குடும்பத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் காங்கிரஸ் கட்சி பிளவுபடுமோ என்ற அச்சம் எழுந்தது.

காமராஜ், அதுல்யா கோஷ், எஸ்.கே. பாட்டீல், நிஜலிங்கப்பா ஆகியோர் "சிண்டிகேட் காங்கிரஸ்' என குறிப்பிடப்பட்டனர். அப்போது காங்கிரஸில் தீவிரமாக செயல்பட்டு வந்த இளம் துருக்கியர் என அழைக்கப்பட்ட சந்திரசேகர், பிரதமரின் ஆலோசகர் ஹஸ்கர் ஆகியோரின் ஆலோசனைப்படி இந்திராகாந்தி செயல்படுவதாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கருதினர். காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக சஞ்சீவரெட்டி அறிவிக்கப்பட்டார். வி.வி.கிரி சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்தார். கிரியை ஆதரிக்கும்படி இந்திரா மறைமுகமாக செயல்படுவதாக கருதினர்.

அதற்கேற்ப மனசாட்சிப்படி வாக்களிக்கும்படி இந்திரா அறிவித்தது, மூத்த தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிரிக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்கும்படி இந்திரா கேட்டுக்கொண்டதை அறிந்த காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சீவரெட்டி வெற்றி பெற்றாக வேண்டுமென்ற நோக்கத்தில் ஜனசங்கம், சுதந்திரா கட்சியினரின் ஆதரவைக் கோரினர். காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு இது எதிரானது என்று கூறி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் அவசர கூட்டத்தைக் கூட்டும்படி இந்திரா கூறினார். ஆனால் சிண்டிகேட் தலைவர்கள் அதை ஏற்கவில்லை.

தேர்தல் களம் சூடு பிடித்தது. வெற்றி பெறும் வேட்பாளர் 4 லட்சத்து 13 ஆயிரத்து 169 வாக்குகள் பெற வேண்டுமென்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. இறுதியில் வி.வி.கிரி மற்றும் சஞ்சீவ ரெட்டி இருவர் மட்டுமே தேர்தல் களத்தில் நின்றதால் கிரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலால் காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் என அழைக்கப்பட்டது. தொடர்ந்து வந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்திரா பெரும்பான்மை பலம் பெற்றார்.

இதுபோன்ற பிரச்னை முதன்முதலாக இந்தியா குடியரசு நாடாக பிரகடனப்படுத்தபட்டபோது நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலின் போதும் ஏற்பட்டது. முதல் குடியரசுத் தலைவராக ராஜேந்திர பிரசாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டபோது வல்லபாய் பட்டேல் கருத்துக்கு எதிராக ஜவகர்லால் நேரு ராஜாஜியை நிறுத்த வேண்டுமென விரும்பினார். ஆனால் பட்டேல் கருத்துக்கு ஆதரவு அதிகரித்ததால் நேரு தன் கோரிக்கையை திரும்பப் பெற்றார். 1952 மற்றும் 1957-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல்கள் அரசியல் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்பட்டது.

1962-ம் ஆண்டு சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் மற்றும் 1967-ஆம் ஆண்டு ஜாகிர் உசைன் இருவரும் காங்கிரஸ் வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு அறிவிக்கப்பட்டபோது எவ்வித எதிர்ப்புமின்றி நாடாளுமன்றம், மாநில சட்டமன்ற இரு அவை உறுப்பினர்களால் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1969-ம் ஆண்டு ஜாகிர் உசைன் மரணத்திற்கு பின்னரே குடியரசுத் தலைவர் தேர்தல் பல அரசியல் மாற்றங்களை உருவாக்கக்

கூடிய தேர்தலாக மாறியது. 1974-ம் ஆண்டு பக்ருதின் அலி அகமது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் எவ்வித பிரச்னையும் எழவில்லை. அவரும் பதவியில் இருக்கும்போதே மரணமடைந்தார். அதற்கு முன்பு இந்திராகாந்தி பிறப்பித்த "எமர்ஜென்சி' சட்டத்தில் அவர் கையெழுத்திட்டது பிரச்னையைக் கிளப்பியது. மீண்டும் குடியரசுத் தலைவர் தேர்தலை சந்தித்தபோது ஜனதா கட்சி ஆட்சியில் இருந்ததால் நீலம் சஞ்சீவரெட்டி ஏகமனதாக போட்டியின்றி குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடியரசுத் தலைவர் மாளிகையை ஏதாவது ஒரு வகையில் குடியரசுத் தலைவர்களும் அரசியல் தொடர்புடையவர்களாக மாறினர். 1982-ம் ஆண்டு ஏழாவது இந்திய குடியரசுத் தலைவராக ஜெயில் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 1984-ம் ஆண்டு அமிர்தசரஸ் பொற்கோவிலில் நடந்த "ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்' நடவடிக்கைக்காக பதவி விலக வேண்டுமென்று சீக்கிய சமூகத்தினர் வற்புறுத்தினர். ஜெயில்சிங் அதை ஏற்கவில்லை. பின்னர் போபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜீவ்காந்தி ஆட்சியை டிஸ்மிஸ் செய்வதற்கு இவர் முக்கியக் காரணகர்த்தா என்று கூறப்பட்டது.

இதே போன்று வரலாற்றில் சில முக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாகவும் சில குடியரசுத் தலைவர்கள் இருந்துள்ளனர். 1980-ம் ஆண்டு எட்டாவது குடியரசுத் தலைவராக பதவியில் இருந்த வெங்கட்ராமன் மூன்று பிரதமர்களுக்கு பதவி பிரமாணம் செய்ய வேண்டியதாயிற்று. இவரது பதவி காலத்தில் வி.பி.சிங், சந்திரசேகர், பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் பிரதமர்களாக பதவி ஏற்றனர். அவரைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்த சங்கர் தயாள் சர்மாவும் அவரது பதவி காலத்தில் அடல் பிகாரி வாஜ்பாய், தேவகவுடா, ஐ.கே. குஜ்ரால் ஆகியோருக்கு 1996-ம் ஆண்டு மே மற்றும் 1997-ம் ஆண்டு ஏப்ரல் மாத இடைவெளிக்குள் பிரதமராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். பத்தாவது குடியரசுத் தலைவர் முதன்முதலாக தலித் இனத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணன் பதவி காலத்தில் பெரும்பான்மை பலமில்லாத காரணத்தால் நாடாளுமன்றம் இருமுறை கலைக்கப்பட்டது. 1998 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் வாஜ்பாய் இருமுறை பிரதமராக பதவி பிரமாணம் செய்தார்.

2002-ம் ஆண்டில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஒருமித்த கருத்துடன் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக ஏற்றுக் கொண்டதும் ஒரு சாதனையாகும். ஆனால் இரண்டாவது முறையாக மீண்டும் அப்துல் கலாமை அறிவிக்க நினைத்தபோது காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக முதன்முறையாக ஒரு பெண் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீலை பரிந்துரை செய்தது.

தற்போதைய குடியரசுத் தலைவர் தேர்தலிலும் பல்வேறு மாற்றங்கள். குறிப்பாக அணி மாற்றங்கள். இந்த மாற்றங்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

கோட்டோவியம் : அரஸ்

இதுவரை நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், அவர்கள் பெற்ற வாக்குகள் குறித்த பட்டியலும்

1952

1.ராஜேந்திர பிரசாத் 5,07,400

2. கே.டி.ஷா 92,827

1957

1. ராஜேந்திர பிரசாத் 4,59,698

2. செüத்ரி ஹரிராம் 2,672

1962

1. சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 5,53,067

2. செüத்ரி ஹரிராம் 6,341

1967

1. ஜாகிர் உசைன் 4,71,244

2. கோட்டா சுப்பாராவ் 3,63,971

1969

1. வி.வி.கிரி 4,01,515

2. நீலம் சஞ்சீவரெட்டி 3,13,548

1974

1. பக்ருதீன் அலி அகமது 7,65, 587

2. த்ரிதிப் செüத்ரி 1,89,196

1977

நீலம் சஞ்சீவ ரெட்டி ஏக மனதாகத் தேர்வு

1982

1. கியானி ஜெயில் சிங் 7,54, 113

2. எச்.ஆர்.கன்னா 2,82,685

1987

1. ஆர்.வெங்கட்ராமன் 7,40,148

2. வி.ஆர். கிருஷ்ண அய்யர் 2,81, 550

1992

1. சங்கர் தயாள் சர்மா 6,75, 864

2. ஜி.ஜி.ஸ்வெல் 3,46, 485

1997

1. கே.ஆர்.நாராயணன் 9,56,290

2. டி.என்.சேஷன் 50,631

2002

1. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் 9,22,884

2. லட்சுமி சேகல் 1,07, 366

2007

1. பிரதிபா தேவிசிங் பாட்டீல் 6,38,116

2. பைரோன் சிங் ஷெகாவத் 3,31,306

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.