புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாயமான மோனாலிசா

1911-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை. பாரிஸில் உள்ள லூவர் மியூசியத்தில் அன்றைய தினம் கார்பெண்டராக வேலை பார்த்த இத்தாலியை சேர்ந்த வின்சென் பெருகியா(29) மறுநாள் வார விடுமுறை என்பதால் மியூசியம் மூடப்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:29 am

அ. குமார்

1911-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஞாயிற்றுக்கிழமை.

பாரிஸில் உள்ள லூவர் மியூசியத்தில் அன்றைய தினம் கார்பெண்டராக வேலை பார்த்த இத்தாலியை சேர்ந்த வின்சென் பெருகியா(29) மறுநாள் வார விடுமுறை என்பதால் மியூசியம் மூடப்பட்டிருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டு மியூசியம் மூடப்பட்டவுடன் உள்புறமாக உள்ள ஓர் அறைக்குள் ஒளிந்து கொண்டான்.

மறுநாள் திங்கள்கிழமையன்று மறைவிடத்திலிருந்து வெளிவந்த பெருகியா, சுவரில் மாட்டப்பட்டிருந்த விலை மதிப்பற்ற உலகப் புகழ் பெற்ற ஓவியமொன்றை கழற்றி அதன் பிரேம்களை அகற்றி ஓவியத்தை மட்டும் சுருட்டி எடுத்து தன்னுடைய நீண்ட அங்கிக்குள் மறைத்து வைத்து வெளியேறினான்.

லூவரிலிருந்து ஒரு மைல் தொலைவில் உள்ள அவனது வீட்டிற்குச் சென்றவன், அந்த ஓவியத்தை டிரங்க் பெட்டிக்குள் வைத்து மூடினான். அவன் திருடியது உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் மாஸ்டர் பீசாக கருதப்பட்ட "மோனாலிசா' ஓவியமாகும். அந்த ஓவியத்தைத்தான் தாறுமாறாக சுருட்டி எடுத்து வந்து பெட்டிக்குள் வைத்திருந்தான்.

செவ்வாய்க்கிழமையன்று புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை அச்சு அசலாக நகலெடுத்து சுற்றுலா பயணிகளிடம் ஓரிஜினல் ஓவியமென்று விற்பனை செய்யும் பாரிஸ் நகர ஓவியன் லூயிஸ் பிரோவ், மியூசியத்திற்குள் வந்தபோது ஐந்தாண்டுகளாக காட்சிப் பொருளாக வைக்கப்பட்டிருந்த மோனாலிசா ஓவியத்தை காணாமல் மியூசியம் பாதுகாவலர்களிடம் புகார் செய்தார்.

பகல் நேரத்திற்குள் அறுபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் லூவர் மியூசியத்தில் குவிந்தனர். ஒரு வாரம் மியூசியத்தின் மூலை முடுக்கெல்லாம் ஆராய்ந்து தேடியதில் அநாதையாகக் கைவிடப்பட்ட பிரேமைத் தவிர வேறு தடயம் ஏதும் கிடைக்கவில்லை. கடைசியில் மியூசியம் பாதுகாவலர்கள் ஒட்டுமொத்தமாக பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.

விலை மதிப்பற்ற மோனாலிசா ஓவியம் திருடுபோன தகவல் காட்டுத் தீயாக நாடெங்கும் பரவியது. நாடே துக்கத்தில் ஆழ்ந்தது. நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு கப்பல்கள், ரயில்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. ஓவியத்தைக் கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு 25 ஆயிரம் பிராங் பரிசளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

வதந்திகள் பலவிதத்தில் உலா வந்தன. சந்தேகப்படுபவர்களை பிடித்து விசாரித்தனர். ரோம் நகரில் பிறந்து பாரிஸில் குடியேறிய கவிஞர் கலியாவ் அப்போலினெய்ரேவை (1880-1918) விசாரணை செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் கலியாவ், அவரது ஓவிய நண்பர் பப்லோ பிகாசோவை (1881-1973) சந்தேகப்படுவதாகச் சொல்ல போலீசாரும் பிகாசோவை விசாரித்தனர். நீதிமன்ற விசாரணையின்போது அவரது தடுமாற்றமும் பயமும் பிகாசோவை நிரபராதியென காட்டியது. பின்னர் பிகாசோ, கலியாவ் இருவருமே விடுவிக்கப்பட்டனர்.

16-ஆம் நூற்றாண்டில் டாவின்சியால் வரையப்பட்ட 30 அங்குல நீளமும் 21 அங்குல அகலமும் உள்ள மோனாலிசா ஓவியம் அடுத்த இரண்டாண்டுகள் பெருகியாவின் டிரங்க் பெட்டியிலேயே அடைபட்டிருந்தது. 1913-ஆம் ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி இத்தாலிக்குச் சென்ற பெருகியா ப்ளாரன்ஸ், நகரில் பழங்கால கலைப்பொருள்களை விற்பனை செய்யும் ஆல்பர்ட் கெரியிடம் மோனாலிசா ஓவியத்தை விலைக்கு வாங்கிக் கொள்ள முடியுமா? என்று பேரம் பேசினான். 5 லட்சம் லியார் கொடுத்தால் விற்பதாகவும் இல்லையெனில் பழையபடி மியூசியத்திலேயே ஓவியத்தை ஒப்படைக்கப் போவதாகவும் கூறினான். அந்த ஓவியம் உண்மையிலேயே ஒரிஜினல்தானா என்பதை கண்டறிய உஃபிஸி காலரி இயக்குநரும் தன் நண்பருமான கியோலன் போகியுடன் ஓட்டல் திரிபோலியில் தங்கியிருந்த பெருகியாவின் அறைக்கு கெரி சென்றார்.

பெருகியா அவனது டிரங்க் பெட்டியை திறந்தபோது பழைய ஷூக்கள், அன்டர்வேர், சட்டைகளின் நடுவே சிவப்புத் துணியில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த மோனாலிசா ஓவியத்தை பார்த்தபோது எவ்வித பாதிப்புமின்றி ஓவியத்தின் பின்புறம் லூவர் மியூசிய அதிகாரிகளின் கையொப்பமும் முத்திரையும் இருந்தது. கெரியும் அவரது நண்பர் போகியும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போ

னார்கள்.

உண்மையான ஓவியம்தான் என்பதைக் கண்டறிந்த கெரியும் போகியும் சில மணி நேரத்திற்குள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ப்ளாரன்ஸ் நகர தலைமை போலீஸ் அதிகாரி மற்றும் பல துப்பறியும் நிபுணர்கள் வந்து குவிந்தனர். ஓவியம் கைப்பற்றப்பட்டதோடு பெருகியாவும் கைது செய்யப்பட்டான்.

அடுத்து இரு மாதங்கள் மோனாலிசா ஓவியம் இத்தாலி மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் பாதுகாப்பாக பாரிஸ் நகரத்திற்கு திரும்ப அனுப்பப்பட்டது. 1914-ஆம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதியிலிருந்து மோனாலிசா ஓவியம் லூவர் மியூசியத்தை அலங்கரிக்கத் தொடங்கியது. 1914-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி ப்ளாரன்ஸ் நகர நீதிமன்றத்தில் பெருகியா மீது விசாரணை தொடங்கியது. பைத்தியம் பிடித்தவன்போல் உணர்ச்சி வசப்பட்டு நீதிபதியிடமும் தன்னுடைய வழக்கறிஞரிடமும் அரசு வழக்கறிஞரிடமும் விவாதித்தான். ஓவியத்தின் மீதுள்ள பற்றுதலால் பிரான்ஸ் நாட்டிலிருந்து காப்பாற்றவே தேச உணர்வுடன் அதைத் திருடியதாகக் கூறினான். நீதிமன்ற அறைக்குள் ஏற்கெனவே பெருகியா ஒரு ஹீரோவாக மாறியிருந்தான். பொதுமக்கள் அவனுக்குச் சாதகமாக இருந்தனர். அவன் விசாரணை கைதியாக சிறைக்குள் இருந்தபோதே அவனுக்கு ஏராளமான காதல் கடிதங்களையும் மதுவகைகளையும் ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட கேக் வகைகளையும் பெண்கள் அனுப்பி வைத்தனர்.

அவனது முரண்பாடான நடத்தையையும் முன்னுக்கு முரணான விவாதங்களையும் கண்டு வெறுப்படைந்த நீதிமன்றம் அவனை மனோதத்துவ நிபுணரிடம் பரிசோதனைக்காக அனுப்பியது. மருத்துவ அறிக்கையில் அவனை "குறைபாடுள்ள புத்திசாலி' எனக் குறிப்பிட்டிருந்ததால் நீதிமன்றம் சமாதானமடைந்து சாதாரண சிறைத் தண்டனை அளித்ததோடு விரைவில் விடுதலை செய்தது.

அடுத்த சில ஆண்டுகளில் பெருகியா இத்தாலிய ராணுவத்தில் சேர்ந்து முதலாம் உலகப்போரில் பணியாற்றி திரும்பிய பின்னர் திருமணம் செய்துகொண்டு பிரான்ஸ் நாட்டிற்கே திரும்பி சென்று, பெயின்ட் கடையொன்றைத் திறந்தான். 1925-ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி இந்த "மேனாலிசா' திருடன் தனது 44-வது வயதில் இறந்துபோனான்.

மோனாலிசாவின் ஓவியத்தைப் பார்க்கும்போதெல்லாம் பெருகியாவின் நினைவும் நிச்சயம் வரும். இத்தாலியைப் பொறுத்தவரை, அவன் தேசபக்தியுள்ள ஒரு ஹீரோதான். அவனை கெüரவிக்கும் வகையில் கடந்த ஆண்டு (2011) ஆகஸ்ட் மாதம் இத்தாலியில் நடந்த நாடக விழாவில் "தி டிரெயல் ஆஃப் வின்டென் பெருகியா' என்ற நாடகத்தில் அவனை ஒரு தேசபக்தியாளனாக சித்திரித்திருந்தனர்.

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பிகாசோவின் ஓவியங்கள்தாம் இன்று உலகிலேயே அதிகமாக திருடப்பட்டுள்ளன. லண்டனில் உள்ள "தி ஆர்ட் லாஸ் ரிஜிஸ்டர்' என்ற நிறுவனம் உலகில் திருடப்படும் ஓவியங்கள், கலைப்பொருள்கள், சேகரிப்புகள் எவை எவை என்பதை பெரிய அளவில் பதிவு செய்துவருகிறது. அதன் தகவலின்படி பிகாசோவின் ஓவியங்கள் 600-க்கும் மேல் திருடப்பட்டுள்ளன. ஓவிய வரலாற்றிலேயே அதிக அளவில் தன்னுடைய ஓவியங்களை இழந்துள்ளவர் பிகாசோ என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.