எதிர்காலத்திற்காக ஓரு நினைவுச் சின்னம்!
1976-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பகல் 12.10 மணிக்கு மாவோ இறந்தபோது 22 ஆண்டுகளாக அவரது டாக்டராக உடனிருந்த ஸிசூய் லீ உடனடியாக ஒரு புதிய சவாலை ஏற்க வேண்டியதாயிற்று. நிரந்தரமாக அவரது உடலை பாதுகாக்க ஏற்ப


1976-ம் ஆண்டு செப்டம்பர் 6-ம் தேதி பகல் 12.10 மணிக்கு மாவோ இறந்தபோது 22 ஆண்டுகளாக அவரது டாக்டராக உடனிருந்த ஸிசூய் லீ உடனடியாக ஒரு புதிய சவாலை ஏற்க வேண்டியதாயிற்று. நிரந்தரமாக அவரது உடலை பாதுகாக்க ஏற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டது. தற்போது தியானன் மன் சதுக்கத்தில் உள்ள அவரது உடல் மெழுகுச்சிலை என்ற வதந்தியும் உண்டு. ஆனால் அது மாவோவின் உண்மையான உடல் என சீன அரசு உறுதிப்
படுத்தி வருகிறது.
ஸி சூய் லீ எழுதிய "தி பிரைவேட் லைஃப் ஆஃப் சேர்மன் மாவோ' என்ற புத்தகத்திலிருந்து சில பகுதிகள்:
வோவின் முதன்மை பாதுகாவலர் வாங் டாங் ஷிங் சொன்னார் ""பொலிட் பீரோ இப்போதுதான் முடிவெடுத்தார்கள். சேர்மனின் உடல் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட வேண்டுமாம். எப்படி பாதுகாப்பது? என்பது குறித்து யோசியுங்கள்''
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ""இரண்டு வாரங்கள் மட்டும் உடலை வைத்தால் போதுமென்று சொன்னார்கள். இப்போது நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டுமென்று சொல்கிறீர்களே ஏன்? 1956-ம் ஆண்டு சேர்மன் மாவோ தன்னை தகனம் செய்ய வேண்டுமென்று முதல் ஆளாக கையெழுத்திட்டது எனக்கு நினைவில் உள்ளது'' என்றேன்.
""இது பொலிட் பீரோ முடிவு. சற்று முன்புதான் முடிவெடுத்தோம்'' என்றார் வாங்.
""இது நடைபெறாத காரியம்'' என்னுடைய எதிர்ப்பை தெரிவித்தேன். ""இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''
""பிரதமர் லாவொவும் நானும் இந்த முடிவுக்கு ஆதரவளித்துள்ளோம்''
""கனமான இரும்பே துருப்பிடித்து போகிறது. மனித உடல் அழிந்து போகாது என்பது என்ன நிச்சயம்?'' நான் பதிலுக்குச் சொன்னேன்.
மாவோவின் உடலை எப்படி பாதுகாப்பது என்பது தெரியவில்லை.
மாவோவின் உடலை பொலிட் பீரோ கூட்டம் நடந்த அறைக்கு அடுத்துள்ள பெரிய அறைக்கு மாற்றினோம். அறைக்குள் வெப்பநிலை 78 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்ததை 50-டிகிரி ஆகக் குறைக்கும்படி ஊழியர்களிடம் கூறினேன்.
""இங்கு பல முக்கியத் தலைவர்கள், காம்ரெட் ஜியான் க்யூங் (மாவோவின் மனைவி) உள்பட பலர் உள்ளனர். அவர்கள் அனுமதித்தால் வெப்பத்தின் அளவைக் குறைக்கிறோம்'' என்று கூறி மறுத்தனர்.
மாவோ உடலுக்கு மனித உடல்களை பாதுகாப்பதில் மிகச் சிறந்த ஜாங் பிங்சங் மற்றும் ஹ்யூ ஜிங் என்கிற இரண்டு நிபுணர்கள் ஃபார்மால்டைடி திரவத்தை செலுத்திவிட்டு திரும்புவதைப் பார்த்தேன். பொலிட் பீரோ உத்தரவுப்படி உடலை நிரந்தரமாக பதப்படுத்தி பாதுகாக்கக் கூறினேன்''
""அது முடியாத காரியம். எப்படி செய்வதென்று தெரியாது'' என்றனர்.
""எப்படியாவது செய்தாக வேண்டும். அதற்குரிய வழிமுறைகள் பற்றிய புத்தகங்கள் இருந்தால் கண்டுபிடியுங்கள்'' என்றேன்.
ஒருமணி நேரம் கழித்து அவர்களில் ஒருவரான ஹ்யூ ஜிங் எனக்கு போன் செய்தார்.
""நீண்ட நேரம் உடலைப் பாதுகாக்க வழிமுறைகள் இருக்கிறது. ஃபார்மால்டைடி திரவத்தை 12 முதல் 16 லிட்டர் அளவுக்கு உடலின் பருமனுக்கு ஏற்ப, இறந்து நான்கு முதல் எட்டு மணி நேரத்திற்குள் உடலுக்குள் செலுத்தினால் பாதுகாக்க முடியும். இந்த முறையை மேற்கத்திய புத்தகத்தில் படித்தேன். ஆனால் இதை செயல்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை''
மேலும் இருவர் இந்த குழுவில் சேர்ந்தனர். ஃபார்மால்டைடியை செலுத்தினோம். முன்னெச்சரிக்கைக்காக கூடுதலாகச் செலுத்தப்பட்ட திரவம் உடலிருந்து வியர்வை போல் வெளியேறத் தொடங்கியது. மாவோ முகம் பந்துபோல் ஊதிக்கொண்டது. தலையைவிட கழுத்து பருத்திருந்தது. காதுகள் உப்பிக்கொண்டன. வலதுமூட்டு ஒட்டிக்கொண்டது. உடலமைப்பே மாறிவிட்டது. பாதுகாவலர்களும் ஊழியர்களும் திகைத்து நின்றனர்.
எப்படியோ ஒருவழியாக மாவோ உடலை அசல் தோற்றத்திற்கு கொண்டு வந்தாலும் அதிகப்படியாக செலுத்திய திரவத்தை வெளியேற்ற முடியவில்லை. ""உடைகளால் உடலை மறைக்கலாம். உடல் பருத்திருந்தாலும் பரவாயில்லை. முகத்தையும் கழுத்தையும் மட்டும் பழைய நிலைக்கு கொண்டுவர முயற்சியுங்கள்'' என்றேன்.
டவல், காட்டன் பந்துகள் மூலமாக மாவோ முகத்தை அழுத்தி திரவத்தை உடலுக்குள் தள்ள முயன்றனர். சற்று அதிகமாக அழுத்தவே மாவோ வலது கன்னத்தில் சதை பிய்த்துக்கொண்டது.
""கவலைப்படாதீர்கள்! சரி செய்யலாம்'' என்று மீண்டும் உடல் நிற திரவத்தைப் பூசினார். எவ்வித மாறுதலும் வெளியே தெரியாமல் மீண்டும் பழைய நிலைக்கு மாறியது.
பகல் மூன்று மணி வரை நான்கு பேரும் தொடர்ந்து உடலை பதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். மாவோ முகம் பழைய நிலைமைக்கு வந்தாலும் கழுத்துப் பகுதி மட்டும் வீக்கமாகவே தெரிந்தது. பாதுகாவலர்களும் ஊழியர்களும்,"" பரவாயில்லை இந்த அளவுக்காவது திரும்பியதே போதும்'' என்று ஒப்புதல் அளித்தனர். அவரது உடைகளை அணிவிக்க முயற்சித்தபோது மார்பு பருத்திருந்ததால் பட்டன்களைப் போட முடியவில்லை. அவரது உடலுக்கு ஏற்ப சட்டை, பாண்ட்டை சிறிது கத்தரித்து ஒப்பேற்றினர்.
அந்த உடலுக்கு ஆடைகளை அணிவித்துக் கொண்டிருந்தபோது சீனாவில் பிரபலமான ஜெனரல்களில் ஒருவரான ஷ்யூ ஷியூ அங்கு அஞ்சலி செலுத்த வந்தார். சிறுவயதிலிருந்தே கட்சி உறுப்பினராக இருந்தவர். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவர், சிறுவயதில் வறுமை காரணமாக, தற்காப்புக் கலைகளில் பிரபலமான புத்தகோவில் ஒன்றில் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டார். மூர்க்கமான மனிதர். ஒரே நேரத்தில் இருபது பேரை சமாளிக்கும் பலம் உள்ளவர். மாவோவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர்.
சீன கலாசார வழக்கப்படி அவர் மூன்று முறை குனிந்து வணங்கியபோது சற்று நெருங்கி, மாவோவின் மார்பு தோலை உற்று கவனித்தார். திடீரென என் பக்கமாக திரும்பி, ""சேர்மன் இறப்பதற்கு முன் எத்தனை கா மாக்கள் (மார்பு எலும்புகள்) இருந்தன?'' என்று கேட்டார். அவர் என்ன கேட்கிறார் என்று எனக்குப் புரியவில்லை.
""ஒவ்வொரு உடலிலும் 24 கா மாக்கள் இருக்க வேண்டும். சேர்மன் உடலில் எத்தனை இருந்தன?''
நான் மெüனமாக இருந்தேன். ""நீங்கள் ஒரு புத்திசாலி டாக்டர். கா மா என்றால் உங்களுக்குத் தெரியாதா?''
வாழும் உயிர்கள் அனைத்துமே 24 கா மாக்களை கொண்டவை என்று புத்தமத்தை சேர்ந்த நண்பரொருவர் சொன்னது நினைவுக்கு வந்தது.
ஷியூ இருமுறை சடலத்தை சுற்றி வந்தார். தனக்குள் சொன்னார் ""வாட் எ டெவில்? அடித்து காயப்படுத்தியது போல் உடல் நீலநிறமாக உள்ளதே?'' மீண்டும் மூன்று முறை குனிந்து வணங்கி சல்யூட் அடித்துவிட்டுச் சென்றார்.
மேக் அப் தொடர்ந்தது. அசல் மாவோ தோற்றம் கச்சிதமாக அமைந்தது. எங்களுக்கு திருப்தியளித்தது. உடைகள் அணிவிக்கப்பட்டவுடன் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை உடல் மீது போர்த்தினோம். நள்ளிரவு. அவர் இறந்து 12 மணி நேரம் கழித்து வாக்குவம் சீல் வைக்கப்பட்ட கிரிஸ்டல் சவப்பெட்டிக்குள்ளே மாவோ உடலை வைத்தோம். பொலிட்பீரோ உறுப்பினர்கள் பலர் சவப்பெட்டிக்கு அருகில் நின்று படமெடுத்துக் கொண்டனர்.
பின்னர் ஆம்புலன்சில் ஏற்றபட்ட அவரது உடல் இருளில் ஆள் அரவமற்ற பீகிங் நகர தெருக்கள் வழியே "கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' என்ற இடத்தில் ஒரு வார காலம் மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து அவரது உடலை பாதுகாக்க நாட்டில் பல்வேறு உடற்கூறு துறைகளில் இருந்து 20 நிபுணர்கள் கொண்ட குழுவை அழைத்தேன். பண்டைய சீன முறைப்படி உடலைப் பாதுகாக்கும் வழிமுறைகள் இருப்பின் உடனடியாக கண்டுபிடிக்கும்படி கூறினேன்.
அண்மையில் அகழ்வாராய்ச்சியின்போது நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்டு, புதைக்கப்பட்ட சில சடலங்கள் அழியாமல் கிடைத்தது குறித்து ஆய்வு செய்யக் கூறினேன். ஆனால் அந்த பண்டைய கால வழிமுறைகள் சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு வந்தோம்.
மேலும் இரண்டு நிபுணர்கள் லண்டனில் உள்ள மேடம் டுஸôட் மியூசியத்தில் மெழுகு பொம்மைகளை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து வந்தனர். இந்தத் தொழில் நுணுக்கத்தில் இங்கிலாந்தைவிட சீனா மிகவும் முன்னேறியிருந்ததால் சீனாவிலேயே மாவோ மெழுகு உருவம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டது.
இறுதியில் விஞ்ஞான பத்திரிகைகளை படித்து ஏற்கெனவே நாங்கள் பதப்படுத்திய முறையில் மாவோ உடலை பாதுகாப்பதுதான் சரியென்ற முடிவுக்கு வந்தோம். மாவோ மண்டை ஓட்டைப் பிரிக்காமல் மூளையை மட்டும் அகற்றி பெரிய கண்ணாடி ஜாடிக்குள் ஃபார்மால்டைடி திரவத்திற்குள் பதப்படுத்தி வைக்கலாமென்றும், உடலுக்குள் உள்ள உறுப்புகளை மட்டும் அகற்றி பெரிய கண்ணாடி ஜாடிக்குள் ஃபார்மால்டைடி திரவத்திற்குள் பதப்படுத்தி வைக்கலாமென்றும் தீர்மானித்தோம்.
பின்னாளில் மாவோ மரணத்திற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுந்ததால் சாட்சியமாக பயன்படக்
கூடுமென்ற காரணத்தால் அவற்றைப் பாதுகாக்க நினைத்தோம். வெற்று உடம்பிற்குள் சுத்திகரிக்கப்பட்ட பஞ்சு,
ஃபார்மால்டைடி திரவத்தை அடைத்தோம். தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்கு பின் திரவத்தை மாற்றுவதற்கு வசதியாக கழுத்தில் துவாரத்தை ஏற்படுத்தி குழாய் ஒன்றை பொருத்தினோம்.
கிரிஸ்டல் சவப்பெட்டி முழுக்க ஹெலியம் நிரப்பப்பட்டது. குறிப்பிட்ட காலம் வரை மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நேரத்தில் இவையனைத்தும் ரகசியமாக செய்து முடிக்கப்பட்டது.
1976-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி நள்ளிரவு ஒருவார கால அஞ்சலி முடிவடைந்ததும், ராணுவ பாதுகாப்புடன் மினிபஸ் ஒன்றின் பின்புறம் சவப்பெட்டி ஏற்றப்பட்டு சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நானும் உடன் சென்றேன். மாவோ உடல் அகற்றப்பட்டு மீண்டும் பதப்படுத்தும் பணி துவங்கியது. ஏற்கெனவே உருவாக்கப்பட்ட மெழுகுச்சிலை வேறொரு பூட்டிய அறைக்குள் வைக்கப்பட்டிருந்தது. முதன்முறையாக அந்த சிலையை பார்த்தபோது மாவோ உடலுக்கும் அதற்கும் எவ்வித வித்தியாசமும் தெரியவில்லை. அச்சு அசலாக அப்படியே உருவாக்கப்பட்டிருந்தது.
ஒரு சிலருக்கு மட்டுமே இரண்டு மாவோக்கள் இருப்பது தெரியும். ஒன்று மெழுகால் உருவாக்கப்பட்டது. மற்றது ஃபார்மால்டைடி திரவத்தால் பதப்படுத்தப்பட்டது. மருத்துவமனையின் கீழ்தளத்தில் மெழுகுச் சிலை வாரத்திற்கொரு முறை பரிசோதிக்கப்பட்டது. ஓராண்டு காலம் பத்திரமாக வைக்கப்பட்டது.
வெளியில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாவலர்களுக்குக் கூட நாம் ஏன் மருத்துவமனைக்குள் நிறுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உண்மை தெரியவில்லை. 1977-ஆம் ஆண்டு தியானன் மன் சதுக்கத்தில் மாவோ நினைவு அரங்கம் கட்டி முடிக்கப்பட்டவுடன் பொதுமக்கள் பார்வைக்காக நிரந்தரமாக மாவோ உடல் அங்கு வைக்கப்பட்டது. அவரது உடல் உறுப்புகள் கொண்ட கண்ணாடி ஜாடிகளும் மெழுகுச்சிலையும் அங்குள்ள ரகசிய அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
அன்றைய தினத்திலிருந்து 40 ஆண்டுகளாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து மரணமடைந்த மாவோவின் உடலுக்கு ஆயிரக்கரணக்கான சீன மக்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளும் அங்கு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...