

செங்கல்பட்டுக்கு அருகே உள்ளது பிலாபூர் கிராமம்.
மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு மாணவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் இறுதித் தேர்வில் ஒன்றிரண்டு பேர்தான் பாஸானார்கள்.
இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாரும் பாஸ். இந்த மாற்றத்துக்குக் காரணம், அந்த ஊரில் செயல்படும் "கல்வியாலயம் அறக்கட்டளை' என்ற அமைப்பு.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கிறது இந்த அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையை உருவாக்கி நடத்துபவர் செல்வகுமார்.
பஹ்ரைனில் உள்ள ஓர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் செல்வகுமார், ""எனது சிறுவயதில் படிப்பதற்காக நான் கஷ்டப்பட்டேன். பலர் எனக்கு உதவினார்கள். என்னைப் போல படிப்பதற்காக கஷ்டப்படும் மாணவர்களுக்கு உதவுவதற்காக இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தேன்'' என்கிறார்.
""நான் சிறுவனாக இருந்தபோது சென்னை தேனாம்பேட்டையில் குடிசைப் பகுதியில் என் வீடு இருந்தது. என்னுடைய அம்மா நுங்கம்பாக்கத்தில் உள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியில் ஆயா வேலை பார்த்து வந்தார். என் பள்ளிப் படிப்பை அந்தப் பள்ளியில்தான் முடித்தேன். நான் படித்து முடிக்கும் வரை எனக்குக் கல்விக் கட்டணம் எதுவும் அவர்கள் வாங்கவில்லை. இலவசமாகத்தான் படித்தேன். இந்தச் சலுகையை அளித்தவர் பள்ளியின் பிரின்ஸ்பாலாக இருந்த திருமதி ஒய்.ஜி.பி. இத்தனைக்கும் என் அம்மா சில ஆண்டுகள்தாம் அந்தப் பள்ளியில் வேலை பார்த்தார்.
நான் எட்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, உஹஸ்ரீட் ர்ய்ங்... பங்ஹஸ்ரீட் ர்ய்ங் என்ற திட்டத்தை திருமதி ஒய்.ஜி.பி. கொண்டு வந்தார். அதன்படி, பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனும், அவர்களிருக்கும் பகுதிக்கு அருகே உள்ள குடிசைகள் நிறைந்த பகுதிக்குச் சென்று அங்குள்ள ஒரு மாணவனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். நான் அந்த வயதிலேயே நான் இருக்கும் பகுதியில் இருந்த மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தேன். இப்போது கல்வியாலயத்தை நான் ஆரம்பிப்பதற்கு அது விதை போட்டது.
எனக்கு ஆண்டுக்கு ஒருமுறைதான் போட்டுக் கொள்ள டிரஸ் எடுத்துக் கொடுப்பார்கள். அதுவும் யூனிபார்ம்தான். அந்த ஆண்டு அதுவும் எடுத்துக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. நான் பழைய துணிகளை உடுத்திக் கொண்டு பள்ளிக்குப் போனேன். எனக்குப் புதிய ஆடைகளை அப்போது பள்ளியில் வேலை பார்த்த ஆசிரியை பிரேமா வீரராகவன், ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்துக் கொடுத்தார். அது அவர் எனக்காக எடுத்துக் கொடுத்த ஆடை. புதிய ஆடை கிடைத்த மகிழ்ச்சியில் அவருக்கு நன்றி கூட நான் சொல்லவில்லை.
நான் பள்ளியிறுதித் தேர்வு எழுதிய பிறகு, அடுத்து என்ன படிக்கலாம்? என்பதற்கு என்னுடன் படித்த நண்பர்களின் பெற்றோர்களே வழிகாட்டினார்கள். நான் லயோலா கல்லூரியில் பி.காம் சேர்ந்து படித்தேன்.
பி.காம். முடித்தவுடன் எனக்கு ஸ்டேட் பேங்கில் எழுத்தர் வேலை கிடைத்தது. அதற்குப் பிறகு நியூ இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் ஆபிஸர் வேலை கிடைத்தது. 2007 ஆம் ஆண்டு பஹ்ரைனில் உள்ள இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன்.
நான் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம், பிறர் எனக்கு செய்த உதவிகள்தாம்.
எனது கல்விக் கட்டணத்தைப் பள்ளி வாங்கிக் கொள்ளவில்லை. ஓர் ஆசிரியை எனக்கு டிரஸ் எடுத்துக் கொடுத்திருக்கிறார். என்னுடன் படித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் எனக்கு உதவியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எனக்கு இருந்ததால்தான் நான் கல்லூரியில் சேர்ந்து படிக்கும்நிலை உருவானது என்பது என் மனதில் அழுத்தமாகப் பதிந்து போனது. அதனால் என்னைப் போன்ற கஷ்டமான சூழ்நிலையில் இருக்கும் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தேன்.
நகரங்களில் படிக்கும் மாணவர்கள் ட்யூஷன் போகிறார்கள். நிறைய மார்க் எடுக்கத் தனியாகப் பயிற்சி எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு இந்த வசதிகள் எல்லாம் இல்லை. அவர்கள் பத்தாம் வகுப்பு, பள்ளியிறுதித் தேர்வுகளில் பாஸôவதே சிரமம். எனவே நகர்ப்புற மாணவர்களுக்கு உதவுவதைக் காட்டிலும், கிராமத்திலுள்ள மாணவர்கள் படிப்பதற்காக உதவ வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக நான் தேர்ந்தெடுத்த கிராமம்தான் செங்கல்பட்டுக்கு அருகே உள்ள பிலாபூர்.
இப்படி நான் உதவ நினைப்பதை முதலில் என் மனைவி வனஜாவிடம் சொன்னேன். என் மகன் லோகேஷிடமும், மகள் ஹரிணியிடமும் சொன்னேன். இதுவரை நாம் நமக்காகச் செலவு பண்ணினோம். இனிமேல் பிறருக்காகவும் கொஞ்சம் செலவு செய்ய முடிவெடுத்து இருக்கிறேன் என்றதும் அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டனர்.
உடனே எனக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்த ஆசிரியை பிரேமா வீரராகவன் நினைவுக்கு வந்தார். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு அவரைத் தேடிக் கண்டுபிடிப்பது சுலபமாக இல்லை. அவர் சென்னை தியாகராயநகரில் இருப்பதாகத் தகவல் தெரிந்தது.
நானும் என் மனைவி வனஜாவும், அவருடைய இருப்பிடம் தேடிச் சென்று பார்த்தோம். அவருக்கு இப்போது 70 வயதிருக்கலாம். முதலில் அவருக்கு என்னைத் தெரியவில்லை. அவர் எனக்கு டிரஸ் வாங்கிக் கொடுத்ததைச் சொன்னதும் அவருக்கு ஞாபகம் வந்துவிட்டது.
நான் ஆரம்பிக்கப் போகும் கல்வியாலயம் என்ற அறக்கட்டளையை அவர்தான் குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் ஏற்றுக் கொண்டார். இன்று கல்வியாலயம் அறக்கட்டளையின் ஹெட் ரிசோர்ஸ் பெர்சன் அவர்தான். அவருடைய வழிகாட்டுதலில்தான் இன்று கிராமத்தில் உள்ள மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறோம்.
அதற்கு அடுத்து என் திட்டத்தைக் கூறியது திருமதி ஒய்.ஜி.பி அவர்களிடம். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. கல்வியாலயம் அறக்கட்டளை மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் கொடுத்து உதவுகிறார். அதன் ஆண்டு விழாவை ஏற்று நடத்துகிறார்.
இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தது 2010 இல். அப்போது 22 மாணவர்கள் எங்களிடம் பயிற்சி பெற்றார்கள். 2011 இல் 20 மாணவர்கள். 2012 இல் 15 பேர். பிலாபூர் மாணவர்கள் மட்டுமல்லாமல், அருகிலுள்ள கிராம மாணவர்களும் எங்களிடம் பயிற்சி பெறுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தக் கிராமத்து மாணவர்கள் யாரும் 10 ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடையவில்லை. இதை ஒரு சாதனையாகவே நினைக்கிறோம். ஏன் என்றால் முதலில் எல்லாம் ஓரிருவரைத் தவிர எல்லாரும் ஃபெயில் ஆகிவிடுவார்கள். ஃபெயிலான பிறகு, அவர்கள் படிப்பு நின்றுபோகும்.
கல்வியாலயத்தில் 3 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். சென்னையில் இருந்து வாரத்தில் ஒருநாள் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியிலிருந்தும், பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளியிலிருந்தும் ஆசிரியர்கள் அங்கு சென்று, அங்குள்ள ஆசியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். மாலை நேரங்களில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகளும் நடைபெறுகின்றன.
பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் கோச்சிங் கிளாஸ் நடத்துவது, அவர்கள் பட்ட மேற்படிப்பு படிக்க ஆலோசனகள் கூறுவது, சுயமுன்னேற்ற வகுப்புகள், ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்துவது எல்லாம் வருங்காலத்தில் செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது'' என்கிறார் செல்வகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சட்டப் பேரவை இடைத்தோ்தலை எதிா்கொள்ள காங்கிரஸ் தயாராக உள்ளது

தமிழ்நாட்டில் 11 தோ்தல்களில் தொடா் தோல்வியை சந்தித்தவா் எடப்பாடி பழனிசாமி: ஓ. பன்னீா்செல்வம்

மாணவி படுகொலைக்கு நீதி கோரி! - அதிமுக ஐ.டி. பிரிவு அஞ்சலி

குத்துக்கல்வலசை பள்ளியில் தடகளப் போட்டிகள்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

