புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பத்திரிகை உலகின் அகராதி!

மறைந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரா.கி.ரங்கராஜனின் இரங்கல் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. குமுதம் குழுமம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் ரா.கி.ர.வோடு நெருங்கிப் பழகிய நண்பர்கள் சி

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:19 am

மறைந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான

ரா.கி.ரங்கராஜனின் இரங்கல் கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. குமுதம் குழுமம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்ச்சியில் ரா.கி.ர.வோடு நெருங்கிப் பழகிய நண்பர்கள் சிலர் அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்:

ராமகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். (ஓய்வு) (அண்ணாநகர் டைம்ஸ்) : தமிழில் அதிகம் எழுதிய எழுத்தாளர் என்று கல்கியை சொல்லலாம். அவருக்குப் பிறகு அவரைப் போலவே பத்திரிகையாளராக- எழுத்தாளராக - இருந்த ரா.கி.ரங்க

ராஜன்தான் தமிழில் அதிகம் எழுதியவர்.

எதை எழுதினாலும் மிக நேர்மையாகவும் மிக பொறுப்புடனும் எழுதக் கூடியவர். "நான் கிருஷ்ணதேவராயன்' என்கிற தொடர் எழுதிக் கொண்டிருந்தபோது பரதநாட்டியம் பற்றிய சில தகவல்கள் தேவைப்பட்டதால் பத்மா சுப்பிரமணியத்தை சந்தித்து விரிவாகப் பேசி குறிப்புகள் எடுத்துக்கொண்டு அதன் பிறகே அந்தப் பகுதியை எழுதினார். அதுபோல ஒரு கதையில் மாசி மாதத்தில் வானத்தில் தெரியும் நட்சத்திரங்களைப் பற்றி ஒரு வர்ணனை எழுத வேண்டியிருந்தபோது எழுத்தாளர் மகரம் அவர்களைச் சந்தித்து நட்சத்திரங்களின் பெயர்களைக் கேட்டு தெரிந்துகொண்டே எழுதினார்.

பா.வரதராஜன் : ஆர்.கே.ஆர். என்றதும் எனக்கு நினைவுக்கு வருவது அவரது "வின்னிங் ஸ்மைல்'தான். ஒவ்வொரு வாரமும் இதழ் அச்சாகி வெளிவருகிற நேரத்தில் எல்லாருக்கும் அதிக டென்ஷன் இருக்கும். அதில் ஏதாவது ஒரு சிறு தவறு நடந்தாலும் சரிப்படுத்த முடியாது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் பதற்றமாக இருக்கும் அந்த நேரத்திலும் ஆர்.கே.ஆர். மட்டும் டென்ஷன் எதுவும் இல்லாமல் இருப்பார்.

அதேபோல "லைட்ஸ் ஆன்' என்கிற சினிமா பகுதியை எல்லாரும் விரும்பிப் படிக்கும்படி செய்தது அவருக்கே உரிய எழுத்து நடையும் முத்தாய்ப்பாக அவர் எழுதும் ஒரு பஞ்ச் லைனும்தான். அது செய்திக்குப் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்; யாரையும் புண்படுத்தாமலும் இருக்க வேண்டும். அப்படியே இருந்தது. அதுதான் ஆர்.கே.ஆர்.

சுதாங்கன் (பத்திரிகையாளர்) : நான் பணிபுரிந்த "திசைகள்' பத்திரிகை நின்றுபோனதும் ரா.கி.யை சந்தித்தேன். முதலில் எனது பெயரான ரங்கராஜனை விட்டுவிட்டு வேறு பெயரில் எழுத வேண்டும் என்று கூறினார். அதற்கு அவர் கூறிய காரணம்,"" நான் மோசமா எழுதுறதுக்கு உன்னை திட்டுவாம்பா!''

பிறகு ஜ.ரா.சுந்தரேசன் எனக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று பலவாறு யோசித்து முடிவில் சுதாங்கன் என்று வைத்தார். எனது வாழ்க்கையில் ரா.கி.யும் ஜ.ரா.சு.வும் முக்கியமானவர்கள்.

எஸ்.ஏ.பி., ரா.கி., ஜ.ரா.சு., புனிதன் ஆகிய நான்கு கதர் சட்டை சாமியார்கள் கட்டிய ராஜமடம்தான் "குமுதம்'. அந்த முதியவர்களின் எண்ணத்தில் இளமை இருந்தது. அவர்கள் எழுதும் சினிமா விமர்சனங்களுக்கென்று தனி வாசகர்கள் உண்டு. சிவாஜி, பத்மினி நடித்த "ஸ்ரீ வள்ளி' பட விமர்சனத்தில் அந்தப் பக்கம் முழுக்க "முருகா' "முருகா' "முருகா' "முருகா' என்றே எழுதியிருந்தார்கள். அவ்வளவுதான். "நண்டு' பட விமர்சனத்தின் இறுதியில் போர், படுபோர், நண்டு என்று எழுதியிருந்தார்கள்.

எஸ்.எஸ்.வாசன், கல்கி, சாவி, மணியன் வரிசையில் பத்திரிகை உலகில் ஓர் அகராதி ரா.கி.ரங்கராஜன்.

"துக்ளக்' சத்யா : எழுத்தில் எத்தனை வகை இருக்கிறதோ, அத்தனை வகையாகவும் எழுதிப் பார்த்தவர் ஆர்.கே.ஆர். ஒவ்வொரு வகையான எழுத்துக்கும் ஒரு புனைப்பெயர். எந்தப் பெயரில் எழுதுகிறாரோ அந்தப் பெயருக்கென்று ஒரு தனிநடை இருக்கும். இறுதி வரை அதில் மாற்றமில்லாமல் எழுதி வந்தார்.

"துக்ளக்'கில் டிவி நிகழ்ச்சிகள் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டதும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு எழுதினார். அந்தப் பகுதி வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது இறுதிக்காலம் வரை எழுதுவதில் ஆர்வமுடன் இருந்தார்.

ஓவியர் ஜெயராஜ் : நான் இன்று ஒரு ஓவியராகப் பெயர் பெற்றிருப்பதற்கு காரணம் ரா.கி.ரங்கராஜன்தான். இதை நான் பேசுகிற ஒவ்வொரு மேடையிலும் கூறுவேன்.

ஆர்.கே.ஆர்.தான் என்னை எடிட்டிர் எஸ்.ஏ.பி.யிடம் அழைத்துப் போய் அறிமுகம் செய்து வந்தார். எடிட்டர் என்னிடம் ஒரு சிறுகதையைத் தந்து அதைப் படித்துவிட்டு படம் போடும்படி கூறினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்போது என் அருகில் வந்த ஆர்.கே.ஆர். ""ஒண்ணும் யோசிக்காதிங்க, நான் சொல்றேன். காலேஜ் பிரின்ஸிபால் ஒருத்தர் ஒரு லெக்சரர திட்டிக்கிட்டிருக்காரு. அவரை மாட்டிவிட்ட இரண்டு மாணவர்கள் ஜன்னல் வழியா பார்த்துக்கிட்டிருக்காங்க அவ்வளவுதான்'' அப்படின்னு சொன்னார். எனக்கு உயிர் வந்த மாதிரி இருந்தது. மறுநாள் அதே மாதிரி போட்டுகிட்டு போனேன். ஆர்.கே.ஆருக்கு புடிச்சிருந்தது. என்னை கூட்டிட்டு எடிட்டர் ரூமுக்கு போனார். அவருக்கும் படம் புடிச்சிருந்தது. தொடர்ந்து குமுதத்தில் என் படம் வர ஆரம்பிச்சிருச்சி. அந்த ஆர்.கே.ஆர். இல்லைன்னா இந்த ஜெயராஜ் இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.