புதிய இளவரசரை அறிவித்த இந்தியர்!
ஜூலை 22 - லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் புதிய இளவரசர்


ஜூலை 22 - லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் புதிய இளவரசர் குறித்த தகவலைப் பெற காத்திருக்கின்றனர். அரண்மனையிலிருந்து யாராவது ஒருவர் வெளியே வந்தால்போதும், மிகுந்த ஆவலுடன் அவர்கள் ஏதாவது சொல்வார்களா? என்ற எதிர்பார்ப்பு.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் செய்தித் தொடர்பாளர் எலிஸா ஆண்டர்சன் என்ற பெண் அரண்மனையிலிருந்து அவசரமாக வெளியே வந்தார். கூடவே ஓர் இருபத்தைந்து வயது இளைஞரும். இருவரும் அரண்மனை வாயிலுக்கு அருகே உள்ள அறிவிப்புப் பலகையில் இளவரசர் வில்லியம் - கேத்தரின் தம்பதிகளின் மகன் - புதிய இளவரசர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் பிறந்ததை அறிவிக்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஒட்டினர்.
மக்களின் மகிழ்ச்சி ஆரவாரத்தை உலகம் முழுவதும் பரப்ப, தொலைக்காட்சி, பத்திரிகை கேமராக்கள் படம் பிடித்தன. அந்த இளைஞரையும்.
அந்த இளைஞர் ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.
அவர் பெயர் பாதர் அஸிம். இங்கிலாந்து அரச குடும்பத்தின் - பக்கிங்ஹாம் அரண்மனையின் பணியாள்.
பாதர் அஸிம் லண்டனில் இருந்த அந்த நேரத்தில் அவருடைய அப்பா முகம்மது ரஹீம் இந்தியாவில் கொல்கத்தாவில் வெல்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அம்மா மும்தாஜ் பேகம் கொல்கத்தா சிஐடி ரோடில் உள்ள குடிசையில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
ஆம். கொல்கத்தாவில் உள்ள இரண்டு அறைகளே உள்ள இந்தக் குடிசையில் பிறந்து வளர்ந்தவர்தான் பாதர் அஸிம். ஒரு டிவி. இரண்டு பிளாஸ்டிக் வாளிகள். ஒரு கட்டில். கொஞ்சம் பாத்திரங்கள். இதுதான் அஸிமின் வீடு.
கட்டிலில் பாதர் அஸிமும் அவருடைய தம்பியும் படுத்துக் கொள்ள, கீழே தரையில் அம்மாவும் அப்பாவும் தூங்குவார்கள்.
பாதர் அஸிமின் அப்பாவுக்கு ஒரு வெறி. தன் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்று. கடுமையாக உழைத்தார். கடன் வாங்கி பிள்ளைகளின் பள்ளிக் கட்டணங்களைச் செலுத்தினார். எந்த வீண் செலவுகளும் இல்லாமல், தனது சிறகுகளை வெட்டிக் கொண்டார்.
இருந்தாலும் பாதர் அஸிமால் தொடர்ந்து படிக்க முடியாத நிலை. இதை எப்படியோ தெரிந்து கொண்ட "செயின்ட் மேரீஸ் அனாதை இல்லம் மற்றும் பள்ளிகளின்' கருணை அவரின் மீது குவிந்தது. அது ஏழைகள், ஆதரவற்றோர், வீடற்றவர்கள், வறுமையில் வாடுபவர்களுக்கு உதவும் ஓர் அமைப்பு. அயர்லாந்து நாட்டின் கருணை உள்ளம் கொண்ட கிறிஸ்தவர்களால் நடத்தப்படுவது. அவர்கள் பாதர் அஸிமைத் தத்து எடுத்துக் கொண்டனர்.
பள்ளிப் படிப்பு முடிந்ததும், கொல்கத்தாவில் சால்ட் லேக் பகுதியில் உள்ள "இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்' கல்லூரியில் பி.ஏ. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க வைத்தனர்.
கொல்கத்தாவில் இரண்டாண்டு படிப்பு முடிந்ததும், அஸிமை ஸ்காட்லான்டில் உள்ள எடின்பர்க்ஸ் நேப்பியர் பல்கலைக் கழகத்துக்கு அனுப்பினர். 2011 இல் அங்கே படிப்பு முடிந்ததும் பக்கிங்ஹாம் அரண்மனை அலுவலகத்தில் பணியாளராக பிப்ரவரி 2012 இல் வேலைக்குச் சேர்ந்தார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் என்ன வேலை பாதர் அஸிமுக்கு?
""இன்ன வேலை என்று சொல்ல முடியாது. ஒருநாள் அரசு கருவூலத்துக்கு வருகின்ற விருந்தினர்களை வரவேற்று, உபசரித்து, அவர்களைக் கவனிக்க வேண்டும். இன்னொரு நாளோ அரண்மனை அலுவலகங்களில் பைல்களுக்கு இடையே புகுந்து அங்கு வேலை செய்யும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு நல்ல தேநீர் சப்ளை செய்ய வேண்டும். அடுத்த நாளோ குதிரைகள் பூட்டிய வண்டியில் பயணிக்கும் அரச குடும்பத்தினரின் பின் சென்று அவர்களுக்குத் தேவையானவற்றைத் தந்து கவனிக்க வேண்டும்'' என்கிறார் பாதர் அஸிமைப் போலவே அங்கு பணிபுரியும் மார்ட்டின் பிளேக் என்பவர்.
இளவரசர் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் பிறந்ததை அஸிம் அறிவித்த அன்று உலகத் தொலைக்காட்சிகளில் எல்லாம் அதைக் காட்டினார்கள். கொல்கத்தாவில் குடிசையில் வசிக்கும் அவருடைய அம்மாவும், அப்பாவும், அஸிமின் தம்பி மஸாரும் பார்த்திருக்கிறார்கள்.
""அரசிக்குக் குழந்தை பிறந்ததை அறிவிக்கும் அந்த பரபரப்பான வேளையிலும் கூட அண்ணன் மிகவும் இயல்பாக இருந்தார். என் பெற்றோருக்கோ மிகவும் பெருமை. அண்ணன் அங்கே வேலை செய்வதற்கு முன்பு வரை அரண்மனையைப் பற்றியோ, இங்கிலாந்து அரச குடும்பத்தினரைப் பற்றியோ எங்களுக்கு எதுவுமே தெரியாது'' என்கிறார் மனதில் பொங்கும் மகிழ்ச்சியுடன்.
எதிர்பாராத செய்தி ஒன்று:
பாதர் அஸிம் இங்கிலாந்தில் இருந்து கட்டாயமாக இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியிருக்கிறது. காரணம் வரும் அக்டோபர் மாதத்தில் அவருடைய விசா முடியப் போகிறது. 2012 இல் அவர் வேலைக்குச் சேர்ந்த போது வழங்கப்பட்ட 18 மாத கால விசா காலாவதியாகப் போகிறது.
ஒரே நாளில் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து பிரபலமான பாதர் அஸிமுக்கோ லண்டனிலிருந்து கிளம்பவே மனம் இல்லையாம். என்ன செய்வது?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...