சிவகங்கை மாவட்டம். இளையான்குடி.
பட்டு நூல் உற்பத்தி ஆலை. உள்ளே நுழைகிறோம். எங்கு பார்த்தாலும் பெண்கள். ஆலையின் இயந்திரங்களை இயக்குபவர்களும் பெண்களே. வியப்பால் விழிகள் விரிய ஒரு நிமிடம் மெய் மறந்து நிற்கிறோம். நம் முன் எதிர்ப்படுகிறார்கள் தாகிரா பானு, ரஜியா பேகம், கதிஜாபீவி மூவரும்.
25 சிறுபான்மை முஸ்லீம் மகளிர் குழுக்களை ஒருங்கிணைத்து தென் தமிழகத்தில் முதல் பட்டு நூல் உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறார்கள் அவர்கள். அவர்களிடம் பேசினோம்:
""அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என கேட்டது அந்தக் காலம், ஒரு பெண் படித்தால் அந்த குடும்பமே முன்னேறும் என்பது இந்தக் காலம். சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெண்களாகிய நாங்கள் கூட்டாகச் சேர்ந்து ஆலையைத் துவக்கி மகளிருக்கு வேலை கொடுப்பதன் மூலம் குடும்பப் பொருளாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என்பதை உணர்ந்தோம்.
இளையான்குடி பகுதியில் எந்தவிதமான அரசு தொழிற்சாலையும் கிடையாது. இப்பகுதியில் கணவரால் கைவிடப்பட்ட, விதவையான பெண்கள் வெளியே வேலைக்குச் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் பட்டு வளர்ப்புத் தொழிலை மேம்படுத்த மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தேடிக் கொண்டிருந்தார். பல்வேறு குழுக்கள் பட்டு நூல் எடுக்கும் பயிற்சிக்கு வந்தன. எனினும் எங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயிற்சியை வெற்றிகரமாக முடித்தோம். இதனைத் தொடர்ந்து பட்டு வளர்ச்சித் துறை இயக்குநராக இருந்த வி.பிரபாகரனின் உதவியுடன் சிவகங்கை மாவட்ட மகளிர் திட்டம் மூலம் ஒரு பட்டு நூல் உற்பத்தி ஆலையைத் துவக்க தேவையான நிதி மற்றும் வசதிகளை மாவட்ட ஆட்சியர் செய்து கொடுத்தார். இந்த ஆலைக்கு மத்திய அரசு ரூ.5 லட்சமும், மாநில அரசு ரூ.2.5லட்சமும் மானியமாக வழங்கியது. வங்கிக் கடன் மற்றும் எங்களது பங்களிப்பாக ரூ.2.5 லட்சம் சேர்த்து ரூ.10 லட்சம் முதலீட்டில் தென் தமிழகத்தில் மகளிர் கூட்டமைப்பின் முதல் பட்டு நூல் உற்பத்தி ஆலையை இங்கே தொடங்கினோம்.
பட்டு நூல் உற்பத்திக்குப் பட்டுக் கூடுகள் வேண்டுமே? பட்டு வளர்ச்சித் துறையின் மூலம் திண்டுக்கல், சாணார்பட்டி, தேனி, உசிலம்பட்டி, புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து பட்டுக் கூடுகள் கிலோ ரூ.350 முதல் ரூ.540 வரையிலான விலையில் ரொக்கமாகக் கொடுத்து வாங்குகிறோம். மழைக்காலமாக இருந்தால் விலை சற்று கூடுதலாக இருக்கும். கூடுகள் ஒற்றைக்கூடு, இரட்டைக்கூடு என கலந்து இருக்கும். இரட்டைக்கூடுகளில் இரண்டு புழுக்கள் இருப்பதால் அவை நூல் நூற்பதற்கு வராது என்பதால் அவற்றைக் கழித்து விடுவோம். ஒருகிலோ கூடுகளில் 10 சதவீதம் கழிவாகப் போய்விடும். கூடுகளை இயந்திரத்தின் மூலம் வேக வைத்து பின்னர் சுடுநீரிலும், குளிர்ந்த நீரிலும் கூடுகளைப் போட்டு பட்டுநூல் எடுத்து மற்றொரு இயந்திரத்தின் உதவியுடன் ரீல்களில் நூல்களாக மாற்றுகிறோம். இந்தப் பட்டு நூல்களை காஞ்சிபுரத்தில் உள்ள "அண்ணா பட்டு பரிமாற்று மையம்' வாங்கிக் கொள்கிறது. ஒரு கிலோ பட்டு நூலுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.3,500 வரையிலும் கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். மறுநாளே வங்கிக் கணக்கில் பணத்தைச் செலுத்திவிடுகின்றனர். இதனால் விற்பனை செய்வதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.
கூடுகளை வேக வைப்பது முதல் நூல் நூற்பது வரையிலான எல்லா வேலைகளையும் பெண்களே செய்கிறார்கள். அதற்கான பயிற்சிகளை நாங்கள் தருகிறோம். முழுக்க முழுக்க, பெண்களே இந்த ஆலையை நிர்வகிப்பதால், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமின்றி, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள் அனைவரும் பாதுகாப்பு உணர்வுடன் நிம்மதியாக இங்கே வேலை செய்கிறார்கள். மகளிர் சுய உதவிக் குழுக்களின் கூட்டமைப்புக்குச் சொந்தமான ஆலை என்பதால் வேலை பார்க்கும் அனைவரும் "என் ஆலை' என்ற பெருமிதத்துடன் செயல்பட்டு வருகிறோம்.
அரசும் எங்களுக்கு உதவி வருகிறது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர்,மகளிர் திட்டம் மற்றும் பெண்கள் ஒருங்கிணைந்த தேசிய வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் காமிலா ஆகியோரின் முயற்சியால்தான் இந்த ஆலை உருவானது என்றால் அது மிகையாகாது. பட்டுக்கூடுகள் வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டியுள்ளதால் சில கஷ்டங்கள் உள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் மேலநெட்டூர், கீழாவூர், காளையார்கோவில் ஆகிய ஊர்களில் மல்பரி நடவு செய்ய மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. மல்பரி நடவுக்கு அரசு மானியமும் வழங்குவதால் கூடிய விரைவில் ஆலைக்குத் தேவையான மூலப் பொருள்கள் மாவட்டத்திலேயே கிடைக்கும். மூலப் பொருள்கள்
அதிக அளவில் கிடைக்கும் போது இளையான்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் இது போன்று இன்னும் இரண்டு, மூன்று ஆலைகளை நாங்களே துவக்கி வெற்றிகரமாகச் செயல்படுத்துவோம்'' என நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் மூவரும்.
படங்கள் : ஆர்.நாகேஸ்வரன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மீண்டும்.. மீண்டுமா? சிஎஸ்கே போராடி தோல்வி!

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


