கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

குளிர்கால டிப்ஸ்

பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது. தயிர், மோர் போன்ற பால் பொருள்களையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய்

News image
Updated On :7 டிசம்பர் 2013, 8:16 am

கீதா ஹரிஹரன்

பனிக்காலத்தில் இனிப்பு நிறைய சாப்பிடக் கூடாது. தயிர், மோர் போன்ற பால் பொருள்களையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சுரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் மாதிரியான நீர்க்காய்களையும் தவிர்க்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது நல்லது. குளிர்பானங்களை தவிர்த்து விடுங்கள். உணவில் மிளகு, பூண்டு, இஞ்சி, புதினா, தூதுவளை அதிகம் சேர்க்க வேண்டும்.

 குழந்தைகளை டூ வீலர், சைக்கிளில் முன்னாடி உட்கார வைத்து கூட்டிபோகக் கூடாது. குழந்தைகளுக்கு இந்த சீசனில் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் போகும்போது காதில் ஸ்கார்ப், மப்ளர் ஏதாவது ஒன்றை காது மறையும்படி கட்டி வைக்க வேண்டும். பெரியவர்களும் காலை மற்றும் மாலை நேரங்களில் வெளியில் போகும்போது இதேபோல் காது மறையும்படி கட்டிக்கொள்ள வேண்டும்.

 குளிர்காலங்களில் சைக்கிள், ஸ்கூட்டரில் செல்லும்போது, மார்பில் காற்று பலமாகத் தாக்கும். ஆகையால், ஒரு நியூஸ் பேப்பரை நான்காக மடித்து, பனியனுக்குள் வைத்து, பனியனை "இன்' செய்து சட்டை போட்டுக் கொண்டால் மார்புக்கு பலமான பாதுகாப்பு கிடைக்கும். ஸ்வெட்டரை எடுத்துக்கொண்டு அலைய வேண்டாம்.

 பொதுவாக குளிர்காலத்தில் கூந்தல் வறண்டு போகும் என்பதால் எப்போதும் கூந்தலில் எண்ணெய்ப் பசை இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர்காலத்தில் கூந்தலை  அடிக்கடி ஷாம்பு வாஷ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குளிருக்காக உல்லன் குல்லாக்கள் அணிவதைத் தவிர்த்து "சிந்தடிக் சில்க்' தயாரிப்பு குல்லா மற்றும் ஸ்கார்ஃப்களைப் பயன்படுத்துவதன் மூலம் குளிர்காலத்தில் கூந்தலில் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கலாம்.

 குளிர்காலத்தில் முடி வறட்சி காரணமாக  பொடுகுப் பிரச்னையும் அதிகமாகும். அந்த பொடுகானது தோல், கைகளில் எல்லாம் செதிள், செதிளாக உதிர்ந்து பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும். இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை கற்றாழை ஜெல்லை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கரைத்து தலையில் நன்றாகத் தடவி ஐந்து நிமிடங்கள் ஊற வைத்து அலசினால் வறட்டுத்தன்மை நீங்குவதுடன் பொடுகும் மட்டுப்படும்.

 குளிர்காலத்தில் வறட்சி காரணமாக நரையும் அதிகரிக்கலாம். அதற்காக "டை' அல்லது "கலரிங்' பயன்படுத்தும்போது அது கூந்தலின் வறட்சியை மேலும் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒரு கப் மருதாணி இலையுடன் கால் கப் டீத்தூள்; எலுமிச்சைச் சாறு கால் கப்; தேங்காய் எண்ணெய் நான்கு டீஸ்பூன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வாரம் ஒருமுறை இந்த விழுதை தலையில் தேய்த்து அலச, டை மற்றும் கலரிங் போன்றவை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

 குளிர்காலத்தில் இன்ஃபெக்ஷன் காரணமாக சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்படலாம். அதற்கு குளிக்கும் நீரில் வேப்பம் பொடி ஒரு ஸ்பூனுடன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் கலந்து குளிக்கலாம்.

 குளிர்காலத்தில் தலையில் பேன் தொல்லை அதிகரிக்கும். வசம்பு பவுடருடன் தேங்காய் எண்ணெயும் தயிரும் கலந்து பத்து நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் பேன் தொல்லை குறையும்.

 உதடுகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க தேன், கிளிசரின், பீட்ரூட் சாறு, வாஸ்லைன் தடவலாம்.

 குளிக்கப் போவதற்கு முன்பு உடம்பிலும் முகத்திலும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவும். குளிப்பதற்கு அதிக அளவு சூடுள்ள தண்ணீர் வேண்டாம்.

 குளிர்காலத்தில் உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.

 இந்தச் சீசனில் முக்கிய தேவை நிறைய தண்ணீர் குடிப்பது. அதனால் நிறைய தண்ணீர் குடியுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.