

அசுர வாத்தியமான நாகசுரத்தை ஆலயத் திருப்பணிகளின் போதும் திருமண நிகழ்ச்சிகளில் தனிக் கச்சேரிகளாகவும் தம்பதி சமேதராக வாசித்துவருகின்றது திருவண்ணாமலையைச் சேர்ந்த பால கணேசன் - பாகேஸ்வரி ஜோடி!
யுவஸ்ரீ கலாபாரதி, நாதஸ்வர நாதமணி போன்ற விருதுகளைப் பெற்றிருக்கும் பாலகணேசன் இசைப் பேரறிஞர் மதுரை பொன்னுசாமிப் பிள்ளையின் மாணவன். நாகஸ்வர கலைச்சுடர், டி.என். ராஜரத்தினம் பிள்ளை விருது, நாகஸ்வர இசைவாணி ஆகிய விருதுகளைப் பெற்றிருப்பவர் பாகேஸ்வரி.
பொங்கு தமிழ்ப் பண்ணிசைப் பெருவிழாவில் மங்கல இசை வழங்கிய இந்த தம்பதியரிடம், நாகசுர இசைக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டதா, நாகசுரம் வாசிக்கும் போது எப்படி அனுசரித்து வாசிக்கிறீர்கள்... என்று கேள்விகளை அடுக்கினோம். இரட்டை நாயனமாக அவர்கள் ஒலித்ததிலிருந்து...
""என்னுடைய எட்டு வயதிலேயே அப்பா டி.ஆர். பிச்சாண்டியிடம் நாகசுரம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். 13 வயதில், மதுரை பொன்னுசாமி ஐயாவிடம் ஒரு வருடம் பயிற்சி பெற்றேன். அதன்பின் திருவண்ணாமலை அரசு இசைப் பள்ளியில் மூன்று ஆண்டுகள் இசை பயின்றேன். குரலிசை மற்றும் நாகசுரம் இசையில் கல்லூரியில் முதல் மாணவனாக தேர்ந்தெடுக்கப்பட்டேன். குகை நமசிவாயம் திருக்கோயிலில் முதல் நிகழ்ச்சியை நடத்தினேன்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது நாகசுரம் வாசித்தேன். மதுரை பொன்னுசாமி பிள்ளையின் 75-ஆவது பிறந்த நாளையொட்டி நடந்த நிகழ்ச்சியில் தனிக் கச்சேரியாக நாகசுரம் வாசித்தேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைகட்டு உற்சவத்தின்போதும் வாசித்திருக்கிறேன். ஆடிப்பூரம் திருவிழாவின் போதும் பொன்னுசாமிப் பிள்ளை அவர்களால் மேடை அமைத்துக் கொடுத்து நான் நாகசுரம் வாசித்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.
இசைக் குடும்பத்தைச் சேர்ந்த, அதிலும் நாகசுரம் வாசிக்கும் கலைஞர் ஒருவரே எனக்கு மனைவியாக அமைந்தது என்னுடைய பாக்கியம்தான். திருமணத்திற்கு முன்பு என்னிடம் பாகேஸ்வரி, ""திருமணத்திற்குப் பிறகும் நான் நாகசுரம் வாசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு சம்மதிப்பீர்களா?'' என்று கேட்டார்.
""எங்களின் குடும்பத்தைப் பொறுத்தவரை பெண்கள் நாகசுரம் வாசிப்பதற்கு தடையேதும் இல்லை. என்னுடைய அண்ணன், அண்ணி ஆகியோரும் நாகசுரம் சேர்ந்து வாசிப்பார்கள். அதனால் திருமணத்திற்குப் பிறகும் நீ தொடர்ந்து நாகசுரம் வாசிப்பதற்கு எங்களின் குடும்பத்தினர் தடையேதும் சொல்லமாட்டார்கள்' என்று சொன்னேன். எங்களின் திருமணம், இசையால் வசமானது!
நாகசுரத்துக்கான முக்கியத்துவம் என்றைக்கும் குறையாது. இசைக் கலைஞர்களுக்கு சுயகட்டுப்பாடு முக்கியம். அதோடு வாய்ப்பு கொடுப்பவர்களின் விருப்பத்தையும் முகம் சுழிக்காமல் நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் அவர்கள் மனம் குளிரும். நான் என்னுடைய மனைவியோடு சேர்ந்து நாகசுரம் வாசிக்கும் போது சில அனுசரிப்புகளைக் கடைப்பிடிப்பேன். சில ராகங்களை அவர் நன்றாக வாசிப்பார். சில ராகங்களை நான் நன்றாக வாசிப்பேன். அதனால் பெரும்பாலும் ராகம் வாசிக்கும் போது யாராவது ஒருவர் வாசிப்போம். கீர்த்தனைகளை இருவரும் சேர்ந்தே வாசிப்போம்'' என்றார் பாலகணேசன்.
பாகேஸ்வரி: ""என்னுடைய தந்தை தேவராஜிடம்தான் நான் நாகசுரம் கற்றுக் கொண்டேன். தம்பி தவில் வாசிக்கிறான். தங்கை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். எனக்கு அப்பா சொல்லிக் கொடுத்தது எல்லாமே முழுக்க முழுக்க கர்நாடக இசையைத்தான். ஏழு வயதில் பயிற்சியைத் தொடங்கி என்னுடைய பத்தாவது வயதிலேயே அரங்கேற்றம் செய்தேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறேன்.
திருமணத்திற்குப் பிறகு, கணவனின் ஆதரவு இருந்தால் மட்டும் ஒரு பெண்ணால் அவள் சார்ந்திருக்கும் கலையில் தொடர்ந்து நீடிக்க முடியாது. புகுந்த வீட்டின் அத்தனை உறுப்பினர்களின் ஆதரவும் இருந்தால்தான் ஒரு பெண்ணால் கலை வாழ்க்கையைத் தொடரமுடியும். நான் இன்றைக்கு ஆறுமாத குழந்தையை விட்டுவிட்டு வந்து கச்சேரி வாசிக்கிறேன் என்றால் எனக்கு புகுந்த வீட்டின் ஆதரவு மனப்பூர்வமாக இருப்பதனால்தான்.
திருமண வீடுகளில் கோயில்களில் நான் வாசிக்கும் போது, ""எப்படி வாசிக்கிறீங்க?'' என்று ஆச்சரியத்துடன் பல பெண்கள் என்னிடம் கேட்பார்கள். முறையான சாதகம் இல்லாவிட்டால் இந்த வாத்தியத்தை யாராலும் வாசிக்கமுடியாது. சிலர் திரையிசைப் பாடல்களை வாசிக்கும்படி கேட்பார்கள். எனக்கு பெரும்பாலும் ராகங்களை ஆதாரமாகக் கொண்டு இசையமைக்கப்பட்ட பழைய திரைப்படப் பாடல்களை மட்டுமே வாசிக்கத் தெரியும். புதிய பாடல்களை என்னுடைய கணவரே பிரமாதமாக வாசிப்பார். அதற்கும் சேர்த்து என்னைப் பாராட்டிவிட்டுப் போவார்கள். மெüனமாக நாங்கள் புன்னகைத்துக் கொள்வோம்!''.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.