மகன் விஸ்வம் எழுதும் நாகிரெட்டி நினைவுகள்: எம்.ஜி.ஆரின் முதலாளி

எனக்கு இந்த வசதிகள் போதாது இன்னும் நவீன வசதிகள் வேண்டும்'' என்று சொல்லி பொறுப்பினை ஏற்காமல்
Updated on
5 min read

20. விஜயாவில் நடிகர் திலகம்

"நம்நாடு' படத்திற்குப் பிறகு என் தந்தையார் "கர் கர் கி கஹானி' (நம்ம குழந்தைகள்) இந்திப் படத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது, தமக்கு வாழ்வளித்த வடபழனிக்கு நன்றிக்கடனை எப்படிச் செலுத்துவது என்பதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருந்தார். அதற்காக வடபழனியில் ஒரு மருத்துவமனையை நிறுவ விரும்பினார். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு.

என் தாத்தா (தந்தையின் தகப்பனார்) 1944 -

இல் நோய்வாய்ப்பட்டு சென்னை புரசைவாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் சுமார் ஆறு மாதங்கள் அங்கேயே தங்க நேரிட்டது. தாத்தாவுக்கு உதவியாக என் தந்தையாரும் அங்கு இருந்தார். அப்போது அந்த மருத்துவமனையில் இருந்த சுற்றுச்சூழல் என் தந்தையாருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதைப்பற்றி அவர் அங்கே புகார் கூறியபோது, அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இது என் தந்தையாரை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. என் தாத்தாவை எந்தவித தொற்றுகளும் தாக்காமல் இருக்க, என் தந்தையாரே அன்றாடம் கழிவறையைச் சுத்தம் செய்யும் வேலையை மேற்கொண்டார்.

இந்தச் சம்பவமே பின்னாளில் என் தந்தையார் நல்லதொரு மருத்துவமனையைக் கட்டத் தூண்டியது. இந்த எண்ணத்தின் அடிப்படையில், தமக்கு வாய்ப்பு, வசதிகள் வந்த பிறகு, முன்னோட்டமாக மகளிர் மகப்பேறு மையம் ஒன்றினை ஏற்படுத்த திட்டமிட்டார் என் தந்தையார்.

அந்நாளில் வடபழனியில் பிரசவ ஆஸ்பத்திரி வசதி கிடையாது. வடபழனி மற்றும் சுற்றுப்புறங்களில் வசித்த கர்ப்பிணிகள் பிரசவம் பார்க்க பொது மருத்துவமனை, எழும்பூர் அல்லது திருவல்லிக்கேணி பிரசவ ஆஸ்பத்திரிக்குத்தான் போக வேண்டியிருந்தது. போக்குவரத்து வசதிகள் சரியாக இல்லாத நிலையில், கர்ப்பிணிகளின் நிலையைக் கண்ட என் தந்தையார் பிரசவத்திற்காக, அவசர உதவிக்காக ஒரு மருத்துவ மையத்தை ஏற்படுத்தினார். விஜயா கார்டனுக்கு இணைந்த பகுதியில், பிரதான சாலையை ஒட்டியிருந்த இடத்தில் அந்த மையம் நிறுவப்பட்டது.

ஆனால் அங்கு பணியாற்ற நியமிக்கப்பட்ட மருத்துவப் பெண், ""எனக்கு இந்த வசதிகள் போதாது இன்னும் நவீன வசதிகள் வேண்டும்'' என்று சொல்லி பொறுப்பினை ஏற்காமல் தட்டிக் கழித்துவிட்டார். இதனால் அங்கே வேறு யாரும் பணிபுரிய முன்வரவில்லை. எனவே அந்த மையத்தை தொடங்கி தொடர முடியவில்லை.

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வார்கள். ஆனால் என் தந்தையாரின் மனதில் இந்த நிகழ்ச்சி வடபழனியில் எப்பாடுபட்டாவது ஒரு நவீன மருத்துவமனையை நிறுவிவிட வேண்டும் என்கிற வைராக்கியத்தை ஏற்படுத்தியது.

காலம் அதற்கேற்ப கனிந்தது. தன்னலமற்ற தொண்டு மனப்பான்மையோடு, நோயாளிகளிடம் ஆறுதலாகப் பேசி, ஏழை, பணக்காரர் என்னும் பாகுபாடு இல்லாமல், சிறந்த மருத்துவ உதவியை விரைந்து தர விரும்பிய என் தந்தையார், 1972ல் வாகினி ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் விஜயா மருத்துவமனையை ஏற்படுத்தினார். சிறந்த மருத்துவ நிபுணர்களின் மருத்துவ உதவியைப் பெற 46 படுக்கைகளோடு தொடங்கப்பட்ட அந்த மருத்துவமனை இன்று 700 படுக்கை வசதிகளோடு, தென்னிந்தியாவில் முதல் தனியார் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பிடல் என்ற நற்பெயருடன் மருத்துவப்பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகிறது.

நோயாளிகளுடன் வருபவர்கள் தங்க தனியாக, வசதியான அறைகள் கட்டப்பட்டன. இதனால் மருத்துவர்கள் எந்தவித இடையூறுமின்றி நோயாளிகளைக் கவனிக்க முடிகிறது. "சின்ன விஷயமாக இருந்தாலும் அதில் தனி கவனம் செலுத்தினால் அது சிறப்பாக அமையும்' என்பார் என் தந்தையார்.

விஜயா மருத்துவமனையின் அமைப்புப் பணியில் என் தந்தையார் மும்முரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில், மீண்டும் திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டிய சூழல் உருவானது.

"ராம் அவுர் ஷ்யாம்' படம் இந்தியில் மாபெரும் வெற்றி பெற்று, சில ஆண்டுகள் கழித்து அதே கதையின் கதாநாயகனை, கதாநாயகியாக மாற்றி இரட்டை வேடத்தில் ஹேமமாலினி நடிக்க "சீதா அவுர் கீதா' என்ற இந்திப் படத்தை பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பி தயாரித்தார். இதையறிந்த என் தந்தையார் ஜி.பி.சிப்பியிடம் கேட்டபோது, அவரும் மனமுவந்து அதை ஒப்புக்கொண்டு, "சீதா அவுர் கீதா' படத்தை தென்னக மொழிகளில் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்) தயாரிக்கும் உரிமையை என் தந்தையாருக்கே தந்தார்.

அந்தப் படத்தை விஜயா பேனரில் தமிழ், தெலுங்கு மொழிகளில் (வாணி ராணி, கங்கா மங்கா) தயாரிக்க விரும்பிய என் தந்தையார், அதன் படத் தயாரிப்புப் பொறுப்பை என்னிடம் தந்தார்.

"சீதா அவுர் கீதா' படத்தில் தர்மேந்திரா நடித்த வேடத்தில் சிவாஜிகணேசன் நடித்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் படத்தில் இரு கதாநாயகர்களில் ஒருவராக நடிப்பதை அவர் ஒப்புக்கொள்வாரா? "எதற்கும் நீ சிவாஜி அவர்களை நேரில் சந்தித்து அவரிடம் நமது விருப்பத்தை தெரிவித்து, அவரிடம் சம்மதம் வாங்கு' என்றார் தந்தையார் என்னிடம்.

"பொம்மை' இதழ் துவக்கப்பட்ட நாளிலிருந்து நடிகர் திலகத்துடன் பழகிய எனக்கு விஜயா சுரேஷ் கம்பைன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட "வசந்த மாளிகை' படத் தயாரிப்பின்போது நடிகர் திலகம் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. எனவே அவரைச் சந்திக்க ஏவி.எம். ஸ்டூடியோவில் "பாரதவிலாஸ்' படப்பிடிப்பில் இருந்த அவரை அணுகினேன்.

""நான் இப்போது நேரடியாக, தனியாக படத்தயாரிப்பு பொறுப்பினை ஏற்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்தி "வாணி ராணி' படத்தில் நடித்து ஒத்துழைப்பு தரவேண்டும். இப்படத்தில் இந்தியில் இருப்பதைவிட உங்கள் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் அமைக்கப்படுகின்றன'' என்று சொன்னவுடன்,""நீங்கள் தயாரிப்பாளராக பொறுப்பேற்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்...'' என வாழ்த்தினார்.

தமிழில், அந்தப் படத்தில் சிவாஜி அவர்களின் கதாபாத்திர காட்சிகளை கூடுதல் ஆக்குவதை சக்கரபாணியார் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியில் எப்படி இருக்கிறதோ, அப்படியே இருக்கவேண்டும் என்றார்.

அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் தந்தையாரிடம் காரணங்களைச் சொல்லி, நான் "வாணி ராணி' தயாரிப்புப் பொறுப்பில் இருந்து விலகுவதாகச் சொன்னேன்.

நடிகர் திலகம் அவர்களைச் சந்தித்து விவரத்தைச் சொன்னபோது, ""நீங்கள் பொறுப்பில் இருந்து படத்தை எடுக்காவிட்டால் நான் நடிக்க மாட்டேன்'' என்றார்.

அப்போது நான் அவரிடம், ""எனக்கு திரைப்படத் தயாரிப்புப் பொறுப்பைவிட அம்புலிமாமா, பொம்மை உட்பட பத்திரிகை வெளியீட்டு பணிகள் அதிகமாக உள்ளன. அதன் பொறுப்புகளை ஏற்கிறேன். அதற்கும் நீங்கள் ஆசி வழங்க வேண்டும். "வாணி ராணி' படத்திலும் நீங்கள்தான் நடிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டேன்.

""இரண்டு நாள் டயம் கொடு... யோசித்துச் சொல்கிறேன்'' என்றார் நடிகர் திலகம்.

இரண்டு நாட்கள் கழித்து என்னை அழைத்து, ""அது சிறிய வேடமாக இருந்தாலும் உனக்காக "வாணி ராணி' படத்தில் நடிக்கிறேன்'' என்று சொல்லி என்னை ஆனந்தக் கடலில் ஆழ்த்தினார்.

"வாணி ராணி' படத்தில் நடித்ததைப் பற்றி பின்னாளில் நடிகர் திலகம் குறிப்பிடும்போது, ""நான் சுமார் முன்னூறு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் படத்தில் ஊதியமாக பேசிய தொகையைவிட கூடுதலாகத் தந்த ஒரே முதலாளி நாகிரெட்டியார்தான்'' எனக் கூறினார்.

அதன் பின் நடிகர் திலகத்தைப் பற்றி என் தந்தையார் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்போம்:

""இது பொன்னாள்... இதைப்போலே வருமா இனிமேலே... இப்படி ஒரு பாடல் வரி "பூம்புகார்' திரைப்படத்தில் வரும். இந்த வரியை நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. காரணம், நான் என் கூட்டாளி சக்கரபாணியும் இன்னும் சில நண்பர்களும் அடிக்கடி அந்த இல்லத்தில் ஒன்றாகக்கூடி மணிக்கணக்கில் மனம் விட்டுப் பேசுவோம். அரசியல் தொடங்கி சினிமா வரை அலசுவோம். இடையிடையே சிற்றுண்டிகளும் அங்கே பந்தி வைக்கப்படும். சுவைகளுக்குக் கேட்கவா வேண்டும்? அந்தச் சுவைகளை வழங்கிய அழகிய இல்லம், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் அன்னை இல்லம்... அது பொன்னாள்... அதைப் போலவே வருமா இனிமேலே.... நினைக்கும்போதே மனமெல்லாம் மகிழ்ச்சி மல்லிகைகள் மணக்கின்றன. அதே நேரத்தில் சில நினைவுத் தாமரைகளும் மொட்டு அவிழ்க்கின்றன.

சிறந்த நடிகரான சிவாஜியுடன் தொடர்ந்து பல ஆண்டுகள் பழகி வந்தபோதும் இன்னும் நமது படத்தில் அவர் நடிக்காமல் இருக்கிறாரே என்ற ஏக்கம் என் நெஞ்சத்தில் இருந்தது. அந்த உணர்வின் விளைவாக உருவான, என் பிள்ளைகள் டி.ராமா நாயுடுவுடன் இணைந்து தயாரித்த "வசந்த மாளிகை' சாதாரணப் படங்களுக்கு மத்தியில் சரித்திரப் படமாக அமைந்தது. அடுத்து சிவாஜியையும் முத்துராமனையும் நடிக்க வைத்து "வாணி ராணி' என்ற படத்தையும் எடுத்தோம். அதில் வாணிஸ்ரீக்கு இரட்டை வேடம். நடிகர் திலகத்திற்கோ ஹீரோ வேடம் அல்ல. அந்த வேடத்திற்கு அவரை நடிக்க வைக்கலாமா? என்று யோசித்தோம். ஆனால் நேரில், என் மகன் விஸ்வம் வாயிலாக அவரிடத்தில் விவரத்தைக் கூறியபோது சிறிய வேடம், பெரிய வேடம் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் ஒப்புக் கொண்டு தன் பெருந்தன்மையை வெளிப்படுத்தி எங்களை மகிழ்வித்தார்.

சிவாஜி நடித்த ஒவ்வொரு படமுமே ஒரு காவியம் என்று சொன்னால், அது மிகையில்லை. அவர் நடித்த படங்களில் சில, சில காரணங்களால் தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், அவர் நடிப்பில் தோற்ற படம் என்று நம்மால் ஒன்றையாவது சுட்டிக் காட்ட முடியுமா? முடியவே முடியாது. அதற்கெல்லாம் காரணம் அந்தக் காலகட்டம்.

மணிமணியான இயக்குநர்கள், அந்தத் தங்கத்தைப் புடம்போட்டுப் படம் எடுத்தனர். சாதனைத் தடம் பதித்தனர் உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், கிருஷ்ணன் பஞ்சு, பீம்சிங், ஏ.பி. நாகராஜன், ஸ்ரீதர், பி.ஆர். பந்துலு, ஏ.சி. திருலோகசந்தர், பி.மாதவன்... இப்படிப் பல பேரைப் பட்டியலிடலாம். அந்தச் சிறப்பு மட்டுமா? அன்று சிவாஜியுடன் நடித்த பலரும் மிகப் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக சுடர்விட்டுப் பிரகாசித்தார்கள். எஸ்.வி. சுப்பையா, எம்.ஆர். ராதா, எஸ்.வி. ரங்காராவ் போன்ற பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் ஒரு துருவ நட்சத்திரமாக மின்னினார் நடிகர் திலகம்.

உருக உருக நடித்த அந்தத் திறமை மட்டுமல்ல,  அவரிடத்தில் வேறு சில பண்புகளைப் பார்த்துகூட நான் சிலிர்த்திருக்கிறேன். ஷூட்டிங் எட்டு மணிக்குத் தொடங்குகிறது என்றால் 7.55 மணிக்கே அந்த இடத்தில் இருக்கும் நேரந்தவறாமை என்ற அந்தப் பண்பைக் கண்டு வியந்திருக்கிறேன். அதைப்போல படப்பிடிப்பு நடக்கின்ற நேரங்களில், அவர் செட்டைவிட்டு வெளியே வரமாட்டார். அந்த அளவுக்கு தொழில் பக்தி, ஈடுபாடு. இளைய தலைமுறை அவரிடத்தில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கின்றன.

கலை உலகிலும், இல்லற வாழ்விலும் சிறந்து விளங்கியவர்கள் ஒரு சிலரே. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சிவாஜி. "நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்' என்பதற்கேற்ப மனைவி, மக்கள், பேரக் குழந்தைகளுடன் ஆடம்பரமற்ற எளிமையான வாழ்வு. ஆம். இத்தனை புகழ், வசதி வந்த போதும் அவர் விரும்பி உடுத்தியது கதர் வேஷ்டி, கதர் சட்டைதான். அதற்குக் காரணம் அவரது உதிரத்தில் கலந்திருந்த தேசிய உணர்வுதான்.

சுதந்திரத் தியாகிகளைத் தம் படங்களின்மூலம் நினைவூட்டிய அந்த வித்தக நடிகருக்கு, அன்று அவர் ஆசியா ஆப்ரிக்க நாடுகளில் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கெüரவிக்கப்பட்டது நம் நாட்டிற்குப் பெருமை.

தேசிய உணர்வுள்ள அந்த நடிகரை தேசத்திற்காக உழைத்த கப்பலோட்டிய தமிழன், கட்டபொம்மன், பாரதியார், பகத்சிங் , திருப்பூர் குமரன் எனப் பல தலைவர்களின் தேசப்பற்றை தனது நடிப்பினால் நமக்கு எடுத்துரைத்த அந்த நடிகரை தேசிய அரசு உரிய முறையில் கெüரவிக்கவில்லையே என்று பலமுறை வருந்தியிருக்கிறேன்.

1981ஆம் ஆண்டு நான் பால்கே விருதை வாங்கினேன். அதற்கு பிறகு, இந்த விருதை யாருக்குக் கொடுக்கலாம் என்று என்னிடத்தில் மூன்று முறை கேட்டார்கள். இவரைவிடத் தகுதியானவர்கள் வேறு யாருமில்லை என்று சிவாஜி அவர்களைக் கூறினேன். ஆனால் டெல்லியிலிருந்து அடுத்து விருதுபெற்றோர் அறிவிப்பு வரும்போது வேறு யாருடைய பெயராவது அறிவிக்கப்படும். அப்பொழுது எனக்கு பெரிய ஏமாற்றமாக இருக்கும்.

எப்பொழுதோ அவருக்குக் கொடுத்திருக்க வேண்டிய, இந்திய அரசின் உயர்ந்த திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே விருது காலந்தாழ்ந்து வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது இந்திய திரைப்பட உலகுக்கு பெருமை''

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com