மயிலா

துயரம் பல வகைகளில் தாக்கும். சில ஊர்களில் உடை மாற்றிக் கொள்ள வசதி இருக்காது. மேடைக்குப் பின்னால் தடுப்பும்
மயிலா
Updated on
5 min read

இந்த ரிக்கார்டு டான்ஸ் ஆடும் பொழைப்புக்கு வந்து மாட்டியதற்காக மயிலா வருந்தாத நாளே இல்லை. திருவிழா, பண்டிகை என்றால் முன்பெல்லாம் பாட்டுக் கச்சேரி நடக்கும். இப்போதெல்லாம் நடன கச்சேரி.

ரஜினிகாந்த் வேஷம் போட்டு ஆடுவதற்கும், கமல்ஹாசன் வேஷம் போட்டு ஆடுவதற்கும் தனித்தனியாக பையன்கள் உண்டு. விஜய், அஜித், சூர்யா, தனுஷ், எம்.ஜி.ஆர்., சிவாஜி, பிரபுதேவா, விஜயகாந்த் என்று எல்லா வேஷத்திற்கும் ஒன்றிற்கு இரண்டாக பையன்கள் இருக்கிறார்கள். ஆனால் அனுஷ்கா, அமலாபால், த்ரிஷா, மாளவிகா, சரோஜாதேவி, சில்க்ஸிமிதா இவங்களுக்கு தனித்தனியா பெண்கள் இல்லை. மயிலாவும், அமுதாவும் மட்டும்தான் இருக்கிறார்கள்.

இன்று அமுதாவும் வரவில்லை. சித்தப்பா சாவு என்று நின்று விட்டாள். ஒண்டியாக மாட்டினதுக்கு மயிலா நடுங்கினாள்.

ஒவ்வொரு முறை டான்ஸ் புரோகிராமில் மாட்டும் போதும் உமாராணி டீச்சரின் மீதுதான் மயிலாவிற்கு கோபம் வரும். ஆறாவது படிக்கும்போது ஆண்டு விழாவில் ஆட வைத்த பாவம் உமாராணி டீச்சரைத்தான் சேரும். அது குத்தாட்டம்தான், பதினாறு வயசுல புரியலை. இப்பத்தான் கலக்கம் அடைகிறாள்.

ஒன்பதாவது படிக்கும்போதே, திருவிழாவில் ஆடுவதற்கு தொடங்கி விட்டாள். அப்போது நூறு ரூபாய் கொடுத்தார்கள். இப்போது ஆயிரம் ரூபாய்.

"ஏலமலை நாட்டியாலயா', "பொன்மேனி நடன குழு', "தங்கமகன் டான்ஸ் க்ரூப்' என்று பல கம்பெனிகள் உள்ளன. ஒவ்வொரு கம்பெனியிலும் நிறையப் பையன்கள் இருப்பார்கள். பெண் பிள்ளைகள் தான் இல்லை.

வாணியம்பாடி பக்கம் குரும்பட்டி கிராமத்து மாரியம்மன் திருவிழாவில் இன்று நடன கச்சேரி.

""வர முடியாது'' என்றுதான் மயிலா சொன்னாள். ""வேணாம் மாஸ்டர் எல்லாரும் என் உயிரை எடுப்பானுங்க. ஆடியன்சும் அதுக்கு மேல ஜோடிப்பாட்டும், குத்துப்பாட்டும் தான் கேட்பாங்க நான் வரலை'' என்றாள்.

""மயிலா நீ வரலைன்னா இங்கேயே தூக்கு மாட்டிக்குவேன். பையன்களை மட்டும் வைச்சி புரோக்ராம் பண்ணா செருப்பால அடிப்பாங்க'' பிச்சைக் கேட்கிற மாதிரி கெஞ்சினான்.

இது அவன் வழக்கமாக சொல்லும் வசனம்தான், இருந்தாலும் "சாவுடா' என்று சொல்ல முடியவில்லை, சம்மதித்தாள்.

ஆனால்,  மனம் கலங்கிற்று எல்லோருக்கும் ஜோடியா ஒருத்தியே ஆடணும் ஒரு பாட்டுக்கு ரெஸ்ட் எடுக்கலாம்னு பையன்களை மட்டும் ஆட விட்டா கத்துவாங்க, விசில் அடிப்பாங்க, அடுத்து கெட்ட வார்த்தையால அடிப்பாங்க. அடுத்து கல்லால அடிப்பாங்க போலீஸ்காரர்கள் கூட அமைதி படுத்த மாட்டார்கள், அவர்களுக்கும் கூட பெண்ணின் ஆட்டம் வேண்டும். அதுவும் ஆபாசமான அசைவுகள் காட்டி ஆட வேண்டும் தன் துயரத்தை யாரிடமோ சொல்கிற மாதிரி அவளிடமே அவள் சொல்லிக் கொண்டாள்.

துயரம் பல வகைகளில் தாக்கும். சில ஊர்களில் உடை மாற்றிக் கொள்ள வசதி இருக்காது. மேடைக்குப் பின்னால் தடுப்பும் கட்டி இருக்க மாட்டார்கள். ஒரு பாட்டிற்கு அணிந்த உடைக்கு மேலேயே இன்னொரு உடை அணிந்துக் கொண்டு ஆட ஓடுவாள்.

தடுப்புத் திரை கட்டி வைத்திருந்தாலும், சும்மா விட மாட்டார்கள். எட்டிப் பார்ப்பார்கள், பிளேடால் ஓட்டைப்போட்டு அதில் பார்ப்பார்கள். அவங்களோட ஊரில் வந்து அவங்களோடவே சண்டைப் பிடிக்க முடியுமா?

நடனமாட வந்த பையன்கள் அதற்கும் மேலே உடை மாற்றுகிற மாதிரி கூடவே வருவார்கள்.

அவனோடு சண்டைப் போட முடியாது. அடுத்து பாட்டிற்கு ஜோடி சேரும்போது வேண்டுமேன்றே பூட்ஸ் காலால் மிதிப்பான். மிதிப்பட்டு வலியால் துடித்த அனுபவம் உள்ளது.

மாஸ்டர்கள் கூட கேவலமான வகைதான். ""மயிலா ஒரு பாட்டுக்கு ரெண்டு தடவையாவது ஆடியன்சுக்கு எதிர்ல குனிஞ்சி ஆடு''  என்பார்கள்.

நெஞ்சம் எரியும் இப்படியொரு ஈன பொழப்பு வேணுமா?

அமுதா இல்லாமல் ஆட வந்தது தப்புதான். தொடர்ந்து பதினேழு பாட்டிற்கு ஆடி இருக்கிறாள். மற்ற பையன்கள் ஒரு பாட்டிற்கோ, இரண்டு பாட்டிற்கோ ஆடி விட்டு முடித்து விடுகிறார்கள். மயிலாவிற்கு மட்டும் ஓய்வே இல்லை, தன் உடம்பிற்குள் இருப்பது எலும்பா, இடுப்பா நரம்பா, இரப்பரா என்று கேள்வி வந்தது.

மேடைக்குப் பின்னால் மாஸ்டரிடம் கெஞ்சினாள். ""என்னால முடியலை மாஸ்டர், பதினேழு பாட்டுக்கு ஆடி இருக்கேன். எல்லாமே குத்து, பத்து நிமிஷமாவது ரெஸ்ட் குடுங்க'' கண் கலங்கி விட்டது.

மாஸ்டருக்கு இரக்கமே இல்லை யோசித்தான்.

""ஆடியன்ஸ் ரகளை பண்ணுவாங்க மயிலா. பாதி பேர் தண்ணில நீந்திட்டு இருக்கான். ஆடியன்ஸ் பரிதாபப்பட மாட்டாங்க. தொடர்ச்சியா நூறு பாட்டுக்கு ஆடினாலும் பரிதாபம் காட்ட மாட்டாங்க''

"" நீங்க மட்டுமாவது என் மேல பரிதாபப்படுங்க பத்து நிமிஷம் என் கால்களுக்கு ரெஸ்ட் கொடுங்க''

அவ்வளவு கெஞ்சியும் பரிதாபம் காட்டவில்லை என்றால் அவன் மனுஷனாக இருக்க முடியுமா? அவர் எம்.ஜி.ஆர் வேஷம் கட்டும் தன்ராஜைப் போக சொன்னார். பெண் இல்லாமல் ஆண் மட்டும் ஆடுவதாக இருந்தால் எம்.ஜி.ஆர் பாட்டுக்கு மட்டும்தான் ரசிகர்கள் அமைதி காப்பார்கள்.

இப்போது தன்ராஜியும் முரண்டுப் பிடித்தான்.

""என்னால தனிப் பாட்டுக்கு போக முடியாது மாஸ்டர், அப்புறம் ஜோடிப் பாட்டை கொடுக்கிறதே இல்லை. மயிலா என்னோட ஆடறது உங்களுக்கு பிடிக்கலை'' என்று சண்டைப் பிடித்தான்.

மாஸ்டரும், மயிலாவும் என்ன விளக்கம் கொடுத்தாலும் அவன் ஏற்கவில்லை. அடுத்த ஆட்டத்திற்கு சிறிது தாமதம் ஏற்பட்டதற்கே ஜனங்கள் கூச்சலிட்டார்கள். சொத்து களவு போன மாதிரி. மாஸ்டர் மயிலாவிடம் கெஞ்சினான். வேறு வழியின்றி அடுத்த பாட்டிற்கும் எம்.ஜி.ஆர் வேஷக்காரனோடு ஓடினாள். அதுவும் குத்துப் பாட்டு. "துள்ளுவதோ இளமை'.

மயிலாவினால் குதித்து குதித்து ஆட முடியவில்லை. உடம்பில் வலிக்காத இடமென்று ஒரு இடத்தை சொல்ல முடியாது. அப்பேற்பட்ட வலி. செத்தாலும் இனிமே ஆட வர கூடாது என்று அப்போது நினைத்தாள்.

தன்ராஜ் மயிலாவைக் கட்டிப் பிடித்து கசக்கிப் பிழிவது என்று வேறு கெட்ட எண்ணம் வைத்திருந்தான். தாங்க முடியவில்லை. உடம்புதான் ரணமாகி விட்டது என்றால், அந்த உடம்பைத் தொட்டு மனதையும் ரணமாக்கினான்.

தன்ராஜி என்றில்லை. எல்லாப் பையன்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். தொடும்போது தள்ளிப் போக முடியாத அளவிற்கு மேடை சிறியதாக இருந்தது.

ஜோலார்பேட்டைத் திருவிழாவில் ஆடும்போது சுரேஷிடம் கேட்டாள். ""சுரேஷ் நான் ஆட வந்ததே தலைவிதி. இதுல தொடறதும், தடவுறதும் தாங்கலை'' என்று.

மயிலாவின் குமுறலை புரிந்துக் கொள்ளும் மனவளர்ச்சியில் சுரேஷ் இல்லை.

""ரொம்ப அலட்டிக்காதே மயிலா, கமலஹாசன் வேஷத்துக்கு ஆள் இல்லைன்னு சேலத்துக்கு கூப்பிட்டு இருந்தாங்க "நிலா காயுது நேரம் நல்ல நேரம்' பாட்டுக்கு ஆடின பொண்ணு என்னம்மா கோவாப்ரேட் பண்ணா தெரியுமா? இது தியாகராஜ பாகவதர் காலம் இல்லை. "கொலைவெறி கொலைவெறிடி' காலம். ஸ்டேஜ்ல ஆட வந்துட்டா எல்லாத்துக்கும் ரெடியா இருக்கணும்'' என்றான்.

தாங்க முடியாத துக்கம் வந்தது. பெரிதாக அழுதாள்.

சக நடனக்காரர்கள், பொது மக்கள் சேர்ந்து கொண்டார்கள்.

""நான் என்ன ரேப்பா பண்ணிட்டேன்? தொடாம எப்படி ஆடறது? அப்படி ஆடணும்னா தில்லானா மோகனாம்பாள் படத்து பாட்டுக்குதான் ஆடணும். நான் வேணும்னா பீப்பி ஊதினு உட்கார்ந்துர்றேன்'' என்று விதண்டா வாதம் பேசினான்.

அமுதா சமாதானம் செய்தாள். அன்றும் கூட இனிமேல் ஆட வர கூடாது என்று தான் முடிவு செய்தாள். ஆனால் முடியவில்லை.

அதன் பிறகு பல மேடைகள். சில மேடைகள்  மாதவிலக்கின் போதே அமைந்து விடும். அப்போது ஆடுவதைப் போன்ற கொடுமை, முள்ளின் மீது ஆடுவதைப் போன்ற துன்பம்.

ஒவ்வொரு வருசமும் ஒரு குத்துப்பாட்டு சூப்பர் ஹிட்டாகி விடும். எல்லா ஹிட்டான பாட்டிற்கும் ஆட வேண்டும். லேட்டஸ்ட் ஹிட்டை திரும்ப திரும்பக் கேட்பார்கள். மயிலா ஆட வந்த புதிதில் "மன்மதராசா.. மன்மதராசா..' ரொம்ப பிரபலம். ஒரே மேடையில் ஆறுமுறை ஆடி இருக்கிறாள். "வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாட்டும் அப்படித்தான், "ஜில்லா விட்டு ஜில்லா வந்து' பாட்டையும் எல்லா மேடையிலும் கேட்பார்கள். அந்தப் பாட்டிற்கு ஆடுகிற பொண்ணையும் விலை மாதுவைப் போன்றேப் பார்ப்பார்கள். அதனால் உடம்பும், மனசும் சுடும். குத்துப் பாடல்களில் கைகளையும், கால்களையும் ஆட்டுவதை விட அதிகமாக வயிற்றை ஆட்ட வேண்டும். திரைப்படத்தைக் காட்டிலும் மேடையில் கூடுதலான அதிர்வுகளைக் காட்ட வேண்டும். ட்ரம்ஸின் அதிர்வுகளுக்கு நிகரான அதிர்வுகளை உடலில் கொண்டு வர வேண்டும்.

அசிங்கம்தான். ஆனால் இப்படி ஆடுவதற்குத்தான் வரவேற்பு அதிகம். விசில் பறக்கும். கரவொலிகள் முட்டும். பத்து ரூபாய்கள் அம்புகளாகப் பாயும். சிலர் போதை ஏறி ஐம்பது, நூறு கூட அம்பெய்துவார்கள். அங்கங்களைக் குறி பார்த்து.

பார்சம்பேட்டையில் "கத்தாழ கண்ணால குத்தாதே' பாட்டிற்கு ஆடும்போது அப்படித்தான் அம்புகள் பறந்து வந்து விழுந்தன, பண அம்புகள், காகித அம்புகள் மட்டுமில்லை, நாணயங்களும் வீசினார்கள். எவனோ ஓர் ஒலிம்பிக் வீரன் ஐந்து ரூபாய் நாணயத்தை மார்பைக் குறிப்பார்த்து வீசினான். வலிக்கு துடியாய் துடித்தாள். உயிர் போகிற வலி. துடிப்போடு ஆடியவள், துடிதுடித்து ஆடினாள். முன்பக்கம்தான் காசு விழுகிறதே என்று பின் பக்கம்காட்டி ஆடினாள். படத்தில் அப்படித்தான் பின்பக்கம் காட்டி நடிகை ஆடுவாள். பின்புறமும் வந்து விழுந்தது. காசு இல்லை கல். அதன் பிறகும் தொழில் தர்மத்தையோ, கலைத் தர்மத்தையோ எண்ணிக் கொண்டிருக்கும் அளவிற்கு அவதாரம் எடுத்தவள் இல்லை. தாங்க முடியாத வலியோடு மேடையிலிருந்து இறங்கி பின்பக்கம் ஓடினாள். அது குப்பையான இடம், கிராமத்து மக்கள் மலம் கழித்த இடமாகக் கூட இருக்கலாம். இடம் மறந்து சரிந்துக் கொண்டு அழுதாள்.

ஊர் பெரியவர் மேடையேறி மைக்கை எடுத்து, கல் எறிந்தவனை திட்டுவது போல் பாசாங்குக் காட்டினார். அத்தோடு சரி. கல்லெறிந்தவனை அவருக்குத் தெரியும். ஊர் மக்களுக்குத் தெரியும், காவலுக்கு நின்ற போலீஸ்காரர்களுக்கும் தெரியும். யாருமே அவனைக் கண்டிக்கவில்லை. யாரென்றே தெரியாத மாதிரி நடந்துக் கொண்டார்கள்.

ஊரின் முக்கியமான புள்ளிகள் ஐந்து பேர் மயிலாவைச் சுற்றிக் கொண்டார்கள். ""அவன் மட்டும் என் கிட்ட மாட்டட்டும், கையை உடைச்சிடறேன், கிழிச்சிடறேன், மிதிச்சுடறேன், வகுந்திடறேன், பிய்ச்சுடறேன்'' என்று ஆறுதல் கூறும் நாடகங்களை நடத்தினார்கள். ஆயிரம் பேர் முன்பு ஆட்டம் போடும் ஆட்டக்காரிதான் மயிலா. ஆனாலும் சுற்றி நின்ற அந்த ஐந்து பேருக்கு முன்னால் உடம்பு கூசிற்று. ""ரொம்ப பலமா பட்டிருச்சா? ரத்தம் கட்டிருச்சா? என்கிட்ட  மருந்து இருக்கு. பூசிக்கிறியா?'' என்று தொந்தரவு கொடுத்தார்கள்.

அப்போதே கூட்டத்திலிருந்து சலசலப்பு கேட்டது. யாரையோ பிடித்து சரமாரியாக தர்ம அடி அடித்துக் கொண்டிருந்தார்கள். மயிலா சந்தோசமடைந்தாள். அவள் மீது கல்லெறிந்தவனுக்கு தான் இந்த அடி என்று. அவளுக்கே அவன் மீது பரிதாபம் ஏற்பட்டது. என்னவோ தெரியாமல் செய்து விட்டான், அதற்கு இத்தனை பேர் சூழ்ந்து இப்படியா அடிப்பது என்று வருத்தமடைந்தாள்.

ஆனால் அவர்கள் கல் எறிந்தவனை அடிக்கவில்லை என்று தெரிந்ததும் மனம் உடைந்து நொறுங்கினாள். கவுன்சிலரின் மகள் மீது காகித அம்பு விட்ட பையனைத்தான் பிடித்து அந்த அடி அடித்தார்கள்.

ஒவ்வொரு முறையும் நடன கச்சேரி முடிந்து மினி லாரியில் திரும்பும்போது ஒரு சோகக் கச்சேரியும் உண்டு. பையன்கள் உடல்வலி போவதற்கு குடித்துக் கொண்டிருந்தார்கள்.

மாஸ்டர் சொன்னான்: ""மயிலா உங்கப்பா கிட்ட நேத்தே பணத்தை கொடுத்துட்டேன். அடுத்து ப்ரோக்ராம்ல கழிச்சுக்கலாம்னு ஐநூறு சேர்த்தே வாங்கிட்டாரு. உன்கிட்ட சொல்லலையா? புள்ள காசை பேங்க்ல போடுய்யான்னா கேட்டாதானே? வீட்டுக்கு செலவு பண்றது ஒத்த ரூபான்னா குடிக்கிறது ஒன்பது ரூபா. உன் அண்ணன் கூட சரியில்லை மயிலா, உன் பேரைச் சொல்லி நூறு ரூபா வாங்கினான். மயிலா, நிதானமா கழிச்சுக்கலாம்'' என்றான்.

மினி லாரி தடதடவென்று ஆடிக் கொண்டு ஓடிற்று. பையன்களுக்கு போதை ஏறிவிட்டது சாவு ஆட்டம் போட்டார்கள். மயிலாவிற்கு நெஞ்சம் வெடிக்கும் போல் இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com