"அங்கிள் காந்தி!'
1931-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்க காந்திஜி லண்டன் சென்றிருந்தபோது, அவரது நண்பர்கள் அவர் தங்குவதற்காக


1931-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்க காந்திஜி லண்டன் சென்றிருந்தபோது, அவரது நண்பர்கள் அவர் தங்குவதற்காக ஆடம்பர பங்களாக்களை ஏற்பாடு செய்தனர். ஆனால் அவர் லண்டனில் ஏழைகள் அதிகமாக வசிக்கும் கிங்ஸ்லி ஹாலில் தங்குவதையே விரும்பினார்.
இந்தியாவிலிருந்து வந்தவர் என்பதால் சுற்றுப்புறத்தில் உள்ள குழந்தைகள் தங்கள் அன்னையாரிடம் அவரைப்பற்றி கேட்பதுண்டு. நாள்தோறும் அவரைப் பார்க்க ஏராளமானவர்கள் வந்து செல்கிறார்களே, யார் அவர்? அவர் என்ன சாப்பிடுவார்? அவர் ஏன் சட்டை அணிவதில்லை? என்றெல்லாம் கேட்டனர். அவர் இந்தியாவில் தேசிய இயக்கத் தலைவர், பெயர் மகாத்மா காந்தி என்று கூறியதோடு அவரை "காந்தி' என்று அழைக்காமல் "மிஸ்டர் காந்தி, என்று குறிப்பிட வேண்டுமென்றும் அறிவுறுத்தினார். ஆனால் அந்தக் குழந்தைகள் அவரை "மிஸ்டர் காந்தி' என்றழைப்பதை விட "அங்கிள் காந்தி' என்றழைக்கவே விரும்பினர். காலையில் காந்திஜி வாக்கிங் செல்லும்போது அவருடன் பழகிய குழந்தைகள், அவரது பிறந்தநாளின்போது இரண்டு உல்லன் பொம்மை நாய்கள், இனிப்பு, மெழுகுவர்த்தி ஆகியவற்றைப் பெட்டியில் அடைத்து "டியர் அங்கிள் காந்தி' என்று எழுதிக் கொடுத்தனர்.
டிசம்பர் 5-ம் தேதி காந்திஜி லண்டனிலிருந்து இந்தியாவுக்கு திரும்பியபோது அந்த குழந்தைகள் கொடுத்த பரிசுப் பொருள்களை மட்டும் உடன் எடுத்து வந்தார். "நான் இங்கு வந்தபோது எதையும் கொண்டு வரவில்லை. இவைகளை மட்டும் கொண்டு செல்ல அனுமதியுங்கள்' என்று கூறி மற்றவர்கள் அவருக்கு அளித்த பரிசுகளையெல்லாம் அங்கேயே விட்டுவிட்டு வந்தார்.
இந்தியா திரும்பியவுடன் காந்திஜி கைது செய்யப்பட்டு எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
1932-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி சிறைக்குள்ளிருந்து அவர் லண்டனில் தன்னை சந்தித்து பரிசுகளைக் கொடுத்த குழந்தைகளுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியபோது, "உங்களால் "அங்கிள் காந்தி' என்றழைக்கப்பட்டவரிடமிருந்து இந்தக் கடிதம் வருகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.
காந்திஜிக்கு பரம்பரை பழக்கவழக்கங்களில் நம்பிக்கை கிடையாது. அவற்றை ஆதரிப்பதும் இல்லை. பீகாரில் மதக்கலவரம் வெடித்தபோது அங்கு ஒவ்வொரு கிராமமாகச் சென்று மக்களை சந்தித்துப் பிரச்னைகளைக் கேட்டறிந்தார். அப்போது அவருடன் மதுபென்னும் சென்றிருந்தார்.
ஒருநாள் பகல் பொழுதில் டாக்டர் சையத் முகமதுவின் மகன் முகமது, புதிதாகத் திருமணம் செய்துகொண்ட தன் மனைவியுடன் காந்திஜியிடம் வந்த அவர், நூறு ரூபாய் நோட்டொன்றை கொடுத்தார். அவர்களிருவரும் சென்றவுடன் மதுபென்னும் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் காந்திஜியிடம் கேட்டார்,""பாபுஜி, இதென்ன புது வழக்கமாக இருக்கிறது? பொதுவாக ஆசிபெறும் மணமக்களுக்கு பெரியவர்கள்தானே பரிசு வழங்குவார்கள். நீங்கள் அபூர்வமாக அவர்களிடமிருந்து பணம் வாங்குகிறீர்களே?''
""நம்முடைய பழக்கவழக்கங்கள் சம்பிரதாயங்கள் எல்லாம் மூடத்தனமானவை. பெற்றோர்கள் எப்போது தங்கள் பிள்ளைகளை வளர்த்து கல்வியறிவு கொடுத்து திருமணம் செய்து வைக்கிறார்களோ அத்துடன் அவர்களது கடமை முடிந்தது. அதன் பின்னர் பிள்ளைகள்தான் பெற்றோர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்'' என்று காந்திஜி கூறினார்.
காந்திஜிக்கு எதுவாக இருந்தாலும் நேரம் தவறாமல் செய்ய வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார். எந்த நிகழ்ச்சியானாலும் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு இருந்தாக வேண்டும். அதே நேரத்தில் தாமதமாக வருபவர்களைக் கண்டிப்பதும் உண்டு. ஒருமுறை அரசியல் கூட்டமொன்றுக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்த லோக்மான்ய திலகரிடம் சொன்னாராம்,""நமக்கு கிடைக்கப்போகும் சுதந்திரம் அரைமணி நேரம் தாமதமானாலும் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்''
ஒரே ஒருமுறைதான் சில நிமிடங்கள் தாமதமாக பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியதாயிற்று. ஆம்! 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் தேதி மாலை பிர்லா மாளிகையில் சரியாக 5 மணிக்கு பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியவர் 4.55 மணியாகியும் கிளம்பவில்லை. முக்கியமான விவாதமொன்றில் சர்தார் பட்டேலுடன் பேசிக்கொண்டிருந்தார். எதையுமே நேரம் தவறாமல் செய்யும் பழக்கமுள்ள காந்திஜியின் பேச்சுக்கு இடையே குறுக்கிட விரும்பாத அவரது செயலாளர் அபா, காந்திஜியின் கடிகாரத்தை எடுத்து அவரது பார்வையில்படும்படி நேரமாவதை சுட்டிக்காட்டினார். பிரார்த்தனைக்கு செல்லும் வழியில் அபா சொன்னாராம்: ""பாபுஜி, இன்று உங்கள் கடிகாரத்தை நீங்கள் பார்க்காதது குறித்து கடிகாரம் வருத்தப்படப் போகிறது''.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...