சவால்களில் ஜெயிக்க வைக்கிறோம்!

ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயது நிலைகளில் இருக்கும் குழந்தைகள் அங்கே குழுமி இருந்தனர். முதல் பார்வையில் அவர்களிடையே

ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயது நிலைகளில் இருக்கும் குழந்தைகள் அங்கே குழுமி இருந்தனர். முதல் பார்வையில் அவர்களிடையே நமக்கு எந்தவிதமான வித்தியாசமும் தெரியவில்லை. சிறிது நேரம் ஊன்றி அவர்களை கவனிக்கும் போதுதான், அவர்களுக்கு இடையே சின்ன சின்ன வித்தியாசங்களை நம்மால் உணரமுடிகின்றது.

ஒருசில குழந்தைகள் எங்கோ பார்த்தபடி வெறித்தபடி இருக்கின்றனர். ஒருசில குழந்தைகள் இயல்புக்கு மீறிய உற்சாகத்துடன் பரபரப்போடு அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருக்கின்றனர். ஒருசில குழந்தைகள் நடப்பதற்கும் குதிப்பதற்கும் கூட யோசித்துக் கொண்டிருந்தனர். இந்தக் காட்சிகளை எல்லாம் நாம் பார்த்த இடம் சென்னை, நந்தனத்திலிருக்கும் ஒய்.எம்.சி.ஏ. கல்லூரி வளாகத்திற்குள் செயல்படும் ஒய்.எம்.சி.ஏ. சிறப்புப் பள்ளி. இவர்கள் அனைவருமே சிறப்புக் குழந்தைகள்.

இவர்கள் அனைவருக்கும் ஒரேயொரு பிரச்னை அல்ல; விதவிதமான பிரச்னைகள். மூளைத் திறன் பாதிப்பு, ஆடிஸம், மூளைத் திறன் குறைவு, கற்றலில் குறைபாடு, மல்டிபல் டிஸ்ஸôர்டர் என பல பிரச்னைகள் இந்தக் குழந்தைகளுக்கு இருக்கின்றன.

இயல்பான குழந்தைகளைப் போன்று விளையாடுவதற்கோ பசி எடுக்கிறது என்று சொல்வதற்கோ, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்வதற்கோ கூட இவர்களுக்குத் தெரியாது. இப்படி அன்றாட வேலைகளைச் செய்வதற்கு அவர்களுக்கு பயிற்சியளிக்கும் பணியை குறைந்த கட்டணத்தில் கடந்த எட்டு ஆண்டுகளாக செய்துவருகின்றது ஒய்.எம்.சி.ஏ. சிறப்புப் பள்ளி.

பள்ளியின் செயல்பாடுகள் முழுவதையும் நமக்குக் காண்பித்தார் பள்ளியின் முதல்வர் என். ரவி:

""இங்கு அழைத்து வரும் குழந்தைகளை எங்களின் மருத்துவக் குழு பரிசோதிக்கும். அவர்களுக்கு எத்தகைய பிரச்னைகள் இருக்கின்றது. எந்தமாதிரியான பயிற்சிகளை அவர்களுக்கு அளிக்கவேண்டும் என்பதை ஆலோசித்து முடிவெடுப்போம். யோகா, ஜிம்னாஸ்டிக், கயிறு ஏணியில் ஏறுவது, ரப்பரில் ஆன பந்துகளைச் சரியாக கூடையில் எறிவது, சின்ன சின்ன பிளாஸ்டிக் பிளாக்குகளை அதற்குரிய சட்டங்களில் சரியாகப் பொருத்துவது இப்படி பலதரப்பட்ட பயிற்சிகளை கொடுப்போம். இது ஒரு குழந்தையின் மூளைத் திறன், மோட்டார் ஆக்டிவிடி போன்றவற்றை ஊக்குவிக்கும் பயிற்சிகளாகும்'' என்றார் ரவி.

மரநிழலில் தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் வரிசையாக மாணவர்கள் பல்டி அடித்தனர். எளிய யோகாசனங்களைச் செய்துகாட்டினர். அவர்களில் சிலர் பச்சிளம் பாலகர்களாக இருந்தனர். சில பையன்களுக்கு அரும்பு மீசை எட்டிப்பார்த்தது.

""இந்தக் குழந்தைகளோடு பெரியவர்களும் இருக்கிறார்களே...'' நாம் சந்தேகத்தோடு கேட்பது புரிந்து, நமக்கு விளக்கம் அளித்தனர் ஜிம்னாஸ்டிக் பயிற்சியை அளிக்கும் கண்ணனும் ஆக்குபேஷனல் தெரபியை அளிக்கும் கனியனும். அவர்கள் கூறிய விளக்கம் இதுதான்:

""இவர்களில் சில குழந்தைகளுக்கு வயது அதிகம் இருப்பது போல் தோன்றினாலும் இவர்களுக்கும் மூளை வளர்ச்சி ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளின் அளவுக்குத்தான் இருக்கும்!'' என்றனர்.

""ஒவ்வொரு குழந்தைக்கும் அவர்களின் நுண்ணறிவுத் திறன் வேறுபடும். அதிலும் சிறப்புக் குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனை மிகவும் நுட்பமாக கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கேற்ப பயிற்சிகளை நாங்கள் அளிக்கிறோம். உதாரணமாக படங்களைப் பார்த்து அதன் பெயர்களைச் சொல்லும் பயிற்சி, சாப்பிடு, உட்கார், எழுந்திரு, படுத்துக் கொள், தூங்கு, சிறுநீர் கழித்துவிட்டு வா... போன்ற வார்த்தைகளின் அர்த்தத்தை அவர்களுக்குப் புரியவைத்து, நம்முடைய பேச்சுக்கு சரியானபடி எதிர்வினையை அவர்கள் அளிக்கும் பயிற்சியை அளிக்கிறோம். இந்தக் குழந்தைகளுக்கு அன்றாட அலுவல்களே மிகப் பெரிய சவால்! அந்த சவால்களைப் புரிந்துகொண்டு அவர்களை ஜெயிக்கவைக்கிறோம்!

இந்தப் பயிற்சிக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பவர், உளவியல் நிபுணர்களின் அறிவுறுத்தலின்படி பயிற்சிகளை திட்டமிட்டுள்ளோம். குழந்தைகளின் நுண்ணறிவுத் திறனுக்கேற்ப பிரி-பிரைமரி, பிரைமரி, செகன்டரி என்னும் நிலைகளில் பயிற்சி அளிக்கிறோம். நாம் சொல்வதைப் புரிந்துகொண்டு செயல்படும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மெழுகுவர்த்தி செய்தல், சோப் ஆயில் தயாரித்தல் போன்ற பயிற்சிகளை அளிக்கிறோம்.

சிறப்புக் குழந்தைகளுக்கு அவர்களின் அன்றாட காரியங்களை அவர்களே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு "ஆக்டிவிடி டெய்லி லேர்னிங் ஸ்கில்ஸ்'களை வளர்ப்பதில் மிகவும் கவனமாக இருக்கிறோம். இந்தப் பயிற்சிகளில் எல்லாம் கவனம் ஈர்க்கும் குழந்தைகளை இந்த வளாகத்திலேயே செயல்படும் நடுநிலைப்பள்ளியில் சராசரி மாணவர்களுடன் சேர்ந்து படிக்கும் அளவுக்கு முன்னேற்றுகிறோம்.

இது தெய்வீகமான பணி. இதைச் செய்வதற்கு முதலில் சொல்லிக் கொடுப்பவர்களுக்கு நம்பிக்கையும் பொறுமையும் தேவை. அவை எங்களுக்கு தேவைக்கு அதிகமாகவே இருக்கின்றது!'' என்றார் கனிவோடு ரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com