நடனம், நடனமாக மட்டும்..!
மும்பையில் டான்ஸ் பார்கள் நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.


மும்பையில் டான்ஸ் பார்கள் நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வழக்கின் பின்னணி என்ன?
எண்பதுகளின் ஆரம்பம்.
மும்பையிலிருந்து தாணே செல்லும் பாதையில் 75 கி.மீ. தொலைவில் உள்ளது, காலாப்பூர். மதியத்தைத் தாண்டி மாலை நெருங்கும் நேரத்தில் இந்தச் சாலையில் ஏஸி பஸ்கள் காலாப்பூரை நோக்கி விரைந்து செல்லும். மாலையின் இருளில் அவை டக்கென்று மறைந்துவிடும். பஸ்ஸýக்குள் இளம் நடனப் பெண்கள்.
காலாப்பூரில் உள்ள டான்ஸ் பார்களில் இரவு நேரங்களில் இந்தப் பெண்கள் ஆடுவார்கள். பக்கத்திலேயே "கண்டு, களிக்க' வந்திருக்கும் இளைஞர்கள். பணக்காரத் தொழில் அதிபர்கள். உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.
ஒரு கையில் மதுவும், இன்னொரு கையில் புகையும் சிகரெட்டுகளுமாக இருக்கும் அவர்கள், பத்து ரூபாய், இருபது ரூபாய் நோட்டுகளை நடனமாடும் பெண்களின் மீது வீசியெறிவார்கள். சிலர் ரூபாய் நோட்டுகளினால் ஆன மாலைகளை அவர்களுக்குச் சூட்டுகிறார்கள். போதை தலைக்கேறுகிறது. நடப்பது என்ன என்று தெரிந்து கொள்ள இயலாதநிலை.
அதிகாலை நடனப் பெண்கள் மீண்டும் ஏஸி பஸ்களில் ஏறி வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். சிலர் டான்ஸ் பாருக்கு வந்தவர்களின் கார்களில் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.
1985-86 இல் வெறும் 24 டான்ஸ் பார்கள் மட்டுமே இருந்தன மகாராஷ்டிராவில். பத்தாண்டுகளில் 10 மடங்குக்கும் மேல் பெருகி 210. அடுத்த பத்தாண்டுகளில் 2005 இல் 2500 டான்ஸ் பார்கள். பல குடும்ப ரெஸ்டாரண்டுகள் டான்ஸ் பார்களாக உருமாறின.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஹோட்டல்களில் மதுவும், நடனமும், களிப்பும், ஒழுங்கீனமும் வழிந்தோட, விழித்துக் கொண்டது அரசு.
அப்போதைய துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல், ""பெரும்பான்மையான நடன அரங்குகள் முறையான அனுமதி பெறாமல் நடத்தப்படுகின்றன. வெறும் உணவு உண்ணும் ஓட்டல்களுக்கு அனுமதி வாங்கிவிட்டு டான்ஸ் பார் நடத்துகிறார்கள். இப்படிச் சட்டவிரோதமாக டான்ஸ் பார் நடத்தினால் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை உறுதி. மேலும் அவர்கள் உணவகம் நடத்துவதற்கு வாங்கிய லைசென்ஸýம் ரத்துச் செய்யப்படும்'' என்று எச்சரித்தார்.
மகாராஷ்டிராவின் பல அமைப்புகள் டான்ஸ் பார்களினால் இளைஞர்கள் கெட்டுப் போவதாகவும், விபச்சாரம் பெருகி சமூகம் சீரழிந்து வருவதாகவும் போராடின. ஆண்கள் டான்ஸ் பார்களில் காசை இழந்து ஓட்டாண்டிகளாகிவிடுகின்றனர். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், கடத்தல்காரர்கள் டான்ஸ் பார்களை நடத்துகிறார்கள்; எனவே அவற்றைத் தடைசெய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். டான்ஸ் பார்களினால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது என்று அரசும் கூறியது.
இவற்றைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 2005 மார்ச் மாத இறுதியில் டான்ஸ் பார்கள் தடை செய்யப்பட்டன. மும்பையில் 2005 ஆகஸ்டில் தடை செய்யப்பட்டது.
சுமார் ஒன்றரை லட்சம் பேர் வேலையிழந்தார்கள். 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நடனப் பெண்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்கள்.
நடனமாடி அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றியவர்கள் வாழ வழியின்றி திகைத்து நின்றார்கள். அவர்களுக்கு வேறு தொழில்கள் தெரியாது. வேறு வேலை வாய்ப்புகளும் இல்லை. சிறு வேலைகள் செய்து பிழைத்தார்கள். பலர் துபாய், அபுதாபி, மஸ்கட், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்குப் பிழைக்கச் சென்றார்கள். பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்குப் பிழைப்புத் தேடிச் சென்றார்கள். சிலர் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குள் தஞ்சம் புகுந்தார்கள்.
டான்ஸ் பார்களுக்கு ஆதரவானவர்கள், அதை நடத்தியவர்கள் தடையை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். 2006 ஏப்ரலில் அவர்களுக்கு ஆதரவாக, தடையை நீக்கி உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் மகாராஷ்டிர அரசு சும்மா இருக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டி மேல் முறையீடு செய்தார்கள். ஏழாண்டுகளுக்குப் பிறகு இப்போது தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதி மன்றம் தடையை நீக்குவதாக.
""2005 இல் டான்ஸ் பார்களைத் தடை செய்த அரசு, அதே நடனங்களை மூன்று நட்சத்திர, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அனுமதித்தது. இது அரசியல்அமைப்புச் சட்டத்தின் 14}ஆவது பிரிவின்படி தவறாகும். குடிமக்களின் சமத்துவத்துவத்தை அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவு பாதுகாக்கிறது. பணம் இருப்பவர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் ஒரு நடனத்தைக் கண்டு களிக்க அனுமதி அளித்த அரசு, மக்களின் இன்னொரு பிரிவினருக்கு அதை மறுத்தது ஏன்?'' என்று கேள்வி எழுப்பியது.
""அடுத்து, இந்நாட்டின் மக்கள், தாங்கள் விரும்பிய எந்தச் சட்டபூர்வமான தொழில்களையும் அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, நடத்த உரிமை பெற்றவர்கள். டான்ஸ் பார்களை தடைசெய்தது இந்த உரிமையைத் தரவில்லை'' என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொன்னது.
""டான்ஸ் பாரில் நடனமாடும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றால் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதை விட்டு விட்டு டான்ஸ் பார்களையே தடை செய்வது சரியல்ல. அதுபோன்று, நடனமாடும் பெண்கள் உடலை அதிக அளவு வெளிக்காட்டுகிறார்கள்; அல்லது மிக இறுக்கமான உடைகளை அணிந்து கவர்ச்சியாகக் காட்சியளிக்கிறார்கள் என்றால், அதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பார்வையாளர்கள் நடனப் பெண்களின் மீது அத்துமீறுகிறார்கள் என்றால், 10க்கு 12 அடி அறையில் 8 நடனப் பெண்கள் நடனமாடினால், அத்து மீறாமல் என்ன செய்வார்கள்? எனவே அரசு நடனமாடும் கூடங்களின் அளவை ஒழுங்குபடுத்த வேண்டும். பார்வையாளர்களும் நடனப் பெண்களுக்கும் குறிப்பிட்ட தூர இடைவெளி இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒன்றைத் தடை செய்யும் போது அதனால் வேலையிழப்பவர்களுக்கு - பாதிக்கப்படுபவர்களுக்கு- மாற்று வேலை வாய்ப்பு, மாற்று ஏற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டும். நோயைச் சரி செய்ய அரசு செய்த மருத்துவம் நோயை விட மோசமாக இருப்பதுதான் கொடுமை'' என்று நிறையக் கண்டனக் கணைகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
எது எப்படியோ, அரசும், பல அமைப்பினரும் சொன்ன கலாசார சீரழிவுகள் இல்லாமலும், நீதிமன்றத் தீர்ப்பு சொன்ன மாற்று ஏற்பாடுகளுடனும், மகாராஷ்டிரத்தில் நடனம், நடனமாக மட்டும் நடந்தால் சரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...