

""சார் என்னைத் தெரியுதா?'' என்று கேட்டுக் கொண்டே தயக்கத்துடன் வாசற்படியில் நின்றார் அவர்.
நான் ஹாலிலே ஈஸிச் சேரில் சாய்ந்தவாறு உட்கார்ந்திருந்தேன். சிறிது உள்ளே, தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் நாற்காலியில் அமர்ந்தபடி செய்தித் தாளில் மூழ்கியிருந்த என் மகன் சுப்பிரமணியன் சட்டென்று திரும்பி, வாசலில் நின்றவரைப் பார்த்துவிட்டு, ""இது பெரியவர்கள் சமாச்சாரம்'' என்பதுபோல், மீண்டும் முகத்தைப் பத்திரிகைக்குள் புதைத்துக் கொண்டான்.
சில நொடிகளுக்குள் அவரை நான் அடையாளம் கண்டு கொண்டுவிட்டேன். தினசரி மாலை நேரங்களில் தெருக்கோடியில் இருக்கின்ற நகர் மன்றப் பூங்காவில் சந்தித்து உட்கார்ந்து பேசிக் கொள்ளும் ஐந்தாறு பேரில் அவரும் ஒருவர். என்ன... அவர் ஒருவர்தான் வயதில் இளையவர்.
பூங்கா என்றவுடனேயே, வண்ணமயமான கற்பனையில் இறங்கிவிடாதீர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த (இப்போது மறைந்துவிட்ட) ஒரு தேசியத் தலைவர் பெயரில் அமைக்கப்பட்ட பூங்கா அது. இப்போது பழைய இரண்டு மூன்று வேப்பமரங்கள் மூலைக்கு ஒன்றாக நின்று கொண்டிருந்தன. அவற்றைத் தவிர ஒண்டுவதற்கு வேறு நிழல் இல்லை. புல் வெளி இருக்க வேண்டிய இடத்தில் காய்ந்த சருகளும், இலை, பூ எதுவும் இல்லாமல், குச்சிகளை நீட்டியபடி மரணத்தை எதிர் நோக்கியிருக்கும் நாலைந்து பூச்செடிகள்... அழுக்கடைந்து ஓரங்களில் சிதைந்து போன மூன்று நான்கு சிமெண்ட் பெஞ்சுகள், இதுதான் அந்தப் பூங்கா.
சென்ற மாதம், கல்லூரி ஆசிரியரான என் மகன், மாறுதலாகி இந்த ஊருக்கு வந்ததும், நான் மாலை நேரங்களில் தினசரி இந்தப் பூங்காவுக்கு வந்து உட்கார்ந்திருப்பது வழக்கம்.
என்னைப் போலவே, தாசில்தார் அலுவலகம், தொடக்கப்பள்ளி, போலீஸ் முதலிய துறைகளிலிருந்து ஓய்வு பெற்று, பிள்ளைகளின் தயவில் இருக்கும் ஐந்தாறு பேர், அங்கே வந்து அரட்டையடித்துக் கொண்டிருப்போம். இந்திய நாட்டின் அரசியல், பொருளாதாரம், தொழில், கலாச்சாரம், இலக்கியம் என்று எல்லா விஷயங்களையும் அங்கே தீவிரமாக விவாதிப்போம். இதையெல்லாம்தான் இப்போது நாட்டின் பாராளுமன்றத்திலோ, சட்ட சபைகளிலோ விவாதிப்பதில்லையே?
அந்த மாலைச் சங்கமத்திலே இந்தச் சுந்தரமும் ஒருவர் என்று அடையாளம் கண்டு கொண்டுவிட்டேன்.
""வாங்க சார்... வாங்க உக்காருங்க'' என்று அவரை வரவேற்று, எதிரே கிடந்த நாற்காலியைக் காட்டினேன்.
தினசரி கூடி உலக விஷயங்களைப் பேசுகின்ற நாங்கள் ஐந்தாறு பேருமே, தங்களைப் பற்றி, தங்கள் குடும்பங்களைப் பற்றி அதிகம் பேசுவதில்லை. யார், யார் எந்தெந்த வேலை பார்த்தவர்கள் என்பது மட்டும் தெரியும். அதற்குமேல், அவர்களது குடும்ப நிலையைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனாலும் அவர்களிலே நான் மட்டும் ஓட்டை வாய். லொடலொட வென்று அதிகமாகப் பேசிக் கொண்டேயிருப்பேன். ஒருவேளை கல்லூரிப் பேராசிரியராயிருந்த அனுபவமோ, என்னவோ?
இப்போது என் வீட்டுக்கு வந்திருக்கும் சுந்தரம், ஊரிலே நான்கு ஐந்து வியாபாரக் கடைகளுக்கு "இன்கம்டாக்ஸ்' அக்கவுண்ட்ஸ் எழுதிக் கொடுக்கின்ற கணக்காளர் என்று தெரியும். கடைகளிலிருந்து கணக்குகளை வாங்கி வந்து வீட்டிலேயே உட்கார்ந்து எழுதிக் கொடுப்பாராம். பகல் எல்லாம் கணக்குகளைப் பார்த்து எழுதிய அலுப்பு தீர, மாலை நேரங்களில் பூங்காவுக்கு வந்து ஓய்வாக பெரிசுகளான எங்களோடு பேசிக் கொண்டிருப்பார்.
நாற்காலியில் பாதி உட்கார்ந்தும் உட்காராததுமாய் ""சார் மன்னிக்கணும்...ஒரு உதவி கேட்கத்தான் உங்க கிட்டே வந்திருக்கேன். அவசரமாய், ஒரு பத்தாயிரம் ரூபாய் வேணும். கடன்தான். சீக்கிரமே திருப்பிக் கொடுத்திடறேன். வர்ற மார்ச் மாதம் "இன்கம்டாக்ஸ் ரிட்டர்ன்ஸ்' முடிச்சு ஸப்மிட் பண்ணினதுமே கடைக்காரங்க பணம் கொடுத்திருவாங்க '' என்றுஅவர் மெலிந்த குரலில் தொடங்கியதும் நான் திடுக்கிட்டுப் போய்விட்டேன்.
இத்தனை பேரிலே என்னிடம் வந்து திடீரென்று பத்தாயிரம் ரூபாய் கடன் கேட்கிற நினைப்பு, அவருக்கு எப்படி ஏற்பட்டது?
என் ஓட்டை வாய்தான் காரணமாயிருக்கும். பேச்சு வாக்கில் நான் அந்தக் காலத்தில் கல்லூரியில் வேலை பார்த்ததற்கும், இப்போது என் மகன் வேலை பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லியிருப்பேன்.
அந்தக் காலத்தில் நான் பேராசிரியர் வேலையில் சேர்ந்த போது சுமார் ஐந்நூறு ரூபாய் அடிப்படைச் சம்பளம். பஞ்சப்படி என்று கொஞ்சம் பணம். நான்கு இலக்கச் சம்பளத் தொகையை எட்டிப் பிடிக்க , இருபது ஆண்டு சர்வீஸ் ஓடிவிட்டது. ஓய்வுக் காலத்தில் கிடைத்த கிராஜுவிடி பணத்தில்தான் ஒரு ஸ்கூட்டர் வாங்க முடிந்தது. அது வரைக்கும் இரு சக்கர சைக்கிள்தான்.
இப்போது,கல்லூரிக்குள் நுழைகிற போது, ஆசிரியர்களுக்குச் சம்பளம் பதினைந்தாயிரத்துக்கு மேலே. முதல் தேதி டாண் என்று கையில் கிடைக்கின்ற பணத்தை எப்படிச் செலவழிப்பது என்று தெரியாமல் இளைய பேராசிரியர்கள் விழிக்கிறார்கள். வேலையில் சேர்ந்த முதல் ஆண்டே டூ வீலர் சவாரி. மறு ஆண்டே கார் வாங்க லோன் அப்ளிகேஷன் போட்டு விடுகிறார்கள்.
-இப்படி நான் பினாத்தியதையெல்லாம் நினைத்துக் கொண்டு இந்த சுந்தரம் என் வீடு தேடி வந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.
""சார் எனக்குத் தெரிஞ்சவங்ககிட்டயெல்லாம் கேட்டுப் பார்த்திட்டேன். எல்லாரும் கையை விரிச்சிட்டாங்க. நீங்கதான் தயவு செஞ்சு உதவணும்'' என்று அவர் கெஞ்சிய முகத்தில் விரிந்திருந்த சோகம் என் நெஞ்சில் ஊடுருவியது.
""சார் கிராமத்திலே அம்மா வீட்டுக்குப் போயிருக்கிற என் வொய்ஃப் இப்போ நிறை மாதக் கர்ப்பிணி. பிரசவத்துக்குத்தான் அங்க போயிருக்கிறா. அவளுக்கு எப்போதும் நார்மல் டெவிவரியாகத்தான் இருக்கும். ஆனால் இப்போ ஏதோ ப்ராப்ளம் ஏற்பட்டு, பக்கத்து டவுன் ஹாஸ்பிடலுக்குக் கூட்டிக் கிட்டுப் போயிருக்காங்களாம். உடனே பணத்தோட வரச் சொல்லி, எனக்குப் போன் வந்திருக்கு சார்.... நான் உடனே கிராமத்துக்குப் புறப்படணும் சார். அங்கே வொய்ஃப் நிலை மோசமாகிக்கிட்டிருக்கு போலிருக்கு'' என்று கண்களில் நீர் கசிய அவர் மேலும் பேசிய போது நான் திடுக்கிட்டுப் போய்விட்டேன்.
திடும் என்று பத்தாயிரம் ரூபாய்க்கு நான் எங்க போவேன்? திகைப்போடு என் மகன் பக்கம் திரும்பினேன். அவன் சுவாரஸ்யமாகச் செய்தித்தாளுக்குள் அமிழ்ந்திருந்தான்.
""இப்படி ஏதாவது எமர்ஜென்ஸி வந்திரும்னுதான் நான் முன் ஜாக்கிரதையாகப் பணம் சேர்த்து வைத்திருந்தேன் சார். ஆனால் போன வாரம் என் மூத்த பையனுக்குச் சாதாரணக் காய்ச்சல்னு ஹாஸ்பிடலுக்குக் கூட்டிக்கிட்டுப் போனா, அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் அந்த ஸ்கேன் இந்த ஸ்கேன்னு, பையனை பெட்டிலே சேர்த்து எட்டாயிரம் ரூபாய்க்கு மேலே பில் வசூலிச்சிட்டாங்க சார்'' என்று மெல்ல விசும்பியழுதார் சுந்தரம்.
அதிக பரிச்சயமில்லாத என் முன்னால் அந்த மனிதர் அழுது கண்ணீர் வடிக்கும் அவலம் என் உள்ளத்தை அறுத்தது. மகன் பக்கம் திரும்பி, ""சுப்பு... சாரோட வொய்ஃப்புக்குப் பிரசவ வலியாம். ஹாஸ்பிட்டலிலே அட்மிட் பண்ணியிருக்காம். கடனாய்ப் பத்தாயிரம் ரூபாய் கேக்கிறார். கொடுக்கிறியா?'' என்று கேட்டதும், அவன் மெல்ல எழுந்து எங்களிருவரையும் பார்த்துவிட்டு உள்ளே போய் பணத்துடன் வந்தான்.
அதை வாங்கி, சுந்தரத்திடம் கொடுத்தேன், காலில் விழாத குறையாய், குனிந்து பணத்தை வாங்கிக் கொண்டு கும்பிட்டார் அவர்.
""சார் நீங்க நல்லாயிருக்கணும், சீக்கிரமே திருப்பிக் கொடுத்திடறேன் சார்'' என்று தழுதழுத்த குரலில் சொல்லிவிட்டுச் சென்றார் அவர்.
நான் மனம் நிறைந்த மகிழ்ச்சியில் மகனைப் பார்த்தேன். அவன் என்னைப் பார்த்த பார்வையிலேயே, அவன் என்ன கேட்கப் போகிறான் என்பதை யூகித்தேன்.
""ஏம்ப்பா, அந்த ஆளை உங்களுக்கு நல்லாத் தெரியுமா?'' என்று அழுத்தமான குரலில் கேள்வியைத் தொடங்கினான் சுப்பு.
""தெரியும்... கொஞ்சம் தெரியும்... ஒரு மாசமாய் தினசரி பார்க்கிலே சந்திச்சுப் பேசிக்கிட்டிருப்போம்''
""அவ்வளவுதான் தெரியும் .. அவர் வீடு குடும்பம் எதுவும் தெரியாது? '
நான் மெüனமாக அவன் முகத்தைப் பார்த்தபடி இருந்தேன்.
""முன்னே பின்னே தெரியாத, யாரோ ஒரு மூணாம் மனுஷருக்கு எப்படிப்பா, பத்தாயிரம் ரூபாயைக் கொடுக்க நினைப்பு வந்தது உங்களுக்கு?'' துருப்புச் சீட்டாக அந்தக் கேள்வியைத் தூக்கி என் முன்னால் போட்டான் அவன்.
""எப்படியப்பா இந்தப் புத்தி வந்தது?'' என்று கேட்டிருப்பான். ஆனால் மரியாதை கருதி இந்த வார்த்தையை மாற்றிக் கொண்டான் என் மகன்.
""சுப்பு, பத்தாயிரம் ரூபாய் செலவுக்கு, அவர் சொன்ன காரணம்தான்... அதுதான் பணத்தைக் கொடுக்க வச்சது...'' என்று நிச்சலனமான குரலில் தெரிவித்தேன் நான்.
""அதுதான் மனிதரோட வீக்னெஸ்... ஏமாளித்தனம்'' என்று படபடத்த சுப்பு, பக்கத்திலிருந்த செய்தித் தாளைப் பிரித்து என்முன் நீட்டினான்.
""பாருங்கப்பா... இப்போதான் இந்த மாதிரி நியூûஸ படிச்சேன். மதுரையிலே ஒரு பொம்பிûளை வயித்திலே துணிமூட்டையைக் கட்டிக்கிட்டு, ""நிறை மாச கர்ப்பம். ஆஸ்பத்திரிக்குப் போகணும். உதவி செய்யுங்க''னு, ஒரு தெரு பூராவும் வீடு வீடாய்ப் போய் பணம் வசூலிச்சிட்டு ஓடிட்டாளாம். கர்ப்பம், பிரசவம்னா மனுஷங்க மனசு இரங்கி உதவுவாங்க என்கிற சைக்காலஜி, அவுங்களுக்குத் தெரிஞ்சிருக்கு... அதை வச்சு ஏமாத்துறவங்களை நான் குற்றம் சொல்ல மாட்டேன்.... அப்படி ஏமாறுருவங்களைத்தான்''என்று நிறுத்திக் கொண்ட சுப்பு, என் முகத்தைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்:
""இந்த ஆள், பணம் வாங்கிறதுக்காகப் பொய் சொல்றார்னு ஏன் உங்களுக்குச் சந்தேகமே வரலே? ஊரிலேயிருந்து பிரசவ வலின்னு அவருக்கு அவசர போன் கால் வந்திச்சுனு சொன்னார் இல்லியா? அது நிஜம்தானானு போனிலேயே நீங்க கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டிருக்கலாம், இல்லியா? ஏன் அவர் மேல உங்களுக்குச் சந்தேகம் வரலே?'' என்று அழுத்தமாகக் கேட்ட மகனைச் சில நொடிகள் பார்த்துவிட்டு சற்றே தலை குனிந்து கொண்டேன் நான்.
இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு இருக்கும் தெளிவு நமக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது? ஒருவேளை இந்தச் சுந்தரம் என்னை ஏமாற்றிவிட்டாரோ? நானும் அவசரப்பட்டுப் பணத்தைக் கொடுத்துவிட்டேனோ? மகன் சொன்ன மாதிரி போனில் பேசி செக் பண்ணியிருக்கலாம். எனக்கு ஏன் புத்தி இப்படிப் போனது? ஒரு மாதப் பழக்கத்தில் அவர் வீடு எங்கேன்னு கூட எனக்குத் தெரியாது. அவர் பெயர் சுந்தரம்தானாங்கிறதும் கூடத் தெரியாது. எந்த நம்பிக்கையில் பணம் கொடுக்கச் சொன்னேன்?
இருக்காது. அந்த ஆளின் பேச்சு, அழுகை எல்லாம் பொய்யாக இருக்காது. உண்மையிலேயே அவசரத்துக்குப் பண உதவி கேட்பவரின் நிலையில் முகம் எப்படியிருக்குமோ, அப்படித்தான் அவருடைய முகமும் இருந்தது. குரலில் உருக்கம் இருந்தது. அவருடைய அழுகை பொய்யாக இருக்காது.
எனக்குள் முரண்பட்டு, எனக்குள் பேசி, ஏமாந்துவிட்டோமோ என்று ஒரு நிமிடம் குறுகி, இல்லையில்லை... அவர் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்... என்று என்னை நானே தேற்றிக் கொண்டு... அப்படியிப்படி ஒரு மாதம் ஓடிவிட்டது.
சுந்தரத்தை அதற்குப் பின்பு பூங்கா பக்கம் பார்க்க முடியவில்லை. திகீரென்றது. சுந்தரத்தைப் பற்றி யாரிடம் விசாரிப்பது என்று தெரியவில்லை.
இடையில் மகன் சுப்பிரமணியன், ""அந்த ஆள் பணத்தைக் கொண்டு வந்தாரா?'' ஏளனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான்.
வயதான காலத்தில் முட்டாள்தனம் பண்ணிவிட்டேனே என்று என்னை நொந்து கொண்டு... எனக்குள் நானே புலம்பிக் கொண்டு...
அன்று மாலை. பூங்காவுக்குக் கிளம்பலாம் என்று முகம் அலம்பி, ஒரு வாய் காபி குடித்துக் கொண்டிருக்கும்போது, வாசலில் ""சார்'' என்ற குரல். மகன் சுப்பிரமணியன் அப்போதுதான் கல்லூரியில் இருந்து வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தான்.
வாசலில் சுந்தரமும், அவருடைய மனைவியும், கையில் பூ மாதிரி ஒரு குழந்தையும் வாயில் சிரிப்பும்.
சுந்தரத்தைப் பார்த்த அதிர்ச்சியில் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. உள்ளே வரச் சொன்னேன்.
வந்து உட்கார்ந்தார்கள்.
சுந்தரம் தன் கையிலிருந்த கைப் பையிலிருந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார். கூடவே ஸ்வீட் பாக்ஸýம்.
""சார்... பையன் பிறந்துருக்கான். உங்க பேர்தான்தான் வச்சிருக்கேன்'' என்றார்.
எனக்குள் ஒரு நொடி ஆடி அடங்கியது. திரும்பிப் பார்த்தேன்.
மகன் சுப்பிரமணியனுக்கும் அப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை அவன் முகம் காட்டியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.