இறுதி வரை ஒவியம்
தன்னுடைய நண்பர்கள், காதலிகள், மனைவிகள், குழந்தைகளை மீண்டும் மீண்டும் ஓவியமாக வரைவதில்


தன்னுடைய நண்பர்கள், காதலிகள், மனைவிகள், குழந்தைகளை மீண்டும் மீண்டும் ஓவியமாக வரைவதில் பிகாசோ சலிப்படைந்ததில்லை. அவரைப் பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைச் சொல்வதுண்டு. 91-வது வயதில் அவர் இறந்த பின்னரும் அவரைப் பற்றி வந்த வதந்திகள் குறையவே இல்லை. ஆனால் இந்த வதந்திகள் அனைத்தும் அவர் மீதுள்ள பாசத்தின் காரணமாக எழுந்தவையாகவே கருதுகிறார்கள்.
பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் அருகில் 35 அறைகள் கொண்ட மாளிகையில் 1973-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பிகாசோ இறந்தபோது 47 வயதான அவரது இரண்டாவது மனைவி ஜாக்குலின் ரேக், அவரது முதல் மனைவியும் ரஷ்யாவை சேர்ந்தவருமான ஓல்கா கொக்லோவாவின் மகன் பாவ்லாவும் உடனிருந்தனர். நுரையீரலில் நீர் சேர்ந்ததில் ஏற்பட்ட மாரடைப்பால் பிகாசோ இறந்து போனார். மரணம் என்பது அழகானது என்று கருதிய பிகாசோ மரணத்தைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. உடல் நலம் குன்றும்போதெல்லாம் ஓவியங்கள் வரைய முடியவில்லையே என்று கவலைப்பட்டாரே தவிர, இறப்பைப் பற்றி வருத்தப்பட்டதே இல்லை. அவரது வாழ்நாள் முழுவதும் ஆயிரக்கணக்கில் ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்த அவர், இறப்பதற்கு முன்பு வரை ஓவியம் வரைந்து கொண்டிருந்தார் என்பது ஆச்சரியமான தகவலாகும்.
மரணமடைவதற்கு முன் ஏப்ரல் மாதத்தில் 91 வயதிலும், மே மாதம் 23-ம் தேதி ஆலிக்னான் ஆர்ட்ஸ் விழாவுக்காக ஓவியங்களை வரைவதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். உயிருடன் இருக்கும் ஓவியர்களின் ஓவியங்களை கண்காட்சியாக வைக்க அனுமதிப்பதில்லை என்பதில் உறுதியாக இருந்த லூர் மியூசியம் 90-வது வயதில் அவரை கெüரவிக்க வேண்டுமென்பதற்காக முதன்முறையாக விதிகளை தளர்த்தி கண்காட்சி நடத்த அனுமதியளித்தது. அதற்கு முன் உலகில் மிகப் பெரிய அளவில் சேகரிக்கப்பட்ட பிகாசோவின் ஓவியங்கள் அனைத்தையும் நியூயார்க் மாடர்ன் ஆர்ட் மியூசியத்தில் சிறப்பு கண்காட்சியாக வைத்து கெüரவித்தனர்.
அவரது வாழ்நாளின் கடைசி பத்தாண்டுகளில் அவர் எதிலும் பிடிப்பின்றி தனிமையில் ஓவியங்களை வரைந்து வந்தார். அருகில் மனைவி ஜாக்குலினை மட்டும் நிற்க அனுமதித்தாரே தவிர, வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. ஜாக்குலினை திருமணம் செய்துகொண்ட பின்னர் அவரது குழந்தைகள் உள்பட அனைவரிடமிருந்தும் விலகியிருந்தார். அவரது முதல் மனைவி மூலமாக பிறந்த உண்மையான வாரிசு மகனான பாவ்லாவை மட்டுமே உடனிருக்க அனுமதிப்பார். அவருடன், அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
பிகாசோ இறப்பதற்கு முன்தினம் வரை எல்லாமே வழக்கம்போல்தான் இருந்தன. பகல் நேரத்தில் தன்னுடைய மாளிகையைச் சுற்றியிருந்த சிறிய பூங்காவில் சிறிது நேரம் உலாவிய பின்னர் அன்று மாலை மிகவும் நெருங்கிய நண்பர்கள் சிலரை அழைத்து விருந்து வைத்தார். அப்போது தன் நண்பர்களை பார்த்து ""எனக்காக குடியுங்கள், என் உடல் ஆரோக்கியத்திற்காக குடியுங்கள்'' என்று கூறியவர், தன்னுடைய வக்கீல் நண்பர் ஆர்மண்ட் அண்டோபிலை பார்த்து ""உனக்குத் தெரியுமல்லவா? இனி என்னால் குடிக்க முடியாது'' என்றாராம். அன்றிரவு அனைவரிடமிருந்தும் விடைபெற்றுக் கொண்டவர், ""ஓவியம் வரைய வேண்டும். தயது செய்து மன்னியுங்கள்'' என்று கூறி அறைக்குள் சென்றவர் படுக்கச் செல்வதற்கு முன் விடியற்காலை 3 மணி வரை ஓவியம் வரைந்து கொண்டிருந்தாராம். மறுநாள் காலை அவர் இறந்து போனார்.
அவரது மரணச் செய்தி காட்டுத் தீயைப் போல் பரவியது. பிகாசோ மரணம் குறித்து நூற்றுக்கணக்கான தந்திகள் பறந்தன. அவற்றில் ஒன்று ஸ்பெயின் அரசாங்கத்திற்கும் அனுப்பப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் வசிக்க பிடிக்காமல்தான் அவர் 30 ஆண்டுகளுக்கு முன் நாட்டைவிட்டு வெளியேறி பிரான்ஸ் நாட்டில் குடியேறினார்.
அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நூற்றுக்கணக்கானவர்கள் மாளிகைக்கு வெளியே வந்து குவிந்தனர். ஆனால் ஜாக்குலின் உத்தரவுப்படி பாவ்லாவின் மகன் பப்லிடோ உள்பட யாருமே அனுமதிக்கப்படவில்லை. உள்ளூர் நிர்வாகம் அவரை மாளிகைக்குள்ளேயே அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை. அடக்கம் செய்ய அவரது மனைவி வாவெனார்க்யூ என்ற இடத்தில் ஏற்பாடுகள் செய்தார்.
முறைப்படி ஏற்பாடுகள் அனைத்தும் செய்துமுடித்த பின்னர் பிகாசோவின் உடல் ஏப்ரல் 16-ம் தேதியன்று தான் புதைக்கப்பட்டது. அவரது மனைவி ஜாக்குலின் வெள்ளை நிற ஆடை அணிந்து அன்றிரவு முழுவதும் கல்லறைப் பகுதியிலேயே படுத்துறங்கினார். பிகாசோவுக்கும் அவருக்கும் 45 ஆண்டு வயது வித்தியாசம் இருந்தாலும் பிகாசோவை அவர் கடவுளாகவே கருதினார்.
ஜாக்குலின் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர். ஆனால் பிகாசோவுடன் அவரது கெமிஸ்ட்ரி நன்கு இணைந்துவிட்டது என்று "தி ட்ருத் அபெüட் ஜாக்குலின் அன்ட் பாப்லோ பிகாசோ' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் பெப்பிடா டூபாண்ட் குறிப்பிட்டிருந்தார்.
""ஓர் ஆண், ஒரு பெண்ணிடம் எத்தகைய குணாதிசயங்களை எதிர்பார்க்கிறானோ அத்தனையும் அவரிடத்தில் இருந்தது. மனைவியாக மட்டுமன்றி தாயாகவும் சகோதரியாகவும் அவரது விருப்பங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் வாழ்ந்தார்''
பிகாசோவின் மரணம் வேறொரு வகையில் அவரது குடும்பத்தில் மேலும் ஓர் இழப்பை ஏற்படுத்தியது. பாவ்லாவின் மகன் பப்லிட்டோவை பிகாசோ உடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்ததால் மனமுடைந்த பப்லிட்டோ விஷம் அருந்தியதால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து இறந்து போனான். அவனது உடல் கேன்ஸில் அவனது பாட்டி ஓல்காவை புதைத்த இடத்தின் பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. பாவ்லாவும் நீண்ட நாள் வாழமுடியவில்லை. 1975-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி நுரையீரல் பாதிப்பில் அவர் இறந்து போனார்.
பிகாசோ இறந்த பின் அவரது பல ஓவியங்களுக்கு மாடலாக இருந்த மனைவி ஜாக்குலின் தனிமையில் இருட்டு அறைக்குள் அமர்ந்து நாள்தோறும் அழுதபடி குடிக்கத் தொடங்கினார். பத்தாண்டுகள் கழித்து துப்பாக்கியால் நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொண்டு அவர் இறந்து போனார். 1986-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி இறந்த அவரின் உடல் அவரது விருப்பப்படியே பிகாசோவை புதைத்த இடத்திற்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.
பிகாசோ அடக்கம் செய்யப்பட்ட இடத்தைப் பார்க்கவும் அஞ்சலி செலுத்தவும் பார்வையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
2009-ஆம் ஆண்டு ஒருசிலர் மட்டுமே அங்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவரது வளர்ப்பு மகள் கேத்தரின் ஆறுமாத காலத்திற்கு மட்டும் பிகாசோவின் ரசிகர்களை அஞ்சலி செலுத்த 2010-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரை கல்லறைப் பகுதியை திறந்து வைக்க அனுமதித்தார். பின்னர் நவீன ஓவியத்தின் கலைஞராக கருதப்பட்ட பிகாசோவின் கல்லறை மீண்டும் மூடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...