

என் மகளுக்கு 14 வயது. பிறந்தது முதலே உடம்பு நல்ல சூடாக இருக்கிறது. கண் இமை, நெற்றி, மூக்கு, கன்னம் பகுதியில் அடிக்கடி சூட்டுக் கொப்பளம் வருகிறது. இந்த உபாதை மாற வழி இருக்கிறதா?
ஒரு வாசகி, சத்தியமங்கலம்.
கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொதுவாகவே உடற்சூடு அதிகமாக இருக்கும் என்று ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. அதற்குக் காரணம் குழந்தையை ஈன்றெடுக்கும் தாயாருக்கு உடலில் பித்தம் எனும் தோஷம் இயற்கையாகவே குவிகிறது. இதற்குக் "காலஸ்வபாவம்' என்று பெயர். அதுபோலவே தாயும் தந்தையும் உடலில் சூடு அதிகம் உள்ளவர்களாக இருந்தாலும் அது குழந்தைக்கும் ஏற்படக் கூடும். இதற்கு "பீஜ தோஷம்' என்று பெயராகும்.
பித்த தோஷம் இயற்கையாகவே நமக்குப் பல நன்மைகளைச் செய்கிறது. உண்ட உணவை செரிக்கச் செய்தல், உடலுக்குத் தேவையான வெப்பம், உணவில் விருப்பம், பசி, தாகம், ஒளி, தெளிவு, பார்வை, நினைவாற்றல், திறமை, மென்மை போன்ற நல்ல செயல்களைச் செய்து உடலைப் பாதுகாக்கிறது. ஆனால் இந்த பித்தமானது தன் இயற்கைக்கு மேல் வளர்ந்துவிட்டால், தன் சீற்றத்தை குணத்தின் வாயிலாகவும், செயல்களின் வாயிலாகவும் வெளிப்படுத்தும். தோலில் மஞ்சள் நிறம் உண்டாதல், சோர்வு, புலன்களுக்கு வலிவின்மை, ஓஜஸ் எனும் உடல் சக்தியின் சிதைவால் சக்திக் குறைவு, குளிர்ச்சியில் விருப்பம், எரிச்சல், வாயில் கசப்புச் சுவையை ஏற்படுத்துதல், நாவறட்சி, மூர்ச்சை, தூக்கக் குறைவு, கோபம், சூட்டுக் கொப்பளம் போன்றவற்றை ஏற்படுத்தும்.
தொப்புள், இரைப்பை, வியர்வை, நிணநீர், இரத்தம், கண்கள், தோல் ஆகிய பகுதிகளில் பித்தம் இயற்கையாகக் குடிகொண்டுள்ளது. தன் இருப்பிடத்திலேயே பித்தம் சீற்றமடைந்தால் அதைச் சீற்றமடையச் செய்த உணவு மற்றும் செய்கைகளில் வெறுப்பும், அதற்கு நேர் எதிரான உணவு மற்றும் செய்கைகளில் விருப்பமும் மனிதர்களுக்கு இயற்கையாகவே ஏற்படும்.
உங்களுடைய மகள் விஷயத்தில் பித்த தோஷம் தன் இருப்பிடத்தை விட்டு கபதோஷத்தின் இருப்பிடமாகிய முகத்துக்கு வந்து சீற்றமடைந்துள்ளதால், இருவகையான சிகிச்சை முறைகளைக் கையாள வேண்டிய அவசியமிருக்கிறது. ஒன்று சீற்றமடைந்த பித்த தோஷத்தை, சாந்தமாக்கி அதன் இருப்பிடத்துக்கே திருப்புவது, மற்றொன்று கபத்தை வளரவிடாமல், அமைதியுறச் செய்வது.
பித்த - கப தோஷங்களுக்கு நேர் எதிரான சுவை கசப்பும், துவர்ப்பும் மட்டுமே. இனிப்புச் சுவை பித்தத்தைக் குறைத்தாலும் கபத்தை வளர்த்துவிடும் என்பதால், மகளுக்கு அந்தச் சுவை பொருந்தாது. கசப்பும் - துவர்ப்பும் நிறைந்த நன்னாரி வேர், வேம்பம்பட்டை, கடுக்காய், நிலவேம்பு, ஆடாதொடை, வெண்கருங்காலி, ஜாதிக்காய் போன்றவற்றை மருந்தாகப் பயன்படுத்துவதன் மூலம் விரைவில் குணமாகலாம்.
நன்னாரி வேர், வேப்பம் பட்டை, சுக்கு போன்றவை சேர்த்துத் தயாரித்து விற்கக் கூடிய சோணிதாமிர்தம் எனும் கஷாயத்தை சுமார் 15 மி.லி.அளவில் எடுத்து 60 மி.லி வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சுமார் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. திக்தகம் எனும் நெய் மருந்தைக் காலை உணவு செரித்து மதிய உணவு வேளையில் பசி உள்ள நிலையில் சுமார் 10 மி.லி. சாப்பிட்டு, 3/4 மணி நேரத்துக்குப் பிறகு மதிய உணவு ஏற்பது மிகவும் நல்லது. கடுக்காய் தோலை பன்னீர் விட்டு அரைத்து கட்டிகளின் மீது மேல் பூச்சு பூசுவதும் நல்லதே. நிலவேம்பு, ஆடாதொடை வேர், கருங்காலிக் கட்டை போன்றவற்றை வகைக்கு 5 கிராம் வீதமெடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு, 1/2 லிட்டராகக் குறுக்கி, வடிகட்டி தண்ணீருக்குப் பதிலாக குடிப்பது நல்லது. ஜாதிக்காயும் கடுக்காய் போல மைய அரைத்து பூசக் கூடியதே.
இருமாதத்துக்கு ஒருமுறை மாணிபத்ரம் எனும் லேகிய மருந்தைச் சாப்பிட்டு பேதி செய்து பித்த நீரை வெளியேற்றுவதும் நல்லதே. அளவு பற்றிய விபரம் மருத்துவரை அணுகி தெரிந்து கொள்வதே நல்லது. உணவில் காரம் புளி உப்பு குறைக்கவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.