எண்ணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. சிந்தனை மிக்கவரின் எண்ணங்கள் அவரைப் படைப்புத் திறன் உள்ளவராகச் செய்யும் பகவான் இராமகிருஷ்ணர் ஒரு கதை சொல்வார்:
ஊர்சுற்றி ஒருவன் தற்செயலாக சொர்க்கத்தில் நுழைந்துவிட்டான். அங்கே "கர்ப்பதரு' என்ற விருட்சம் இருந்தது. நாம் நினைக்கிற பொருளை உடனே கொடுக்கும் திறன் அந்த மரத்துக்கு உண்டு என்பார்கள்.
அந்த மனிதன் களைத்துப் போய் கற்பக விருட்ச நிழலில் படுத்துக் கண்ணயர்ந்துவிட்டான். பின்பு கண்விழித்தபோது கடுமையான பசி அவனுக்கு. ""நல்ல சாப்பாடு கிடைக்குமா இங்கே?'' என்று நினைத்தான். உடனே அறுசுவை உணவு அந்தரத்தில் வந்து நின்றது!
இந்த உணவு எப்படி வந்தது என்ற ஆராய்ச்சியில் எல்லாம் அவன் இறங்கவில்லை. அவன் பசி அப்படி...உடனே தட்டில் இருந்த உணவு அத்தனையும் கபளீகரம் செய்துவிட்டான். உண்ட களைப்பு... இங்கே ஒரு கட்டில் கிடந்தால் ஆனந்தமாகப் படுத்து ஓய்வெடுக்கலாமே என்று நினைத்தான்! அவ்வளவுதான்...அழகான கட்டில் வந்தது. நன்றாகச் சாய்ந்து படுத்துக் கொண்டான். "பணிவிடை செய்யப் பெண்கள் இருந்தால்...' என்று அவன் நினைக்கும் முன் ஒரு பெண் பழத்தட்டு ஏந்தி வந்தாள். இன்னொரு பெண் சாமரம் வீசினாள். மற்றொருத்தி கால் பிடித்துவிட்டாள்!
""அடடா...இது காடாயிற்றே...புலி ஏதாவது இங்கு வருமோ?'' என்று அவன் நினைத்த அடுத்த கணம் எங்கிருந்தோ ஒரு புலி பாய்ந்து வந்து அவனை அடித்துக் கொன்றுவிட்டது!
நிஜ வாழ்க்கையும் இந்தக் கதை மாதிரிதான். உங்கள் மனம் கற்பகத் தரு. உங்களுடைய எண்ணங்களே வாழ்க்கையை வடிவமைக்கிறது. அது நரகத்தையும் படைக்கும், சொர்க்கத்தையும் படைக்கும். இன்பம் துன்பம் இவற்றைப் படைப்பது உங்கள் எண்ணங்களே. மகிழ்ச்சி, துயரம் எல்லாம் மாயைதான். நம்மால் படைக்கப்பட்டவை மாயைகள்.
உங்களைச் சுற்றி வேலியிட்டுக் கொள்வது, சுவர் எழுப்பிக் கொள்வது எல்லாமே நீங்கள்தாம். உங்களுடைய முழு வாழ்க்கையும் நீங்கள் உருவாக்கிக் கொண்டதுதான். உங்களைத் தவிர உங்களை வதைப்பவர் யாரும் இல்லை. இதை மட்டும் நீங்கள் புரிந்து கொண்டால் நரகத்தைச் சொர்க்கமாக மாற்றிவிட முடியும் என்கிறது புத்தகம்.
("ஜென் தியான முறைகள்' என்ற புத்தகத்தில் சி.எஸ்.தேவ்நாத்)
தமிழ் நாடகத் தலைமை ஆசான் எனப் போற்றப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் தூத்துக்குடி நகரில் 1867-ஆம் ஆண்டில் பிறந்தவர்.
நாடக நடிகர்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பேசவும் பாடவும் வைத்து நாடகம் நடத்தத் துவங்கிய அந்தப் புதிய சகாப்தம் 1896-ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஆரம்பமாகியது. தனது 22-ஆம் வயதிலேயே நாடகத் துறையில் ஈடுபட்ட சுவாமிகள் பல நாடக சபைகளில் நாடக ஆசிரியர், நடிகர் எனப் பணியாற்றியதோடு புதுப்புது நாடகங்களையும் அவற்றுக்கான பாடல்களுடன் எழுதினார்.
ஒருமுறை சண்முகம் (டி.கே) கதாநாயகனாக நடிப்பதற்கு ஏற்றபடி ஒரு நாடகம் எழுதித் தரவேண்டும் என சுவாமிகளிடம் கேட்டுக் கொண்டனர். அன்று மாலையே சுவாமிகள் புத்தகக் கடைக்குச் சென்று "அபிமன்யு சுந்தரி அம்மானை' பாடல் பிரதி ஒன்று வாங்கி வந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பின் அரிக்கேன் விளக்கை வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தார். மறுநாள் பொழுது விடிந்து யாவரும் எழுந்தபோது சுவாமிகள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். அவர் படுக்கையருகே அவர் எழுதிய கையெழுத்துப் பிரதிகள் இருந்தன. "அபிமன்யு' நாடகம் மங்களப் பாட்டுடன் முடித்து வைக்கப்பட்டிருந்தது! (ஒரே இரவில் ஒரு முழு நாடகத்தை எழுதி முடித்திருந்தார்!)
ஒருமுறை சத்தியவான் சாவித்திரி நாடகத்தில் எமன் வேடத்தில் சுவாமிகள் நடித்தபோது தன் கையிலிருந்த சூலாயுதத்தை அதி ஆவேசத்தோடு ஓங்கித் தரையில் அடித்தாராம். இதன் விளைவாக உண்மையாகவே சபையிலிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டதாம். அதிலிருந்து சங்கரதாஸ் சுவாமிகள் எமன் வேடம் பூண்டு நடிக்கிறார் என்றால், அவர் வரும் காட்சிக்கு முன்பாகவே, "சுவாமிகள் எமன் வேடத்தில் வரப்போகிறார். கர்ப்பிணிகள் இருந்தால் சபையை விட்டு வெளியில் போய்விடுங்கள். அந்தக் காட்சி முடிந்தவுடன் திரும்ப வாருங்கள்..' என்று கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.
கம்யூனிஸ்ட் தலைவர் ப. ஜீவானந்தம் 1958-ஆம் ஆண்டில் தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.
("நாடகமும் சினிமாவும்' என்ற நூலில் ஏ.எல்.எஸ். வீரய்யா)
தனக்கென வீட்டை அமைத்துக் கொண்டு மனைவி மக்களோடு வாழ்ந்து பல நாள் உணவுக்கு வேண்டுமென்று சேமித்தல் இல்வாழ்வான் செயல். எந்த வகையிலும் பற்றில்லாத துறவியர் உணவு பற்றிய கவலையே இன்றி வாழவேண்டும். பிச்சை எடுத்து உண்ண வேண்டும். எப்படிப் பிச்சை எடுக்க வேண்டும் என்பதை வண்டுகள் தத்தாத்தரேயருக்கு உபதேசித்தன.
ஒரு வண்டு காலையில் மலர்ந்திருந்த ஒரு மலரிலே சென்று தேன் உண்டது. உடனே அங்கிருந்து பறந்து மற்றொரு மலரில் சிறிது தேனை உண்டது. இப்படிச் சிறிது சிறிதாகப் பல மலர்களிலே சென்று தேன் நுகர்ந்து ரீங்காரம் செய்து கொண்டு மிக்க மகிழ்ச்சியோடு பறப்பதை முனிவர் கண்டார். ஆகா! எத்தனை அழகியது இதன் செயல்! உணவு பற்றிக் கூட ஓர் இடத்தில் பற்றின்றி வாழும் இந்த வாழ்வல்லவா துறவு வாழ்க்கை?'' என்று எண்ணினார். நாமும் இப்படியே நகரின் ஒவ்வொரு மனைக்கும் சென்று கரதலமே (கரங்களையே)பாத்திரமாகப் பிட்சையேற்று வாழ்வது இன்ப நெறி' என்று கண்டு அவ்வாறே செய்யப் புகுந்தார். தேனுண்ணும் இதனை "மதுகரபிட்சை' என்பர். மதுகரம் என்பது வண்டுக்குப் பெயர்.
பிட்சை இவ்வாறு ஏற்கவேண்டும் என்பதை ஒரு வண்டு உபதேசம் செய்ய, மற்றொரு வண்டு எவ்வாறு ஏற்றல் கூடாதென்பதையும் உபதேசித்ததாம்.
ஒரு நாள் ஒரு தாமரை மலரில் உள்ள தேனுக்கு ஆசைப்பட்ட வண்டு அதில் புகுந்து தேனை உண்ணத் தொடங்கியது. அந்தத் தாமரையிலே பற்றுக் கொண்டு நாள் முழுவதும் தங்கி தேனை உண்டு மயங்கியது. மாலைக் காலம் வரவே தாமரை மலர் குவிந்தது. அதன் இதழ்கள் நெருக்க நெருக்க உள்ளே இருந்த வண்டு மூச்சு விடவும் முடியாமல் இறந்துவிட்டது. மறுநாள் தாமரை மலர் விரிந்தபோது வண்டின் ஒலியில்லை; உயிரற்று கிடந்தது. முனிவர் பார்த்தார். "ஒரு வீட்டில் தங்கிச் சுவையுள்ள உணவு கிடைக்கிறது என்று இருந்து அருந்தினால் உலகத்துப் பாசம் நம்மை இப்படித்தான் அழுத்திக் கொன்றுவிடும்' என்று தெரிந்து கொண்டார்!
("பேசாத பேச்சு' என்ற நூலில் கி.வா.ஜகந்நாதன்)
நம் முன்னோர்கள் கூடுமான வழிகளில் எல்லாம் சமய உண்மைகளை "கிண்டர் கார்டன்' முறையாகப் புகட்டினர் என்பதற்கு நம் பெண்கள் தலையணியே ஒரு சான்றாகும். மற்ற நாட்டுப் பெண்கள் தலையில் தொப்பிகள், நாடாக்கள், அலங்கார ஊசிகள், செயற்கைப் பூ, காய்கறிகள், முறங்கள், கூடை இவைகளைத் தலையிலணிந்து கொண்டிருக்கவும், நம் நாட்டில் அஃதாவது தென்னாட்டில் தலைவாரிப் பின்னி அதில் ஜடை நாகர், நெற்றிச்சுட்டி, சூரிய சந்திரப் பிறைகள், நறுமணமுள்ள இயற்கைப் பூக்கள் இவற்றை அணிவது பழைய வழக்கம். இன்று இது பெரும்பாலும் வழக்கொழிந்து வருகையில் இங்கு பழைய வழக்கம் எள்ளப்பட்டது. முற்காலத்தில் அறிவுடையோர் ஜடைப் பின்னலை வெறும் முடியலங்காரமாக மாத்திரம் கருதவில்லை. அது முதுகுத் தண்டைக் குறிப்பதாகவும், அதில் குண்டலினி வளைந்து வளைந்து மேலேறும் ஜடை நாகராகவும், சூரிய சந்திரப் பிறைகள், சூரிய கலையாகிய பிங்கலை நாடியையும் சந்திர கலையாகிய இட நாடியையும் நெற்றிச் சுட்டி புருவ நடுவிலுள்ள நெற்றிக் கண்ணைக் குறிப்பதாகவும் அமைத்து வைத்தனர். மலை உச்சியை அழகு செய்த ராக்குடி சகஸ்ராரம் போலவே அடுக்குத் தாமரையாக அமைக்கப்பட்டது. பெண்கள் சிறு பருவத்திலிருந்தே அவற்றை அடிக்கடி அணியும்போது தம் தாய்மாரால் அவற்றின் அறிகுறிப் பொருளைச் சொல்லக் கேட்டு இந்த மூன்று நாடிகளைப் பற்றியும் அவற்றைச் சமய விசேஷ நிர்வாண தீஷைகளால் எழும்பும் விதத்தையும் அறிந்து அக்கலைகளாலேயே ஆன்மாவின் பூரணத் தன்மையும் பேரின்ப நிலையும் எய்தப்படுமென்பதையும் தெளிந்து அதில் எடுத்துக் கொள்ள வேண்டிய முயற்சியை ஞாபகப்படுத்தி வற்புறுத்தும் பொருட்டே தங்கள் தலைமயிர் அடிக்கடி அழகுபடுத்தப்படுகிறதென்றும், மேனாட்டரைப் போல அஃது ஆடவரை மயங்குவதற்காக அல்லவென்றும் அவர்கள் இளமையிலிருந்தே கண்டு கொள்வர்.
( "ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்' என்ற நூலில் இலஞ்சி ஆ. சொக்கலிங்கம்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!

தைரியம் கூடும் மகர ராசிக்கு: இன்றைய ராசி பலன்கள் (மே 31)
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



