""அனைத்துப் பிரச்னைகளுக்கும் எதிராக...''
"என்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் நான் சாதித்ததைவிட சந்தித்த பிரச்னைகள்தாம் அதிகம். இறைவன் அருளால்


-சானியா மிர்சா
""என்னுடைய டென்னிஸ் வாழ்க்கையில் நான் சாதித்ததைவிட சந்தித்த பிரச்னைகள்தாம் அதிகம். இறைவன் அருளால் யாருடைய உதவியுமின்றி டென்னிஸ் அகாதெமி ஒன்றைத் துவங்கியுள்ளோம். இன்று நான் பிஎம்டபிள்யூ காரில் பயணம் செய்கிறேன். துவக்கத்தில் டென்னிஸ் பயிற்சிக்காக மூன்று மணி நேரம் சென்று வர ஆட்டோவில் பயணித்த காலமும் உண்டு. ஆறு வயதிலேயே டென்னிஸ் ஆடத் துவங்கிய நான் இதுவரை எனக்கேற்பட்ட அனுபவங்களை "அனைத்துப் பிரச்னைகளுக்கும் எதிராக' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதப் போகிறேன்'' என்கிறார் டென்னிஸ்
வீராங்கனை சானியா மிர்சா.
""ஹாப்மன் கப் பந்தயத்தின்போது தேசியக் கொடியை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டு, விளம்பரத்திற்காக மசூதி முன் போஸ் கொடுத்தபோது எழுந்த புகார், நான் அணியும் உடைகள் பற்றிய புகார் என்று தேவையின்றி பத்துக்கும் மேற்பட்ட புகார்களையும் பிரச்னைகளையும் நான் சந்தித்தேன். இவற்றைப் பற்றியும் என்னுடைய புத்தகத்தில் விளக்கமாக எழுதப் போகிறேன்.
ஒவ்வொரு பிரச்னையுமே என்னை மனதளவிலும் தொழில் முறையிலும் பாதித்துள்ளது. ஹாப்மன் கப் பந்தயத்தின்போது இனி டென்னிஸ் விளையாடவே கூடாது என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். நல்லவேளையாக அவற்றை எதிர்த்து நிற்கக்கூடிய சக்தியை இறைவன் எனக்களித்தார். ஒவ்வொரு பிரச்னையும் எனக்கு வலுவைக் கொடுத்தது. என் குடும்பத்தினரும் நல்ல நண்பர்களும் எனக்கு உறுதுணையாக நின்றனர். விலை கொடுத்துத்தான் ஒருவர் புகழடைய வேண்டுமென்பதில்லை.
நம்முடைய தேசத்தைப் பொறுத்தவரை ஒருவர் தோற்றாலும் வெற்றி பெற்றாலும் அது ஆரோக்கியமானதல்ல என்பதை நான் உணர்ந்துள்ளேன்.
நம்முடைய கருத்தை வெளியிட ட்விட்டர் நல்ல சாதனமாக விளங்குகிறது. அதே நேரத்தில் சமூகவலைத்தளத்தில் நல்லது கெட்டது இரண்டுமே உள்ளன. அதில் உங்களைப் பின் தொடர்பவர்களையும் உங்களுக்காக பிரார்த்திப்பவர்களையும் உங்களால் அறிய முடியும்.
ஒரு நாட்டிற்காக வெற்றியைத் தேடித் தரும்போது எத்தகைய மகிழ்ச்சி ஏற்படுகிறது என்பதை உணரலாம்.
என்னுடைய நெருங்கிய தோழி என்னுடைய அம்மாதான். என்னைப் பற்றி அவர் எடுக்கும் முடிவு எதுவாக இருந்தாலும் சரியாகவே இருக்கும். உதவி என்றாலும் ஆலோசனை என்றாலும் அம்மாவிடம்தான் முதலில் கேட்பேன். அவரது தெளிவான முடிவுகளே என்னை வழி நடத்துகின்றன'' என்று கூறும் சானியா மிர்சாவுக்கு, உலகம் முழுவதும் பல நாடுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும் விம்பிள்டனில் ஆடுவதுதான் மிகவும் பிடிக்குமாம். அதேபோல் பலரை சந்தித்து விளையாடிய போதிலும் இவரால் மறக்க முடியாத பெண்மணி மார்டினா ஹிங்கிஸ்.
விளையாட்டுத் துறையில் ஈடுபட விரும்பும் இளைய சமுதாயத்தினருக்கு இவர் கூறும் அட்வைஸ் இதுதான்,""நீங்கள் விரும்புவது எந்தத் துறையாக இருந்தாலும் அதில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இதற்கு மன உறுதி மட்டுமே போதுமானது''
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...