பசியின் கொடுமை எனக்குத் தெரியும்!
சித்தப்பாவின் வீட்டை விட்டு வெளியேறியதும் என் மனதில் தோன்றியது, நிறையப் பணம் சம்பாதித்து நாமும் பெரிய ஆளாக வர வேண்டும் என்ற வெறிதான். வீட்டை விட்டு


1946.திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம். ஓர் எட்டு வயதுப் பையன் வீட்டு வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். வீட்டினுள்ளிருந்து வெளியே வந்த அந்தப் பையனின் சித்தி, அவனுடைய சாப்பாட்டுத் தட்டை எட்டி உதைக்க, உணவு எல்லாம் தரையில் சிதறிவிடுகிறது. பையனுக்கு அழுகையை அடக்க முடியவில்லை. அப்பா, அம்மா இல்லாத அனாதைச் சிறுவன் அவன். அவனுடைய சித்தப்பா, வேறு வழியில்லாமல் அவனைப் பராமரித்துக் கொண்டிருந்தார். சித்தியின் கொடுமை தாங்க முடியாமல், அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியேறுகிறான்.
அந்தச் சிறுவன்... இன்று?
அநத கேட்டரர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.எஸ்.ராஜசேகர். மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய இடங்களில் செயல்படும் அவருடைய நிறுவனங்களில் இன்று அவரிடம் 500 பேருக்கும் மேல் வேலை செய்கிறார்கள்.
ஆதரிக்க யாருமில்லாத அவர், இந்த நிலைக்கு உயர்ந்தது எப்படி? அவரிடமே கேட்டோம்:
""தாய், தந்தை இல்லாத நான் சித்தப்பா வீட்டில் சந்தித்த கொடுமைகள் அதிகம். உடுத்த நல்ல உடை இல்லை. வீட்டுக்கு வெளியே உட்கார வைத்துத்தான் சாப்பாடு.
சித்தப்பாவின் வீட்டை விட்டு வெளியேறியதும் என் மனதில் தோன்றியது, நிறையப் பணம் சம்பாதித்து நாமும் பெரிய ஆளாக வர வேண்டும் என்ற வெறிதான். வீட்டை விட்டு அம்பாசமுத்திரம் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனேன். ரயிலை விட்டிறங்குபவர்களின் சுமைகளைத் தூக்கிச் சென்று, அவர்கள் கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு இரண்டு நாட்கள் ஸ்டேஷனிலேயே கழித்தேன்.
அதற்குப் பிறகு அங்கிருந்து ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பெங்களூர் போனேன். அங்கே ஒரு ஹோட்டலில் கொஞ்சநாள் வாட்டர் பாய் வேலை, அப்புறம் சப்ளையர் வேலை. இன்னும் அதிக சம்பளம் வேண்டும் என்று நினைத்து ஹைதராபாத் வந்தேன். அங்கேயும் 2 மாதம் ஹோட்டல் வேலை. அதற்குப் பிறகு அங்கிருந்து கிளம்பி மகாராஷ்டிரா மாநிலம் மீரஜ் அருகே சாங்லி என்ற ஊருக்கு வந்தேன். அங்கே சர்க்கஸில் வேலை கிடைத்தது. சர்க்கஸில் உள்ள விலங்குகளைப் பராமரிப்பது, அவற்றின் தொழுவங்களைச் சுத்தம் செய்வது, அவற்றுக்கு உணவு கொடுப்பது என்று வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். இருந்தாலும் வருமானம் பெரிதாக ஒன்றுமில்லை.
அங்கிருந்து கிளம்பி விஜயவாடா வந்து சேர்ந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் சோடா, கலர் விற்பனை செய்தேன்.
அதற்குப் பிறகு திருப்பதி வந்து சேர்ந்தேன். என் வாழ்க்கையில் திருப்பமும் வந்து சேர்ந்தது. திருப்பதி தேவஸ்தானத்தில் மடப்பள்ளியில் வேலை கிடைத்தது. அங்கே இரவுப் பள்ளி நடத்திக் கொண்டிருந்தார்கள். அங்கே படித்து ஈ.எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்தேன். 7 ஆண்டுகள் அங்கே வேலை செய்தேன். பல ஹோட்டல்களிலும் மடப்பள்ளியிலும் வேலை செய்ததால் சமையல் கலையை நன்கு கற்றுக் கொண்டேன்.
திருப்பதி மடப்பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் வேலைக்கான விளம்பரம் வந்திருந்தது. அதற்கு விண்ணப்பித்தேன். அங்கே கூட்டுறவு சங்கம் நடத்திய கேண்டீனில் டோக்கன் கிளார்க் வேலை கிடைத்தது. அதற்குப் பிறகு, நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் சர்க்கியூட் அவுஸில் வேலை கிடைத்தது. அப்போதுதான் நெய்வேலிக்கு வந்திருந்த நேரு, டாக்டர் ராதாகிருஷ்ணன், லால்பகதூர் சாஸ்திரி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற பெரிய தலைவர்களைச் சந்திக்க முடிந்தது.
அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நெய்வேலி வேலையை 1974இல் விட்டுவிட்டு, சென்னைக்கு வந்தேன். ரோடு காண்ட்ராக்ட் எடுத்து அண்ணாநகர் டவரிலிருந்து திருமங்கலம் வரை, அண்ணா நகர் வளைவிலிருந்து ரவுண்டானா வரை ரோடு போடும் வேலை செய்தேன்.
அதற்குப் பிறகு டாக்ஸி டிரைவரானேன். பழ வியாபாரம் செய்தேன். லாட்டரிச் சீட்டு விற்றேன். இப்படிப் பல வேலைகள் செய்தும் திருப்தி ஏற்படவில்லை. வருமானம் போதவில்லை.
இதற்குள் எனக்குக் கல்யாணமாகிவிட்டது. மனைவி, குழந்தைகள், மாமியாரை அழைத்துக் கொண்டு மும்பைக்குப் போனேன். அங்கே முறுக்கு, தட்டை வியாபாரம் செய்தேன். யாராவது கல்யாண சமையல் வேலைக்குக் கூப்பிட்டால் அதற்கும் செல்வேன். ஜாங்கிரி செய்து கொடுங்கள் என்றால் அதையும் செய்து கொடுப்பேன்.
இப்படி மும்பையில் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென எனக்கு ஓர் ஐடியா தோன்றியது. கல்யாணப் பொருத்தம், ஜாதகப் பொருத்தம் பார்த்துத் தரும் நிறுவனத்தைத் தொடங்கினேன். மும்பை செய்தித் தாள்களில் விளம்பரம் செய்தேன். இலவச ஜாதகப் பொருத்தம் பார்த்துத் தரப்படும் என்று நான் செய்த விளம்பரத்துக்கு நல்ல வரவேற்பு. அப்படியே கல்யாண சமையல் வேலையையும் சேர்த்துச் செய்தேன். மும்பையின் பெரிய பெரிய பணக்காரர்கள் வீட்டுத் திருமண ஆர்டர்கள் எல்லாம் வந்து குவிந்தன. ஒரு கட்டத்தில் கல்யாண மண்டபத்தில் கோலம் போடுவதிலிருந்து, மணப்பெண் அலங்காரம் வரை கல்யாணத்தின் எல்லா வேலைகளையும் செய்து தந்தேன். இப்போது மும்பையில் மாத்திரமல்லாமல், சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் எல்லாம் எங்கள் நிறுவனத்தில் கிளைகள் செயல்படுகின்றன. எனது மகன்கள் இப்போது உதவியாக இருக்கிறார்கள்.
என்னுடைய முன்னேற்றத்துக்குக் காரணம், என் மனதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி அதிகமாக இருந்ததுதான். இந்த வயதிலும் அந்த வெறி அப்படியே இருக்கிறது. அதற்கடுத்து எந்தத் தொழிலைச் செய்தாலும், அதில் எவ்வளவு சம்பளம் குறைவாக இருந்தாலும், வேலையில் கவனம் இல்லாமல் இருக்கமாட்டேன். கேட்க ஆள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொழிலை விட்டுக் கொடுக்க மாட்டேன். மனசாட்சிக்குத் துரோகம் செய்யமாட்டேன். இது என்னுடைய முன்னேற்றத்துக்கு இன்னொரு காரணம்.
அடுத்த காரணம், நான் எந்தத் தொழிலையும் இழிவாக நினைக்க மாட்டேன். சர்க்கஸில் தொழுவத்தைச் சுத்தம் செய்தபோதும் மன வருத்தப்பட்டுச் செய்ததில்லை.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை செய்தபோது எனக்குச் சம்பளம் 75 ரூபாய். அங்கே வேலை செய்த அதிகாரிகளின் அறையைப் பெருக்கிச் சுத்தம் செய்து, அவர்களுடைய துணிகளைத் துவைத்து, அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து என்று நிறைய வேலைகளைச் செய்வேன். அவர்கள் கொடுக்கும் பணம் சம்பளத்தைவிட அதிகமாக இருக்கும்.
என்னுடைய முன்னேற்றத்துக்கு இன்னொரு காரணம், என்னிடம் வேலை செய்பவர்கள் தரும் ஒத்துழைப்பு. கல்யாண வேலைகள் என்பது சாதாரண வேலையல்ல. சிரமமான இந்த வேலையில் என்னிடம் வேலை செய்பவர்கள் எனக்கு முழு ஒத்துழைப்புக் கொடுக்கக் காரணம், நான் அவர்களை நன்கு கவனித்துக் கொள்வதுதான்.
எனக்குப் பசியின் கொடுமை எப்படியிருக்கும் என்று தெரியும். என்னிடம் வேலை செய்பவர்களுக்குப் பிற இடங்களைவிட அதிகச் சம்பளம் தருகிறேன். நன்கு வேலை செய்பவர்களுக்கு அதற்குரிய அங்கீகாரம் தந்துவிடுவேன். சமையல் வேலை மிகவும் கடினமானது. வேலை செய்யும்போது சோர்ந்து போகாமல் இருக்க அவர்களுக்குத் தேவையான பானங்கள், பண்டங்கள் எல்லாம் தந்துவிடுவேன். வேலைக்கிடையில் மதிய வேளையில் 2 மணி நேரம் ஓய்வு. தீபாவளி போனûஸ ஒரு மாதத்துக்கு முன்பே கொடுத்துவிடுவேன். இப்படிப் பலவிதங்களில் அவர்களுடைய தேவைகளை நான் கவனித்துக் கொள்கிறேன். அதனால் எவ்வளவு பெரிய வேலையானாலும் என்னால் தைரியமாக எடுத்துச் செய்ய முடிகிறது.
ஒருவேளை உணவுக்குக் கஷ்டப்பட்ட நான் இந்த அளவுக்கு முன்னேறியதற்கு தெய்வங்களின் அருளும் ஒரு காரணம்.
சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் எங்கள் குல தெய்வம். ஒவ்வோராண்டும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக் கிழமை 15 ஆயிரம் பேருக்கு மேல் அன்னதானம் செய்கிறேன்'' என்கிறார் பெருமையாக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...