புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அச்சமின்மையின் இன்னொரு பெயர்!

நள்ளிரவு 12 மணி. எல்லாரும் அயர்ந்து தூங்குகிறார்கள். செல்போன் ஒலிக்கிறது. சட்டென்று எழுந்து அமர்கிறார் சுகி பிரேமலா.

News image
Updated On :3 செப்டம்பர் 2013, 8:06 am

ந. ஜீவா

நள்ளிரவு 12 மணி. எல்லாரும் அயர்ந்து தூங்குகிறார்கள். செல்போன் ஒலிக்கிறது. சட்டென்று எழுந்து அமர்கிறார் சுகி பிரேமலா.
 ""மேடம்... அரிசி கடத்திக் கொண்டு ஒரு லாரி கடற்கரைச் சாலையில் வந்துக்கிட்டிருக்கு. உடனே வாங்க''.
 அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள் சுகி பிரேமலாவின் குழுவினரின் கார், அரிசி கடத்திக் கொண்டு செல்லும் லாரியை விரட்டிச் செல்கிறது. லாரியை முந்திக் கொண்டு சென்று மடக்கிப் பிடித்து அரிசி கடத்துவதை தடுக்கிறார்கள்.
 சுகி பிரேமலா இதுவரை 110 டன் ரேஷன் அரிசி, 22 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய், 1500 கிலோ அமோனியம் நைட்டிரேட் என்ற வெடிபொருள் ஆகியவற்றை மடக்கிப் பிடித்து கடத்தலைத் தடுத்திருக்கிறார்.
 இதற்காக இந்த ஆண்டு "துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா' விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
 இரண்டு குழந்தைகளின் தாயான சுகி பிரேமலாவுக்கு இந்தத் துணிச்சல் எப்படி வந்தது? மனதில் தோன்றிய வியப்பைக் கேள்விகளாக்கினோம். அவர் நம்மிடம் பேசியதிலிருந்து....
 
 "என்னுடைய அப்பா நேசமணி, விளவங்கோடு தாலுகாவில் உள்ள ஊரில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்தவர். பணியில் இருக்கும்போது அவர் திடீரென இறந்துவிட்டார். நான் எம்.ஏ. பொதுநிர்வாகம் படித்திருந்தேன். கருணை அடிப்படையில் எனக்கு அரசு வேலை கிடைத்தது. 1993} இல் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். அதற்கு நான்கு வருடங்களுக்குப் பிறகு வருவாய்த்துறை ஆய்வாளராகப் பதவி உயர்வு. அதற்குப் பிறகு தக்கலை தாலுகாவின் துணைத் தாசில்தார். கடந்த ஆண்டு வட்ட வழங்கல் அலுவலராக விளவங்கோடுப் பகுதிக்கு நியமிக்கப்பட்டேன். அலுவலகத்தில் செய்யும் வேலைகள் தவிர, கடத்தல் தடுப்பு வேலையும் வட்ட வழங்கல் அலுவலர் செய்ய வேண்டும்.
 பெரும்பாலும் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய், வெடி பொருள் போன்றவற்றைக் கடத்துபவர்கள் பகலில் கடத்தமாட்டார்கள். இரவில்தான் கடத்துவார்கள். அதுவும் நள்ளிரவு 12 மணிக்கும் மேல்தான்.
 பல சமயங்களில் கடத்தல் நடப்பதைப் பற்றித் தகவல் எங்களுக்கு வரும். போனில் என்ன பொருளை, எங்கிருந்து, எந்த எண்ணுள்ள வாகனத்தில் கடத்துகிறார்கள் என்ற அளவுக்குத் துல்லியமாகக் கூட சிலர் தகவல் சொல்வார்கள். இப்படி தகவல் கிடைத்ததும் உடனே செயலில் இறங்கி கடத்தலைத் தடுப்போம்.
 இதுதவிர, வழக்கமாக இரவு நேரங்களில் செக் போஸ்ட்டுக்குப் பக்கத்தில் நின்றோ பிற இடங்களிலோ வாகன சோதனை செய்வோம். சந்தேகத்துக்கு இடமான வாகனங்களைக் கைகாட்டி நிறுத்துவோம். ஏதாவது பொருளைக் கடத்திக் கொண்டு வரும் வாகனமாக இருந்தால், நிறுத்தாமல் அதை வேகமாக ஓட்டிச் செல்வார்கள். அப்படிப்பட்ட வாகனங்களை விரட்டிச் சென்று வழி மறித்து தடுத்து நிறுத்தியிருக்கிறோம். சிலநேரங்களில் கடத்தல் வாகனங்கள் தமிழ்நாடு எல்லை தாண்டி கேரள எல்லைக்குள் நுழைந்துவிடும். அப்போது கேரள காவல்துறையின் உதவியுடன் கடத்தல் வாகனத்தைத் தடுத்து நிறுத்துவோம்.
 கடத்தலை தடுப்பதில் எனக்கு உதவியாக வருவாய் ஆய்வாளர் ஜோதிஷ் குமார், கார் டிரைவர் ஜான் பிரைட் இருக்கிறார்கள்.
 காவல்துறையிடம் தெரிவித்துவிட்டு, அவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு எல்லாம் கடத்தல் தடுப்புப் பணிக்குச் செல்வதில்லை. கடத்தல் தடுப்புப் பணி செய்யும்போது, ஒருவேளை தேவைப்பட்டால், நாங்கள் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள காவல்நிலையத்துக்குத் தகவல் சொல்வோம். உடனே காவல்துறையினர் உதவிக்கு வருவார்கள்.
 இப்படி கடத்தலை நாங்கள் தடுப்பதால், கடத்தலுடன் தொடர்பு உள்ளவர்கள் எதிரியாகிவிடுகிறார்கள். என்னைக் கொன்றுவிட நினைக்கிறார்கள்.
 ஒருமுறை நான் காரில் சென்று கொண்டிருந்தபோது கூத்தூர் அருகே ஒரு டெம்போ நேருக்கு நேர் வேண்டுமென்றே மோத வந்தது. நான் சென்ற கார் டிரைவர் சாமர்த்தியமாக காரை ஓட்டியதால் தப்பித்தோம். நான் உடனே அந்த வண்டியின் நம்பரை குறித்துக் கொண்டேன். காவல்துறையிடம் புகார் கொடுத்தேன், நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 எனது கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் என்னை போனில் அவ்வப்போது மிரட்டுவார்கள். கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். கொல்லப் போவதாக பயமுறுத்துவார்கள். ஒரு டிரைவர் பெயிலில் வந்து என்னைக் கடுமையாகத் திட்டி மிரட்டினார். வேலையைப் பொறுப்பாகவும், கடமை உணர்வோடும் செய்ய வேண்டும் என்று நான் நினைப்பதால் எனக்குப் பயம் வருவதில்லை.
 அதுமட்டுமல்ல, சிறுவயதில் இருந்தே என்னுடைய அப்பா, அம்மா இருவருமே என்னைத் தைரியசாலியாக வளர்த்தார்கள். பெண் பிள்ளைகளை அங்கே போகக் கூடாது... இங்கே போகக் கூடாது என்று எல்லாப் பெற்றோரும் தடுப்பார்கள். என் அப்பா, அம்மா அப்படித் தடுத்ததில்லை. "எந்த வேலையைச் செய்தாலும் அதில் நல்ல பெயர் எடுக்க வேண்டும். பிறரை விடச் சிறப்பாக வேலை செய்ய வேண்டும்' என்று சொல்வார்கள். நான் பயமில்லாமல் வேலை செய்வதற்கு, எனக்குத் தைரியம் வந்ததற்கு இவையெல்லாம் காரணங்கள்.
 அதைவிட முக்கியமானது குடும்பத்தில் எனக்குக் கிடைக்கும் ஒத்துழைப்புதான். நடு இரவிலும் கூட நான் எனது பணியைச் செய்வதற்குக் கிளம்பினால், என்
 கணவர் ஜோ பாபுராஜ் ஒருநாளும் என்னைத் தடுத்ததில்லை. என் வேலைக்கு இடைஞ்சல் செய்ததில்லை. எத்தனை வீடுகளில் வேலை செய்யும் பெண்களுக்கு இப்படிப்பட்ட சுதந்திரம் இருக்கிறது?
 இப்போது கடத்தலைத் தடுக்கும் பறக்கும்படையின் கன்னியாகுமரி மாவட்டத்தின் தனி வட்டாட்சியராக நான் ஆகிவிட்டதால், எனது வேலையே கடத்தலைத் தடுப்பதாக ஆகிவிட்டது. வேலை செய்யும்போது வரக் கூடிய மிரட்டல்கள், தாக்குதல்களைக் கண்டு பயந்தால் இந்த வேலையைச் செய்ய முடியாது.
 கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது எனது துணிச்சலான கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளைப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் எனக்குச் சான்றிதழ் வழங்கினார். பாராட்டினார். அவர்தான் கல்பனா சாவ்லா விருதுக்காக என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார். அதனால்தான் எனக்கு இந்த ஆண்டு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது எனக்குக் கிடைத்திருக்கிறது. தமிழக முதல்வர் விருது வழங்கி என்னைப் பாராட்டியது எனக்கு மேலும் ஊக்கமளித்திருக்கிறது.
 இந்தப் பணியில் வேலை நேரம் என்று ஒன்றை வரையறுத்துச் சொல்ல முடியாது. எந்த நேரத்திலும் கடத்தல் தடுப்பு வேலைக்குச் செல்ல வேண்டும். இதனால் என்னுடைய பிளஸ் ஒன் படிக்கும் மகள் அஸ்லின் ஸ்டெபியையும், ஐந்தாவது படிக்கும் மகள் ஆன்ட்ரோ ஃபிரடியையும் ஒரு தாயாக இருந்து நன்றாக கவனிக்க முடியவில்லையே என்ற கவலை மட்டும் எப்போதும் இருக்கிறது. என்னுடைய மாமனார் வீடு பக்கத்தில் இருப்பதால் அவர்கள் பிள்ளைகளைக் கவனித்துக் கொள்கிறார்கள். இல்லையென்றால் என்னுடைய வேலையில் நான் இந்த அளவுக்குத் தீவிரமாக ஈடுபட முடியாமல் போயிருக்கும்'' என்கிறார் சுகி பிரேமலா பெருமிதத்துடன்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.