புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஏஸி நான்கு மணி நேரம் போதும்!

என்ன சாப்பிட வேண்டும்? எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? எப்படிப்பட்ட உடை உடுத்த வேண்டும்? ஏசியை ரொம்ப நேரம் பயன்படுத்துவது

News image
Updated On :6 ஏப்ரல் 2014, 4:56 am

ந. ஜீவா

என்ன சாப்பிட வேண்டும்? எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? எப்படிப்பட்ட உடை உடுத்த வேண்டும்? ஏசியை ரொம்ப நேரம் பயன்படுத்துவது சரியா? இவையெல்லாம் கோடைக் காலத்தைச் சமாளிக்க டாக்டர் கெளசல்யா நாதனிடம் நாம் கேட்ட கேள்விகள். சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள நோவா ஸ்பெஷாலிட்டி சர்ஜரி மருத்துவமனையில்  ஒரு கொளுத்தும் வெயில் பொழுதில் அவரைச் சந்தித்துப் பேசினோம்:

""கோடைக் காலம் வந்துவிட்டால் அதிகமாக வியர்க்கும். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வாழ்பவர்களுக்கு பிற பகுதிகளில் வாழ்பவர்களை விட அதிகமாக வியர்க்கும். காரணம், காற்றில் ஈரப்பதம் மற்ற இடங்களை விட சிறிது அதிகமாக இருப்பதுதான். வியர்வை அதிகமாகும்போது சிறுநீர் வெளியேறுவது குறைந்துவிடும். எனவே ஒரு நாளைக்கு  குறைந்தது 2 -

2ணீ லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது மட்டுமல்ல, சர்க்கரை, உப்பு கலந்த எலுமிச்சம் பழச்சாறு அருந்தலாம். இளநீர் குடிக்கலாம். வெல்லம், எலுமிச்சம் பழச்சாறு, உப்பு, இஞ்சி இவற்றைக் கொண்டு பானகம் செய்வார்கள். பானகம் அருந்துவது மிகவும் நல்லது. நீர் மோர் குடிக்கலாம். நமது உடலில் இருந்து வெளியேறும் வியர்வையினால் உடல் இழக்கும் தாது உப்புகளை இவற்றை அருந்துவதன் மூலம்தான் ஈடுகட்ட முடியும்.

நீர்ச்சத்து அதிகமாக உள்ள நுங்கு, தர்ப்பூசணி, கிருணிப் பழம் போன்றவற்றையும், நீர்ச்சத்துள்ள வெள்ளரிக்காய், பூசணி, செளசெள ஆகியவற்றையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்திப் பழ ஜூஸ் அருந்த வேண்டும்.

அசைவ உணவு உண்பவர்கள் எண்ணெய்யில் பொரிக்கப்பட்டவற்றை வெயில் காலத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும். கறிக் குழம்பு, மீன் குழம்பு என்று குழம்பு வைத்துச் சாப்பிடுவது நல்லது. வறுக்கப்பட்ட அசைவ உணவைச் சாப்பிடக் கூடாது.

கோடைக் காலத்தில் சன் ஸ்ட்ரோக் வருவதற்கு வாய்ப்புண்டு. சன் ஸ்ட்ரோக் வராமல் தடுக்க  நேரடியாக நமது உடலில் வெயில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சன் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுநீர் வராது. 104 டிகிரிக்கு மேல் குளிர் காய்ச்சல் அடிக்கும். உடல் நடுங்கும். மனதை ஒருமுகப்படுத்த முடியாது. குழப்பமாக இருக்கும்.

வெயில் நேரத்தில் சாலையில் நடந்து செல்லும்போது மரநிழலில் நின்று செல் போன் பேச வேண்டும்.  நண்பர்களுடன் பேச வேண்டும்.  நிழலில் நின்று பேசினால் சன் ஸ்ட்ரோக் வராது. சூரிய வெளிச்சம் நேரடியாக நம் உடலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயிலுக்குக் குடை பிடித்துச் செல்ல வேண்டும். தொப்பி அணிந்து கொள்ளலாம்.

வெளிர் நிறமுள்ள ஆடைகளையே உடுத்த வேண்டும். டார்க் கலரில்  எந்த ஆடையையும் அணியக் கூடாது. கறுப்பு உடை வெயில் முழுவதையும் உள் வாங்கி நமது உடலில் இறக்கிவிட்டு விடும். வெள்ளை, வெளிர் நிற ஆடைகள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும். வெப்பத்தை சிதற அடிக்கும். எனவே கோடைக் காலத்துக்கு ஏற்றவை வெளிர் நிறமுள்ள ஆடைகளே.

கோடைக் காலத்தில் யூரினல் இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய்ப்புண்டு. சிறுநீரின் அளவு குûறைந்து, மஞ்சள் நிறமாக வரும். குளிர் காய்ச்சல் ஏற்படும்.

வெளிச்சத்தைப் பார்த்தாலே சிலருக்குத் தலை வலி வந்துவிடும். கறுப்புக் கண்ணாடி அணிந்தால் தலை வலியில் இருந்து தப்பிக்கலாம்.

கோடைக் காலத்தில் வருகின்ற இன்னொரு நோய் டைபாய்டு.  கண்ட இடத்தில் கண்ட தண்ணீரைக் குடிப்பதால் நீரின் மூலம் பரவும் கிருமிகளால் டைபாய்டு நோய் வந்துவிடும். இதனால் சிலருக்கு வயிற்றுப் போக்கும் ஏற்படும். வயிற்றுப் போக்கினால் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க தண்ணீரை நிறையக் குடிப்பது - அதுவும் நல்ல தண்ணீரா என்று பார்த்துக் குடிப்பது முக்கியம்.

வெயிலினால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சன் ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். நல்ல தரமான சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தினால் அலர்ஜி ஏற்படாது. எண்ணெய்ப் பசை உள்ள தோல்களுக்கு என்றும், வறண்ட தோல்களுக்கு என்றும் தனித்தனியாக இப்போது சன் ஸ்கிரீன் தயாரிக்கிறார்கள். உங்களுக்கு எது தேவையோ, அதை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கோடைக் காலம் வந்துவிட்டால் வீட்டில் வாடகை ஏஸியையாவது பொருத்திக் கொள்கிறார்கள். ஒரு நாள் முழுக்க ஏஸியில் இருப்பது நல்லதல்ல. பகலில் குறைந்தது 4 மணி நேரம் ஏஸியைப் பயன்படுத்தலாம். அளவுக்கதிகமாக ஏஸியைப் பயன்படுத்தினால் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. பல அலுவலகங்களில் எந்நேரமும் ஏஸி ஓடிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிர்ந்த தண்ணீரில் குளிப்பது அவசியம். வீட்டிற்கு வந்தவுடன் நல்ல காற்றோட்டமான அறைகளில் இருக்க வேண்டும்.

கோடை வந்துவிட்டாலே கூடவே மாம்பழம், பலாப் பழம் வந்துவிடும், மாம்பழம் சாப்பிட்டால் சூடு என்று சொல்வார்கள். அதனால் வயிற்றுப் போக்கு ஏற்படும் என்றும் சொல்வார்கள். உண்மையில் மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம். நாம் மாம்பழம் சாப்பிடும்போது அதிக அளவில் நார்ச்சத்து குடலுக்குள் செல்வதால், அதிக அளவில் மலம் கழிக்க நேர்கிறது. மாம்பழம் சாப்பிட்டால் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்'' என்கிறார் கெளசல்யா நாதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.