புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கர்நாடக சங்கீதத்தில் திருக்குறள்!

காலத்தால் அழியாதது எது? எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிற தன்மையோடு எது இருக்கிறதோ, அது காலத்தால் அழியாது. நமது திருக்குறளும் அப்படிப்பட்டதுதான்.

News image
Updated On :13 ஏப்ரல் 2014, 4:44 am

ந. ஜீவா

காலத்தால் அழியாதது எது? எல்லாக் காலத்துக்கும் பொருந்துகிற தன்மையோடு எது இருக்கிறதோ, அது காலத்தால் அழியாது. நமது திருக்குறளும் அப்படிப்பட்டதுதான். ஓலைச்சுவடியில் எழுதப்பட்ட திருக்குறள், இன்டர்நெட், ஆடியோ, வீடியோ சிடி என பல வடிவங்களை எடுத்து இன்றளவும் உயிர்ப்போடு இருக்கிறது.
 இப்போது திருக்குறள் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளாக மாறி சிடி வடிவம் எடுத்து இருக்கிறது.
 ஆம். "திருக்குறள் மதுர கீர்த்தனை' என்ற பெயரில் ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ஆர்.பத்மாசனி.
 கர்நாடக சங்கீதத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள அவரை, சென்னை அசோக் நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினோம்:
 
 திருக்குறள் மதுர கீர்த்தனைகளை நீங்களே உருவாக்கினீர்களா? வேறு யாராவது உருவாக்கி வைத்திருந்த கீர்த்தனைகளை நீங்கள் பாடினீர்களா?
 திருக்குறளை கீர்த்தனைகளாக எழுதி வைத்தவர் கர்நாடக சங்கீத மேதை மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகள். கி.பி.1893 இல் பிறந்த அவர் 1958 இல்தான் மறைந்தார். திருக்குறளில் உள்ள 1330 திருக்குறள்களையும் அவர் 289 கீர்த்தனைகளாக உருவாக்கி வைத்திருந்தார்.
 நான் மதர் தெரசா பல்கலைக்கழகத்தில் இசையில் டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஆராய்ச்சி செய்ய மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகளின் திருக்குறள் கீர்த்தனைகளைத்தான் எடுத்துக் கொண்டேன். இதற்காக அவர் எழுதிய திருக்குறள் மதுர கீர்த்தனைகளைத் தேடி, சென்னையில் உள்ள அவருடைய வீட்டுக்குச் சென்றேன். அங்கே கிடைக்கவில்லை. மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகளின் சகோதரர் மகன் ராமநாதனிடம் இருப்பதாகக் கேள்விப்பட்டு, அவருடைய வீட்டுக்குச் சென்று அந்தக் கீர்த்தனைகளை வாங்கி வந்தேன். மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகள் எழுதிய 289 திருக்குறள் மதுர கீர்த்தனைகளில் இப்போது இருப்பது 190 தான். 99 கீர்த்தனைகளைக் காணவில்லை. கிடைத்த 190 கீர்த்தனைகளும் மிகவும் இற்றுப் போன தாளில் உதிர்கின்ற வகையில்தான் இருந்தன.
 அறத்துப்பாலில் 82 கீர்த்தனைகள், பொருட்பாலில் 82 கீர்த்தனைகள், இன்பத்துப்பாலில் 26 கீர்த்தனைகள்தான் கிடைத்தன. அவருடைய திருக்குறள் கீர்த்தனைகளைத்தான் நான் பாடியிருக்கிறேன்.
 
 இசையில் முனைவர் பட்டம் பெற்றவர் என்ற முறையில் நீங்கள், மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகள் உருவாக்கிய திருக்குறள் மதுர கீர்த்தனைகளின் சிறப்பம்சமாக எவற்றைக் கருதுகிறீர்கள்?
 மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகளின் கீர்த்தனைகளின் சிறப்புகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். உதாரணமாக, கர்நாடக சங்கீதத்தில் சில ராகங்கள் மட்டும் இருக்கும். அந்த ராகங்களுக்குப் பாடல்கள் இருக்காது. ரச வினோதினி, ஜகன் மனோகரி, ஆதி பைரவி, நாகரி, நாட்டியாபரணம், லதா மஞ்சரி, கமலமோகனம், வஜ்ரகாந்தி போன்ற ராகங்களுக்கு கீர்த்தனைகள் இல்லை; அல்லது குறைவு. மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகள் இந்த ராகங்களைப் பயன்படுத்தி திருக்குறள் கீர்த்தனைகளை உருவாக்கியிருக்கிறார். இது ஒரு சிறப்பு.
 "அகர முதல எழுத்தெல்லாம்' குறளை ஹம்சத்வனி ராகத்தில் உருவாக்கியுள்ளார். "கேள்வி' அதிகாரக் குறள்களை காம்போதி ராகத்திலும், "இனியவை கூறல்' அதிகாரக் குறள்களை காப்பி ராகத்திலும், "புறங்கூறாமை' அதிகாரக் குறள்களை அமிர்தவர்ஷினி ராகத்திலும் உருவாக்கியிருக்கிறார்.
 
 திருக்குறள் அளவில் மிகவும் சிறியது. கீர்த்தனையாக மாற்றப்படும்போது அளவு ஒரு பிரச்னையாக இருந்திருக்காதா?
 கீர்த்தனையில் பல்லவி, அநுபல்லவி, சரணங்கள் இருக்கும். அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற குறளில், "பகவன் முதற்றே உலகு' என்பதை பல்லவியாகவும், "அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி' என்பதை அநுபல்லவியாகவும் கொண்டு கீர்த்தனையை மாயூரம் விஸ்வநாத சாஸ்திரிகள் உருவாக்கியிருக்கிறார்.
 ஒரு கீர்த்தனையில் 2 குறள்களே இடம் பெற்றிருக்கின்றன. இன்னொரு கீர்த்தனையில் 9 குறள்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது சரணங்களில் நிறையக் குறள்கள் உள்ளன. அதனால்தான் 1330 குறள்களை வெறும் 290 கீர்த்தனைகளாக அவரால் ஆக்க முடிந்திருக்கிறது.
 
 திருக்குறளைக் கீர்த்தனைகளாக்கி பாடுவதால் என்ன பயன் இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
 இலக்கியத்தை வெறும் இலக்கியமாகப் படிக்கும்போது சிரமமாக இருக்கும். அதையே இசையாக, பாடலாகப் பயிலும்போது எளிதாக இருக்கும்.
 எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் திருக்குறளைப் படிக்க முடியுமா? திருக்குறளைப் பாடலாக்கி மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் எளிதாக மனப்பாடம் செய்ய முடியும். அதனால்தான் திருக்குறள் கீர்த்தனைகளைப் பாடி, குறுந்தகடு வடிவில் கொடுத்திருக்கிறேன்.
 கர்நாடக சங்கீதத்தை ரசிப்பவர்கள் குறைவு. திருக்குறளைக் கீர்த்தனைகள் வடிவத்தில் தரும்போது, கர்நாடக சங்கீதம் தெரிந்த சிலர் தானே ரசிக்க முடியும்?
 இசையை ரசிப்பதெல்லாம் பழக்கத்தில் வரக் கூடியதே. சிறுவயதில் இருந்தே சினிமா பாடல்களை ரசிக்கப் பழகியிருந்தால் அது நமக்கு ரொம்பப் பிடிக்கும். நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டுப் பழகியிருந்தால் அவற்றைக் கேட்கப் பிடிக்கும். பழக்கப்படாத எந்த இசையையும் ஆரம்பத்தில் ரசிப்பதில் சிரமம் இருக்கும். மேற்கத்திய இசையைக் கூட எவ்வளவு பேரால் ரசிக்க முடிகிறது? கர்நாடக சங்கீதத்தில் உள்ள திருக்குறளை ஒரு தடவைக்கு இரண்டு தடவை கேட்டால் அதில் ஈர்க்கப்படுவார்கள் என்பது உறுதி.
 அதுமட்டுமல்ல, நான் உருவாக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில் கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளைப் பாடியிருந்தாலும், மேற்கத்திய இசைக் கருவிகளையும் பயன்படுத்தியிருக்கிறோம். மேற்கத்திய இசையையும் பயன்படுத்தியிருக்கிறோம். எனவே திருக்குறள் மதுர கீர்த்தனைகளைக் கேட்கும்போது, திரைப்படப் பாடல்களைக் கேட்பதைப் போன்ற உணர்வே ஏற்படும். எனவே திருக்குறளைப் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த சிடிகள் பயன்படும் என்றே நினைக்கிறேன்.
 
 திருக்குறளை கர்நாடக இசையில் கொண்டு வந்திருக்கிறீர்கள். மேற்கத்திய இசையில் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறதா?
 என் மகன் அபினவ் கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி, மேற்கத்திய இசை ஆகியவற்றில் தேர்ச்சி மிக்கவர். ஏற்கெனவே திருக்குறள் ஜெர்மன் மொழியிலும், பிரெஞ்ச் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அவற்றை மேற்கத்திய இசை வடிவில் பாடி, இசை ஆல்பங்களாகக் கொண்டு வரும் ஆசை உள்ளது.
 
 திருக்குறள் மதுர கீர்த்தனைகள் குறுந்தகடு உருவாக்கும்போது சந்தித்த பிரச்னைகள்?
 பெரிய அளவுக்குப் பிரச்னைகள் இல்லை. காரணம், எங்களுக்கு ஸ்டீபன் தேவாஸ் உதவியாக இருந்தார். அவர் ஓர் இசைப் பள்ளி நடத்துகிறார். அந்தப் பள்ளி மாணவர்களே இந்த சிடிக்குப் பின்னணி இசைக் கருவிகளை வாசித்தனர். அவருடைய ஸ்டுடியோவிலேயே ரெக்கார்டிங் வேலைகளும் நடந்தன. அதனால் சிரமமாகத் தெரியவில்லை.
 
 இவை தவிர இசைக்கு வேறு என்ன செய்கிறீர்கள்?
 கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்கிறேன். என்னிடம் வாய்ப்பாட்டுக் கற்றுக் கொள்ள ஆர்வமாக மாணவர்கள் வருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள மாணவர்களுக்கு ஸ்கைப் மூலமாக கர்நாடக சங்கீதம் கற்றுத் தருகிறேன்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.