காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிறந்த குழந்தைகள் திறந்த புத்தகம்

பிரம்மா குமாரிகள் மற்றும் மித்ரா பவுண்டேஷன் சார்பில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் சிறப்பு தியானம்

News image
Updated On :21 டிசம்பர் 2014, 9:47 am

ஸ்ரீதேவி குமரேசன

பிரம்மா குமாரிகள் மற்றும் மித்ரா பவுண்டேஷன் சார்பில் சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கில் சிறப்பு தியானம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு  சமீபத்தில் நடைபெற்றது. உலக அளவில் புகழ் பெற்ற பிரம்மா குமாரிகள் அமைப்பின் வாழ்வியல் பேச்சாளரான ஷிவானி, முதன்முறையாக சென்னை வந்து கலந்துகொண்டு பார்வையாளர்களுக்கு  மன இறுக்கம், கோபம், ஆணவம், பயம் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை போக்கும் ராஜயோக தியானத்தை கற்றுக்கொடுத்தார்.

பின்னர் ஷிவானி பேசுகையில்,

""பரமாத்மாவும் ஜீவாத்மாக்களும் தனித் தனியானவை.  இரண்டும் காலம் காலமாக இருந்து வருபவை. ஜீவாத்மாக்கள் மற்றும் பரமாத்மாவின் உறைவிடம் இருக்கிறது. அதை ஆத்மாக்களின் உலகம் என்று சொல்லலாம். இங்கிருந்து அவ்வப்போது ஜீவாத்மாக்கள் உலகுக்கு வந்து வாழ்க்கையை அனுபவிக்க வருகின்றனர்.  இது மாடியிலிருந்து குழந்தை கீழே விளையாடச் செல்வது போன்றது.

உலக வாழ்க்கை ஆரம்பத்தில் உல்லாசமாக இருக்கிறது.  இடையில் சிலருக்கு அலுப்பு, சிலருக்கு காயம், சிலருக்கு வெற்றி, சிலருக்கு தோல்வி என்று பலவகையாக நிகழ்கிறது.

ஆடி அலுத்த, அல்லது ஆடி அடிபட்ட குழந்தைகள் துயருற்று வீட்டுக்கு அம்மாவை நோக்கி செல்வது போல், ஜீவாத்மாக்கள் மேல் உலகம் செல்கின்றன. சிலகாலம் கழிந்ததும் மீண்டும் விளையாட ஆசை மேலிடுவதால் மீண்டும் உலக வாழ்க்கையை நாடி வருகின்றன.

ஆத்மாக்களின் உலகத்தில் இருந்து புதிது புதிதாக ஜீவாத்மாக்கள் பிறப்பெடுத்து வருகிறார்கள்.  உலகின் ஜனத் தொகை அதிகரித்துக் கொண்டே வருவதற்கு இதுவே காரணம்.

அன்பும் அமைதியும் நிறைந்த ஆத்ம உலகின் இயல்பே எனது இயல்பு என்று புரிந்து கொண்ட ஜீவர்கள் அமைதியாக வாழ முடியும். இதற்கு வேண்டியது எல்லாம் நல்ல எண்ணங்களின் பால் நாட்டம்தான். இதை என் உண்மை இயல்பு இது என்று புரிந்துகொண்ட ஜீவர்கள் எளிதில் சாதிக்க முடியும்.

மகிழ்ச்சி என்பது மிகவும் உன்னதமானது. உணர்வுப்பூர்வமானது. நாம் உடுத்தும் ஆடையிலும், வாங்கும் பொருள்களிலும் கிடைப்பது  உண்மையான மகிழ்ச்சியே அல்ல. மகிழ்ச்சியை நீங்களே உங்களுக்குள்,  ஏற்றுக் கொள்ளுங்கள். சொர்க்கமும், நரகமும் நம்மிடம்தான் இருக்கிறது. வாழ்க்கையை ஒருவர் சொர்க்கமாக நினைக்கிறார், ஒருவர் நரகமாக நினைக்கிறார். அதுவே அவரவர் எண்ணப்படி நடக்கிறது.

வீட்டிலும் சரி, வேலை பார்க்கும் இடத்திலும் சரி தவறான புரிதல், பொறாமை, நான் செய்வதுதான் சரி என்பது, மனம் விட்டுப் பேசாதது போன்றவை ஏற்படும்போதுதான் அங்கே கோபம்,  ஆணவம், பயம், மன அழுத்தம் ஏற்படுகிறது.

பிறந்த குழந்தைகள் ஒரு திறந்த புத்தகம். அதில் நாம் என்ன எழுதுகிறோமோ அதுதான் அவர்களது வாழ்க்கையாக அமைகிறது. என் வாரிசுகள் என்னைப் போல் இல்லையே என்று வருத்தப்படாமல் அவர்களுக்கு மகிழ்ச்சியாக வாழ நல்லொழுக்கங்களை கற்றுக்கொடுங்கள். அதை அவர்கள் நாளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வார்கள்.

நம்மில் உள்ள ஆத்மா பிரகாசமானவை. எதிர்மறையான எண்ணங்களை விலக்கினால், தேவதைகளாக மாறலாம். இயற்கை பல வசதி, பொருள்களைத் தருவதாக உள்ளது, நாம் பெறுபவர்களாக இருக்கிறோம். அன்பு என்பது இறைவனது வரப்பிரசாதம். காமம், கோபம் போன்ற ஐந்து தீயகுணங்களை கைவிடவேண்டும்'' என்றார்.

இந்த இயக்கத்தின் மையங்கள் உலக அளவில் 140 உள்ளன. இதில், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளனர். இதன் குறிக்கோளே ஒரு கடவுள், ஒரு உலகம், ஒரு குடும்பம் என்பது தான்.

இவ்வாறு இவர் ஆன்மிக ரீதியில் மனித மனங்களை வளப்படுத்தி வருவதையொட்டி "அúஸாசெம்மின் பெண்கள் இயக்கம்' கடந்த பத்து ஆண்டுகளின் சிறந்த பெண் சாதனையாளர் விருதினை இவ்வாண்டு இவருக்கு வழங்கியுள்ளது. 

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்தி நடிகர் சுரேஷ் ஓபராய் கலந்துகொண்டார். இவர் பேசுகையில்: ""உண்மையான அன்பு மற்றும் மனதிற்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை வழங்க வல்லது ஆன்மிக அனுபவங்களே என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதால் ஆன்மிகத் துறையில் சேவை புரிய ஆர்வத்துடன் இறங்கியுள்ளேன்'' என்றார்.

படங்கள் : யு.கே. ரவி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.