புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மூலிகைகளுக்கு வந்திருக்கிறது மவுசு!

ஏற்றுமதி செய்வது நமக்குப் புதிதல்ல. சங்க காலத்திலேயே மிளகை நாம் ஏற்றுமதி செய்திருக்கிறோம்.

News image
Updated On :28 டிசம்பர் 2014, 7:42 am

ந. ஜீவா

ஏற்றுமதி செய்வது நமக்குப் புதிதல்ல. சங்க காலத்திலேயே மிளகை நாம் ஏற்றுமதி செய்திருக்கிறோம். ""அது இப்போதும் தொடர்கிறது'' என்கிறார் கே.மாரிசாமி. மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ச.வெ.நா. கல்லூரியில் பொருளாதாரத்துறை உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் அவர், நமது நாட்டு மூலிகைகள் எந்த அளவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று ஆராய்ச்சி செய்திருக்கிறார். அவரிடம் பேசியதிலிருந்து...

""எனக்குச் சிறுவயதில் இருந்தே மூலிகைகளின் மீது ஆர்வம் உண்டு. அலோபதி மருத்துவத்தைவிட ஆயுர்வேத, சித்த மருத்துவங்களில் நம்பிக்கை அதிகம். அதனாலேயே நமது நாட்டு மூலிகைகளைப் பற்றிய செய்திகளை விரும்பிப் படிப்பேன்.

மத்திய அரசின் "ஆயுஷ்' (அவமநஏ) நிறுவனம் மாற்று மருந்துகளை ஏற்றுமதி செய்வதோடு, மூலிகைகளையும், மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்துகளையும் ஏற்றுமதி செய்கிறது.

2009- 10 ஆம் ஆண்டில் 268.06 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள மூலிகைகளையும், மூலிகைப் பொருட்களையும் நாம் ஏற்றுமதி செய்திருக்கிறோம்.  2011-12 ஆம் ஆண்டில் 358.30 மில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள மூலிகைகளையும், மூலிகைப் பொருட்களையும் ஏற்றுமதி செய்திருக்கிறோம். இவ்வாறு ஆண்டுக்கு ஆண்டு நமது நாட்டில் இருந்து மூலிகை, மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துக் கொண்டே போகிறது.

ஏன் நமது நாட்டு மூலிகைப் பொருட்களை வெளிநாட்டினர் வாங்குகிறார்கள்? என்று கேட்டால் அதற்கு நிறையக் காரணங்கள் உள்ளன.

உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் மாசடைந்துவிட்டது. உணவுப் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன. ரசாயனப் பொருட்கள், உரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை உண்பதால் நோய்கள் அதிகமாகிவிட்டன. இந்த நோய்கள் எல்லாவற்றையும் அலோபதி மருத்துவத்தால் சரி செய்ய முடியவில்லை. உதாரணமாக சர்க்கரை நோய்க்கு அலோபதி மருத்துவத்தில் மருந்தில்லை. புற்றுநோயை அலோபதி மருத்துவத்தால் குணப்படுத்த முடிவதில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அலோபதி மருத்துவத்தில் பக்க விளைவுகள் அதிகம். பணச் செலவும் அதிகம். இதனால் உலகம் முழுவதுமுள்ள மக்கள் மாற்று மருத்துவத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இது மூலிகை, மூலிகைப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்க முக்கியமான காரணம்.

இன்னொருபுறத்தில், நமது நாட்டு மூலிகை மருந்துகள் அலோபதி மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத சில நோய்களை குணப்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.   உதாரணமாக டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு பயன்படுவது எல்லாருக்கும் தெரியும்.

எனவே நமது மூலிகைகளின் அருமைகளைத் தெரிந்து கொண்ட அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகள் அதிக அளவில் நமது நாட்டிலிருந்து மூலிகைகளை இறக்குமதி செய்கின்றன.

இன்றைய நாளில் நமது நாட்டில் விவசாயம் சிறப்பாக நடைபெறவில்லை. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயத்தில் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளின் பயன்பாடு அதிகரித்திருப்பது, பஞ்சம், வெள்ளம் என பல காரணங்களினால் விவசாயிகள் வேறு தொழில்களை நாடிச் செல்வதும் அதிகரித்துள்ளது.

நமது உணவுப் பழக்கமும் மாறிவிட்டது. பிறநாடுகளில் செய்யப்பட்ட - பாக்கெட்டில் அடைக்கப்பட்ட - உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கிறோம். அவற்றை உண்ணும் பழக்கம் நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது.

இந்தச் சூழலில் நமது விவசாயிகள் மூலிகை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.  ஆயுஷ் மாதிரியான மத்திய அரசு நிறுவனங்கள் மூலிகை ஆராய்ச்சிக்கென ஆண்டுக்கு ரூ.100 கோடி அளவுக்குச் செலவு செய்கிறார்கள். மத்திய அரசின் தேசிய மருத்துவப் பயிர்கள் வாரியம் மூலிகை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு 25 சதவீதம் மானியம் தருகிறார்கள். இதனால் மூலிகைகளை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

எந்தப் பயிர் போட்டாலும் விளையக் கூடிய மண் வளம் உள்ள நாடுகளில் நமது நாடும் ஒன்று. இதுவும் மூலிகை வளர்ப்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

நமது நாட்டில் இருந்து அவுரி இலை, நித்திய கல்யாணி, கண்வலிக்கிழங்கு, செங்காந்தள் மலர், நெல்லிக்காய், அஸ்வகந்தா, துளசி, கோலியாஸ், நெருஞ்சி போன்ற 32 வகையான மூலிகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நமது நாட்டிலிருந்து மூலிகைகளை வாங்கும் நாடுகள் ஒரே ஒரு நிபந்தனையை விதிக்கின்றன.

மூலிகைகளை எந்த ரசாயன உரங்களைக் கொண்டோ, பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தியோ வளர்க்கக் கூடாது என்பதே அந்த நிபந்தனை. இயற்கையான முறையில் இயற்கை உரங்களைக் கொண்டு வளர்க்கப்பட்ட மூலிகைகளை வாங்குவதில் அவர்கள் - குறிப்பாக ஜப்பானும், ஜெர்மனியும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது நாட்டுக்கு வந்து நிலங்களை வாங்கி, ஆட்களை வைத்து மூலிகை விவசாயம் செய்து தங்களுடைய நாட்டுக்கு எடுத்துச் செல்வதும் இப்போது நடைபெறுகிறது.

ஆனால் இந்த மூலிகை ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்குமா? என்று கேட்டால் உறுதியாக அதிகரிக்கும் என்று சொல்ல முடியாதநிலையே உள்ளது. ஏனென்றால் மேலைநாடுகள் அறிவியல் முன்னேற்றத்தில் மேலோங்கியுள்ளன.  ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக நானோ டெக்னாலஜியில் நிறைய முன்னேற்றம்.

இப்போது நமது நாட்டில் மூலிகைகளை வாங்கும் அவர்கள், மூலிகையைப் பகுத்துப் பகுத்து அதில் உள்ள எந்தப் பொருள் குறிப்பிட்ட நோய்களைக் குணமாக்குகிறது என்று தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, நிலவேம்பு டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துகிறது என்று தெரியும். நிலவேம்பில் உள்ள எந்த நுண்பொருள் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துகிறது என்று  அவர்கள் கண்டுபிடித்து, அதை செயற்கையான முறையில் தயார் செய்துவிட்டார்கள் என்றால் நிலவேம்பை ஏன் ஏற்றுமதி செய்யப் போகிறார்கள்?

நமது நாட்டில் நல்ல மண்வளமும், மூலிகைகளை  வளர்ப்பதற்கான சூழ்நிலைகளும் இருந்தாலும், சீனாதான் உலக அளவில் மூலிகை ஏற்றுமதியில் முதலிடத்தில் இருக்கிறது. அதற்குக் காரணம், நமது நாட்டில் போல ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகள் அங்கு கடினமாக  இல்லை. நமது நாட்டில் விவசாயிகள் மூலிகை ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் ஐந்து அரசுத்துறைகளை அணுகி ஒப்புதல் பெற வேண்டும்.

இரண்டாவதாக, எல்லாத்துறைகளையும் போல மூலிகைகளை ஏற்றுமதி செய்வதில் இடைத்தரகர்கள் அதிகமாக உள்ளனர்.

ஒரு கிலோ நெருஞ்சிவிதையை விவசாயிகளிடம் இடைத்தரகர்கள் ரூ 5 முதல் ரூ.8 வரை வாங்கி, வியாபாரிகளிடம் ரூ 40 க்கு மேல் விற்பனை செய்கிறார்கள். அவர்கள் அதை ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால் மூலிகை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்குக் கிடைப்பது மிகவும் குறைவாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இருந்தால் விவசாயிகள் எப்படி உற்சாகமாக மூலிகை விவசாயம் செய்வார்கள்?

நமதுநாட்டின் பாரம்பரிய மூலிகைகளை தங்களுடைய பாரம்பரிய மூலிகை என்று வெளிநாட்டினர் கூறும் போக்கும் உள்ளது. நமது நாட்டின் கடுகு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றுக்கான காப்புரிமை பிற நாடுகளிடம் உள்ளது. இப்படியே போனால் நமது நாட்டு மூலிகை என்று சொல்லிக் கொள்வதற்கு எதுவும் மிஞ்சாமல் போய்விடும் அபாயம் உள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.