கண்டந்திப்பி− ரசமும், கறிவேப்பிலைக் குழம்பும்!
சென்னை ராயப்பேட்டை. டெக்கான் பிளாஸô ஹோட்டல். பெரிய ஹோட்டல்களில் என்னென்ன வெளிநாட்டு உணவுகளைப் பரிமாறுவார்களோ? என்றுதான்


சென்னை ராயப்பேட்டை. டெக்கான் பிளாஸô ஹோட்டல். பெரிய ஹோட்டல்களில் என்னென்ன வெளிநாட்டு உணவுகளைப் பரிமாறுவார்களோ? என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கே பரிமாறப்பட்ட உணவு வகைகளைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
பானகம், கீரை வடை, இனிப்புப் பச்சடி, எள்ளுத் துவையல், மணத்தக்காளி வற்றல் குழம்பு, சேப்பங்கிழங்கு வறுவல், வாழைக்காய் புளிக்கூட்டு, எண்ணெய் கத்திரிக்காய் அரைத்த கறி, கீரை மசியல், மாதுளம்பழம் கேசரி, போளி... இப்படி நிறைய...
பெரிய ஹோட்டலுக்கு என்ன ஆனது? இல்லை மக்கள் இந்த மாதிரி உணவுகளின் பக்கம் ஒரேயடியாகச் சாய்ந்துவிட்டார்களா? என்று கேட்கத் தோன்றுகிறதா?
"மயிலை மாமி ஃபுட் ஃபெஸ்டிவல்' என்ற பெயரில் தென்னிந்திய சமையலைப் பிரபலப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உணவுத் திருவிழாவில்தான் இந்தக் கீரை மசியலும் மணத்தக்காளி வற்றல் குழம்பும்.
இவற்றைச் செய்து தந்து சாப்பிட வந்த அனைவரையும் அசர வைத்தவர் கும்பகோணத்தைச் சேர்ந்த பிரேமா மாமி. அவரிடம் பேசியதிலிருந்து...
""கும்பகோணத்தில் எங்கள் குடும்பம் பரம்பரையாக சமையல் தொழிலைச் செய்து வரும் குடும்பம். எனவே பாரம்பரிய சமையல் செய்வதைத் தனியாக நான் எங்கு சென்றும் கற்றுக் கொள்ளவில்லை.
பொதுவாக வட இந்திய உணவுத் திருவிழா, இத்தாலிய உணவுத் திருவிழா என்று உணவுத் திருவிழாக்களை எடுத்து அமர்க்களப்படுத்துகிறார்கள். ஆனால் நமது நாட்டு உணவு வகைகளை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. உண்மையைச் சொல்லப் போனால் நம் நாட்டு உணவு, உணவு மட்டுமல்ல; மருந்தும் கூட. நமது உணவின் பெருமையை, அருமையைத் தெரியாத இன்றையத் தலைமுறையினர் ஃபாஸ்ட் ஃபுட் மோகத்தில் வீழ்ந்து, உடலுக்குக் கேடு தரும் பல உணவுகளை உண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நமது பாரம்பரிய உணவின் பெருமைகளை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, டெக்கான் பிளாசா ஹோட்டல் இந்த உணவுத் திருவிழாவை ஏற்பாடு செய்து என்னையும் பங்கேற்கச் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
இளம் தலைமுறையினருக்கு பாரம்பரிய உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்தோம். ஆனால் இங்கே வந்தவர்களோ எல்லா வயதினரும். தாத்தா, பாட்டிகளுடன் பேரன், பேத்திகளும் சாப்பிட வந்தது ஆச்சரியமாக இருந்தது. அதே சமயம் எந்த வயதினர் சாப்பிட்டாலும் அவர்களுடைய உடல் ஏற்றுக் கொள்ளும் வகையில் இந்த உணவுகள் இருப்பதையும் தெரிந்து கொண்டோம்.
பருப்பு உருண்டைக் குழம்பு, கற்பூரவல்லி ரசம், கண்டந்திப்பிலி ரசம், கறிவேப்பிலைக் குழம்பு என்று இங்கே நாங்கள் பரிமாறிய உணவுகள் பலருக்குப் புதியனவாக இருந்தன.
சாப்பிட்டு முடிந்ததும், பல பெண்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு, ""இதை எப்படிச் செய்ய வேண்டும்?'' ""அதை எப்படிச் செய்தீர்கள்?'' என்று கேள்விகளால் என்னைத் துளைத்தெடுத்துவிட்டார்கள்.
இந்த ஹோட்டல்களில் தங்கியிருந்தவர்கள் ரசித்துச் சாப்பிட்டார்கள். ஆனால் அதைவிட வெளியில் இருந்து வந்து சாப்பிட்டுச் சென்றவர்களே அதிகம். ஆந்திரா சாப்பாடு, வட இந்திய உணவு என்றால் அதை விரும்புபவர்கள், அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகம் பேர் வந்து சாப்பிடுவார்கள். ஆனால் இந்த தென்னிந்திய பாரம்பரிய உணவுகளைச் சாப்பிட எல்லா மொழி, மாநிலத்துக்காரர்களும் விரும்பி வந்தனர் என்பது எங்களுக்கு உற்சாகத்தைத் தந்தது.
கடந்த ஒரு வருடமாக சென்னை மாம்பலத்தில்தான் இருக்கிறோம். எங்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டு விசேஷங்களுக்கு கேட்டரிங் சர்வீஸ் செய்கிறோம்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...