

என் வயது 79. முதிர்வின் காரணமாகத் தூக்கம் வருவதில்லை. இரவு 1- 2 மணிக்கு மேல்தான் உறக்கம் வருகிறது. இரவு உணவுக்குப் பின் ஒரு தேக்கரண்டி அளவில் கசகசாவை வாயில் போட்டு மென்று வரும்படியும் படுக்கைக்குச் செல்லும் முன் இளஞ்சூடான வெந்நீர் குடிக்குமாறும் சித்தமருத்துவர் தெரிவித்தார். அதன்படி செய்து வந்ததால் இப்போது படுத்ததும் உறக்கம் வந்துவிடுகிறது. ஆனால் கசகசாவைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்க விளைவுகள் எவையும் ஏற்படுமா? என்று தெரியவில்லை. கசகசாவிற்கு வேறு என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன?
அ.பாண்டுரங்கன், அவ்வைநகர் புதுச்சேரி.
Latin Name-Papaver somniferum
Family-Papaveraceae
English Name-Opium poppy, White poppy
Tamil Name - கசகசா, போஸ்தக்காய்
போஸ்தக்காயின் உள்ளேயுள்ள விதை இது. குடற்புண்ணை ஆற்றும், உடலிற்கு வலிவு தரும். இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம். தூக்கமின்மை, வயிற்றில் கிருமி, தினவு, சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் ஆகியவற்றுக்குக் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம். கசகசா, வால் மிளகு, வாதுமைப் பருப்பு, கற்கண்டு இவற்றைச் சம அளவு சேர்த்து இடித்துத் தேன் நெய் போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டால், உடல் மழமழப்புடன் வலிவு பெறும். சுக்கில விருத்தி ஏற்படும். மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலிக்கு மாதவிடாய் காலத்திற்கு முன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிடலாம்.
வாதுமைப் பருப்பையும் 3 முதல் 5 கசகசாவையும் (அரை ஸ்பூன்) பசுவின் பாலில் அரைத்துக் காய்ச்சிச் சாப்பிட, பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் பெருகும். பொதுவாக உடல் வலிமை அடையவும் பருமனாகவும் காங்கை தணியவும் ஏற்ற பானம். தனித்துக் கசகசாவை ஊற வைத்து அம்மியில் அரைத்து ஜலம் விட்டுக் குழப்பிப் பால் பிழிந்து அடுப்பிலேற்றிக் காய்ச்சிக் கொதி வந்ததும் இறக்கி, பால், சர்க்கரை சேர்த்துச் சாப்பிடலாம். பருவத்திற்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் புஷ்டி வலிவு பெறவும் ஏற்ற காலை உணவு இது.
கசகசாவை முதல் நாளிரவு ஊற வைத்துக் காலையில் அரைத்துத் தேங்காய்ப்பால், மோர், தயிர், வடித்த கஞ்சி, காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். பொலிவு, மழமழப்பு அதிகமாகும். இத்துடன் பாசிப் பருப்பையும் சேர்த்து உபயோகிக்கலாம்.
பாவப்ரகாசர் எனும் முனிவர் கசகசாவைப் பற்றிக் கூறும்போது, போஸ்தக்காயின் மேலோட்டுப் பகுதியை பச்சையாய் இருக்கும்போது கீறினால் வரும் பாலை காயவைத்து நன்றாகப்பொடித்துத் தேன் குழைத்து சாப்பிட்டால் பேதியை நிறுத்துமென்றும், மார்பில் சளி சேர்ந்து ஏற்படும் இருமலை குணப்படுத்திவிடுமென்றும் கூறியிருக்கிறார். குளிர்ச்சி தரும் கசகசாவை மசாலாப் பொருட்களுடன் உணவில் ருசி சேர்ப்பதற்காக அரைத்துச் சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இதனுடைய அளவு கூடுமேயானால் மயக்கத்தை ஏற்படுத்தும். கசகசாவிற்கு மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை இருப்பதால் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், விடாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை நன்றாக அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால், அழுகை குறைந்து குழந்தை நன்றாகத் தூங்கும். பத்து கிராம் கசகசாவுடன், ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள், ஒரு பிடி வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகள் ஏற்பட்ட முகப்பகுதிகளில் பூசினால் தழும்புகள் மறையத் தொடங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலையில் சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில்
போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.