எழுதிச் சம்பாதித்தே வாழ்ந்தவர்!
தில்லி சுஜன்சிங் பார்க்கில் உள்ள குஷ்வந்த் சிங் வீட்டுக்குச் சென்றால் வாசல் கதவில் ""நான் எதிர்பார்க்காத நபராக இருந்தால் தயவுசெய்து


தில்லி சுஜன்சிங் பார்க்கில் உள்ள குஷ்வந்த் சிங் வீட்டுக்குச் சென்றால் வாசல் கதவில் ""நான் எதிர்பார்க்காத நபராக இருந்தால் தயவுசெய்து காலிங்பெல்லை அழுத்தாதீர்கள்'' என்ற வாசகத்தைப் பார்க்கலாம். அதையும் மீறி அழுத்தினால் உள்ளே வரவேற்று உட்கார வைப்பார். அவரது மனைவி உயிருடன் இருந்தவரை அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அன்புடன் எச்சரிப்பதுண்டு. சுற்றிலும் புத்தகங்கள், குஷன் சேரில் நடுநாயகமாக கம்பீரமாக ஓர் அரசனைப்போல் கால்களை பிரம்பு நாற்காலி ஒன்றின் மீது நீட்டியபடி அதன் மீது சால்வையைப் போர்த்தியபடி அமர்ந்திருப்பார். பக்கத்தில் நாற்காலி மீது பேப்பர்கள் சிதறியிருக்கும். கடந்தவாரம் 99-ஆவது வயதில் அவர் மறைந்தபோது ""தன்னுடைய மரணம் எப்படி அமைய வேண்டுமென்று அவர் விரும்பினாரோ அதன்படியே இறந்தார். இறப்பதற்கு முன்தினம்கூட அவருக்குப் பிடித்தமான சிங்கிள் மால்ட் விஸ்கியை அருந்தினார். காலையில் வழக்கம்போல் பத்திரிகைகளைப் படித்துவிட்டு அவருக்குப் பிடித்தமான கிராஸ்வோர்ட் புதிரைப் பூர்த்தி செய்துவிட்டுப் படுத்தார். தூக்கத்திலேயே பகல் 12.15 மணிக்கு இறந்துவிட்டார்'' என்று அவரது மகனும், பத்திரிகையாளருமான ராகுல் சிங் கூறினார்.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்பு மேற்கு பஞ்சாபில் உள்ள ஹடாலி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த குஷ்வந்த் சிங், நான்கு வயது வரை பாட்டியுடனே வளர்ந்து வந்தார். ஐந்தாவது வயதில் பெற்றோர்களுடன் தில்லியில் குடியேறிய இவர், தில்லி மாடர்ன் ஸ்கூலில் 1930-ஆம் ஆண்டு மெட்ரிகுலேஷனை முடித்து மேலும் இரண்டாண்டுகள் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் (பின்னாளில் அரசுக் கல்லூரி, லாகூர்) படித்தார்.
லண்டன் கிங்ஸ் காலேஜில் சட்டம் படித்த இவர் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் ஏழாண்டுகள் லாகூரில் வக்கீலாகப் பயிற்சிபெற்று, மாடர்ன் ஸ்கூல் பெண் ஒருவரையே திருமணம் செய்து கொண்டார். பிரிவினைக்குப் பின்னர் இந்தியா திரும்பிய இவர், தனக்குப் பிடிக்காத வக்கீல் தொழிலையும் உதறித் தள்ளினார்.
1947-ஆம் ஆண்டு வெளியுறவுத் துறையில் பணியில் சேர்ந்த இவர், இங்கிலாந்திலும், கனடாவிலும் பணியாற்றியபோது லாகூரில் இருந்தபோது எழுதிய கதைகளை அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து பத்திரிகைகளுக்கு அனுப்ப, அவை பிரசுரமானதைத் தொடர்ந்து 1955-ஆம் ஆண்டு எழுதிய "மனோ மஞ்சரா' என்ற நாவல் அமெரிக்கப் பதிப்பாளரால் வெளியிடப்பட்டபோது நல்ல வரவேற்பைப் பெற்றதோடு பெரும் தொகையும் கிடைத்தது. இந்த நாவல்தான் பின்னர் "டிரெயின் டு பாகிஸ்தான்' என்ற பெயரில் வெளியாயிற்று. தனக்கும் கதை எழுதும் திறமை இருக்கிறது என்பதை உணர்ந்த இவர் கதைகள் எழுதிச் சம்பாதிப்பதோடு குறைந்த கால அரசு வேலைகளையும் ஏற்றுக் கொண்டார்.
"இந்த ஆள் ஒன்றுக்கும் உதவாதவன், எந்த வேலையும் செய்யத் தெரியவில்லை' என்று மக்கள் கொடுத்த நற்சாட்சி சான்றிதழால் அரசு வேலையையும் புறக்கணித்தார். அரசு ஊழியர்களுக்குக் கிடைத்துவந்த குறைந்த ஊதியம் காரணமாக பாரிஸில் யுனெஸ்கோ அடிப்படையிலான பணியையும் விட்டுவிட்டார். தொடர்ந்து ஆல் இந்தியா ரேடியோ (1951) வேலையையும் உதறினார். இதுகுறித்து ஒருமுறை அவர் எழுதியபோது "பல ஆண்டுகள் சட்டம் படிப்பதிலும் பயிற்சி பெறுவதிலும் நேரத்தை வீணாக்கிவிட்டேன். அரசு வேலை காரணமாக வெளிநாடுகளில் தங்கி பல ஆண்டுகளை வீணாக்கியதற்காக மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார்.
1969 -ஆம் ஆண்டு "இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' ஆசிரியராகப் பொறுப்பேற்றபோது, ""இது என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனை'' என்று குறிப்பிட்டதோடு வீக்லியின் விற்பனையையும் மளமளவென்று உயர்த்தினார். தன்னை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் வாசகர்கள் ஏற்றுக் கொண்டதால் எதை எழுதினாலும் விற்பனை ஆகும் என்ற நிலை உருவானதற்காக குஷ்வந்த் சிங் மகிழ்ச்சியடைந்தார்.
இவரிடமிருந்து சமூகம், அரசியல் தொடர்பான சீரியஸ் கட்டுரைகளை வாசகர்கள் எதிர்பார்த்தனர். மாறாக இவர் இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகத்தினர் ஐயர், ஐயங்கார், ஜாட், கொங்கனி, செட்டியார், சியாஸ், சன்னிஸ், அகர்வால், ஜெயின் என பலதரப்பட்ட சமூகங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டிச் சிறப்பிதழ்களை வெளியிட்டது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னாளில் இதுபற்றி குஷ்வந்த் சிங் குறிப்பிடுகையில் ""இப்போதெல்லாம் ஆசிரியரே விரும்பி ஒரு கட்டுரையை, கதையைப் பிரசுரிக்க நினைத்தாலும் நிர்வாகம் அதை மாற்றும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அந்நாளில் இந்த மாறுதல்கள் வரவேற்புக்குரியதாக இருந்தது'' என்று எழுதினார்.
இவர் எழுதிய பல நாவல்கள் கண்டனத்திற்கும் விவாதத்திற்கும் உரியதாகவும் இருந்தன. "சீக்கியர் வரலாறு', "தில்லி' போன்ற புத்தகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. எழுதிச் சம்பாதிப்பதன் மூலமே தன் வாழ்க்கையை நடத்த வேண்டுமென்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அவரைப் பொருத்தவரை விரசமில்லாமல் எழுதுவதை நாவலாக ஏற்க மறுத்தார். வாரந்தோறும் இவரது ""வித் மாலிஸ் டுவெர்ட்ஸ் ஒன் அண்ட் ஆல்'' என்ற பகுதி அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளிவந்தது. அந்தப் பகுதியின் இறுதியில் வாசகர்களின் ஜோக்குகளை இவர் தேர்வுசெய்து வெளியிடுவது பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அதன் தொகுப்புகளே "குஷ்வந்த் சிங் ஜோக்ஸ்' என்று புத்தகமாக வெளிவந்தது. பத்தாண்டு காலம் வீக்லி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். பின்னர் இந்துஸ்தான் டைம்ஸ், நேஷனல் ஹெரால்ட் போன்ற பத்திரிகை ஆசிரியராகவும் பொறுப்பேற்றார்.
எமர்ஜென்சியை, சஞ்சய் காந்தியை ஆதரித்தது போன்றவை மற்றவர்களுக்கு முரண்பாடாகத் தோன்றினாலும் அவரைப் பொருத்தவரை அதை நியாயப்படுத்தினார். 1974-ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட "பத்மபூஷண்' விருதை, பொற்கோவிலில் ராணுவத்தினர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக 1984-ஆம் ஆண்டில் அதைத் திரும்ப ஒப்படைத்தார். 1980 முதல் 1986-ஆம் ஆண்டுவரை ராஜ்யசபா உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
""வாழும்போதே மரணத்திற்குத் தயாராக இரு'' என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பொன்றை வெளியிட்ட இவர், 1943-ஆம் ஆண்டு தன்னுடைய 28-ஆவது வயதில் "தி ட்ரிப்யூன்' பத்திரிகையின் முதற்பக்கத்தில் "சர்தார் குஷ்வந்த் சிங் மரணம்' என்று தலைப்பிட்டு தன்னுடைய மரணம் குறித்து இரங்கற் செய்தியொன்றைத் தயாரித்து விளம்பரப்படுத்தி மற்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதும் உண்டு. உயிருடன் இருக்கும்போதே மரணத்தை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டுமென்று விரும்பிய இவர், 2002-ஆம் ஆண்டு "ட்ரூத் லவ் அண்ட் ஏ லிட்டில் மாலிஸ்' என்ற தலைப்பில் தன்னுடைய சுயசரிதையை எழுதி வெளியிட்டார். 2007-ஆம் ஆண்டு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
உயிருடன் இருக்கும்வரை எழுதிக்கொண்டே இருக்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தவர் நகைச்சுவையை எழுத்தில் மட்டுமின்றி, நேரில் சந்திப்பவர்களிடமும் பரிமாறிக் கொள்வதுண்டு. ஒருமுறை குஷ்வந்த் சிங் வந்த விமானத்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவர் வீக்லியில் வரும் ஜோதிடப் பக்கத்தில் தன்னுடைய ராசிக்குரிய பலனை சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாராம். தன்னை "வீக்லி' ஆசிரியர் என்று அடையாளம் காட்ட விரும்பாத குஷ்வந்த், "ஜோதிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா?'
என்று கேட்டாராம். "வீக்லியில் வரும் ஜோதிடக் குறிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருக்கிறது' என்று அவர் பதிலளித்ததைக் கேட்டு இவர் மனதிற்குள் சிரித்துக் கொண்டாராம். ஏனெனில் அவர் படித்த வீக்லியில் வெளியான ஜோதிடக் குறிப்புகள், வழக்கமாக எழுதி அனுப்புபவர் அனுப்பாததால் குஷ்வந்த் சிங்கே பழைய வீக்லிகளிலிருந்து வெவ்வேறு ராசிக்குரிய குறிப்புகளை மாற்றி அமைத்துக் கொடுத்து வெளியிடச் சொன்னாராம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...