உங்களை நீங்களே தெருவில் சந்திக்க நேர்ந்தால்...!
விஜய் சேஷாத்திரி - பெங்களூரில் பிறந்தவர். அமெரிக்காவில் வாழ்பவர். அவருக்கென்ன என்று கேட்கிறீர்களா? இந்த ஆண்டு


விஜய் சேஷாத்திரி - பெங்களூரில் பிறந்தவர். அமெரிக்காவில் வாழ்பவர். அவருக்கென்ன என்று கேட்கிறீர்களா? இந்த ஆண்டு கவிதைக்கான புலிட்சர் பரிசு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
உலக அளவில் வழங்கப்படும் பரிசு எது என்று கேட்டால் எல்லாரும் நோபல் பரிசு என்றுதான் சொல்வார்கள். அறிவியல், மருத்துவம், அமைதி, இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பான பணி செய்தவர்களுக்கு வழங்கப்படுவது நோபல் பரிசு.
உலக அளவில் இன்னொரு பரிசும் வழங்கப்படுகிறது. அது புலிட்சர் பரிசு. 1917 ஆம் ஆண்டு ஜோசப் புலிட்சர் என்ற பத்திரிகையாளரால் உருவாக்கப்பட்டு, 98 ஆண்டுகளாக புலிட்சர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதழியல், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அரும் சாதனை செய்தவர்களுக்காக வழங்கப்படும் இந்தப் பரிசு, இந்த ஆண்டு விஜய் சேஷாத்திரிக்கு கவிதைக்காக வழங்கப்பட்டிருக்கிறது.
1954 இல் பெங்களூரில் பிறந்தவர் விஜய் சேஷாத்திரி. அவருடைய அப்பா பிஸிகல் கெமிஸ்ட்ரியில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வை அமெரிக்காவில் செய்ததனால், குடும்பமே அமெரிக்காவுக்குப் போனது. நான்கு ஆண்டுகள் ஆய்வில் ஈடுபட்டு, இந்தியாவுக்குத் திரும்பினார்கள். ஆனால் கனடாவின் தேசிய ஆராய்ச்சிக் கழகம் அவருடைய அப்பாவுக்கு முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குப் பின்னும் ஆராய்ச்சியைத் தொடர்வதற்கான வாய்ப்பை அளித்தது. எனவே திரும்பவும் கனடா சென்றார்கள். அதற்குப் பின்பு அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கொலம்பஸýக்குக் குடிபெயர்ந்தார்கள். இந்தியாவுக்குத் திரும்ப வருவது தொலைதூரக் கனவாயிற்று.
""நான் 1966 இல் ஒருமுறை இந்தியாவுக்கு வந்தேன். அதற்குப் பின் 1990 இல்தான் வந்தேன். இடையில் வர முடியவில்லை. 1990 இல் கூட ஏன் வந்தேன் என்றால், என் மகனுக்கு இந்தியாவைக் காட்டுவதற்காக அவனை அழைத்துக் கொண்டு வந்தேன்'' என்கிறார் விஜய் சேஷாத்திரி.
""இந்தியாவின் கலாசாரம் அந்த அளவுக்கு என்னை ஈர்த்துவிட்டது'' என்கிறார்.
5 வயது முதலே வெளிநாட்டில் வாழ்ந்தாலும், விஜய்க்கு தென்னிந்திய சைவ உணவுகளைச் சமைக்கத் தெரியும். இட்லி செய்யத் தெரியும். தோசை சுடத் தெரியும். சாம்பார், ரசம் வைக்கத் தெரியும். ஏன் குலாப் ஜாமூன் கூட செய்யத் தெரியும். இது எப்படி? விஜய்யின் அம்மா குடும்பத் தலைவி. வாழ்ந்தது அமெரிக்காவில் என்றாலும், இந்திய வாழ்க்கையையே அமெரிக்காவிலும் வாழ்ந்திருக்கிறார்கள்.
விஜய் சேஷாத்திரியின் " 3 SECTIONS' என்ற கவிதைத் தொகுப்புக்குத்தான் இந்த ஆண்டு புலிட்சர் பரிசு கிடைத்திருக்கிறது. விஜய் சேஷாத்திரிக்கு கவிதையில் ஆர்வம் எப்படி வந்ததாம்?
""நான் 16 வயது மாணவனாக இருக்கும்போதே கவிதையில் எனக்கு ஆர்வம் வந்துவிட்டது. அமெரிக்காவின் ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளில் அப்படியோர் ஈர்ப்பு. கவிதையின் மீது காதல் கொண்டு விட்டேன். அந்தக் காதல் என்னையும் கவிதை எழுதத் தூண்டிவிட்டது. நான் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டேன்'' என்கிறார் விஜய் சேஷாத்திரி.
ஆனால் அவருடைய கவிதைகளில் இந்தியாவைப் பற்றி ஒன்றுமே இல்லை என்று குறை சொல்லப்பட்டது. இந்தியாவில் 5 வயது வரை மட்டுமே வாழ்ந்த ஒருவர் இந்தியாவைப் பற்றி என்ன எழுதிவிட முடியும்? என்று இதற்குப் பதில் சொல்லிவிடலாம்.
ஆனால் விஜய் சேஷாத்திரி அப்படிச் சொல்ல விரும்பவில்லை.
""இந்தியாவைப் பற்றி எங்கேயும் என் கவிதைகளில் இல்லை என்கிறார்கள். ஆனால் என் கவிதை முழுக்க இந்தியா நிறைந்திருக்கிறது. ஆனால் அவற்றை யாரும் பார்க்க முடியாது. என் கவிதைகளில் கண்ணுக்குத் தெரியாத ஆற்றலாக இந்தியா மறைந்திருக்கிறது'' என்கிறார் அவர்.
""நான் இந்தியக் கலாசாரத்தின் அடிப்படையில் வளர்க்கப்பட்டவன். இந்திய கலாசாரம் என்பது நீதி நெறி சார்ந்த மனதின் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடு. என் கவிதைகளில் இந்தியக் கலாசாரம் இருக்கும் அல்லவா?'' என்று கேட்கிறார் அவர்.
ஆங்கிலக் கவிதையால் அவர் ஈர்க்கப்பட்டதைப் போலவே, இந்திய வரலாற்றாலும் ஈர்க்கப்பட்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக சுதந்திரப் போராட்டம், அதற்குப் பின் ஏற்பட்ட பிரிவினை எல்லாம் அவரை ஈர்த்திருக்கிறது. பிரிவினைக்கு முன் இந்தியாவில் இருந்த லாகூர் இப்போது எப்படி இருக்கிறது? ஏற்பட்ட மாறுதல்கள் எவை? என்றெல்லாம் தெரிந்து கொள்ள ஆர்வம். லாகூருக்கு வந்து சிலநாட்கள் தங்கி இருந்தார் விஜய்.
விஜய் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்தார். தற்போது நியூயார்க் நகரில் உள்ள சாரா லாரன்ஸ் கல்லூரியில் எழுத்துத்துறை, கவிதையை மாணவர்களுக்குச் சொல்லித் தரும் விரிவுரையாளர் பணி.
WILD KINGDOM(1996), THE LONG MEADOW(2003)ஆகிய நூல்களின் ஆசிரியர். இதில் 3 நஉஇபஐஞசந கவிதை நூலுக்குத்தான் புலிட்சர் பரிசு கிடைத்திருக்கிறது.
அவருடைய கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எல்லாம் அமெரிக்காவிலும், பிறநாடுகளிலும் வெளிவரும் இதழ்களில் வெளி வந்திருக்கின்றன. "தி அமெரிக்கன் ஸ்காலர்', "தி நேஷன்', "தி நியூயார்க்கர்', "தி பாரீஸ் ரெவ்யூ', "தி டைம்ஸ் புக் ரெவ்யூ', "தி ஃபிலடெல்பியா என்கொயரர்' போன்றவை அவற்றில் சில. இதற்கு முன்பே சிறந்த இளைய தலைமுறை அமெரிக்கக் கவிஞருக்கான விருது கிடைத்திருக்கிறது. சிறந்த அமெரிக்கக் கவிஞர் என்ற விருதும் கிடைத்திருக்கிறது.
விஜய் சேஷாத்திரியின் பல கவிதைகள் மனதைப் பற்றிப் பேசுபவை.
"என்ன ஆச்சரியம்? உங்களை நீங்களே தெருவில் சந்திக்க நேர்ந்தால்...' என்கிற மாதிரி நம்மிடம் பேசுபவை.
புலிட்சர் பரிசு பெற்றுத் தந்த 3 SECTIONS கவிதைத் தொகுப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களில் ஒன்றாக இப்படிச் சொன்னார்கள்:
""இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள், மனிதன் பிறந்தது முதல் மன அளவில் அவன் சோர்ந்து துவண்டு போவது வரை உள்ள மனித மன உணர்வுகளை சோதிக்கின்றன''
இந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் வாழும் எழுத்தாளர்களிடம் விஜய் சேஷாத்திரி தொடர்புகளை வைத்திருக்கிறார். அவருடைய முதல் புத்தகம் வெளிவந்தபோது, நிறைய இந்தியாவிலிருந்து வந்த வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள் உதவி செய்தார்கள். துணையிருந்தார்கள். பிரிட்டனில் வாழும் நாவலாசிரியர் சசி தரூரின் நட்பும் அவருக்குக் கிடைத்தது.
இந்தியாவில் பிறந்து வெளிநாடுகளில் வசித்த நால்வருக்கு விஜய் சேஷாத்திரிக்குப் போலவே புலிட்சர் பரிசு எற்கெனவே கிடைத்திருக்கிறது. அவர்கள்: கோபிந்த் பெஹாரி லால், சித்தார்த்த முகர்ஜி, ஜும்பா லஹிரி, கீதா ஆனந்த்.
விஜய் சேஷாத்திரியுடன் ஐவராகியிருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...