புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நான் அழகானவள் அல்ல! வகீதா ரஹ்மான்

எனக்கு நடனத்தில் இருந்த ஈடுபாடுதான் திரையுலகத்திற்கு அழைத்து வந்தது என்றும் சொல்லலாம். திட்டமிட்டு விதி செய்த சதி

News image
Updated On :4 மே 2014, 4:43 am

பூா்ணிமா

எனக்கு நடனத்தில் இருந்த ஈடுபாடுதான் திரையுலகத்திற்கு அழைத்து வந்தது என்றும் சொல்லலாம். திட்டமிட்டு விதி செய்த சதி என்றும் சொல்லலாம். முன்பு மெட்ராஸ் மாகாணத்துடன் இணைந்திருந்த விசாகப்பட்டினத்தில் என்னுடைய தந்தை இம்பீரியல் சிவில் சர்வீஸ் அதிகாரியாகப் பணியாற்றியபோது (தற்போதைய ஐஏஎஸ்) நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ராஜாஜி வந்திருந்தார்.

எனக்கும் என்னுடைய சகோதரி சயீதாவுக்கும் நடனமாடத் தெரியும் என்பதால் அப்பாவின் உயர் அதிகாரிகள் வற்புறுத்தலால் எங்களுடைய நடன நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள். அதற்கு என்னுடைய தாயார் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. பின்னர் சமாதானப்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்றோம். அதுதான் நான் மேடையேறி ஆடிய முதல் நடன நிகழ்ச்சியாகும்.

இந்த நடனம்தான் பின்னாளில் என்னை சினிமாவுக்கு அழைத்து வந்தது என்று  சொல்லலாம். 1951-ஆம் ஆண்டு என்னுடைய தந்தை மரணமடைந்து இரண்டாண்டுகள் கழித்து என்னுடைய சகோதரி சயீதாவுக்கு திருமணம் நடந்தது. என்னுடைய அம்மாவின் குடும்பத்தினர் பாகிஸ்தானில் குடியேறினர். எனக்கும் திருமணத்தை முடிக்க வேண்டுமென்று அம்மா விரும்பினார். ஆனால், நான் காத்திருக்க விரும்பினேன். என் தந்தையின் நண்பர்களில் ஒருவரான திரைப்படத் தயாரிப்பாளர் ராமகிருஷ்ண பிரசாத், "ரோஜூலு மாராயி' என்ற தெலுங்குப் படத்தில் (தமிழில் காலம் மாறிப் போச்சு) நடனமாட ஒரு வாய்ப்பளித்தார். இதற்கு என்னுடைய அம்மா முதலில் எதிர்ப்புத் தெரிவித்தாலும் வழக்கம்போல் பின்னர் அனுமதித்தார். விஜயவாடாவிலிருந்து கிளம்பி சென்னை வந்தோம் ""ஏருவாக்கா சாகரரண்ணோ சின்னன்ணா'' (ஏரு பூட்டிப் போவோயோ அண்ணே சின்னண்ணே) என்ற பாடலுக்கு நான் ஆடிய நடனமும் பாடலும் மிகவும் பிரபலமாயிற்று.

அதன் பின்னர் எம்.ஜி.ஆர்., என்.டி.ராமாராவ், ஜெமினி ஆகியோர் நடித்த தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் பெரும்பாலும் நடனக் காட்சிகளில் நடித்தேன். அப்போது ஹைதராபாத்தில் திரைப்பட விநியோகஸ்தர் ஒருவரைச் சந்திக்க வந்த குருதத், நான் நடனமாடிய "ரோஜூலு மாராயி' படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அதில் நடித்த நாகேஸ்வர ராவ், சாவித்திரி போன்ற முக்கிய நடிகர்களை விட்டுவிட்டு ஒரே ஒரு பாடலுக்காக நடனமாடிய என்னை அவர் பார்க்க விரும்பியது ஆச்சரியமாக இருந்தது. ""அந்தப் பெண்ணுக்கு உருது தெரியுமா என்று கேளுங்கள்?'' என்று அவர் கேட்டதற்கு, தெரியும்'' என்று விநியோகஸ்தர் கூறவே, அரை மணி நேரச் சந்திப்புக்குப் பிறகு, மூன்று மாதங்கள் கழித்து மும்பைக்கு வரும்படி குருதத்திடமிருந்து அழைப்பு வந்தது. ஒருவித பயத்திற்குப் பின்னரே மும்பை சென்றோம்.

மும்பை திரையுலகம் மிகவும் வித்தியாசமானது. முகமது யூசுப்கான் திலீப்குமாராகவும், மஹ்ஜாபீன் பானு மீனாகுமாரியாகவும், மும்தாஜ் ஜஹான் பேகம் தல்வி மதுபாலாவாகவும் பெயர் மாறியிருந்தனர். குருதத்தின் பேமஸ் ஸ்டூடியோவுக்குச் சென்ற சில நிமிடங்களுக்கெல்லாம் அங்கு வந்த ராஜ்கோஸ்லா, என்னுடைய பெயர் நீளமாக இருப்பதாகவும் மாற்ற விரும்புவதாகவும் கூறினார். நான் மறுத்தேன். ""எல்லோரும் மாற்றிக்கொள்ளும்போது நீ ஏன் மறுக்கிறாய்?'' என்று கேட்டார். நான் சொன்னேன் ""நான் எல்லோரையும் போல் அல்ல''. எனக்கு எப்போதுமே வெளிப்படையாகப் பேசும் வழக்கமுண்டு. நிறைய இருப்பது போலவும் எதுவுமே இல்லாதது போன்றும் ஓர் உணர்வு எனக்கிருந்தது. ஒரு மூத்த அதிகாரியின் மகள் என்பதால் வறுமை தெரியாமல் வளர்ந்தவள் நான். வீடு முழுக்க கூப்பிட்ட குரலுக்குப் பணிவிடை செய்ய வேலைக்காரர்கள் இருந்தனர். என்னுடைய தந்தைக்குப் புரட்சிகரமான சிந்தனை இருந்ததால் எங்களைப் பயமின்றி தைரியத்துடன் வளர்த்திருந்தார். இப்போது நினைத்தாலும் எனக்கிருந்த தைரியம்தான் நினைவுக்கு வரும். "சிஐடி' படத்தில் பாடல் காட்சியொன்றில் லைனிங் இல்லாத ஜாக்கெட்டை அணிய மறுத்தது, மேலே அணிய துப்பட்டாவைக் கேட்டது போன்றவை ராஜ்கோஸ்லாவுக்கு ஏமாற்றத்தை அளித்ததும் நினைவுக்கு வருகிறது.

""காலம் மாறிப் போச்சு'' படத்தில் நான் ஆடிய நடனக் காட்சியில் இடம்பெற்ற "சின்னண்ணே' பாடல் வரி பிரபலமாகியிருந்ததால் இசையமைப்பாளர் எஸ்.டி. பர்மன் அடிக்கடி அந்தப் பாடலை பாடும்படி என்னிடம் கேட்பார். "சின்னண்ணே' என்ற வரி பாடலாசிரியர் மஜ்ரூ சுல்தான்புரிக்கு மிகவும் பிடித்துப்போக, ஏழாண்டுகளுக்குப் பிறகு தேவ் ஆனந்த் - சுசித்ரா சென் நடித்த "பம்பாய் கா பாபு' படத்தில் "பம்பாய் ஸே ஆயா ஹை பாபு சின்னண்ணா' என்ற பாடல் வரியை எழுத அந்தப் பாடலும் பிரபலமாயிற்று.

சிஐடி படத்தைத் தொடர்ந்து 1957-ஆம் ஆண்டு "பியாஸா' வெளியாயிற்று. இரண்டுமே ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டதாகும். முதலில் விஜய் பாத்திரத்தில் திலீப் குமாரை நடிக்க வைக்க குருதத் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. அதேபோன்று குலோபா பாத்திரத்தில் நடிக்க மதுபாலா, நர்கீஸ் ஆகியோர் முயற்சித்தனர். கடைசியில் எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. மனிதன் மீதான மதிப்பு, காதல், அங்கீகாரம், சுயகவுரவம் அனைத்தையும் கொண்ட "பியாஸா' திரைப்படம் இன்று திரையிடப்பட்டாலும் நல்ல வரவேற்பு இருப்பதைப் பார்க்கலாம். எஸ்.டி.பர்மன் இசை, சாஹிர் கவிதைகள் குருதத் கண்ணோட்டத்திற்கு உயிரூட்டின.

குருதத் எப்போதுமே சோகமான தோற்றத்துடன் இருப்பது குறித்து பலர் என்னிடம் கேட்டதுண்டு. சினிமா மீது அவருக்கு ஈடுபாடு அதிகம். சில சமயங்களில் தன்னையே மறந்துவிடுவார். சினிமா மீதுள்ள காதல் எல்லாவற்றையும் மீறி வெளிப்படும். இருந்தாலும் தன்னுடைய குழுவினர் மீது தனி அக்கறை காட்டி வந்தார். சிஐடி படத்திற்காக எனக்குச் சிறந்த துணை நடிகை விருது கொடுக்க "பிலிம் பேர்' பத்திரிகை விரும்பியது. ""அது துணை நடிகை பாத்திரமல்ல. இரண்டாவது கதாநாயகி பாத்திரம்'' என்று கூறி விருதை ஏற்க வேண்டாமென்று கூறி என்னைத் தடுத்தார். "காகஸ் கே பூல்' படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, அவருடன் போட்டிருந்த ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே "சோல்வா சால்', "ரூப்கி ராணி சோரன் கா ராதா' போன்ற படங்களில் நடிக்க அனுமதித்தார். "காகஸ் கே பூல்' படத்திற்குப் பின்னர் அவருடன் "சாத்வின் கா சாந்த்', "சாகேப் பீலிஅவுர் குலாம்' போன்ற படங்களில் நடித்தேன்.

பொதுவாகவே நடிகைகளுக்கு டைரக்டர் மீது ஈடுபாடு ஏற்படுவதுண்டு. எனக்கும் அவருக்குமான தொடர்பு குறித்து ஏகப்பட்ட வதந்திகள் பின்னப்பட்டன. 60 ஆண்டுகளாகியும் இன்னமும் அந்த வதந்திகள் உயிருடன் இருப்பதுதான் ஆச்சரியம். மக்கள் தங்கள் விருப்பப்படி பேசுவதை என்னால் தடுக்க முடியாது. ஆனால், ஆதாரமற்ற அந்த வதந்திகளுக்குப் பதில் அளிக்காமல் இருக்க முடியுமல்லவா?

உண்மையில் நான் அழகானவள் அல்ல. எப்போது கண்ணாடியில் பார்த்தாலும் என்னுடைய தோற்றம் சாதாரணமாகவே தோன்றும். திரையில் அழகாக இருப்பதற்கு "போட்டோ ஜெனிக்' காரணமாக இருந்திருக்கலாமே தவிர என்னுடைய அழகு அல்ல.

"கைடு' படத்தில் ரோஸி கதாபாத்திரம் எனக்கு வைத்த பரிசோதனையாகவே கருதினேன். "கைடு' திரைப்படம் தயாரிக்கும்போது நண்பர்கள் உள்பட பல தயாரிப்பாளர்கள், திருமணமான பெண்ணொருத்தி வேறோர் ஆணை காதலிக்கும் பாத்திரத்தில் நடிக்க வேண்டாமென்று கேட்டுக் கொண்டனர். திரைக்கதை பற்றியும் ரோஸி பாத்திரத்தின் மேல் எனக்குள்ள ஈடுபாடு பற்றியும் யோசித்தேன். "ரோஸி' கதாபாத்திரம் என்னைப்போலவே வெளிப்படையானவள் என்பதால் அந்தப் பாத்திரத்தை விட மனமின்றி நடிக்க ஒப்புக்கொண்டேன்.

திரைக்கதையும் பாத்திரமும் எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புதல் அளித்து வந்தேனே தவிர, மற்றபடி நான் எதையும் எப்போதும் திட்டமிட்டுச் செய்ததில்லை. நல்ல பாத்திரங்கள் தானாகவே வந்து அமைந்துவிட்டன. மற்றவர்களைப்போல் கிடைத்த வாய்ப்புகளைவிடக் கூடாது என்று நான் நினைத்ததே இல்லை. அதேபோன்று எத்தனை நீளமான காட்சியாக இருந்தாலும் ஒரே ஷாட்டில் ரீடேக் இன்றி எடுப்பதையே நான் விரும்பினேன். ரீடேக் எடுப்பது எந்திரத்தனமானது என்று நினைப்பவள் நான்.

நான், நந்தா, ஆஷா பரேக், சாதனா, ஹெலன், ஷம்மி அனைவருமே மிக நெருங்கிய தோழிகள். அண்மையில் நந்தா மரணமடைந்தது எனக்குப் பெரும் இழப்பாகத் தோன்றியது. சிறுவயதில் என்னுடைய தந்தையை இழந்தபோது, மூன்றே படங்களில்  நடித்த நிலையில் தாயை இழந்தபோது, 2000-ஆம் ஆண்டில் என்னுடைய கணவர் சாஷி (ரெக்கி) இறந்தபோதும் ஏற்பட்ட அதே உணர்வுகள்தான் நந்தா மரணத்தின்போதும் எனக்கு ஏற்பட்டது!

("வகீதா ரஹ்மானின் சுயசரிதை விரைவிலேயே வெளிவர இருக்கிறது).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.