/

மொழியைத் தாண்டி நாடகங்களை ரசிக்கிறார்கள்!

ஒரு காலத்தில் மக்களுக்கு நாடகம்தான் பொழுதுபோக்காக இருந்தது. திரைப்படம், டி.வி., வந்த பின்பும் நாடகங்களுக்கு மவுசு குறையவில்லை.

Updated On :26 மே 2014, 5:18 pm

ஒரு காலத்தில் மக்களுக்கு நாடகம்தான் பொழுதுபோக்காக இருந்தது. திரைப்படம், டி.வி., வந்த பின்பும் நாடகங்களுக்கு மவுசு குறையவில்லை. எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் போன்றவர்கள் ஜனரஞ்சக நாடகங்களையும், இந்திரா பார்த்தசாரதி, ஆர்.ராமசாமி, ராமானுஜம் ஆகியோர் நவீன நாடகங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது நவீன நாடகங்களைப் பல இடங்களில் நடத்திக் கொண்டிருப்பவர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த ச.முருகபூபதி. இவர் நாடகத்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். அவரிடம் நவீன நாடகம் குறித்து பேசினோம்:

நாடகம் மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

எனது தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் புகழ்பெற்ற நாடகக்

கலைஞர்.

எனது சகோதரர்கள் எழுத்தாளர்கள் தமிழ்செல்வன் மற்றும் கோணங்கி. இதனால் எனக்கும் தமிழின் மீதும், தமிழ் இலக்கியங்களின் மீதும், நாடகங்களின் மீதும் ஆர்வம் ஏற்பட்டது.

முதல் நாடகத்தை எப்போது நடத்தினீர்கள்?

1984ஆம் ஆண்டு நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, என்னுடன் படித்தவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து வீதி நாடகம் போட்டோம்.  கதை, இயக்கம், இசை என நான் அப்போதே களம் இறங்கிவிட்டேன். அந்த நேரத்தில் விவசாயிகளின் பிரச்னைகள் போன்றவற்றை மையக் கருத்தாக வைத்து பல கிராமங்களில் சுமார் 100 நாடகங்களை நடத்தினோம்.  இதற்கு கிராமங்களில் நல்ல வரவேற்பு இருந்தது. அதனால் நாடகத்தின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.

இதைத் தொடந்து 1992 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் முதுகலை (நாடகம்) படித்தபோது, "மரணவீச்சின் குறிப்புக்கள்' என்ற தலைப்பில் மாணவர்கள் சேர்ந்து நாடகம் நடத்தினோம். இதன் மூலம் எனது திறமையை மேலும் வளர்த்துக் கொண்டேன்.

எப்போது தனியே நாடகக்குழு அமைத்தீர்கள்?

"மணல் மகுடி நாடக நிலம்' என்ற பெயரில் 15 பேர் கொண்ட குழு 1993இல் அமைத்தோம்.

இதன் மூலம் நவீன நாடகங்களை நடத்தத் தொடங்கினோம்.

நவீனநாடகத்தில் உடல் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இதுவரை 19 நாடகங்கள் நடத்தியுள்ளோம். இவை அனைத்தையும் நான் எழுதி, இயக்கி, இசை அமைத்துள்ளேன்.

சூர்ப்பணங்கு, மிருகவிதூஷகம், குகைமரவாசிகள், செம்மூதாய் உள்ளிட்ட 19 நாடகங்கள் ஆகும்.

மேலும் குழந்தைகளுக்கு எனத் தனியே 33 நாடகங்கள் நடத்தியுள்ளோம்.

உங்கள் நாடகங்களை எங்கெங்கு நடத்தியுள்ளீர்கள்?

கர்நாடக மாநிலம், தில்லி, கொல்கொத்தா உள்ளிட்ட பகுதிகளில் நாடகம் நடத்தியுள்ளோம். அங்கும் தமிழில்தான் வசனம் இருக்கும். எனினும் மொழியைத் தாண்டி நாடகத்தை அங்குள்ளவர்கள் ரசிக்கிறார்கள்.

நவீன நாடகங்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இரு புதிய நாடகங்களைத் தயாரித்து நடத்துகிறோம்.

தேசிய நாடகப்பள்ளி, ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பான நாடகத்திற்கு தேசிய அளவில் விருது வழங்குகிறார்கள். 2011-ஆம் ஆண்டிற்கு தமிழ்மொழியில் சிறந்த நாடக ஆசிரியர் என்ற விருது எனக்கு கிடைத்தது. அந்த விருதினை கடந்த செப்டம்பர் மாதம்  8ஆம் தேதி தில்லி சென்று பெற்றுக் கொண்டேன்.

உங்களின் ஏதாவது ஒரு நாடகம் பற்றி கூறுங்களேன்?

"குகைமரவாசிகள்' என்ற நாடகம் உள்நாட்டு அகதிகளைப் பற்றியது ஆகும்.

அதாவது, பிழைப்புக்காக புலம் பெயர்பவர்கள் அதிகமாக உள்ளார்கள். அவர்களின் பிரச்னைகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளது இந்த நாடகம். இதற்குத் தேவையான ஆடைகளை நாங்களே வடிவமைத்துக் கொள்கிறோம். காட்சியை வெளிப்படுத்த மரப்பாச்சி பொம்மைகள், மர பொம்மைகளையும், இசையை வெளிப்படுத்த பழங்குடியினர் இசைக் கருவிகளையும் பயன்படுத்துகிறோம்.

தற்போது என்ன பணியில் ஈடுபட்டுள்ளீர்கள்?

பாண்டிச்சேரியில் ஸ்பெயின்நாட்டின் நடனக் கலைஞர் மரியா ரோஸியா என்பவர் எங்களது நாடகங்களைப் பார்த்து எங்களுடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளது என்றார்.

அவர் நாடோடிகளின் நடனத்தில் திறமையானவர்.

சதிராட்ட நடனக் கலைஞர் தரணியுடனும், மரியாவுடனும் இணைந்து 6 பேர் கொண்ட குழு அமைத்து, புதிய வடிவிலான நாடகம் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

இதன்மூலம் "சதிர்முக ஸ்பானியப் பறவை' என்ற தலைப்பில் நடனம் ஆடப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் எதிர்காலத் திட்டம்?

தற்போது பல நாட்டுப்புறக் கலைகள் அழிந்து வருகின்றன.

கலைகள் மட்டுமல்ல சிறுதானியங்கள், விளையாட்டுகள், பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல மறைந்துவிட்டன.

வரும் தலைமுறையினருக்கு நம் முன்னோர்களை அடையாளம் காட்டத் தவறிவிட்டோம் .

மேலும் பல இசைக் கருவிகள் காணாமற் போய்விட்டன. கிளித்தட்டு உள்ளிட்ட பல விளையாட்டுகள் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாமல் உள்ளன.  எனவே இவற்றை உலகத்திற்கு வெளிகாட்டும் விதமாக மறைந்த கலை, இசைக் கருவிகள் உள்ளிட்டவை குறித்து கடந்த ஓர் ஆண்டாக பல கிராமங்களுக்குச் சென்று ஆய்வு நடத்தி வருகிறோம். இவற்றைத் தொகுத்து நவீன நாடகமாக உலகக் களத்தில் நடத்த உள்ளோம். இதற்கான முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.