நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாதிப்பதற்கு கல்வி தடையல்ல!

மகாராஷ்ட்ராவில் ரீபத்கெடா கிராமத்தில் தலித் சமூகத்தில் பிறந்த கல்பனா சரோஜின் தந்தை ஒரு போலீஸ்காரர். தன்னுடைய மகளை

News image
Updated On :16 நவம்பர் 2014, 4:48 am

பூா்ணிமா

மகாராஷ்ட்ராவில் ரீபத்கெடா கிராமத்தில் தலித் சமூகத்தில் பிறந்த கல்பனா சரோஜின் தந்தை ஒரு போலீஸ்காரர். தன்னுடைய மகளை 10 ஆம் வகுப்புவரை படிக்க வைக்க வேண்டுமென்பது அவரது ஆசை. இருந்தாலும் சமூகவழக்கப்படி குடும்பத்தினர் வற்புறுத்தலால் கல்பனாவுக்கு அவரைவிட 10 வயது மூத்தவரான இளைஞருக்கு 12 வயதிலேயே திருமணம் செய்து வைத்தார். படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் காலடி எடுத்துவைத்த கல்பனா அதன்பின் சந்தித்த பிரச்னைகள் ஏராளம். தற்போது 54 வயதாகும் கல்பனா நூறு மில்லியன் டாலர் மதிப்புடைய சொத்துக்களுக்கு அதிபதி. இதை எப்படி தன்னால் சாதிக்க முடிந்தது என்பதை அவரே விளக்குகிறார்:

""படிப்பில் எனக்கு ஆர்வமிருந்தாலும், படித்தப் பெண்களால் எதையும் சாதிக்க முடியாது என்ற கருத்து எங்கள் சமூகத்தில் ஊறியிருந்தது. பெண்கள் என்றாலே அடுப்படிவேலை. குழந்தைகளைப் பெற்றெடுப்பதுதான்  கடமை என கருதுகிறார்கள். தலித்குடும்பத்தில் பிறந்ததால் எதிர்காலம் என்பது பெண்களைப் பொறுத்தவரை கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.

 திருமணத்திற்குப் பின் என்னுடைய கணவர் வீட்டிற்கு மும்பை வந்தபோது அவர் குடிசைப் பகுதியில்தான் வசிக்கிறார் என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அந்த சூழ்நிலையில் வாழ பழக்கப்படுத்திக் கொண்டேன் ஆனால் கணவர் உள்பட அவரது குடும்பத்தினர் என்னை மிகவும் கொடுமைப்படுத்தினர். அடி உதைதான். ஆறுமாதம் கழித்து என்னைப் பார்க்க வந்த என் தந்தை  என்னுடைய நிலைமையை பார்த்து கோபப்பட்டு என்னை அவருடன் அழைத்து வந்துவிட்டார். பொதுவாக திருமணமான பெண்ணை  மரண சம்பவம் நடந்தால் மட்டுமே அவளது பிறந்த வீட்டிற்கு அனுப்புவார்கள். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி என்னை என் தந்தை அழைத்துச் சென்றார். ஒரு வேளை அவர் அப்படி அழைத்துச் சென்றிராவிட்டால் அவர்கள் என்னை உயிருடன் கொளுத்தியிருப்பார்கள்.

மீண்டும் பள்ளிக் கூடத்தில் சேர்ந்தேன். ஆனால் உடனிருந்த மாணவிகளின் கேலிபேச்சுக்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. மீண்டும் பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டியதாயிற்று. என்னுடைய தந்தை பணியாற்றும் காவல் துறையிலேயே வேலைக்குச் சேர முயற்சித்தேன். படிப்பை முழுமையாக முடிக்காததால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. நர்ஸ் பியிற்சி பெற்று ராணுவத்தில்  பணியாற்ற நினைத்தேன்; அதிலும் தோல்விதான்.

இனி வாழ்க்கையில் எதுவுமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது. விரக்தியில் தற்கொலை செய்துகொள்ள தீர்மானித்தேன்.  வீட்டில் மூட்டைப்பூச்சி தொல்லை என்பதால் வாங்கிவைத்திருந்த இரண்டுபாட்டில் விஷத்தைக் குடித்தேன். மயக்க நிலையில் இருந்த என்னை என்னுடைய அத்தை காப்பாற்றினார். ""உன்னை நம்பியுள்ள  அப்பாவுக்கு நீ செய்யும் கடமை இதுதானா? ஒரு வேளை நீ இறந்திருந்தால் அவரது நிலைமை என்ன ஆகியிருக்குமென யோசித்து பார்த்தாயா?''  என்று  என்னைப் பார்க்க வந்தவர்கள் திட்டினார்கள்.

 அதன்பின்னர் தற்கொலையைப் பற்றி நான் நினைக்கவே இல்லை. மும்பை சென்று டெய்லரிங் தொழிலில் பயிற்சிப்பெற்றேன். என்னுடைய உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்தபோது, என்னுடைய சகோதரியும் என்னுடன் தங்கியிருந்தாள். எதிர்பாராதவிதமாக அவள் உடல்நலமின்றி இறந்துவிட்டாள். அவளுக்கு மருத்துவம் செய்து அவளை காப்பாற்ற அப்போது என்னிடம் பணம் இல்லாதது பெரிய குறையாக இருந்தது.

 பின்னர் 50 ஆயிரம் ரூபாய் அரசு  கடனுதவி பெற்று  பர்னிச்சர் வியாபாரத்தைத் தொடங்கினேன். இதன் மூலம் மக்களிடம் நேரடி தொடர்பு கொள்ள முடிந்தது. நெருக்கடியான சமயத்தில் பலர் அறிவுரைகளை கூறியும் உதவி செய்யவும் முன்வந்தனர். அப்படியொரு சந்தர்ப்பத்தில் "காமினி ட்யூப்ஸ்' நிறுவனம் உலோக குழாய்களை தயாரித்து வந்ததில் நஷ்ட மேற்பட்டதாகவும், முடிந்தால் அதை ஏற்று நடத்தும்படியும் எனக்கு யோசனை கூறினார்கள்.

யாருமே அந்த கம்பெனியை ஏற்று நடத்த முன்வரவில்லை. அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய நினைத்தேன். அந்த நிறுவனம் எப்படி நலிவடைந்தது என்பது எனக்குத் தெரியும். அதை ஏற்று நடத்த முடிவெடுத்தபோது பலரும் என்னை எச்சரித்தனர்.

இருப்பினும் துணிந்து எடுத்து ஒரு வருடம் கடினமாக உழைத்து நிறுவனத்தை கடனிலிருந்து மீட்டேன். இந்த சாதனை என்னை பெருமிதத்தில் ஆழ்த்தியது. இன்று அந்த நிறுவனத்தின் சேர்மேனாக பதவியில் இருப்பதோடு நூறு மில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாகவும் மாற்றியுள்ளேன். 2013-ஆம் ஆண்டில் வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைத் துறையில் சிறந்த நிர்வாகி என்பதற்காக "பத்மஸ்ரீ' விருது கிடைத்தது.

 மீண்டும் மறுமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயாகியுள்ள நான், என்னுடைய வாழ்க்கைமுறை மாறுமென்று நினைத்து பார்த்ததே இல்லை. என்னுடைய குடும்பத்தில் யாருக்குமே வர்த்தகத்தில் ஈடுபட்ட அனுபவம் இல்லை. என்னுடைய தாத்தா ஒரு விவசாயி. தந்தையோ போலீஸ்காரர். மும்பையில் என்னுடைய வாழ்க்கையை தொடங்கியபோது பஸ்ஸில், ரயிலில் செல்ல காசின்றி நடந்தே செல்வேன். இன்று வெளியில் செல்ல மெர்சிடிஸ் கார் இருக்கிறது.

என் மீது நம்பிக்கை வைத்து உறுதுணையாக இருந்த அப்பா 58வது வயதில்  இறந்தது மாபெரும் இழப்பாகும். என்னுடைய வளர்ச்சியை அவர் பார்க்கவில்லை என்றாலும் உறவினர்கள் ஆதரவாக உள்ளனர்.

என்னுடைய கற்பனைக்கும் அதிகமாகவே நான் சாதனை படைத்துள்ளேன். எதிர்காலத்தில் இந்த நிறுவனத்தின் மீதும் மக்கள் சேவையிலும் கவனம் செலுத்த விரும்புகிறேன். சமூகத்தின் பல பிரிவுகளில் உள்ள பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவுவேன். பெண்களால் எதையும் சாதிக்கக் கூடிய திறமையும் சக்தியும் இருக்கிறது. அவர்களை சரியாக வழிநடத்த துணைமட்டுமே தேவை என்கிறார் கல்பனா சரோஜ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.