மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பைலேகுப்பே!

பெங்களூருவிலிருந்து மைசூர் வழியே மடிகேரி செல்லும்போது அங்கிருந்து 40கி.மீ. தொலைவில் உள்ள குஷாலாநகர் அருகில்

News image
Updated On :7 அக்டோபர் 2014, 6:01 pm

அ. குமார்

பெங்களூருவிலிருந்து மைசூர் வழியே மடிகேரி செல்லும்போது அங்கிருந்து 40கி.மீ. தொலைவில் உள்ள குஷாலாநகர் அருகில் அமைந்துள்ளது "பைலேகுப்பே'. இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் முகாம்களில் மிகப் பெரியதும் பழமையானதாகவும் கருதப்படும் இந்த பைலேகுப்பே 1961-ஆம் ஆண்டில் லக்சங் சாம் டப்ளிங் என்பவரால் உருவாக்கப்பட்டது. 1959ஆம் ஆண்டு சீன ஆக்ரமிப்பில் திபெத் சிக்கியபோது, அரசியல் தஞ்சம்கேட்டு பலர் வந்தனர். அவர்களுக்காக இந்தியாவில் பல இடங்களில் முகாம்கள் அமைத்துத் தரப்பட்டன. கர்நாடகாவில் அமைக்கப்பட்ட முகாமில் 16 கிராமங்களை உருவாக்கிக் கொண்டதோடு பண்டைய திபெத்திய கலாசாரத்தையும் தெய்வ வழிபாடுகளையும் தொடர்ந்து கடைபிடிப்பதற்காக "நம்டிரோலிங்' மடாலயத்தை உருவாக்கினார்கள். திபெத்திய புத்தமதத்தை உலகெங்கும் பரப்பும் தெய்வீக சரணாலயமாக விளங்கும் இந்த மடம், திபெத்தில் உள்ள மடாலயத்தைப் போலவே உருவாக்கப்பட்டிருப்பதோடு தலாய்லாமா தலைமையில் சுமார் 50 ஆயிரம் திபெத்தியர்களுக்கு "பைலேகுப்பே' அடைக்கலமாகவும் விளங்குகிறது.

திபெத் நாட்டிற்குச் செல்ல விரும்புகிறவர்கள் இங்குவந்து  பார்த்தால் போதும். ஒரிஜினல் திபெத்தைவிட சிறப்பாக மினி திபெத்தாக விளங்கும் "பைலாகுப்பே' இன்று சுற்றுலாப் பயணிகளின் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது.

பைலேகுப்பேவில் ஐந்து முகாம்கள் உள்ளன. நான்காவது முகாமில்தான் "நம்டிரோலிங்' மடாலயம் உள்ளது. திபெத்தில் தற்போது அழிவுற்ற  நிலையில்  உள்ள "செரா மே' மடாலயத்தைப் போன்றும், "செரா ஜே' மடலாயத்தைப் போன்றும் மடாலயங்கள் இங்கு இருந்தாலும் "பொற்கோயில்' என அழைக்கப்படும் நம்டிரோலிங்  மடாலயம்தான் முக்கியமானதாகும். இங்கு புத்தருக்கும், புத்தமதத்தை திபெத், பூடான் போன்ற நாடுகளில் பரப்புவதற்கு காரணகர்த்தாவான பத்மசம்பவாவை  இரண்டாவது புத்தராகவும், அமித்யோஸ் தேவலோக புத்தராகவும் திபெத்தியர்கள் கருதுவதால் மூவருக்கும் தங்க மூலாம் பூசப்பட்ட 50 அடி உயர சிலைகளை மூலஸ்தானத்தில் அமைத்துள்ளனர். இந்தச் சிலைகள் இடம்பெற்றுள்ள மண்டபம் மிகுந்த பொருட்செலவில் நவீன உபகரணங்களைக் கொண்டு பாரம்பரிய திபெத்திய கலாசாரத்தின்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களுமாக 5 ஆயிரம் புத்ததுறவிகள் இங்கு தங்கியுள்ளனர்.

உலக சமாதானத்திற்காக புத்தர் அருளிய கருத்துக்கள் "கட்டியூர்' மொழியில் இங்கு இடம் பெற்றிருப்பதும், ஊதுவத்திகளின் நறுமணம், எரிந்து கொண்டிருக்கும் விளக்குகளின் புகையும் இந்த இடத்தில் தெய்வீகச் சூழ்நிலையை அளிக்கின்றன. இங்குள்ள ஓவியர்கள் கணித முறைப்படி கணிக்கப்பட்டு திபெத்திய பாரம்பரியத்தை விளக்குகின்றன. இங்கு இடம் பெற்றுள்ள தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், அலங்காரங்கள்  வண்ணமயமாக கண்கொள்ளாக் காட்சியாக விளங்குகின்றன.

பைலேகுப்பேவில் உள்ள திபெத்தியன் ஷாப்பிங் காம்பளெக்ஸில் திபெத்தியர்களால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள், கைவினைப் பொருட்கள், கம்பளி ஆடைகள், துணிவகைகள் விற்பனை செய்கிறார்கள். இங்கு விற்கப்படும் பிரார்த்தனை சக்கரத்தை வாங்கிச் சுழற்றினால் அதிர்ஷ்டமும் செல்வமும் பெருகுமென்ற நம்பிக்கை உள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான விருந்தினர் இல்லங்களும், "பால்கர் தர்க்யேலிங்' என்ற நவீன ஓட்டலும் உண்டு. இங்கு திபெத்தியர்கள் தயாரிக்கும் "போச்சா' தேநீர் மிகவும் பிரபலமானதாகும். திபெத்திய உணவுகளுடன் இந்திய உணவு வகைகளும் கிடைக்கின்றன. இந்த இடத்தைச்  சுற்றிப் பார்க்கும்போது திபெத் நாட்டைச் சுற்றிப்பார்ப்பது போன்ற உணர்வு நிச்சயம் ஏற்படும்.

பைலேகுப்பேவிலிருந்து 8 கி.மீ. தொலைவில் ஹாரங்கி அணைகட்டும், 3 கி.மீ. தொலைவில் "காவிரி நிசர்கா' அணைக்கட்டும் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 846 மீட்டர் உயரத்திற்கு கட்டப்பட்டுள்ள ஹாரங்கி அணைதான் காவிரிநதியின் மீது கட்டப்பட்ட முதல் அணைக்கட்டாக கருதப்படுகிறது.

திபெத்திய மக்களின் வாழ்க்கை முறைகளையும் கலாசாரத்தையும் காண விரும்புகிறவர்களுக்கு பைலேகுப்பே சிறந்த வாய்ப்பாகும். மைசூரிலிருந்து 87 கி.மீ. தொலைவில் உள்ள "பைலேகுப்பே' செல்வதற்கு பஸ் வசதியும் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.