புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஃபிரிட்ஜ்  இன்றி அமையாது வீடு!

வீடு என்றால் அதில் டி.வி., வாஷிங் மெஷின், ஏஸி, அவற்றோடு குளிர்சாதனப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். அதிலும் குளிர்சாதனப்

News image
Updated On :28 செப்டம்பர் 2014, 4:57 am

ந. ஜீவா

வீடு என்றால் அதில் டி.வி., வாஷிங் மெஷின், ஏஸி, அவற்றோடு குளிர்சாதனப் பெட்டி அவசியம் இருக்க வேண்டும். அதிலும் குளிர்சாதனப் பெட்டி இல்லையென்றால் இக்கால இல்லத்தரசிகளுக்கு கையொடிந்தது போலாகிவிடும்.

ஒருநாள் இட்லி, தோசைக்கு மாவு அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு... அதைக் கொஞ்சம் கொஞ்சமாக  எடுத்து... எடுத்து...  ஒரு வாரம் பத்து நாட்களை ஓட்டி விடுகிறார்கள். சிலர் மீன் குழம்பு போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைத்து, அவ்வப்போது சூடாக்கி தினம்தோறும் உணவில் மீன் குழம்பு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

 இப்படி ஃபிரிட்ஜைப் பயன்படுத்துவது சரியா? மாமிசத்தையும், காய்கறிகளையும் அருகருகே வைக்கலாமா? பால், வெண்ணெய் போன்றவற்றை ஃபிரிட்ஜில் எந்த இடத்தில் வைக்க வேண்டும்? பழங்களை எவ்வளவு நாட்கள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் சென்னை அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் சத்துணவு நிபுணராகவும், ஆலோசகராகவும் உள்ள வினிதா கிருஷ்ணன். அவரிடம் பேசியதிலிருந்து...

  ""வீட்டில் சமையல் செய்யும் பெண்களுக்கு. குறிப்பாக வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஃபிரிட்ஜ் ரொம்ப ரொம்ப தேவையானதாக மாறிவிட்டது. காலையில் அவசர அவசரமாகச் சமைத்து வேலைக்குச் செல்லும் பெண்கள், முதல் நாள் இரவிலேயே காய்கறிகளை வெட்டி ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். இட்லி, தோசைக்கான மாவை ஒவ்வொரு நாளும் அரைக்காமல் மொத்தமாக அரைத்து ஃபிரிட்ஜில் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நாம் எந்த உணவுப் பொருளை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினாலும், அதிலுள்ள சத்துகள் வீணாகாமல் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

காய்கறிகளை முதலில் கழுவி விட்டு, சற்று பெரிய அளவில் வெட்டி, மூடியுள்ள பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஃபிரிட்ஜில் வைப்பது நல்லது. அப்படிச் செய்தால் அதிலுள்ள சத்துகள் வீணாகாது. ஆனால் பெரும்பாலோர் சமைப்பதற்குத் தேவையான சிறிய அளவில் வெட்டி, ஒரு தட்டில் வைத்து ஃபிரிட்ஜில் வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துகள் வீணாகிவிடும்.

சிலர் காய்கறிகளையும், ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் போன்றவற்றையும் அருகருகே வைப்பார்கள். இதனால் நுண்ணுயிர் கிருமிகளின் தொற்று காய்கறிகளில் ஏற்படக் கூடும். எனவே ஃபிரிட்ஜின் வெவ்வேறு பகுதிகளில் அசைவ உணவுப் பொருட்களையும், சைவ உணவுப் பொருட்களையும் தனித்தனியாக வைக்க வேண்டும்.

மாமிசத்தை பாலித்தீன் கவருக்குள் போட்டு ஃபிரிஸரில் 0 டிகிரி அல்லது அதற்குக் கீழான வெப்பநிலையில் வைக்க வேண்டும்.

சைவ உணவோ, அசைவ உணவோ சமைத்த உணவுப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவது நல்லதல்ல.

இட்லி, தோசை மாவை அரைத்து அதில் பாதிக்கும் அதிகமான மாவைத் தனியே ஒரு மூடியுள்ள பாத்திரத்தில் போட்டு ஃபிரிட்ஜில் வைக்க வேண்டும். மீதியுள்ள மாவை இன்னொரு பாத்திரத்தில் போட்டு மூடி, அதையும் ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டு, தேவையான போது கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் பயன்படுத்தலாம். இந்த மாவு தீர்ந்த பிறகு, முதலில் எடுத்து வைத்த மாவைப் பயன்படுத்தலாம். இப்படிச் செய்வதால் அந்த மாவு வெளியில் உள்ள எந்த நுண்ணுயிர்களாலும் பாதிக்கப்படாது. சத்து இழப்பும் ஏற்படாது.

திராட்சைப் பழத்தை ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம். ஆப்பிளை 10 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடலாம்.

வெங்காயம், பூண்டு, மசாலாப் பொருட்களை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதிலுள்ள வாசனையை ஃபிரிட்ஜில் உள்ள பிற பொருட்கள் இழுத்துக் கொள்ளும். அதுபோல  மணக்கும் கொய்யாப் பழத்தை துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது.

பொதுவாக பழங்களை துண்டுகளாக வெட்டி ஃபிரிட்ஜில் வைத்தால் சத்துகள் வீணாகிவிடும். எவ்வளவு குறைந்த வெப்பநிலையில் அவற்றை ஃபிரிட்ஜுக்குள் வைத்துப் பாதுகாத்தாலும் அவற்றில் உள்ள ஈரப்பதம் போய்விடும். அமீபியாக்களை அவை வரவழைக்கும்.

சமைத்த உணவுப் பொருட்களையும், சமைக்காத பொருட்களையும் அருகருகே ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. வெவ்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.

சிலர் ஓர் உணவுப் பொருளை ஃபிரிட்ஜில் வைப்பார்கள். அப்புறம் இன்னொரு பொருளை வைப்பார்கள். முதலில் வைத்த பொருள் ஃபிரிட்ஜின் உட்பகுதிக்குச் சென்றுவிடும்.      அடுத்தடுத்து தொடர்ந்து இப்படி பொருட்களை வைப்பதனால், முதலில் வைத்த பொருள் பயன்படுத்தப்படாமல், சத்துகள் வீணாகி ஃபிரிட்ஜுக்குள் சோகத்துடன் இருக்கும். முதலில் வைத்த உணவுப் பொருளை முதலில் பயன்படுத்த வேண்டும்.

பால், வெண்ணெய், மாமிசம் ஆகியவற்றை ஃபிரிஸரில் வைக்க வேண்டும்.

தயிரை ஃபிரிட்ஜில் வைக்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் வைக்கக் கூடாது. நமக்கே அதன் சுவை குறைந்து வருவது தெரியும். உடனே அந்தத் தயிரை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்துவிட வேண்டும்.

பிரெட்டை வெளிச்சம் போகாத டப்பாவில் வைத்து, ஃபிரிட்ஜில் வைக்கலாம். அப்படி வைக்கவில்லை என்றால் ஃபோலிக் ஆஸிட், வைட்டமின் ஏ, டி போன்றவற்றை பிரெட் இழந்துவிடும்.

ஃபிரிட்ஜ் பழைய கண்டுபிடிப்புதான். ஆனால் நம்மில் பெரும்பாலோனார் வீடுகளுக்கு அது புதிய வரவு. அதை நல்லமுறையில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டால், உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமலும், சத்துகளை இழக்காமலும் இருக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.