இசைக்குயில் எம்.எஸ்.ஸின் தம்பூரா!
செப்டம்பர் 16-ஆம் தேதியன்று கர்நாடக இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் 78வது பிறந்த நாளன்று, அவரது கொள்ளுபேத்தி


செப்டம்பர் 16-ஆம் தேதியன்று கர்நாடக இசைமேதை எம்.எஸ். சுப்புலட்சுமியின் 78வது பிறந்த நாளன்று, அவரது கொள்ளுபேத்தி ஐஸ்வர்யா (18) பெங்களூரு சாம்ராஜ் பேட்டையில் உள்ள ஸ்ரீராமா சேவா மண்டலியில் இசைநிகழ்ச்சி நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் 1963- ஆம் ஆண்டு எடின்பர்க்கில் நடந்த சர்வதேச இசை நிகழ்ச்சியில் எம்.எஸ். பயன்படுத்திய தம்பூராக்களில் ஒன்றை இசைத்து எம்.எஸ்ஸூக்கு பிடித்தமான கீர்த்தனைகளான "ரங்க புரவிஹாரா' (முத்துசாமி தீட்சிதர் - பிருந்தாவன சாரங்கா ராகம்) மற்றும் ஜகதோதாரணா (புரந்தரதாசர் - காப்பிராகம்) ஆகியவற்றை தேர்வு செய்து பாடினார்.
70 ஆண்டுகள் கச்சேரிகளின் போது எம்.எஸ். பயன்படுத்திய மூன்று தம்பூராக்களும் தற்போது பெங்களூருவில் வசிக்கும் அவரது மகள் ராதா விஸ்வநாதனின் மகன் சீனிவாசன் வீட்டில்தான் இருக்கின்றன. இதில் இரண்டு தம்பூராக்கள் 1940- ஆம் ஆண்டு செம்மங்குடி சீனிவாச ஐயர், "லட்சுமி- சரஸ்வதி' என பெயரிட்டு எம்.எஸ்ஸூக்கு அன்பளிப்பாகக் கொடுத்தவையாகும். இவை இரண்டும் "மீரஜ்' நகரத்தில் தயாரிக்கப்பட்டது. மிக அபூர்வமாக ஆறு தந்திகள் கொண்ட மற்றொரு தம்பூரா தஞ்சாவூரில் தயாரிக்கப்பட்டதாகும்.
1960-ஆம் ஆண்டில் நாட்டிய மேதை பாலசரஸ்வதியின் சகோதரர் டி.சங்கரன் இதை எம்.எஸ்.ஸூக்கு அன்பளிப்பாக கொடுத்தாராம். புகழ்பெற்ற "விஷ்ணு சகஸ்ரநாமம்' ரிகார்டிங்கின் போது எம்.எஸ். இதைப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தம்பூராக்கள் அனைத்தும் 1963 -ஆம் ஆண்டு எடின்பர்க்கில் நடந்த சர்வதேச இசை நிகழ்ச்சியிலும், 1966- ஆம் ஆண்டு நியூயார்க், ஐக்கியநாடுகள் பொதுச் சபை கார்னெகி ஹால் நிகழ்ச்சியிலும், 1982 - ஆம் ஆண்டு லண்டன் ஆல்பர்ட் ஹால் நிகழ்ச்சியிலும், 1987-ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த "இந்தியத் திருவிழா' நிகழ்ச்சியிலும் எம்.எஸ். பங்கேற்றபோது பயன்படுத்தியவையாகும், நான்கு தந்திகள் கொண்ட மீரஜ் தம்பூராவை "மீரா பஜன்' பாடும்போது எம்.எஸ். பயன்படுத்தியதாக சொல்லும் ராதா விஸ்வநாதன், "" இந்த தம்பூராக்கள் அனைத்துமே இன்றைக்கும் நல்ல நிலையில் இருக்கின்றன'' என்றார்.
ராதா விஸ்வநாதனின் மகன் சீனிவாசன் கூறுகையில், ""என்னுடைய பாட்டி எம்.எஸ், அவரது தாயார் மதுரை சண்முகவடிவிடம் வீணை கற்றுக் கொண்டதாக கேள்விப்பட்டிருக்கிறேன். பாடுபவருக்கு வீணை வாசிக்கவும் தெரிந்திருப்பது அவசியம் என்று கூறுவாராம். 1968-ஆம் ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே எம்.எஸ். "மெட்ராஸ் மியூசிக் அகாதமி'யில் வீணை கச்சேரி நிகழ்த்தியுள்ளார். இந்த தம்பூராவை சென்னை கல்கி தோட்டத்தில் எம்.எஸ். தங்கியிருந்தபோது காரைக்குடி சாம்பசிவ ஐயர், கே.எஸ்.நாராயணசாமி போன்ற பிரபலங்கள் வாசித்ததாகக் கூறுவார்கள்.
என்னுடைய மகள் ஐஸ்வர்யா, நான்கு வயதிலேயே பாட கற்றுக் கொண்டாள். கடந்த 12ஆண்டுகளாக ஜம்புகண்ணன் என்பவரிடம் பயிற்சிபெற்று வரும் ஐஸ்வர்யா, தன் கொள்ளுப்பாட்டியின் தம்பூராவை வாசிக்கவும் தெரிந்து வைத்திருக்கிறாள். கடந்த 10 ஆண்டுகளில் 500 கீர்த்தனைகளைக் கற்று கொண்டிருக்கிறார்''என்றார்.
""இந்த தம்பூராக்களைப் பார்க்கும்போது, என்னுடைய அம்மா (எம்.எஸ்) இப்போதும் எங்களுடனேயே இருப்பது போன்ற உணர்வு தோன்றுகிறது'' என்று கூறும் ராதாவிஸ்வநாதன் மற்றொரு விஷயத்தையும் நினைவுப்படுத்தினார். ஒரு முறை எம்.எஸ்ஸைப் பாராட்டிய படே குலாம் அலிகான் கூறினாராம்:
""நீங்கள் சுப்புலட்சுமி அல்ல, சுவர்ணலட்சுமி''.
படங்கள் : "யோகா'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...