

நிறைய பச்சை காய்கறிகள், கீரைகள் முதலியவற்றை உபயோகித்தால் நல்ல மலப்போக்கு ஏற்பட்டு குடல் சுத்தமாகும் என்று கூறப்படுகிறது. இது சரியா? இன்றைய
வாழ்க்கை சூழலில் நோயற்ற நிலை என்பது ஏன் காணப்படவில்லை?
- ய.ராமசாமி, ஈரோடு.
மலச்சிக்கலைத் தவிர்க்க அதிகமான பச்சைக் காய்கறிகள், கீரைகள் முதலியவற்றை உபயோகிக்க வேண்டும் என்ற கருத்து மருத்துவத்துறையினரால் தற்சமயம் அதிகமாகப்
பரிந்துரைக்கப்படுகிறது. இவற்றை உபயோகிப்பதால் தாராளமான மலப்போக்கு உண்டாகி ஒருவிதமான நிம்மதியும் ஏற்படுகிறது. ஆனால் உண்மையில் இது முற்றிலும்
தவறு. பெரும்பாலும் மலச்சிக்கலுக்குக் காரணம் நம் வயிற்றிலுள்ள குடல் பகுதியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அபானன் எனும் வாயுவினுடைய மந்தமான
செயல்பாடுதான். இந்த கீரைகளும் பச்சைக்காய்கறிகளும் வயிற்றிலுள்ள பசித்தீயை மந்தமாக்கி அதனால் பக்குவம் ஆகாத மலப்போக்கை ஏற்படுத்துகின்றன. இதனால் மல
பந்தம் நீங்கியதாகக் கருதி நாம் நிம்மதியடைகிறோம். ஆனால் இத்தகைய பசித்தீயினுடைய மந்தத்தாலும், மலப்போக்காலும் மேலும் கிருமிகளும், வாயு, பித்த, கபங்கள்
சமநிலை மாறி பல வியாதிகளும் ஏற்பட அதுவே அடிகோலியதாகும். "சாகேன வர்ததே வ்யாதி' என்றும் "சாகபூயிஷ்டம் போஜனம் த்யஜேத்' என்றும் இத்தகைய
எண்ணத்தைத் திட்டமாக கண்டித்திருக்கிறார்கள் நம் முன்னோர். இந்த பதத்திற்கான அர்த்தம் கீரைகளாலும், பச்சைக் காய்கறிகளாலும் நோய் வளருகிறது என்றும்
அவற்றின் சேர்க்கையானது உணவில் குறைக்கப்பட வேண்டியவை என்றும் கூறலாம்.
உணவுக்கு உதவியாக காய்கறிகளை உபயோகிப்பதை தமிழில் சாதாரணமாக, தொட்டுக் கொள்வது என்ற வார்த்தையால் பாமர மக்களும் காய்கறிகளைக் கூறுவது
எவ்வளவு பொருத்தமானது. ஒவ்வொரு உணவை உட்கொள்ளும்போதும் அவரவருடைய அக்னிபலம் எனப்படும் பசித்தீயினுடைய தன்மையை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும் என்பதே இதில் அவசியம் கவனிக்க வேண்டியதாகும்.
இந்த மந்தமான அபான வாயுவை சீர் செய்தலே மலச்சிக்கலுக்கான நிரந்தரத் தீர்வாக அமையும். ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய்யை சுமார் 10 முதல்
15 மில்லி வரை சூடான 300 மில்லி நீர்த்த பாலுடன் கலந்து காலை வேளையில் வெறும் வயிற்றில் 10 நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதால் வயிற்றிலுள்ள பழைய மலம்,
வாயு போன்றவை நீர்பேதியாகி வெளியேற்றப்படுவதால் குடல் சுத்தமாகிறது. அத்துடன் அல்லாமல் குடலுக்குத் தேவையான எண்ணெய்ப் பசையை இந்த
விளக்கெண்ணெய்யும் பாலும் நன்றாக ஏற்படுத்தித் தருவதால் அபான வாயுவினுடைய நகரும் தன்மையானது மேம்படுத்தப்பட்டு குடலின் அசைவுகளைச் சீராக்குவதால்
அதுவே மலச்சிக்கல் ஏற்படாதவாறு ஒரு சிறந்த பாதுகாப்பைத் தருகிறது.
ஆரோக்கியம் என்னும் நோயற்ற நிலையே வாழ்க்கையில் தேவையானவற்றைப் பெறுவதற்கான அடிப்படையான சாதனமாகும். நோய் வருங்கால் உரிய சிகிச்சை மூலம்
அவற்றை அகற்றி ஆரோக்கியத்தைப் பெறுகிறோம். பெற்ற ஆரோக்கியத்தை சில நடைமுறை நியமங்களை எல்லா விஷயங்களிலும் கடைப்பிடித்தல் மூலம்,
சகிப்புத்தன்மையையும் எதிர்ப்பு சக்தியையும் உடலில் வளம் பெறச் செய்து, நோய்கள் அணுகாவண்ணம் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.
முன் நாட்களில் மனிதனுடைய ஆயுளானது நூறு என இருந்ததற்குக் காரணம், அவர்கள் கடைபிடித்துவந்த நியமமும், தன்னடக்கமும், அமைதியும் கொண்ட பேராசையற்ற
வாழ்க்கையால் ஏற்பட்ட ஆரோக்கியமாகும். உசிதமில்லாத பலவித உணவு வகைகளைப் பொருந்தக்கூடாத வகைகளில் சேர்த்து உண்பதால் பல நோய்கள் தோன்ற
ஏதுவாகிறது. இதைக் கருதியே அவர்கள் உணவுமுறைகளில் தவிர்க்க வேண்டிய சில கலவைகளை நுட்பமாக பரிசீலனை செய்து தம்மைக் காப்பாற்றிக்கொண்டனர்.
இப்போதைய சூழ்நிலையில் பெரும்பான்மையான மக்கள் இப்படியொரு விஷயம் இருப்பதையே அறிந்தவர்கள் இல்லை. உதாரணமாக தயிருடன் உளுந்து சேரக்கூடாது. தயிர்
புசித்த உடன் பாலும் பருகக் கூடாது. உடனேயோ, நாளடைவிலோ அது மந்தமாகவோ அல்லது தீவிரமாகவோ விஷத்தன்மையை அடைந்து, அறியமுடியாத பல
நோய்களுக்கு இடம் கொடுக்கும். தயிர் வடையுடன் பால் அல்லது காபி அருந்துவது இப்பொழுது சர்வசாதாரணமாகிவிட்டது. புற்றுநோய் முதலிய பலவித நோய்கள்
இப்பொழுது பரவலாகக் காணப்படுவதற்குரிய காரணங்களே இத்தகைய உசிதமில்லாத உணவு வகைகளும் முக்கியமானவையாகும். இதமாகவும், மிதமாகவும் உரிய
காலத்தில் உசிதமான உணவை ஏற்றுக் கொள்பவனை நோய்கள் அணுகுவதில்லை.
வாழைப்பழத்துடன் மோரோ அல்லது தயிரோ அருந்தக் கூடாது என ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. வாழைப்பழம், தயிர், ஐஸ்க்ரீம் முதலியவை சேர்ந்த உணவுப்பண்டம்
நாகரீகமான விருந்து உபசாரப் பொருளாக பெரிதும் மதிக்கப்படுகிறது. இவைகளால் நாம்
எவ்வளவுதூரம் ஆரோக்கியப் பாதையிலிருந்து விலகிப் போகிறோம் எனத் தெளிவாக அறியலாம்.
(தொடரும்)
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.